Fri01152021

Last updateSun, 19 Apr 2020 8am

கலை-இலக்கிய அரங்கம்–8 (சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு)

இம்மாநாடு இன்று கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது. இது பற்றிய வாதப் பிரதிவாதங்கள் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே ஆரம்பமாகி விட்டது. இது ஆதரவு-எதிர்ப்பு-நடுநிலை (மதில்மேல் பூனை) என்ற வகையில் நடைபெற்றது. இதில் ஆபத்தானவர்கள் நடுநிலையென கருத்துக் கூறாமல் மதில் மேல் பூனையாட்டம் இருப்பவர்களே!.  நடுநிலை என்பது இல்லையென வாதிப்பவர்களும் உண்டு. எதிலும் நடுநிலை என்பது நீண்டு நிலைக்காது. அது அதன் சாதக-பாதகங்களைப் பொறுத்து சார்பு நிலையெடுக்கும். மாநாடு முடிவடைய இவர்கள் பற்றி நாம் அவதானிக்கலாம்.

நாம் இம் மாநாட்டு வழிபாட்டாளர்கள் அல்ல. ஓர் நிகழ்வு நடக்கும் போது அடக்கி ஓடுக்கப்படும் மக்கள் நலன் சார்ந்து கருத்துக்களை வைக்கவேண்டும். கடந்த காலங்களில் இது போன்ற பல விடயங்களில் (அரசியல்-தத்துவார்த்த-கட்சி-ஸ்தாபன அமைப்புக்கள் முதல், தனிநபர்கள் வரை) மக்கள் நலன்சார்ந்த நிலைப்பாட்டிற் கூடாகவே விவாதங்களை, விமர்சனங்களை,  தவறுகளை முன் வைத்தோம். இதிலும் எம் நிலை மாறா நிலை தான்.

நடைபெறும் மாநாடு, மாநாட்டாளர்கள் பற்றிய விமர்சனங்கள் எமக்கு இல்லாமல் இல்லை.    சிவத்தம்பி-முருகபூபதி,  ஜீவா போன்ற இன்னோரன்னோர் பற்றிய விமர்சனங்களை, அரசு ஆதரவு எதிர்ப்புப் பற்றி மாநாட்டு எதிர்பாளர்கள் சொல்லித்தர வேண்டியதில்லை. இதில் இங்கு “ஆதரவு- எதிர்ப்பு” என்ற இரண்டிலும் மக்கள் விரோத அரசியலின் பின் புலத்தை அரசியல் ரீதியாக புரிந்து கொள்ள முடியாதவர்கள், யானை பார்த்த குருடர்கள் ஆட்டம் கதைகள் சொல்கின்றார்கள். இதை இனியொருவின்  கூட்டம் எதிர்ப்பாகவும்,  இன்னொரு கூட்டம் ஆதரவாகவும் பட்டிமன்றம் நடாத்துகின்றார்கள். எம் மக்களின் சமூக விஞ்ஞானப் புரிதலின்றிப் புலம்புகின்றார்கள். இந்நோக்கில்,  இம்மாநாடு பற்றிய தினக்குரல் பத்திரிகையின் கண்ணோட்டத்தையும் கவனிப்போம்.

எமது நாடு தனி நபர் சர்வாதிகார அரசியலின், உச்ச நிலையில் உள்ளது.  சகல மனிதாபிமான ஜனநாயக விழுமியங்களும் இல்லாதாக்கப்படுகின்றது. இதில் தமிழ் மக்களின் அரசியல் வெற்றிடம் அவர்களை அநாதையாக்கியுள்ளது. தங்கள் பிரதேசஙகளில் இயல்பானதின் சகலதையும் இல்லாதாக்குகின்றது. தமிழில் தேசிய கீதத்தைக் கூட பாடமுடியாநிலை.  இந் நிலையில் எம்முன்னுள்ள கேள்வி? எம் மக்களை இன்றுள்ள சர்வாதிகார அரசியல் தளத்திற்குள் அமுங்க விடுவதா? அல்லது மீட்டெடுப்பதா?

மீட்டெடுப்பதாயின் எம் நாட்டின் அரசியல் தளம் எதிலுள்ளது. இழந்தவைகளை விட முதலில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதே!. அரசை விமர்சித்து ஓர் சுவரொட்டி ஒட்டமுடியாது, துண்டுப்பிரசுரம் வெளியிடமுடியாது. ஊர்வலம் கூட்டம் நடாத்த முடியா நிலை. பேச்சு, கருத்துச் சுதந்திரம் பற்றி பாராளுமன்றத்தில் கூட கேள்வி கேட்க முடியா நிலை. இந் நிலையில் இது போன்ற நிகழ்வுகளைக் முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய பல நிகழ்வுகளை நடாத்த முனைய வேண்டும்.

இந் நிகழ்வு 12-பேர்களைக் கொண்ட அரங்குகளில் நடைபெறவுள்ளது. இவர்கள் மக்கள் நலன்சார் பலவற்றை தம் காலங்களில் தம் சக்திக்கேற்ப தடம் பதித்து சென்றுள்ளார்கள். இவை  பன்முகத்தன்மைகள் கொண்டவைகள்.  பன்முகப் போராட்டங்கள் நிறைந்தவை. இவைகள்  இந்நிகழ்வுகளிற் கூடாக மக்களை சென்றடைந்தால், தாம் இழந்தவற்றை பெறுவதற்கான சிந்தனைத் தளத்தை உருவாக்கும். இவ்வுருவாக்கம் மக்களை போராடும் சக்தியாக்கும். இதையே மாவோ “சிறுபொறி  பெரும் காட்டுத் தீயை மூட்டும்” என்றார்.

தொடரின் முன்னைய பகுதிகளை வாசிக்க:

1.கலை-இலக்கிய அரங்கம் –(பகுதி 1)

2.கலை-இலக்கிய அரங்கம் –(பகுதி 2)

3.கலை-இலக்கிய அரங்கம் –(பகுதி 3)

4. கலை-இலக்கிய அரங்கம் –(பகுதி 4)

5. கலை-இலக்கிய அரங்கம் –(பகுதி 5)

6.கலை-இலக்கிய அரங்கம் –(பகுதி 6)

7. கலை-இலக்கிய அரங்கம் –(பகுதி 7)