Thu10062022

Last updateSun, 19 Apr 2020 8am

கொலைகளுக்கான நியாயமும் கண்டனமும் நீதி கோரலும்

அண்மையில் வடபகுதியில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து பல விதமான அறிவிப்புகள்-செய்திகள்-நடவடிக்கைகள்-ஆய்வுகள்-கண்டனங்கள்-நியாயப்படுத்தல்கள்-ஆறுதல்கள்-உரைகள் என்பன ஊடகப் பரப்பில் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

இதேவிதமான ஒரு சூழல் இற்றைக்கு சுமார் 17 மாதங்களுக்கு முன்னர் (13 மே 2015ல்) மாணவி வித்தியா கொலை சம்பவத்தையொட்டி ஏற்பட்டிருந்தது. அதற்கு இன்று வரை நீதித் தீர்ப்பு கிடைக்கவில்லை. நீதி கிடைக்கக் கூடிய திசையில் அவ் வழக்கு செல்லவதாக தென்படவும் இல்லை.

இலங்கை வரலாற்றில் அரச படையினர் குடிமக்களைக் கொலை செய்வது இது முதற் தடவையல்ல. இன்றைய இலங்கை அரசியல் கால நிலையில் இந்த இரு மாணவர்களின் கொலை கடைசித் தடவையாக இருக்கப் போவதுமில்லை.

எமது அரசுக் கட்டமைப்பும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கங்களும் குடிமக்கள் மீதான கொலைகளை செய்தபடியேதான் தங்கள் ஆட்சியதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு வருகின்றன. குடிமக்களும் கொலைகாரர்களைத் தங்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்வதும்-கொலையைத் தூண்டுகிற கட்சிகளை ஆதரிப்பதும்-கொலைகளை நியாயப்படுத்துவதும் கடந்த பல சகாப்தங்களாக தொடரும் வரலாறாகும்.

மக்களால் தெரிவு செய்யப்பட்டு ஆட்சியதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் ஒரு அரசாங்கம் தனது அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கு தனது சொந்த குடிமக்களைக் கொலை செய்வதும் அவற்றை நியாயப்படுத்துவதும் சனநாயக நடைமுறையில் சாதாரணமான விடயமே. ஆனால் அதனைச் சட்ட ரீதியாக தண்டிப்பதற்கும் தார்மீக ரீதியாகக் கண்டிப்பதற்கும் உரிமையும் தகுதியும் சக்தியும் கொண்டவர்கள் குடிமக்களே.

இன்று இலங்கையில் இந்த உரிமை-தகுதி-சக்தி கொண்ட குடிமக்கள் இருக்கிறார்களா? இல்லையா? இருக்கிறார்கள் என்றால் அவர்கள் என்ன செய்கிறார்கள்? இல்லையெனில் ஏன் இல்லை? என்ற கேள்விகளுக்கு விடை தேடுவதன் ஊடாகவே தொடரப் போகும் இக் கொலைகளைத் தடுத்து நிறுத்த முடியும். இல்லையேல் கதறல்களும்-கண்டனங்களும்-ஆர்ப்பாட்டங்களும்-ஆர்ப்பரிப்புகளும் மேட்டுக் குடி மேலாதிக்க அரசியல் வாதிகளின் சுய லாப சுரண்டல் போக்குகளுக்குத் தொடர்ந்து வழிவிட்டுக் கொடுப்பதாகவே அமையும்.

இலங்கையில் மிக நீண்ட காலமாக ‘கொலை’ என்றவுடன் இலங்கைக் குடிமக்கள் நீதி என்ற ஒரு அலகுக்கு ஊடாக அக் கொலையை அணுகும் மனிதாபிமானத்தை இழந்து விட்டுள்ளனர். மாறாக ‘கொலையை’ இன-மத-சாதி-வர்க்க-பால்-பிராந்திய-கட்சி மனப்பான்மையூடாகவே அணுகுகின்றனர். அதனால்தான் இப்படியான கொலைகள் மறுபடி மறுபடி தொடருகிறது.

இன்று இந்த மாணவர்களின் ‘கொலை’ பற்றித் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் அணுகப்படும் முறைகளில் பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் மிகவும் பிரதானமாகக் காணப்படுவது அரசியல் பார்வைகளாகும். நீதிக்கான கோரிக்கைகளோ-நியாயத்திற்கான தேடுதல்களோ அவற்றில் காணப்படவில்லை அல்லது முன்னிலைப் படுத்தப் படவில்லை. மாறாக எமக்கு ஒரு சுயாட்சியும் அதற்குக் கீழ் ஒரு பொலிஸ் படையும் இருந்திருந்தால் இப்படிப்பட்ட ஒரு கொலை நடந்திருக்காது என்ற "மாயையே" தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாயை-இதை நோக்கிய பார்வை-இத்தகைய சிந்தனைப் போக்கு எம்மிடமிருந்து நீங்காதவரை இப்படியான கொலைகள் மீண்டும் மீண்டும் இடம் பெறுவது தவிர்க்க முடியாதது.

அரசபடையினரின் கொலைகளை அரசாங்கங்கள் சட்ட ரீதியாக அங்கீகரிக்க ஆரம்பித்த அரசியல் பாரம்பரியம் 1971ல் சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியைத் தொடர்ந்தே உருவாகியது. அப்போது நாம் அதனைத் தட்டிக் கேட்கவில்லை. ஒரு சலசலப்பு கூட காட்டவில்லை. காரணம் அது சிங்களவர்களுடைய பிரச்சனை என்பதேயாகும். ஆனால் அது எம்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போது அலறினோம்-ஆத்திரப்பட்டோம்- ஆயுதம் ஏந்தினோம். ஆனால் இன்றும் அதனைத் தடுக்க முடியவில்லை. காரணம் இன்னமும் நாம் கொலைகளை வகைப்படுத்தியே பார்க்கிறோம்.

நாம்-மனிதத் தன்மை உள்ளவர்கள்- மனிதாபிமானம் கொண்டவர்கள் என்றால் சற்றுக் கண்ணை மூடி சிந்தித்துப் பார்ப்போம்.

1958ல் ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தைக் நிறைவேற்றிய திரு. பண்டாரநாயக்கா ‘தமிழ்மொழிக் கருமமாற்றல்’ சட்டத்தைக் கொண்டு வந்ததால் கொலையுண்ட போது மனிதர்கள் என்ற வகையிலாவது அதற்காக நாம் வருத்தப் படவில்லை. ‘அவருக்கு அது வேணும்’ என்று நியாயப் படுத்தினோம்.

1971ல் ஆயிரக்கணக்கில் சிங்கள இளைஞர்கள் வகை தொகையின்றி கொல்லப்பட்ட போது ‘அவர்கள் சிங்களவர்கள்’ என்பதால் நாம் அதனைக் கண்டு கொள்ளவேயில்லை.

மக்களால் தெரிவான திரு. துரையப்பா கொலைக்கு நாம் மௌனமாக இருந்தோம். ஓவ்வொன்று ஒவ்வொன்றாக தமிழ் இளைஞர்கள் தமிழர்களாலேயே கொல்லப்பட்டனர். தொடர்ந்து கூட்டம் கூட்டமாக தமிழ் இளைஞர்கள் தமிழர்களாலேயே கொல்லப்பட்டனர். அவ்வப்போது அவற்றிற்கு ஒவ்வொரு நியாயம் கற்பித்துக் கொண்டோம். அரசாங்க கட்டுப்பாடு இல்லாதிருந்த பிரதேசங்களில் கொலைகள் நடந்த போதும் அவைகள் ‘சுதந்திர பூமிக்கான’ விலைகள் எனத் திருப்திப்பட்டோம்.

கொலைகள் பற்றிய எமது இந்த மனோபாவம்தான் எங்களை ‘வன்னிப் பேராழிவு’ வரை இட்டுச் சென்றது. இன்று நாம் பழையபடி 1970-80 காலத்து அரசியல் சூழலுக்கே திரும்பி வந்து சேர்ந்துள்ளோம்.

நாட்டில் ஒரு புதிய பாணி அரசாங்கமும் நாட்டுக்கு வெளியே புதிய ஒரு சர்வதேச சூழலும் ஏற்பட்டு ஏறக்குறைய இரண்டு வருடங்கள் ஆகின்றன. இக் காலப் பகுதிக்குள் நாடு பூராவும் பொலிசார் சம்பந்தப் பட்ட பல கொலைகள் இடம் பெற்றுள்ளன. பொலிஸ் நிலையங்களுக்கு உள்ளேயே கொலைகள் நடந்துள்ளன. அவற்றைக் கண்டித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றையிட்டு ‘நீதிக்கான போராட்டம்’ நடாத்தும் நாம் கவலைப்படவேயில்லை.

சுதந்திர பொலிஸ் கொமிசன் அமைப்பட்ட பின் நாட்டில் இடம் பெற்ற அக் கொலைகளைக் கண்டிக்காமல் இருந்து விட்டு- பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்களுடன் இணைந்து நீதிக்காகக் குரல் எழுப்பாமல் இருந்து விட்டு இன்று எமது மாணவர்களின் கொலைக்கு வீதியில் இறங்குவதால் நீதியைப் பெற்று விடலாம் என்றோ அல்லது இத்தகைய கொலைகளை நாளை தடுக்கலாம் என்றோ கருதுவது நம்மை நாமே ஏமாற்றுவதாகும்.

சர்வாதிகார ஆட்சியின் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் பலர் தத்தமது உயிர்களைப் பணயம் வைத்துச் செயற்பட்டே கடந்த ஆண்டு ஜனவரியில் புதிய சனாதிபதியைப் பதவியில் அமர்த்தினர். அவரது மகன் சனாதிபதிப் பாதுகாப்பு பிரிவுடன் இரண்டாவது தடவையாக ‘இரவு களியாட்ட விடுதியில்’ வன்முறையில் ஈடுபட்ட போதும் அது சம்பந்தமாகத் தொடங்கப்பட்ட பொலிஸ் விசாரணை முடக்கப்பட்டு விட்டது. ‘நல்லாட்சி’க்காக மக்கள் ஆதரவளித்து தெரிவான புதிய பிரதமர் 24 மணி நேரத்தில் இலங்கைப் பிரசாவுரிமை வழங்கி மத்திய வங்கிக்கு இயக்குனர் ஆக நியமித்த அவரது நண்பர் ஊழல் வழக்கில் பதவியிறக்கப்பட்ட போதும் விசாரணையை முடக்கும் முயற்சிகளிலேயே பிரதமர் ஈடுபட்டுள்ளார்.

எனவே இத்தகைய ஆட்சியாளர்களின் கீழ் இடம் பெறும் கொலைகளுக்கு இனவாத முலாம் பூசி ‘நீதியை’க் கொச்சைப்படுத்துவதை நிறுத்தி விட்டு ‘கொலை’ நாட்டின் எந்த மூலையில் இடம் பெற்றாலும் நாட்டின் குடிமக்களாக நாம் நம்மை நிலை நிறுத்தி அரசியல் தலையீடு அற்ற ஒரு சுதந்திர நீதி நிர்வாகக் கட்டமைப்பை ஏற்படுத்துவதன் ஊடாகவே இப்படியான கொலைகளை எதிர்காலத்தில் இடம்பெறா வண்ணம் தடுத்துக் கொள்ள முடியும்.

அரசியல் விழிப்புணர்ச்சியும் மனித நேயமும் அற்ற மக்களால் தெரிவு செய்யப்படும் ஆட்சியாளர்கள் எவராக இருந்தாலும் தங்கள் அதிகாரத்தைக் காப்பாற்றத் தங்கள் சொந்த இன மக்களையே கொன்று குவிக்கத் தயங்காதவர்கள் என்பதையே நமது நாட்டின் அண்மைய வரலாறு துல்லியமாக எடுத்துக் காட்டியுள்ளது.

அதுவே உலக வரலாறும் கூட.