Sat05302020

Last updateSun, 19 Apr 2020 8am

தொடரும் கழுகுப்பார்வைக்குள் இன்று சிரியமக்கள் சிக்குண்டிருக்கிறார்கள்

ஏகாதிபத்திய நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்சியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், யப்பான் போன்ற நாடுகள் தனியாகவும், இவை ஐரோப்பிய ஒன்றியம் என்ற நிதிமூலதனக் கூட்டுக்கு ஊடாகவும், சீனா போன்ற சமூக ஏகாதிபத்தியமும் உலகைப் பங்குபோட நாயாய் பேயாய் அலைகின்றன. உலகை பங்குபோடும் வேலையில் மூன்று துருவங்களாக (அமெரிக்காவும் அதன் அடிவருடி நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியம், சீனா – ரஷ்யா) பிரிந்துள்ள ஏகாதிபத்திய நாடுகளான இவை, தேவையானபோது சேர்ந்தும் அந்தந்தச் சூழலின் பொருட்டு தனியாகவும், இயற்கைவளம் பொருந்திய நாடுகளின் மீது தாக்குதல் நடாத்தி ஆக்கிரமிக்கின்றன.

இதற்கு சமீபகால உதாரணமாக ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, எகிப்து என்ற தொடர்ச்சியில் இன்று சிரியா மீது இவை தமது கோரப்பற்களைப் பதித்து, தமது அடிவருடிகள் மூலமான ஏவல் ஆட்சியை உருவாக்கப் பாடுபடுகின்றன.

மனித உரிமைக்கான யுத்தம், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் இந்த “சர்வதேச சமூகம்” உலகின் பல பாகங்களிலும் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துகின்றன.

முன்னர் ஐ.நாவின் அங்கீகாரம் என்ற போர்வைக்குள் தன்னை மறைத்து இயங்கிய மேற்கு ஏகாதிபத்திய நாடுகள், இன்று ஐ.நாவின் அங்கீகாரம் சீன – ரஷ்சியக் கூட்டினால் மறுக்கப்பட்ட நிலையில், இவை தனியாகவே சிரியா மீது பாய்ந்துள்ளன. ஐ.நாவின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் பிரித்தானியாவும், அமெரிக்காவும் மனித உரிமையைப் பாதுகாக்கப் போவதாகக் கூறி சிரியாவின் உள்நாட்டு விடயத்தில் தலையிட்டுள்ளன. உண்மையில் இந்தத் தேசங்களே பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றன. சிறுபான்மை இனத்தவரையும், சிறுபான்மை மதத்தவரையும் கொல்லும் கிளர்ச்சிப் படைகளுக்கு இவை நிதியும் பயிற்சியும் கொடுகின்றன.

சிரியாவில் கூலிப்படை:

பழம்பெரும் வரலாற்றைக் கொண்ட சிரியாவில், தற்போதைய அதிபரான பாத் அல் அசாரின் தந்தை அல் அசாத்தினால் 1960களில் அவரது பாத் கட்சியின் ஒரு கட்சிச் சர்வாதிகாரத்தின் கீழ் மதச்சார்பற்ற நாடாகவும், முதலாளித்துவ அரசியல் அமைப்பைக் கொண்டும் அந்த அரசமைப்பு உருவாக்கப்பட்டது. தனது தந்தை இறந்த பின்னர் இன்று வரை அவர் மகன் பாத் அல் அசார் அந்நாட்டின் அதிபராக ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஆண்டு வருகிறார்.

மத்திய கிழக்கில் இருக்கின்ற மன்னராட்சி போல் அல்லாது அரைகுறை முதலாளித்துவ ஆட்சி இங்கு நிலவுகிறது என்றாலும் மதச்சார்பின்மையுடன் எண்ணை வளங்கள் அரசுடமையாக இருக்கின்றது. மேற்குத் தேசங்களின் தலையீட்டிற்கு முன்னரே இந்த எண்ணை வளமானது சிரியாவிலும் ஈராக், லிபியா போன்ற நாடுகளிலும் அரசுடமையாக இருந்தது இங்கு குறிப்பிட வேண்டியதாகும். சிரியாவில் முதலாளித்துவ அரசு முறைக்கேயான சமூக ஏற்றத்தாழ்வுகளும், வறுமை, இன ஒடுக்குமுறைகளும் இருந்தது. குறிப்பாக சிறுபான்மை இனமான குர்தீஸ் இனத்தவர்கள் மீதான ஒடுக்குமுறையை அரசு பல வருடங்களாக மேற்கொண்டு வருகிறது.

ஒடுக்குமுறை அரசு என்பது மத்தியகிழக்கு எங்கும் வியாபித்திருக்கின்றது. மன்னராட்சி நடைபெறுகின்ற நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதை சர்வதேச தன்னார்வ நிறுவனங்கள் சில வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. ஆயினும் தனது நட்பு நாடுகளான சவூதி அரேபியா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் மனிதவுரிமை மீறல்கள் பற்றிய எவ்வித கரிசனையையும் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் வெளிக் காட்டியதில்லை. சிரியாவின் ஒடுக்குமுறை என்பது மற்றைய மத்திய கிழக்கு நாடுகளைப் போலவும், ஏனைய உலக நாடுகளைப் போலவும் ஒரேவகையான ஒடுக்குமுறை அம்சங்களைக் கொண்டதாகவே இருந்தது. அது சிரியாவிற்கான பிரத்தியேகமான தன்மையைக் கொண்டிருக்கவில்லை.

ஆனால் லிபியாவின் வீழ்ச்சிக்குப் பிறகு, சிரியாவில் "முஸ்லீம் சகோதரக் கட்சியின்" கீழ் இயங்கும் சன்னி பிரிவானது "அரபு வசந்தத்திற்கு" அமைய அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் உள்நாட்டு யுத்தத்தினை ஆரம்பித்தது. அத்துடன் சிரிய தேசிய கவுன்சிலில் உள்ள மேட்டுக்குடியினரையும், முன்னைநாள் இராணுவ அதிகாரிகளையும் தனது கையில் வைத்துள்ள அமெரிக்காவானது ஆட்சி மாற்றத்தை சிரியாவில் ஏற்படுத்த அவர்களை தனது பொம்மையாக பயன்படுத்துகின்றது.

இதுவரை சிரிய "உள்நாட்டு" யுத்தத்தில் சுமார் 50000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பான்மையான மக்கள் அமெரிக்க சார்பு கூலிப்படைகளால் கொல்லப்பட்ட சிறுபான்மை இன சியாபிரிவு இஸ்லாமியர், குர்திஸ், கிறிஸ்தவர்களாவர்.

“சர்வதேச சமூகம்”

இன்று ரஷ்ய ஊடகங்களே பெரும்பாலும் சிரியாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி வருவதுடன், ரஷ்ய - சீன அரசுகளும் இந்த மனித உரிமை மீறல்களைக் கண்டித்துள்ளன. இது ஒருபுறமிருக்க, மனித உரிமையைப் பேணுவதாகக் கூறிக் கொள்ளும் அமெரிக்கா தனது அரசுக் கூட்டாளிகளான "அரபு லீக்" ஊடாக சிரிய அரசிற்கு எதிராகக் குரல் கொடுக்க வைத்தது. இதன் அடிப்படையில், சிரியாவுக்குள் அரபு நாடுகள் மற்றும் பிற வெளிநாடுகள் அமைதிகாப்பு படையினரை அனுப்ப வேண்டும் என அமெரிக்காவின் அடிவருடி நாடான கட்டார் நாடு குரல் கொடுத்துள்ளது.

சிரியாவின் அசாத் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படும் கட்டார் பிரதமர், சிரியாவில் தினந்தோறும் திட்டமிட்டு நடக்கின்ற படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டிய தார்மீக மற்றும் மனிதாபிமானக் கடமை “சர்வதேச சமூகத்துக்கு” இருக்கிறது என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் மேற்கு ஏகாதிபத்தியத்தை சிரியாவுக்குள் இறக்குவதே அவரின் நோக்கம்.

இந்நிலையில் எகிப்தியத் தலைநகர் கெய்ரோவில் வைத்து, அரபுநாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர், வெளிநாடுகள் கண்மூடித்தனமாக சிரியாவின் விவகாரத்தில் தலையிடக் கூடாது என்றும் அப்படியான தலையீடுகளை ரஷ்யா எதிர்க்கிறது என்றும் கூறியுள்ளார். இதே கருத்தை சிரிய விவகாரத்தில் 'அதியுச்ச திமிர்' என்று விமர்சித்த அமெரிக்கக் கருத்தை சீனா வன்மையாக கண்டித்துள்ளது. அத்துடன் ஈராக்கில் ஏற்பட்ட அனுபவங்களுக்குப் பிறகு, அரபு மக்களுக்காகப் பேச அமெரிக்காவுக்கு எதுவித உரிமையும் கிடையாது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ செய்தித்தாளில் கருத்து வெளியாகியுள்ளது. சிரியா குறித்த ஐ.நா தீர்மானத்துக்கு எதிராக ரஷ்யாவும், சீனாவும் வீட்டோ வெட்டு வாக்கினை பயன்படுத்தியதை, ''வெறுக்கத்தக்கது'' என்று அமெரிக்க அரசுத்துறைச் செயலர் கிலாரி கிளிண்டன் ஒரு வெளிப்படையான அறிக்கையில் விமர்சித்ததை அடுத்து இந்தக் கருத்தை சீனப் பத்திரிகை எழுதியிருந்தது.

இரத்தக் களரியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு சிரிய அதிபர் அசாத்துக்கு மறுசீரமைப்புகளை செய்ய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என சீனா விரும்புகிறது. இதற்கு அமைய சீர்திருத்தங்களை அறிவித்துக் கொண்டது சிரிய அரசாங்கம். ஆனால் அமெரிக்காவோ அந்த ஆட்சியில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றது.

மனித உரிமைககள் பற்றி

மேற்குத் தேசங்களின் மனித உரிமைகளைப் பற்றிய பார்வை, முழுச் சமூகத்தின் உறுப்பினர்களின் நலனில் இருந்து நோக்காது, தனிமனிதனில் இருந்து சமூகத்தைப் பார்க்கின்ற நோக்கில் அமைந்திருக்கின்றது. “மக்கள் தமது சொந்தக் கருத்துக்களை வெளியிட முடியாதவாறு தடுத்தல், தனக்கு விருப்பமான தலைவரை அல்லது அரசாங்கத்தை தெரிவு செய்ய முடியாதவாறு மக்களின் அபிலாசைகளை அடக்கி விடுதல், இதை விட மேலாக சிறைச்சாலைகளில் சித்திரவதைகள், அரசியல் எதிரிகளை கைது செய்தல், அவர்களை சித்திரவதை செய்தல், போர் அல்லது உள் நாட்டு யுத்தம் இடம்பெறும் நாடுகளில் இராணுவத்தின் கெடுபிடி, சட்டவிரோதக் கொலைகள் இவைகள் தான் மனித உரிமைப் பிரச்சினைகளாக மேற்கு நாடுகளால் சித்தரிக்கப்பட்டுள்ளன. இது சோவியத் முகாம் இருந்தபோது பின்பற்றிய மறைமுக தலையீட்டுப் போக்காகும்.

ஒரு அரசாங்கம் தனது மக்களுக்குத் தேவையான கல்வி வசதிகள், வீட்டு வசதிகள், வாழ்க்கைத் தரவசதிகள், பொருளாதார வசதிகள் இப்படி அனைத்து வசதிகளையும் நிறைவேற்ற வேண்டும். வாழ்வதற்கான உரிமையை மனிதர் கேட்கின்ற போதும், அதனை நிறைவேற்ற தயாரில்லாத ஆட்சியாளர்கள் ஒடுக்குமுறைகளை பயன்படுத்திக் கொள்கின்றனர். இவைகளே பெரும் உள்நாட்டு யுத்தங்களாக வெடிக்கின்றன. அப்போது மக்கள் நலனுக்காகப் போராடும் அமைப்புக்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகின்றது மேற்கு ஏகாதிபத்தியம். பயங்கரவாத அமைப்புகள் என தடைசெய்கின்றது. அதேவேளை தனது நலனை முன்னிறுத்தி, தமது "மனித உரிமை" பற்றிய பார்வையின் அடிப்படையில், அமெரிக்கா பல தடவைகள் வரலாற்றில் அல்கொய்தா தொடக்கம் இன்றைய அரபுவசந்தம் வரை எத்தனையோ எதிர்ப்புரட்சிக் குழுக்களுக்கு ஆதரவு வழங்கி வந்திருக்கின்றது.

உலகை பங்கிடுதல்:

பலஸ்தீன மக்களின் வாழ்வுரிமையை அழிக்கும் இஸ்ரேல் மீது ஒரு சுண்டுவிரலை அசைப்பதற்கு இந்த “சர்வதேச சமூகத்தினால்” முடியவில்லை. அதேவேளை "மனித உரிமைகளை" முன்னிறுத்திய சிரிய, லிபிய, எகிப்திய "உள்நாட்டு" யுத்தங்களானது எண்ணை வளத்தை தனியார் மயமாக்கி, அதனை தனியாருக்கு கொடுப்பதும், தனியார் உற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டற்றதாக சாதகமான சூழலை உருவாக்கவும், தனக்கு சார்பான பொம்மை ஆட்சியை ஏற்படுத்தவுமே சிரிய அரசில் மாற்றம் என்கிறது.

மறுபுறத்தே ஒப்பீட்டு ரீதியில் பொருளாதாரத்தில் வளர்ந்திருந்த மக்கள் ஒட்டாண்டிகளாக ஆக்கப்படுகின்றனர். தனிமனித சொத்துத் தொடக்கம் அரச சொத்துகள் என்பன அழிக்கப்படுகின்றது. இந்த நாடுகள் அழிவில் இருந்து வெளியே வர பல ஆண்டுகள் தேவையாகின்றது. இதன் மூலம் நாட்டின் வளர்ச்சியே பின்னோக்கிக் செல்கின்றது. நாட்டின் அழிவைக் கட்டியெழுப்ப ஆக்கிரமிப்புத் தேசங்களின் நிறுவனங்களே மறுசீரமைப்பினை மேற்கொள்கின்றது. இதன் மூலம் நாட்டை கட்டியெழுப்ப வசதிபடைத்த மேற்குத் தேசங்களின் வங்கியினையே தங்கியிருக்க வேண்டியிருக்கின்றது. இவைகள் எல்லாம் “சர்வதேச சமூகத்தினால்” உலகைப் பங்கிட்டுக் கொள்ள ஏற்படுத்தப்படும் ஆக்கிரமிப்பு யுத்தங்களினால் ஏற்படுகின்றது.

உலக பிராந்தியங்களை தங்களின் ஆளுகைக்குள் கொண்டு வரும் பொருட்டு மேற்கு ஏகாதிபத்தியங்கள் கூட்டாக இயங்குகின்றன. இவைகள் குறிப்பிட்ட பிரதேசத்தினை கைப்பற்றிய பின்னர் தமக்கிடையே பிரதேசங்களை சினேகபூர்வமாக பிரித்துக் கொள்கின்றன. இதனை கிழக்கு ஐரோப்பிய தேசங்களில் 90களில் நடைபெற்ற ஏகாதிபத்தியங்களின் தலையீட்டின் ஊடாக அறிந்து கொள்ள முடியும். இன்று ஆசிய, ஆபிரிக்க வளங்களை சூறையாட சீனாவும், ரஷ்யாவும் களத்தில் குதித்துள்ளன. சிரியாவில் நடைபெறும் யுத்தம் என்பது மக்களின் உண்மையான விடுதலை நோக்கியல்ல. வல்லரசுகளின் நலனைக் காப்பதற்காக ஆட்சி மாற்றத்தைக் கோரி நிற்கும் அநியாய யுத்தமாகும்.