Mon03182024

Last updateSun, 19 Apr 2020 8am

பெண்களும் இலக்கியமும்

உண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான ஒரு சூழ்நிலையில் இருக்கின்றோம். அண்மையில் பெண் பிறப்புறுப்பைப் பற்றிய விளக்கப் பதிவொன்றை இட்டேன். உடனே என்னில் அக்கறை கொண்ட நண்பன் ஒருவன் ஓடிவந்து "நீ முதலில் ஒரு பெண் என்பதை நினைவில் கொள்" என்றான். அதற்குப் பிறகுதான் அதை அழித்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாயிருந்தேன்.

பெண்கள் சிறுகதை எழுதுவதில் ஒரு சிக்கல் இருக்கின்றது. அவர்கள் எழுதுவதையும் வாழ்க்கையையும் தொடர்புபடுத்திப் பார்க்கின்ற தன்மையே அதிகம். அங்கு படைப்பாளி என்று பார்க்கப்படாமல் இது இவளுக்கு நடந்தது போலும் என்ற பார்வையோடு பெண் நெருங்கப்படுகின்றாள். அதோடு படைப்பில் ஆணுக்கு இருக்கும் சுதந்திரம் பெண்ணுக்கு இருப்பதில்லை. அட அவ்வளவு ஏன் வாசிப்பில் கூட அந்தளவு சுதந்திரம் இருப்பதில்லை. ஒரு பாலியல் தொடர்பான படைப்பை படித்தேன் என்பதை ஒரு ஆண் கூறினால் அறிவார்ந்தவனாகவும், பெண் கூறினால் "அயிட்டமாகவும்" பார்க்கப்படுகின்ற ஒரு நிலையில் நம் பெண்கள் சிறுகதைக்குள் (நாம்) வந்து எழுதத் தொடங்கினால் ஒரு ஊரிலே ஒரு என்றுதான் தொடங்குகின்றனர். இதையெல்லாம் தாண்டி எழுதியவர்களும் இருக்கின்றனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் காணாமல் போயுள்ள வரலாறே அதிகம்.

அதைவிட ஆணை விடப் பெண் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவளாகவும் விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ள முடியாதவளாகவும் இருக்கின்றாள். ஒரு பெண்ணுடைய நாட்குறிப்பைப் போல் துயர் மிகுந்த, உணர்ச்சி மிகுந்த படைப்புக்கள் இருக்க முடியாது என்பதை அறிவீர்களா! அதனால்தான் பல பெண்கள் அந்த உன்னத படைப்புக்களை எழுத முனைவதில்லை. அண்மையில் ஒரு பெண் எழுதிய கவிதையே அவள் இறப்பிற்கு காரணமானது என்பதை அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன். ஒரு பெண் முத்தம் பற்றிய கவிதை எழுதினால் உடனே உங்களிடம் முத்தத்தை எதிர்பார்க்கின்றாள் என்ற அர்த்தத்தோடு நெருங்குகின்றீர்கள். இந்த சூழலில் ஒரு சிறுகதை அவளை படுக்கைக்கு அழைக்காது என்பது என்ன நிச்சயம்? அதிலும் வேதனை அவ்வாறு நோக்குபவர்கள் சக ஆண் படைப்பாளிகளாகவே இருக்கையில்தான் துன்பம் மேலிடுகின்றது.

இன்று கிரிஷாந்த் ஒரு மிக முக்கியமான மொழிபெயர்ப்புக்கு கட்டுரையை பதிவிட்டிருந்தார் (நீலப் படங்களின் அரசியலைப் பேசும் முக்கியமான பிரதி). படிக்கும்போதே நிறையக் கேள்விகள் பெண் உடல் துண்டாடப்படுத்தல் மீதான பார்வைகள் எழுந்தன. இருப்பினும் அதை நான் என் சுவரில் பகிர்ந்திருந்தால் என் மேல் அக்கறை கொண்ட ஆண்கள் ஒரு புறம், என் மேல் காழ்ப்புணர்வு கொண்ட ஆண்கள் ஒரு புறம் என்னைத் துளைத்தெடுத்து விடுவார்கள். ஆனாலும் இதையெல்லாம் பயந்து கொண்டே கதைக்காமல் போவதற்கு நான் சராசரி அழகான பெண் என்ற வகை இல்லையே. சொல்ல வேண்டும். எழுதவேண்டும்.

இலக்கியக் கூட்டங்களிலும் சரி, பிற இடங்களிலும் சரி 100 ஆண் படைப்பாளிக்கு ஒரு பெண் படைப்பாளியே உள்ளனர். அவர்களிலும் பெரும்பான்மையர்கள் கவிதைகளோடு தம்மை மட்டுப் படுத்திக் கொண்டவர்கள். ஆனால் நீங்கள் அனைவரும் ஒன்றை உணர வேண்டும். உலகின் மிகச்சிறந்த கதை சொல்லிகளால்தான் நீங்கள் வளர்க்கப்பட்டீர்கள். அவர்களிடமிருந்துதான் உங்கள் கதைகள் உற்பத்தியாகின்றன.

உண்மையில் எழுத்திலும் கூட பெண் உடல் ஒரு நுகர்வுப் பண்டமாகவே இருந்து வருகின்றது. அது பற்றிய சரியான விவாதங்கள் படித்த பெண்களிடமும் இல்லை. இந்த நிலையில் ஒரு சிறிய சம்பவத்தை சொல்கின்றேன்.

என் தோழியொருத்தியுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். என்னுடன் கதைக்கும்போது அவளுக்குள் புத்தகங்கள் படிக்க வேண்டும், பெண் விடுதலை பற்றி சிந்திக்க வேண்டும் என்ற எண்ணங்கள் ஆக்ரோஷமடைவதாகவும் அது வீட்டிற்குப் போய் பசியெடுத்ததும் அந்த ஆக்ரோஷம் காணாமல் போய்விடுவதாகவும் கூறினாள். அப்போது அருந்ததி ராய்யைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தேன். அவருடைய நேர்காணல் ஒன்றைப் பற்றி எடுத்துரைத்தேன்.

அவள் கேட்டது..

"அவங்க யாரு? ஐஸ்வர்யா ராய்யைத்தான் எனக்குத் தெரியும்."

நாங்கள் படிக்க வேண்டும். சிமாமந்தா எங்கோசி அடிச்சி போன்ற பெண்களைப் படிக்க வேண்டும். ரமணிச்சந்திரனுக்குள்ளேயே நம் வாசிப்பின் அளவை நிறுத்தி வைத்து விடாதீர்கள். எங்கள் அழகு வெளிப்பட வேண்டும் எங்கள் படைப்புக்கள் மூலமே. அழகிய எழுத்திற்கு சொந்தமான பல படைப்பாளிகளை பிரசவிக்கும், பிரசவிக்கப் போகும் நாங்கள் எங்கள் படைப்பியலை எழுத்து நோக்கியும் திருப்புவோமாக.

(இங்கு கதைக்கப்பட்டது பெரும்பான்மை பெண்கள் பற்றியதே.)

-கவுதமி ஜோ