Sun01192020

Last updateTue, 10 Dec 2019 10am

இது வர்க்கரீதியாக அனைத்து உழைக்கும் மக்களையும் இன ரீதியாக சிறுபான்மை மக்களையும் ஒடுக்கும் வரவுசெலவுத் திட்டம்.

இந்த வருடத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களினதும் அன்றாடப் பாவனைப் பொருட்களினதும் மீதான தொடர்ந்த விலை உயர்வுகளாலும் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்புகளாலும் நாட்டு மக்கள் அனைவரும் கடுமையான நெருக்கடிகளையும் பாதிப்புக்களையும் பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் அடுத்த ஆண்டுக்காகப் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள மகிந்த சிந்தனை அரசாங்கத்தின் ஒன்பதாவது வரவு செலவுத் திட்டமானது அன்றாடம் அவதியுற்று வரும் உழைக்கும் மக்களுக்கு எவ்வகையிலும் நிவாரணங்களையோ ஆறுதலையோ தரவில்லை. அதேவேளை பெரும் முதலாளிகள் முதலீட்டாளர்கள் அந்நிய பல்தேசிய பெருவணிக நிறுவனங்களுக்கும் சூதாடிகள் குறுக்குவழிச் சம்பாத்தியம் தேடுவோருக்கும் சாதகமான வழிகளையே இவ்வரவு செலவுத் திட்டம் திறந்து வைத்துள்ளது.

அத்துடன் இன ஒடுக்குமுறையினை ராணுவப்பலத்துடன் முன்னெடுப்பதற்கும் முன்னுரிமை வழங்கியுள்ளது. எனவே இது முற்று முழுதான மக்கள் விரோத வரவு செலவுத் திட்டமேயாகும்.

நாட்டின் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், அரசாங்க, தனியார் துறையினர் குறிப்பாக மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏகப்பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் மீதான கடும் பொருளாதாரச் சுமைகள் ஏற்பட்டுள்ளன. நேரடி மறைமுக வரிகளால் மக்களது அன்றாட வாழ்க்கை நிலை அதள பாதாளத்திற்குள் தள்ளப்படும் அபாயம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் முன்வைத்த பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு சற்றும் கவனத்திற்கு எடுக்கப்படவில்லை. அதேவேளை 1200 ரூபா அரசாங்க ஊழியர்களுக்கு வாழ்க்கைப் படியாகப் பிச்சை இடுவது போன்று வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாண் அறுபது ரூபாகவும் சம்பலுக்கான தேங்காய் ஐம்பது அறுபது ரூபாவரையிலும் விற்கப்படும் போது அறிவிக்கப்பட்டுள்ள 1200 ரூபா வாழ்க்கைப்படியானது அன்றாட வாழ்வின் எந்தவொரு உணவுப் பொருட்களுக்கும் ஒரு மூலைக்குக் கூடப் போதுமானதல்ல. இது கூடத் தனியார் துறையினருக்கு வழங்கப்படவில்லை.

மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தனியார் கம்பனிகளது விருப்பு வெறுப்புக்குரிய கொத்தடிமைகளாக இருத்தி வைக்கப்பட்டுள்ள நிலையினை இவ் வரவு செலவுத்திட்டம் மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது. முன்னைய வருடங்கள் போன்று இந்த வரவு செலவுத் திட்டத்திலும் பாதுகாப்பிற்கும் நகர அபிவிருத்திக்கும் அதி உச்ச நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் கீழான அமைச்சுகளுக்கும் ஜனாதிபதியின் செயற்பாட்டிற்கும் அதிகளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியினதும் அவரது சகோதரர்கள் உறவினர்களின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளுக்கு சுமார் 46 வீதமான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. அதேவேளை கைத்தொழில் விவசாயம், மீன்பிடி, சுயதொழில் உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரத் துறைகளுக்கு குறைந்தளவிலான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளன.

அறுபத்தி மூன்று வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் என்பது இறக்கப் போகும் நிலையில் உள்ள முதியவர் ஒருவருக்கு கஞ்சித் தெளிவு வாயில் வார்ப்பது போன்றதாகும். கல்வி சுகாதாரத்திற்கு கடந்த வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டை விடச் சிறு அளவு தொகை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இது அத்துறைகளைச் சீரழிய வைத்து தனியார் மயப்படுத்தும் நோக்கத்தை வெளிப்படுத்துவதாகவே காணப்படுகிறது.

சுருங்கக் கூறின் இவ்வரவு செலவுத் திட்டம் நவதாராள பொருளாதாரத்தை இறுக்கி வரும் சர்வதேச நிதி நிறுவனத்தின் ஆலோசனையுடனும் ஆசீர்வாதத்துடனும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே அதன் பிரதி நிர்வாக இயக்குனர் திருப்திகரமான வரவு செலவுத் திட்டம் என ஆசியுரை வழங்கி உள்ளார். அவர் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட வேளை பாராளுமன்றத்திலும் பின்பு இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட தேனீர் விருந்திலும் கலந்து கொண்டுள்ளமையும் வரவு செலவுத் திட்டத்தின் பின்புலத்தைத் தெளிவாக்கியுள்ளது.

மேலும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஐம்பதினாயிரம் தொடர் மாடி வீட்டுத் திட்டத்தை வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்திருப்பதன் மூலம் மலையக மக்களுக்கு நிலம் வீடு வழங்கும் முன்னைய வாக்குறுதிகள் கைவிடப்பட்டுள்ளன. இது மலையக மக்களின் தேசிய இன இருப்பிற்கும் வளர்ச்சிக்குமான அடிப்படை உரிமையினை மறுக்கும் பேரினவாத உள்நோக்கம் கொண்டதுமாகும்.

வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லீம் மக்களது இருப்பை இன மொழி மத ரீதியில் குலைப்பதும் மலையக மக்களது இனத் தனித்துவத்தைச் சிதைத்து அவர்களை வெறும் கூலிகளாக வைத்திருப்பதுமான பேரினவாத முதலாளித்துவ நிலைப்பாட்டையே வரவு செலவுத் திட்டத்தில் அடையாளம் காண முடிகிறது. எனவே வர்க்க ரீதியில் அனைத்து உழைக்கும் மக்களையும், இனரீதியில் வழக்கு கிழக்கு மலையக மக்களையும் ஒடுக்குதல்களுக்கு உள்ளாக்கும் ஒரு மக்கள் விரோத வரவு செலவுத் திட்டமாகவே மகிந்த சிந்தனையின் இவ் ஒன்பதாவது வரவு செலவுத் திட்டத்தை எமது கட்சி கணிப்பீடு செய்து கொள்கிறது.

-26.11.2013

சி.கா.செந்திவேல்

பொதுச்செயலாளர்

புதிய – ஜனநாயக மாக்சிச- லெனினிசக் கட்சி