Fri01152021

Last updateSun, 19 Apr 2020 8am

கலைஞருக்கு- வந்த கஸ்டகாலம்! -பாராளுமன்ற இடதுசாரிகளுக்ககு வந்த இடர்

“என்னைக் கட்டி கடலில் தூக்கிப்போட்டாலும் கட்டுமரமாகவே நான் மிதப்பேன். அதில் நீங்கள் பிரயாணம் செய்யலாம்.” இது கலைஞர் ரி.வி.யில் நாளாந்தம் கேட்கும் கலைஞரின் “பொன்மொழி”!.

தற்போது ஊழல் அரசியலில் தத்தளிக்கும் கலைஞர் குடும்பத்திற்கு கரை சேர ஓர் கட்டுமரம் தேவை. கரை சேர தேர்தலும் உதவவில்லை. காங்கிரசின் உதவியுமில்லை.

 

தமிழக தேர்தல் முடிவுகளை 1977-ல் நடைபெற்ற இலங்கை பாராளுமன்ற தேர்தல் முடிவுகளோடு ஒப்பிடலாம். 77-ல் யூ.என்.பி. போன்று ஜெயலலிதா மூன்றில் இரண்டு பெரும்பாண்மையும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி போன்று தி.மு.க. பெரும் தோல்வியும், தமிழர்கூட்டணியும் அமிர்தலிங்கமும் போன்று தே.தி.மு.கா.வும் விஐயகாந்தும் பிரதான எதிர்கட்சியாகவும் உள்ளன. ஒப்பீட்டுவகையில் ஜெயலலிதாவின் அடுத்த ஐந்தாண்டுகால ஆட்சி 77-82-ஆண்டுகால ஜே.ஆர். ஆட்சிபோல்தான் இருக்கும். இதில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லை.

நடைபெற்ற தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.வின் தோல்விக்கான காரணங்களைப் பலர் பற்பலவாக்கி தமக்கிசைவான காரணங்களாக சொல்கின்றார்கள். தமிழ் உணர்வாளர்கள் முள்ளியவாய்க்கால் படுகொலையின் போது காங்கிரஸின் துரோகத்திற்கு தி.மு.க.வும் கருணாநிதியும் துணை போனதால் வந்த வினை என்கின்றனர். தமிழ் உணர்வாளர்கள் சொல்வதுபோன்று முள்ளிவாய்க்கால் பிரச்சினை, அதில் கலைஞர் காங்கிரஸிற்கு துணை போனதென்பதைக் கூட இத்தேர்தலின் பெரும் பொருளாக மக்கள் கண்டுகொள்ளவில்லை. மாறாக தேர்தலின் பின் இதுதானென வை.கோவு.ம் சீமானும் மாரடிக்கின்றார்கள்.

தி.மு.க.வின் வெற்றியை வாக்கு வங்கியைப் தீர்மானிப்பதில் நகரப்புற மத்தியதர-வர்க்க மக்களினதும் புத்திஜீவிகளினதும் பங்கு மிகப்பிரதானமானது. இதில் கடந்த ஐந்தாண்டுகால கலைஞரின் குடும்பாட்சியென்பதும், அதில் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளின் துறைசார்ந்த (சினிமா உட்பட) ஆதிக்கம், சண்டித்தன அரசியல், அதற்குடைந்தையாக தி.மு.க. மந்திரிகள் ஆனவர்களினதும் ஊழல், அடாவடித்தனம், அதிகார துஸ்பிரயோகம் போன்றவைகள் “ஆட்சி மாற்றமென்ற ஐனநாயகத்தின் அதியுன்னத பண்புமே” தி.மு.க.வின் தோல்விக்கான பிரதான காரணிகளாகும். தி.மு.க. தொகுதி ரீதியாக தோல்வியைத் தழுவியபோதிலும், பெற்ற வாக்குகளின் அடிப்படை விகிதாசாரத்தில் (சதவீதம்) பலமாகவே உள்ளது. இதை கடந்த ஐந்தாண்டுகால இலவசங்களின் கொடையாகவும் காணலாம்.

அடுத்து ஜெயலலிதாவின் வெற்றி, அவர்கூட எதிர்பாராததே!. தி.மு.க. ஆட்சி தூக்கியெறியப்பட்டதிற்கு பதிலீடான ஈடுகட்டல் மக்கள் நலன்சார் ஆட்சி ஜெயலலிதாவின் ஆட்சியல்ல. சரியான மாற்றீடு இல்லாததின் விளைவே அ.தி.மு.க.வின் வெற்றி.  அம்மணியை பலப்படுததப் போனவர்கள் (விஐயகாந்தைத் தவிர) தட்டுத் தடுமாறி நிற்கின்றார்கள். கூட்டணி ஆட்சி அமையும். இதில் அம்மணியுடன் சேர்ந்து சட்டசபைக் கூடாக “சமதர்ம ஆட்சி” அமைக்கப் புறப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினருக்கு எங்கும் எதிலும் தோல்லியே!.  இவர்களின் தோல்விக்கு ஆய்வே தேவையில்லை. அவர்களே காரணம் சொல்கின்றனர்.

மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் படுதோல்விக்கான காரணம் பற்றி முன்னாள் அமைச்சர்  தகவல்:  சிங்கூரில் தொழிற்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை, விவசாயிகளிடம் திருப்பி அளிக்காதது தான் மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் தோல்விக்கு காரணமென அந்த கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அப்துல் ரசாக் முல்லா தெரிவித்துள்ளார்.  அப்துல் ரசாக் முல்லா. புத்ததேவ் தலைமையிலான அமைச்சரவையில், நிலச் சீர்திருத்த துறை அமைச்சராக இருந்தார். முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் தவறான கொள்கையால் தான், கம்யூ. கட்சிக்கு தோல்வி ஏற்பட்டது  என்கின்றார்.  இவரின் இந்த வெளிப்படையான விமர்சனம் மார்க்சிஸ்ட் கட்சிக்குள் பெரும் பிரச்சினையை தோற்றுவித்துள்ளது. இதையடுத்து, கட்சி தொடர்பான விடயங்களை, கட்சிக் கூட்டத்தில் தான் பேச வேண்டும். அது குறித்து பகிரங்கமாக பேட்டி அளிக்கக்கூடாது என கட்சி மேலிடம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது

சிங்கூரில், டாடா கார் தயாரிப்பு தொழிற்சாலைக்காக விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. நிலச் சீர்திருத்த துறை அமைச்சரவை என்ற முறையில், அப்போதே இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் அதிகாரத்தில் இருந்தவர்கள் என் ஆலோசனையை புறக்கணித்து விட்டனர். தொழிற்சாலைக்கு நிலங்களை தர விரும்பாத விவசாயிகளிடம், அவர்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திரும்ப அளிக்காததால் கட்சிக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் விவசாயிகள் கட்சியை கைவிட்டு விட்டனர். நான் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பதால், கட்சி மேலிடம் என் மீது நடவடிக்கை எடுக்குமா என சிலர் கேட்கின்றனர். யார் என்ன கூறினாலும் என்ன கூற வேண்டுமோ அதை கண்டிப்பாக கூறுவேன். விவசாயிகளுக்கு எதிராக கட்சி சார்பாக ஒரு முடிவு எடுத்தால், அதற்காக கட்சி மேலிடத்தை விமர்சிக்க தயங்க மாட்டேன் என்று அப்துல் ரசாக் முல்லா தெரிவித்தார். அப்துல் ரசாக் கட்சிக்கு எதிராக மீண்டும் விமர்சனம் செய்திருக்கும் விவகாரம் மார்க்சிஸ்ட் கட்சி வட்டாரத்துக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கழகங்களையும் காங்கிரஸையும் விடுவோம். இக்கட்சிகள் சட்டசபை-பாராளுமன்ற அரசியலுக்காக, அதன் கதிரைகளுக்காக எதையும் செய்வார்கள். கடந்த தேர்தலில் சோனியாவும்-ஜெயலலிதாவும் “கீரியும் பாம்புமாய்” நின்றார்கள். தேர்தல் நடந்தொரு மாதமாகவில்லை. நடைபெறவுள்ள தேநீர் விருந்தில் தோழிகளாகவுள்ளார்கள். இப்போ இவர்கள் தோழிகள். தேர்தலில் கீரி-பாம்பாக்கப்பட்ட மக்களின் மனோநிலை இன்றும் (எதிரெதிர்) மாறா நிலையிலேயே உள்ளது. இது முதலாளித்துவ பாராளுமன்ற அரசியலின் சகஐம். இச்சகதிக்குள் மூழ்கியுள்ள பாராளுமன்ற அரசியலாளர்கள், இத் தேர்தல்களில் இருந்து பாடங்கள் படிக்கமாட்டார்களா? அதற்கான அறிகுறிகளே இல்லை. இப்போதும் அடுத்த தேர்தலில் வெல்வதற்காக நடைபெற்ற தேர்தல் தோல்விகளுக்கு “நிபுணர்கள் கொண்டு” ஆராய்ச்சி நடாத்துகின்றார்கள். செக்கில் சுழன்ற மாடுகள் எப்படி வண்டிலுக்கு உதவாதோ அது போன்று இவ் இடதுசாரிகள் மக்களுக்கு உதவாதவர்களே!

அகிலன் 30/05/2011