Wed05272020

Last updateSun, 19 Apr 2020 8am

மூத்த பொதுவுடமைவாதி இ.கா.சூடாமணியின் முதல்மாத நினைவஞ்சலி நிகழ்வு!

பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த போராளியாகவும் புதிய ஜனநாயக - மாக்சிச-லெனினிசக்கட்சியின் மத்தியகுழு உறுப்பினராகவும் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் அரசியல் தொழிற்சங்க வெகுஜனப் போராட்டத்தளங்களில் செயல்பட்டு வந்தவருமான மறைந்த இ.கா.சூடாமணியின் முதல்மாத நினைவஞ்சலி நிகழ்வு வவுனியா முத்தையா மண்டபத்தில் இன்று 11-05-2013 காலை ஒன்பது மணிக்கு நடைபெறுகிறது. நினைவுரைகளும் “சூடாமணி” நினைவு நூல்வெளியீடும் இடம்பெற உள்ளன.

மாசற்ற சமூகப்போராளி

சமூகப் போராட்டங்களும் அரசியல் சுத்துமாத்துக்களும் நிறைத்திருந்த காலகட்டங்களில் உலாவந்து மறைந்த உண்மையான சமூகப்போராளியான “சூடாமணி” அண்ணனை அஞ்சலிக்க மனம் நெகிழ்கிறது. உடல் பொருள் ஆவி அத்தனையும் சமூகப் போராட்டங்களுக்கு அர்பணித்தவர் என்று சொன்னால் அதுவும் மிகையாகாது, போதாது.

நான் அவரை காங்கேசன்துறையில் சந்தித்துப் பழகிய நாட்களிலிருந்து இறுதிக் காலங்கள்வரை அவரின் தோற்றம் மட்டுமல்ல தாம்கொண்ட கொள்கைகளில் கூட மாறாத குணங் கொண்டவராக திகழ்தவர். தாம் சார்ந்த ஊர் உறவுகளுடன் மட்டுமன்றி அயலூருகள் பலவற்றின் நண்பர்கள் அன்பர்கள் பெரும் குழாமைக் கொண்டிருந்தவர்.

காங்கேசன்துறையில் நானறிந்த முற்போக்கு வாதிகள், சமூகப்போராளிகள் பலரது தோற்றம் மட்டுமல்ல அரசியல் தெளிவுக்கு மூலகாரணமாக திகழ்தவர் இவரே. அந்த காலகட்டங்களில் காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலையாயினும் சரி துறைமுகத்திலாயினும் சரி தொழிற்சங்க போராட்டங்களின் வெற்றிகளுக்குப் பின்னால் உரமிட்டவர் இவரேயாவர். இன்றும் பலர் “சூடாமணி” அண்ணை இல்லாட்டி இது நடந்திருக்காது என்று சொல்வதை கேட்கிறேன்.

குடும்பத்தில் அவர்பட்ட துன்பத்தினை நினைவுகூருவது அழகல்ல. ஆனால் அவர் எப்படி எப்படியெல்லாம் இவைகளை சமாளித்து தமது சமூக, அரசியல், கொள்கைகளை இறுதிவரை கைவிடாது போராடினார் என்பதை நாமெல்லாம் கவனிக்க வேண்டும். அன்றிருந்ததிற்கும் இன்றிருப்பதற்கும் இடையிலுள்ள சமூக அரசியல் தெளிவுக்குப் பின்னால் நிச்சயமாக நாம் சார்ந்த சமூகத்தில் இவரின் பங்களிப்பு நிச்சயமாக உண்டு. தமது குடும்ப முன்னேற்றத்திற்கான பங்களிப்பை விட சமூகத்தின்; முன்னேற்றத்திற்கான மறைமுகமான பங்களிப்பு ஏhளம் ஏராளம்.

இவரின் தொடர்பாடல் திறமை மிகவும் கிலாகிக்கத் தக்கது. போராட்ட காலத்தில் எவரும் பயந்திருந்த காலகட்டங்களில் துணிந்து எழுத்து மூலமோ நேரடியாகவோ சம்பந்தப்பட்ட “தலைமை”களுடன் மோதி வென்றுள்ளார். பலதடவைகள் அவரின் கடிதங்கள் பலவற்றை நான் வரைந்து கொடுத்துள்ளேன். கருத்துத்தெளிவும் சொல்வதை இரதத்pனச் சுருக்கமாக பயமின்றி அடித்துச் சொல்லும் திறமை அவரிடம் செறிந்திருந்தது. நான் பயந்து பயந்து எழுதிக்கொடுத்த பல அவர் சொல்லிச் சென்றது போல் அவர்களின் நெற்றியில் அடித்து திருத்தியிருக்கிறது. இவரிடம் கற்ற எழுத்தாற்றல் முறைமை என்வாழ்க்கையிலும் பல மாற்றங்களைச் செய்திருக்கின்றது.

“சூடாமணி” அண்ணனின் மறைவு இயற்கையின் நடத்தையாயினும் அவரின் காலத்தின் வரலாறு அவர்சார்ந்த எவராலும் மறைக்க முடியாததொன்று. தாமழியுமட்டும் நினைவு கூருமொருவராக இருப்பவர். இவர் விட்டுச்சென்ற, தொட்டுச்சென்ற சமூகப் பணி ஏராளம். அதில் ஏதாவதொன்றையாவது நாமும் சுமந்தால் அவரின் ஆத்ம சாந்திக்கு செய்யும் பணியாகும்.

“சூடாமணி” அண்ணனின் மறைவால் துயருறும் குடும்பத்தவர்;, தோழர்கள் அனைவருடனும் ஒன்றிணைவோம். அவர்தம் பணிகள் தொடர தோள் கொடுப்போம்

க.கமலசேகரம்.

முன்னாள் தேசிய சேமிப்பு வங்கி முகாமையாளர்,

சிக்னல் மரத்தடி, காங்சேசன்துறை