Mon05252020

Last updateSun, 19 Apr 2020 8am

பணம் படைத்த நாடுகளின் நீதிமன்றத்தில் ...

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 05

பனாமா நாட்டின் அதிபராக இருந்த மனுவல் நொரேகா என்பவர் அமெரிக்காவின் நண்பானாக இருந்தார். ஆனால் அவர் அமெரிக்காவுடன் ஒத்துழைக்காத காரணத்தினால், அல்லது அமெரிக்காவிற்கு வரவேண்டிய போதைப் பொருளினால் வரவேண்டிய வருமானத்தை தடைசெய்ததால் என்னவோ பனாமாமீது ஆக்கிரமித்து அமெரிக்கா கைது செய்தது.

இதற்கு இன்றுமொரு உதாரணமாக சிலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த பினோச்சே பிரித்தானியாவிற்கு விஜயம் செய்திருந்த வேளையில் கைது செய்யப்பட்டு, ஆட்சிக் காலத்தில் இழைக்கப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இதே நேரத்தில் ஸ்பானிய நீதிமன்றத்தில் காணாமல் அல்லது கொல்லப்பட்ட ஸ்பானிய தேசத்தவர்களின் மறைவிற்கு பினோச்சே பொறுப்பாளி என குற்றம்சாட்டப்பட்டு வழக்கும் தொடரப்பட்டது. வழக்கைத் தொடரும் பொருட்டு பினோச்சேயை ஒப்படைக்கும் படி ஸ்பானியா கோரிக்கை விட்டது. இதனைப் பரிசீலனை செய்த பிரித்தானிய நீதிமன்றம் இறுதியாக ஸ்பானியாவிடம் ஒப்படைக்கும் படி தீர்ப்புக் கூறியுள்ளதுடன், ஒப்படைக்கக் கூடிய நிலையில் பினோச்சேயின் உடன் நிலை இருக்கின்றதா என மருத்துவ பரிசோதனை செய்யும் படி உத்தரவும் இட்டுள்ளது.

1977 இல் மேற்கு ஜேர்மன் விமானத்தை கடத்தியதாகவும், பயணிகள் சிலரை கொலை செய்தாகவும் குற்றம் சாட்டப்பட்டு அந்திராவஸ் சுகைலா என்ற பலஸ்தீன விடுதலைப் போராளி நோர்வே நாட்டில் கைது செய்யப்பட்டு ஜேர்மன் நாட்டில் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். விசேட படையினரால் விமானக் கடத்தல் முறியடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட அவர் சோமாலியா நாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்தவர். ஜேர்மன் நாட்டில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இவர் மொனிக்கா காஸ் என்ற ஜேர்மன் செம்படையைச் சேர்ந்தவர் தொடர்பான செய்தியை சேகரிக்கும் முகமாகவும், சுகைலாவை மொனிக்கா காஸிற்கு எதிராக சாட்சி கூறக் கூடிய நிலையில் ஒரு சாட்சியை தேவையை நோக்கமாகவும் கொண்டு ஜேர்மன் அரச சட்டத்தரணி முயற்சித்தார். எனினும் சுகைலா செம்படைப் உறுப்பினருக்கு எதிராக சாட்சி கூற மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறான தொடர்ச்சியாக கிழக்கு ஜேர்மன் அரசாங்கத்தில் அங்கம் வகித்தவர்கள் மீது கிழக்கு ஜேர்மன் ஒன்றினைவிற்கு முதல் அகதிகளை கொல்வதற்கு ஆணையிட்டதாகக் கூறி கிழக்கு ஜேர்மன் ஜனாதிபதி நீதி மன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்யப்பட்டு தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. முன்னர் கட்சியின் செயலாளராக இருந்த னுபழn முசநணெ என்பவரை 6 அரை வருடங்கள் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் செய்த குற்றம் கிழக்கு ஜேர்மனியில் குற்றம் அற்ரது என வாதிடும் அவர் வெற்றி பெற்றவர்கள் இட்ட சட்டமே செல்லுபடியாகியுள்ள நிலையில் தனது நியாயமான நிலைப்பாடு செல்லுபடியாகாது எனக் குறிப்பிட்டுள்ளார். இவர் கடந்த காலத்தைப் பற்றி குறிப்பிடும் போது கிழக்கு ஜேர்மன் செயல் இழக்கப்பட்டதை "Anschluss" என அழைக்கின்றார். இந்தச் சொல்லானது ஒஸ்ரியா 1938 ஆக்கிரமிக்கப்பட்டு நாசிச கிட்லரின் கையில் விளப்பட்டதை குறித்து நிற்கின்றது.

இவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் ஒரு சோசலிச சமூகத்தில் நடைபெற்றதாகும். மார்க்சீயப் புரிதலில் ஏற்பட்ட தவறுகள் ஒரு பக்கம் இருப்பினும் இவர் மேற்கொண்டு நடவடிக்கை என்பது அந்தச் சமூகத்திற்கானதேயாகும். இதனால் தனது தீர்ப்பை எதிர்த்து ஐரோப்பிய மனித உரிமைகள் நீதி மன்றத்தில் மீள்பரிசீலனை செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

இவற்றின் பரிணாம வளர்ச்சியாக அபிகிரேப், குவாந்தமானா தீவுச்சிறையில் இஸ்லாமிய பயங்கரவாதி எனக் கூறி உலகமெங்கும் கைது செய்து அடைத்து வைத்தது அமெரிக்க ஏகாதிபத்தியம். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அமெரிக்க நாட்டு சட்டத்திற்கு அமையவே விசாரித்து தண்டணை வழங்கப்போவதாக அறிவித்துக் கொண்டது. எத்தனையே நூற்றுக்கணக்கான அப்பாவிகள் அமெரிக்காவின் வேட்டையினால் ஏற்பட்ட சித்திரவதைக்கு ஆளாகினர். அமெரிக்காவின் காட்டுமிராண்டித் தனமான சித்திரவதைக்கும், மனிதவுரிமை மீறல்களை தடுத்துக் கொள்ள முடியாத கையறுநிலையில் தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றைய தேசங்களை நடத்தியது. ஐ.நா சபையில் கூட அமெரிக்காவின் எதேர்ச்சாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.

நேபாள இராணுவத்தைச் சேர்ந்த கேணல். குமார் லாமா என்பவரை பிரித்தானியாவில் தனது குடும்பத்தவரை சந்திக்கச் சென்ற வேளையில் போர்க்குற்றம் சுமத்தி கைது செய்தது. கடந்தவாரம் நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அறிக்கை வெளியிட்டுள்ளது. சூடானில் அமைதி காக்கும் படையில் பணியாற்றும் கேணல். லாமா விடுமுறையில் பிரித்தானியாவிற்கு சென்றிருந்தார். கேணல்.லாமாவின் கைதை தமது நாட்டின் இறைமையில் பிரித்தானிய அரசு தலையிட்டதாகக் கருதுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால் சவேந்திர சில்வா வன்னி இனப்படுகொலைகளைத் தலைமை தாங்கிய இராணுவத் தளபதிகளில் பிரதானமானவர். இனப்படுகொலையோடு நேரடியான தொடர்புடையவர். இவருக்கு எதிராக அமரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதாகக் கூறப்பட்ட போதும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இவற்றில் இருந்து வழக்குத் தொடர்வது, மனிதவிரோத செயல்புரிந்தவர்கள் மீதான வழக்குத் தொடுத்தல் என்பது தெரிவிற்கு உட்பட்டதாகவே இருக்கின்றது.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு

உண்மையைக் கண்டிறியும் ஆணைக்குழு தென்னாபிக்காவில் உருவாக்கப்பட்டன. இதில் அனைத்து விதமான சக்திகள் இந்தச் ஆணைக்குழுவில் முன்னிலையில் சமூகம் அளித்து தமது வாக்கு மூலத்தை கொடுக்க வேண்டும் என விதிக்கப்ட்டது. இதற்கு முன்னர் சமாதான நோபல் பரிசு பெற்றவரும், கிறிஸ்தவ ஆயருமான (Desmond Tutu) டெஸ்மன் தலைமைதாங்கினார். இந்த ஆணைக்குழு எவரையும் தண்டிக்கும் அதிகாரம் இல்லை. ஆனால் கடந்த காலத்தில் குற்றவாளிகள் எனப்படுபவர்கள் எல்லோருக்கும் அழைப்பாணை அனுப்பப்படும் அப்பொழுது அவர்கள் வந்து சாட்சியம் அளிக்க வேண்டும். இதற்கு சமூகமளிக்காதவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இதில் போராளிகளும், வெள்ளை இனவெறியர்களும் சாட்சியம் அளித்தனர். இதில் முன்னைய மந்திரியான இனவெறியாளரான போத்தா சமூகம் அளிக்கவில்லை. இவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக இவ்வாறான ஆணைக்குழுவின் மூலம் அரசியல் எதிரிகளை அகற்றுவதில் எவ்வாறு பங்காங்றுகின்றது என்பதையும் கலனித்தல் வேண்டும். தென்னாபிரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராடியவர் (Winnie Madikizela- Mandela) வின்னி மண்டேலா. இவர் போராட்ட காலத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச் செயற்பாடுகளை விபரித்து பல (Documentary films) விவரணப்படங்கள் உலக நாடுகள் பலவற்றில் காண்பிக்கப்பட்டன. இதில் குறிப்பாக பிரித்தானிய நாட்டு பழமைவாதக் கட்சியின் உறுப்பினரான Emma Nicholson என்பவர் அதிக கவனம் செலுத்தினார். பிரித்தானிய அரசியல்வாதி வின்னி மண்டேலா செய்த குற்றத்திற்கு சாட்சியென கருதப்படும் Katiza Cebekhulu என்பவரை பாதுகாப்பதிலும் பிரித்தானியாவில் அரசியல் தஞ்சம் வாங்கிக் கொடுப்பதிலும் அதிக கவனம் செலுத்தினார். 1989 ஆண்டு கத்திசா என்பவர் (14 வயது Stompie Seipei) ரொம்பி என்ற சிறுவனை கொலை செய்யும் போது கண்கண்ட சாட்சியாக பிரச்சாரம் செய்யப்பட்டவர்.

இவர் Mandela united என்ற அமைப்பை கொண்டு நடத்திய வின்னி அன்றைய காலத்தில் இடம் பெற்றதாக கூறப்படும் 18 மனித உரிமைகள் மீறல்கள் பற்றி உண்மை அறியும் ஆணைக்குழு வின்னியின் வாக்குமூலத்தை கேட்டறிந்தது. இதில் எந்த விதமான குற்றச்சாட்டும் தன்மீது போடப்பட்ட அபாண்டமான பழி என வின்னி தெரிவித்துள்ளதுடன், குற்றப்பத்திரிகை நீதீமன்றத்தில் தாக்குதல் செய்யும் படி கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொள்ள மறுத்த ஆணைக்குழுத் தலைவர் இது வழக்குகாடு மன்றம் அல்லவெனவும், கடந்த காலத்தை அறிந்து கொள்ளவும் தவறுகளை மறந்து மன்னிப்பதே முக்கிய இலக்கு எனக் குறிப்பிட்டார்.

இதே ஆணைக்குழுவில் சாட்சிமளித்த (Paul Eramus) போல் என்பவர், பழமைவாதக் கட்சியைச் சேர்ந்த (Andrew Hunter) அன்ரூ என்பர் தெரிவித்தவை பொய்யாகச் சோடிக்கப்பட்டவை என்றும் சொம்பியின் கொலையில் வின்னி மண்டேலாவிற்கும் தொடர்பு இல்லை என்றும் இது தென்னாபிரிக்க பாதுகாப்பு படையினரின் உளவாளி முகவரினால் கொல்லப்பட்டதாக தென்னாபிரிக்க பாதுகாப்பு உயர்அதிகாரி தெரிவித்தாக மேலும் கூறினார். சொம்பி என்பவரை (Jerry Richardson) ஜெறி என்ற வின்னி மண்டேலாவின் அமைப்பில் இருந்த பாதுகாப்பு படையில் உளவாளியினால் கொல்லப்பட்டதாக தெரிவித்தார்.

வின்னி மண்டேலா ஒரு குடிகாரி, போதை வஸ்துப் பாவிப்பவர், கொலையாளி எனப் பிரச்சாரம் செய்யப்பட்டார். வின்னி மண்டேலா தென்னாபிரிக்க இனவெறி அரசிற்கு எதிராக போராடிய காலத்தில் பல வதந்திகள் பரப்பட்டது. இதன் மூலம் எதிர்ப்புச் சக்திகளை பலவீனப்படுத்துவதற்கு பயன்படுத்தினர். இதில் ஒரு அங்கமாகவே வின்னி மண்டேலா மீது சுமத்தப்பட்டகுற்றச் சாட்டாகும். குறிப்பாக போராடும் காலத்தில் போராட்ட இயக்கங்களுக்கு கறையை ஏற்படுத்தும் முகமாக பிரித்தானிய, அமெரிக்க உழவுப்படையினரால் எதிர்ப்பிரச்சாரம் செய்யபடுகின்றது. இது எல்லாப் போராட்ட காலத்திலும் நடைபெறுகின்றது. இதற்கு தெரிந்தோ தெரியாமலே முற்போக்குச் சக்திகளும் இதில் கலந்து கொள்கின்றனர். முதலில் ஆணைக்குழு தோற்றத்திற்கு எவ்வகை சிந்தனை பின்புலமாக இருக்கின்றது என்பதை பார்த்துக் கொண்டு பின்னர் பிரச்சாரம் பற்றிப் பார்ப்போம்.

கிறிஸ்தவ மதத்தில் பாவங்கள் செய்தால் அதற்குப் பிராயச்சித்தமாக கடவுளின் பிரதிநிதியாக இருக்கின்ற மதகுருவிடம் சென்று பாவமன்னிப்புப் பெறுதல் வேண்டும். இதன் பின்னர் செய்த பாவங்களுக்காக இரங்கி மனம் வருந்துதல் வேண்டும். இது கிறிஸ்தவ மத வரலாற்றில் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. பாவம் என்பது ஒரு மதத்தின் சிந்தனைப் போக்கில் இருந்து மாறுபடுகின்றது. பாவம் பற்றிய சிந்தனைப் போக்கு ஆபீரிக்க வரலாற்றில் இருந்திருக்குமா என்பது சந்தேகமே. இருப்பினும் காலனித்துவ காலத்தில் இருந்து பெறப்பட்ட சிந்தனையானது முழு ஆபீரிக்காவையும் ஆக்கிரமித்திருப்பதனால் ஆபீரிக்கர்கள் தமக்கு உரித்தான கலாச்சாரத்தை முன்னுக்கு கொண்டுவர முடியாமல் இருப்பது. அடையாளங் கொள்ளத்தக்க சூழல் ஏற்படுத்தக் கூடிய சக்திகள் பலவீனமாக இருப்பதனால் அடையாளத்தை மீண்டும் நிறுத்த ஆபீரிக்க மக்கள் போராட வேண்யுள்ளது.

எந்த மதத்தின் அடிப்படை கொள்கையை முன்வைத்து உண்மை (Truth Commision)) ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. வெள்ளை இனவெறியர்கள் கறுப்பர்களை ஆட்டு மந்தைகளாக நடத்துவதற்கு விவிலிய நூலில் இருந்தே ஆதாரங் காட்டினர். இவர்கள் கடவுளினால் தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள் இவர்களே பூமியை ஆழத் தகுதியானவர்கள் என வெள்ளை இனவெறியர்கள் கருதிக் கொண்டு தென்னாபிரிக்காவை ஆட்சிசெய்தனர். இந்த உண்மை ஆணைக்குழுவின் மூலம் உண்மையில் பொதுவுடமை சிந்தனை கொண்டவர்கள் யார்? யார்? என்னென்ன போராட்ட செயற்பாட்டை நடத்திக் கொண்டவர்கள், இவர்களில் ஆபத்தானவர்கள் யார்? போன்ற விடயங்களை சேகரித்துக் கொள்ள துணைவகுக்கின்றது. ஒரு பொதுவுடமை அமைப்பின் இரகசியங்களை அறிந்து கொள்ள முன்னர் சட்டத்திற்கு முரணாக ஈடுபட்டு நபர்களைக் கொண்டு, விபரங்ளை சேகரித்துக் கொள்ள முடியும்.

இவை மாத்திரம் அல்ல இடதுசாரிகளின் அதாவது ஆபீரிக்க காங்கிரஸில் இடதுசாரி அணிகளின் நம்பிக்கையானவரும், எதிர்கால உபஜனாதிபதிக்கு போட்டியிடக் கூடியவருமான வின்னி மண்டேலாவை அரசியல் அரங்கில் இருந்து அகற்றிக் கொள்ள பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட இந்த உண்மை ஆணைக்குழு உதவியளித்துள்ளது.

இந்த ஆணைக்குழுவின் மூலமாக பழைய சமூக அமைப்பை அப்படியே நிலை நிறுத்திக் கொள்ள சந்தர்ப்பத்தைக் கொடுத்துள்ளது. கடந்த ஆட்சியாளர்களையும், சமூக அமைப்பை அம்பலப்படுத்தி கடந்த காலத்துடன் கடன் தீர்த்துக் கொள்ள சந்தர்ப்பம் இல்லாமல் கடந்த காலத்துடன் சரணாகதியடைந்து கொள்ள ஏதுவாக இருந்திருக்கின்றது. இனவாத ஆட்சியாளர்களுக்கு மாற்றாக மாற்று நிறத்தைச் சேர்ந்த அதே கொள்கையுடையவர்கள் தான் தற்பொழுது ஆட்சி செய்கின்றனர். முன்னர் சுரண்டும் பொருளாதார அமைப்பை பாதுகாத்துக் கொள்ள வெள்ளை ஆட்சியாளர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று கறுப்பு நிற ஆட்சியாளர்கள் அதே சுரண்டல் பொருளாதார அமைப்பை பாதுகாத்துக் கொண்டு இருக்கின்றனர். சர்வாதிகாரிகள் ஆட்சி செய்த நாடுகளில் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சிலி போன்ற நாடுகளில் ஜனநாயக முறையில் அமைந்து கொண்டதாக கூறப்படும் தேர்தலின் மூலம் பழைய ஆட்சியாளர்கள் செல்ல புதிய ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்தனர். இவர்கள் தமது பதவிக்காலத்தில் செய்த ஊழல்களை கண்டு பிடித்து தண்டனை செய்யமுடியாதவாறு பணக்கார நாடுகளினால் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். தென்னாபிரிக்கா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் உள்ள சுரண்டும் வர்க்க ஆட்சியாளர்கள் முழு சுரண்டும் பொருளாதார அமைப்பும் அம்பலப்பட்டுப் போகாமல் பாதுகாத்து வருகின்றனர்.

யார் நலனைப் பாதுகாக்கின்றது?

செக் நாட்டின் ஜனாதிபதி ஹாவல் (Vaclav Havel) கனடாவிற்கு விஜயம் செய்த போது இறைமையை விட மக்களின் மனித உரிமையே முக்கியமானது என்ற கருத்தை முன்வைத்திருந்தார். இதே போல ஏகாதிபத்தியத்தின் தயவில் வாழும் சலமன் ரூஸ்டியும் இதே கருத்தை முன்வைத்திருந்தனர்.

கொசவோவிற்கு ஒரு நீதி- தமிழீழத்துக்கு ஒரு நீதியா? கோசவோ அல்பேனியர்கள் தான் மனிதர்களா? ஈழத் தமிழர்கள் மனிதர்கள் இல்லையா? என்று சர்வதேச சமூகத்துக்கு மறுமலர்ச்சி திமுக செயலாளர் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய உரையில் சில பகுதிகளை இங்கு பார்ப்போம். “ஒரு நாடு, தன்நாட்டின் இறையாண்மையைக் காக்கின்றோம் என்ற பெயரில் அங்கு வாழும் மக்களை அழித்தொழிப்பதை உலக சமூகம் பார்த்துக் கொண்டிருக்காது.

மனித உரிமைகள் நசுக்கப்படும் போது அதைக் காக்க எந்த நாடும் பிற நாட்டின் விவகாரங்களில் தலையிடலாம் என்று கூறிய இந்திரா காந்தி அவர்கள் முஜிபுக் ரஹ்மானுக்கு ஆதரவு அழித்து வங்க தேசம் உதயமாகிவிட உதவினார். இதே போவே 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ. நா சபை பொதுச் செயலர் கோபி அன்னன் மனித உரிமைக்குக் குரல் கொடுத்துள்ளார்.

கொசவோ யூக்கோஸ்லாவியாவின் ஒரு பகுதி எனவே எமது இறைமையைக் காத்துக் கொள்ள அங்கு நடக்கும் கலவரத்தை அடக்குகின்றோம் என்று ய+க்கோஸ்லாவியா கூறியதை இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நேட்டோ நாடுகள் ஏற்றுக் கொள்வில்லை.முன்னைய ஐ.நா பொதுச் செயலர் கோபி அன்னன் இறைமை என்ற பெயரில் மக்களை கொண்று குவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அறிவித்தார்.

இங்கு இறைமையா? மனித உரிமையா? என்ற வாதத்தில் இருந்து பிரச்சனையை பார்க்கின்ற போது தப்பிப் போகின்ற நிலைதான் காணப்படுகின்றது. ஒரு நாடு இன்னொரு நாட்டின் நலனில் அக்கறை கொள்ளும் என்றால் நலன் இல்லாமல் செயற்பட மாட்டாது. இங்கு வெளிச் சக்திகள் எவ்வகையான பொருளாதார நலன் கொண்டுள்ளது என்பதை அவதானிக்க வேண்டியிருக்கின்றது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை என்பது ஆட்சிமாற்றத்தால் மாத்திரம் மாறிக் கொள்வதில்லை.

வை. கோபால்சாமி போன்ற சக்திகளே கடந்த காலத்தில் சர்வதேச அனுபவத்தைப் பார்த்து அரசாங்கம் இராணுவத் தலையீட்டைக் கோரினர். ஆனால் எந்த வித தலையீட்டையும் ஆதரிக்க முடியாது என்ற நிலையில் இருந்து தான் நாம் பிரச்சனையைக் கையாள முடியும்.

வரலாற்றில் காணக் கூடிய பொது அம்சங்களை கவனிக்க வேண்டும். அதாவது பொருளாதார நலனை கொண்டதான சந்தை அதை விஸ்தரிக்கும் கொள்கை, சந்தர்ப்பம் பார்த்து தலையீடு செய்வது. இதற்கு முன்னோடியாக சரி முயற்சிகள், தேவையான பிரச்சாரங்கள், அகதிகளின் அழுகையை முதன்மைப்படுத்துவது. தருணம் பார்த்து படைகளை அன்னிய நாட்டினுள் அனுப்புவது.

கடந்த காலத்தில் இந்தியாவில் இருக்கின்ற பாரம்பரிய பொதுவுடமைக் கட்சிகள் இந்தியாவின் தலையீட்டை ஆதரித்திருந்தன. பொதுவுடமைக் கட்சிகள் இலங்கை, வங்காளத்தின் தலையீட்டை கவனமாக அவதானித்துக் கொண்டு இலங்கையில் விடுதலை அமைப்புக்கள் அக்கறை கொண்டு பார்த்தது இல்லை. ஆனாலும் வங்கம் தந்த பாடம் என்ற புத்தகத்தையும் சிலர் இந்தியாவின் இலங்கை மீதான தலையீடு கொண்டுவரும் பாதிப்புப் பற்றி கருத்துக்களும் இருந்தது உண்மையே. ஆனாலும் இவைகள் வலுவானதாக இருந்ததில்லை. பிற்காலத்தில் இந்திய தலையீட்டை விமர்சிக்கும் எந்த இயக்கங்களாலும் சரி, இந்திய அரசியல்வாதிகளானாலும் சரி இந்திய தலையீட்டை ஆதரித்ததே வரலாறாகிவிட்டது. பிற்காலத்தில் நலன்கள் மாறுபட மக்களின் தேவைகளும் ஒன்றுபடவே எதிர்ப்பு யுத்தம் தொடங்கியது. இதுவே வரலாற்றின் சரியான பாதைக்கான திருப்புமுனையாக அமைந்தது.

கடந்த காலத்தில் இந்தியாவின் நலனில் அடிப்படையில் அமைந்த வங்காளத்தின் மீதான ஈடுபாடுகள் ஆகும். இதேபோல யூக்கோ, ஈராக் மீது நடை பெற்ற தாக்குதல்கள் பொருளாதார நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை அவதானிக்க முடிகின்றது. ஈராக், யூக்கோ மீதான தாக்குதல்களை எடுத்து நோக்குவோமானால் பொருளாதார நலனைப் பாதுகாத்துக் கொள்வதை அவதானிக்க முடியும். இந்த நாடுகளை ஆக்கிரமிப்பிற்கு முன்னர் பொருளாதார நிலைகளை தாக்கியழித்துக் கொண்டனர். இந்தத் தாக்குதல்கள் அந்த நாட்டு மக்களை ஒட்டாண்டியாக்கியது. இந்த நாடுகள் பொருளாதார வளர்ச்சியை மேற்கொள்ள மற்றைய நாடுகளை கையேந்த வேண்டிய நிலைக்குக் கொண்டு வந்து நிரந்தர கடனாளிகளாக ஆக்கிவிட்டார்கள். அரசியல் ரீதியான நகர்வுகளை ஆயுதம் என்பது துரிதப்படுத்துகின்றது.

இதிலிருந்து பாதிப்புக்கள் மக்களை பாதுகாத்துக் கொள்ள மேற்கொள்ளப்பட்டதாக கொள்ள இடமில்லை. இவைகளை மறைத்து நாடு பிடிக்கும் கொள்கைகளை ஆதரித்து நிற்கும் நிலைப்பாடு கொள்ளும் எந்த அரசியல்வாதிகளின் கருத்தையும் மக்கள் நிராகரிக்க வேண்டும். மேற்கு நாடுகளின் நலனைப் பாதுகாத்துக் கொள்ளும் அரசியல் தலைமைகளும் அமெரிக்காவை முன்மாதிரியாக நிறுத்தும் அரசியல்வாதிகளும் உண்மையை மறைத்துக் கொள்கின்றனர்.

பயங்கரவாதிகளை அடக்குவது என்ற பெயரில் சூடான் (இன்று தமது தேவையின் நிமித்தம் நாட்டை துண்டாக்கியுள்ளனர்), ஆப்கானிஸ்தான் போன்ற சுதந்திர நாடுகள் மீது அமெரிக்கா குண்டுத் தாக்குதலை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக தனியே உறுப்பு நாடுகளுக்கு பாதுகாப்புக் கொடுக்கவென உருவாக்கப்பட்ட நேட்டே இராணுவக் கூட்டமைப்பு ஐ.நாவின் ஒப்புதல் இன்றி இனஅழிப்பை தடுத்து நிறுத்துகின்ற பெயரில் யூக்கோ மீது குண்டுமழை பொழிந்தனர். இதுவே மிகப்பெரிய ஐ. நாவின் சாசனத்திற்கு எதிரான பெரிய மீறலாகும்.

அமெரிக்க நாடுகளின் இவ்வாறான நிலைப்பாட்டிற்கு ய+க்கோ மக்களும் தான் காரணம் கூறியதுடன், இவ்வாறான அழிவிற்கு காரணம் மக்களுடைய மடைமைக்கும் என்றனர். மேலும் இவ்வாறான ஆட்சியாளர்களை அந்நாட்டு மக்கள் தெரிவுசெய்ததே காரணம் எனவும் கூறுனர். அமெரிக்கா, பிரித்தானிய எதேர்ச்சாதிகாரப் போக்கிற்கு உறுப்பு நாட்டு அரசியல்வாதிகள் எந்த வித இடைஞ்சலையும் ஏற்படுத்திக் கொள்ளாததுடன், செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச மனித உரிமைக் சங்கம் ஆகியவை தாம் மனித உரிமை பாதுகாப்பதில் மாத்திரம் தான் அக்கறை காட்டுதாகவும் விமானத்தாக்குதல் பற்றி எவ்வித அக்கறையும் செலுத்தாது விட்டனர். அதாவது, புண்ணுக்குத் தான் தாம் மருந்து போடுபவர்கள் புண் உருவாகுவதற்கு காரணமாக இருக்கின்ற காரணியை தடுப்பது தமது கொள்கை அல்ல எனவும் கருதிக் கொள்வது போல் இருந்து விட்டனர்.

ஐ.நாவின் உறுப்புக்களில் அரசியல்வாதிகள் அங்கம் வகிக்கின்றனர். அதேபோல் சிவில் ஊழியர்களும் அங்கம் வகிக்கின்றனர். சிவில் ஊழியர்களே இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அரசியல்வாதிகளை உள்ளடக்கிய அங்கம் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை பிரச்சனைக்குரிய பகுதிகளில் சென்று மேற்கொள்வதில்லை. அரசியல்வாதிகள் எப்பவும் தமது நாட்டின் நலனின் மீதே அக்கறை கொள்வர் என்ற கருத்து எதிர்ப்பிரிவினரிடம் உண்டு. உதாரணத்திற்கு லெபனானில் பணக்கைதிகள் விடயத்தில் சிவில் ஊழியர்களே கடத்தல்காரர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இவ்வாறான நடைமுறையைப் பயன்படுத்தி சுதந்திரமான ஐ.நா நீதிமன்றம் முறையாக செயற்படுகின்றது என நிரூபிப்பதும். தற்பொழுது சோவியத் ஒன்றியம் இல்லாத நிலையில் அமெரிக்காவின் எதேர்ச்சாதிகாரம், உலகப் பொலிசாக அமெரிக்க செயற்பட உள்நாட்டு அரசாங்கங்கள் உதவவில்லை என தனது பிரஜைகளுக்கு நிரூபிப்பதும் அவசியமாகின்றது. குறிப்பாக மேற்குல மக்களை ஏமாற்ற குறிப்பாக பாவிக்கும் தந்திரோபாயமாகும். போதுவாகவே நீதி முறை நிலைநாட்டப்படுகின்றது எனக் கருதிக் கொள்ளும் மக்களிடையே பிரச்சாரப்படுத்துவது அவசியம். இந்தப் பிரச்சாரத்தின் மூலம் உள்நாட்டு அரசியல் தலைமை பூகோல ரீதியாக நடைபெறும் சம்பவங்களைக் காட்டி தப்பித்துக் கொள்ளவும் முடிகின்றது.

ஐ.நா நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு அரசியல் பின்புலம் அவசியமானதாகும். 1985க்கு முற்பட்ட காலத்தில் ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராக சோவியத் ஒன்றியம் இருந்தது. இரண்டு சக்திகளின் பலம் சமன்படுத்தப் பட்டிருந்தது. இதன் பின்னர் உருவாக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவும், சக கூட்டாளி நாடுகளும் பாதுகாப்புச் சபையை அல்லது (Hague) காக் நீதி மன்றத்தை தமக்கு இசைவாக நடத்த முடிந்ததை அவதானிக்க முடிகின்றது.

270 பயணிகளின் உயிர்களும், போர்க்குற்றவாளிகளின் நலனும் ஏகாதிபத்தியங்களுக்கு பெரிய விடயம் அல்ல. ஆனால் தமது அதிகாரத்தினையும், பொருளாதார நலனை நிலைநிறுத்திக் கொள்வது அவசியமானதாகும். இவர்கள் உண்மையில் மனித உயிர்களின் மீது மதிப்பு கொடுப்பவர்களாயின் மனித குல அழிவிற்கு துணையாக இருக்கின்ற ஆயுதங்களை விற்பனை செய்வதை நிறுத்துவர், அணுக்குண்டு, கண்ணி வெடி, சூழலை மாடுபடுத்துகின்ற காரணிகளை தடுப்பர், மற்றைய நாடுகளை ஆக்கிரமிப்பதை தவிர்ப்பர், குண்டு போடப் பாவிக்கப்படும் கோடிக்கணக்கான ரூபாய்களை சேமித்து வறிய நாடுகளின் வளர்ச்சிக்கு கொடுப்பர், கடன் சுமையால் வாடுகின்ற நாடுகளின் கடன் சுமையைப் போக்குவர். மற்றைய நாடுகளின் உள்நாட்டு விடயத்தின் தலையீடு செய்வதை நிறுத்த வேண்டும். உள்நாட்டு ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை, நிதி, ஆயுதம் ஆகிவற்றை கொடுப்பது. இவைகளே இன்றைய உலகத்தின் பிரச்சனை, இவற்றைப் போக்கத் தயாராக இருப்பார்களாயின் மற்றவற்றை உள்நாட்டு குடிகளே தமது பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வர்.

வறிய நாடுகளில் இருக்கின்ற போராளிகள் தத்தமது பிரச்சனைகளை தாமே தீர்த்துக் கொள்வர். பிரச்சனையை தீர்த்துக் கொள்ளும் வல்லமையும் அவர்களிடம் இருக்கின்றன. இன்றைய உலக நிலை என்னவெனில் அடிப்படையில் பிரச்சனைக்கான காரணத்தை அறிந்து கொள்ள விரும்புவதில்லை. மாறாக விழைவுகளை மாத்திரம் முன்னிறுத்தி பிரச்சனைகளின் ஆழத்தை குறுக்கி திசைதிருப்புவதுடன், குழுப்ப சூழ்நிலையைப் பயன்படுத்தி அந்த நாடுகளின் தமக்கான இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். ஏகாதிபத்தியங்கள் கருதுவது போல் இறைமை, மனித உரிமை என்று பிரித்துப் பார்ப்பதில் எவ்வித நலனும் மக்களுக்கு ஏற்படப் போவதில்லை. மாறாக உரிமை, இறைமை இரண்டும் ஒன்றையொன்று பிரித்துப் காரணத்தினால் இனங்களுக்கிடையே மனக்கசப்பு ஏற்படுகின்றது. இதற்கு பதவிமோகம் கொண்ட அரசியல்வாதிகள் மக்களுக்கான பிரச்சனையை தீர்த்துக் கொள்ள முடியாத நிலையை மறைத்துக் கொள்வதற்காக மற்றைய இனத்தின் மீது பழியைப் போட்டு விட்டு தப்பித்துக் கொள்கின்றனர். அதே போல் துன்பநிலையைப் பயன்படுத்தி வறிய நிலையில் உள்ள மக்களை இனவெறியூட்டி தமது நலனுக்கான பயன்படுத்தும் பணம் படைத்த பிரிவினரும் இருக்கின்றனர்.

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 01

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 02

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 03

நீதியை நிலைநாட்டுவதும்! பாதுகாப்பதும்! - பாகம் 04