Thu11262020

Last updateSun, 19 Apr 2020 8am

தலித்துகள் தங்களைத் தாங்களே நிர்வணமாக்கிக் கொண்டனராம்! - பி.பி.சி

தலித் ஆண்-பெண்களை பொலிஸ் நிர்வாணப்படுத்தும் காட்சியாக - இல்லையில்லை அவர்களே தங்களைத் தாங்களே நிர்வாணப்படுத்தியதாக ஏகாதிபத்திய ஊடகமான பிபிசியின் செய்தியுமாக - சமூக வலைத்தளத்தையும், ஊடகங்களையும் இரண்டுபட வைத்துள்ளது. ஆளும் வர்க்கங்கள் தங்கள் புனித "ஜனநாயகத்தைப்" பாதுகாக்க முனையும் அதேநேரம் - சமூக அக்கறையுள்ளவர்கள் மக்கள் விரோத ஜனநாயகத்தை அம்பலப்படுத்திய போது - இந்திய அமைப்புக் குறித்தான பொது விவாதத்துக்கு இந்தக் காட்சி அடிகோலியது.

தொலைபேசியும் அதில் இருக்கக் கூடிய கமராவும் இன்று அனைவரினதும் வாழ்வுடன் இணைந்த ஒரு அவசியப் பொருளாகி விட்டது. ஆளும் வர்க்கத்தையும் அதன் நடத்தையையும் உடனுக்கு உடன் காட்சியாக்கக் கூடிய - இறுதியில் அதை சமூக வலைத்தளத்தில் (பேஸ்புக்கில்) ஏற்றி உலகம் தளுவிய செய்தியாக மாற்றுகின்ற அளவுக்கு - சமூக நோக்கம் கொண்ட மனிதனின் செயல்கள் - இன்று முன்னோக்கியதாக மாறி வருகின்றது.

இன்று ஆளும் வர்க்கத்தை பதிவு செய்யும் காட்சிகள், சமூக வலைத்தளத்தின் (பேஸ்புக்) ஊடாக மக்கள் மயமாகும் போது - சமூக உணர்வோட்டத்தை அதிர வைக்கின்றது. காட்சிகள் ஆளும் வர்க்கத்தை நிலைகுலைய வைக்கின்ற அளவுக்கு - இவ்வகைச் செயற்பாடுகள் மக்கள் சக்தியின் முக்கியத்துவத்தையும் - அதன் வீச்சையும் மறைமுகமாக எடுத்துக் காட்டுகின்றது. ஏகாதிபத்திய ஊடகங்கள் மூலம் உலகைத் தரிசித்த மனிதனுக்கு - மக்களின் அன்றாட செயற்பாடுகள் மூலம் உண்மையைக் கண்டடைகின்ற - மற்றொரு உலகை இவை தோற்றுவித்து வருகின்றது. மக்கள் ஊடகங்களின் ஊடாக தகவல் அறியும் முறை மாறி - சமூக வலைத்தளங்கள் ஊடாக தகவல்களை அறியும் முறை உருவாகி வருகின்றது. இன்று சமூக வலைத்தளங்கள் தான் - மக்களின் ஓய்வு நேரத்தை ஆக்கிரமித்து இருக்கின்றது என்பதும் -முதலாளித்துவம் தனக்கு தானே சவக்குழியை வெட்டுகின்றது என்பது - நவீன தொழில் நுட்பம் மூலம் தான்.

ஏகாதிபத்திய ஊடகங்கள் ஆளும் வர்க்கத்துக்கு சார்பான கருத்துக்களையும் - காட்சிகளையும் உருவாக்குகின்ற பின்னணியில், அதற்கு எதிர்மறையில் உண்மைக் காட்சிகள் சமூக வலைத்தளங்கள் மூலம் செய்தியாக - அவை இன்று உலகை அதிர வைக்கின்றது.

அண்மையில் மூலதன மற்றும் நிறவெறி அடிப்படையிலான ஐரோப்பிய அகதிக் கொள்கையையே, குழந்தையின் மரணமும் - அந்தக் காட்சிப் படமும் அம்பலமாக்கியது அனைவரும் அறிந்ததே.

இந்த வகையில் இஸ்ரேலிய சியோனிஸ்டுகள் பலஸ்தீன பெண்ணைச்சுட்டுக் கொல்லும் காட்சி தொடங்கி தலித் ஆண்-பெண்ணை பொலிஸ் நிர்வாணப்படுத்தும் காட்சிகள் வரை, ஒன்றன் பின் ஒன்றாக நாளாந்தம் எத்தனையோ உண்மைக் காட்சிகள் வெளிவருகின்றது. லஞ்சம் வாங்குவது, சக மனிதன் மீதான வன்முறை.... என்று எத்தனையோ காட்சி வடிவமாக - அவை சமூக வலைத்தளத்தை தன்வசப்படுத்துகின்றது. சமூகமும் -அதன் செயற்பாட்டின் வீச்சு - ஏகாதிபத்திய ஊடக உலகத்தை தரை மட்டமாக்கும் என்பதை இவை பறைசாற்றுகின்றது.

இங்கு தாழ்த்தப்பட்ட ஆண்-பெண்களை நிர்வாணமாக்கிய காட்சியானது - இந்திய இந்துத்துவ சாதிய ஆளும் வர்க்கத்தின் முகத்திரையைக் கிழித்திருந்தது. சமூக வலைத்தளங்களில் காட்டுத் தீயாகப் பரவி - மனித உணர்வுகளை அதிர வைத்திருக்கின்றது. சாதி அமைப்பு முறை எப்படிப்பட்ட மக்கள் விரோத ஆட்சிமுறையாக - மனிதன் அடிப்படை உரிமைகளை மறுக்கின்ற சட்டவிரோத அமைப்பாக இருப்பதையும் காட்டுகின்ற இக் காட்சிகள் மற்றொரு சாட்சியம் தான்.

ஆளும் வர்க்கம் இதைத் திரிக்கின்ற - சேறடிக்கின்ற வகையிலான ஒரு எதிர்ப்பிரச்சாரத்தை- ஏகாதிபத்திய ஊடகமான பி.பி.சி மூலம் சர்வதேச ரீதியாக முன்னெடுத்துள்ளது. மக்களின் உணர்வோட்டத்தை திரித்து - ஆளும் வர்க்கத்தின் மூஞ்சியை அழகாக்க முனைகின்றது.

பி.பி.சியானது பொலிஸ் அதிகாரியை மேற்கோள் காட்டியும் - உள்ளுர் பத்திரிகைச் செய்தியை கொண்டும், அவர்கள் தங்களைத் தாங்கள் நிர்வாணமாக்கி கொண்டதான செய்தியை பரப்பியது. ஆளும் வர்க்க - சாதிய விசுவாசிகள், பேஸ்புக் மூலம் எதிர்ப்பிரச்சாரத்தைத் தொடங்கினர். சமூகம் என்பது வர்க்க அமைப்பாக பிரிந்து - முரண்பட்டு கிடப்பதும், அதன் அடிப்படையில் கருத்துகளுக்கு இடையில் மோதலைத் தோற்றுவிகிக்ன்றது.

இந்திய பொலிஸ் - நீதிமன்றம் - அரசு என்பது சட்டவிரோத அமைப்பாக இருப்பதும், குற்றங்களின் தலைமையிடமாக இருப்பதும் என்பது உலகறிந்த உண்மையாகும். அத்துடன் இந்துத்துவ - சாதிய அமைப்பின் தலைமையிடமாக இருப்பதும், ஒடுக்கப்பட்ட சாதிகளும், சிறுபான்மை மக்களும் சுதந்திரமும் மறுக்கப்பட்டு - அடக்கப்படுகிறவர்களாக இந்திய அமைப்பு காணப்படுகின்றது.

சட்டத்தின் ஆட்சி என்பது இவர்களுக்கு மறுக்கப்படுவதும் - பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு எதிரான ஆட்சியுமாகும். இங்கு பொலிஸ் நிலையங்கள் என்பது பெண்களை பாலியல் ரீதியாக சூறையாடும் இடமாகவும் - விசாரணையின் பெயரில் சித்திரவதை, கொலை என்றும் - லஞ்சம், ஊழல் என்றும் சட்டத்தையே மறுதளிக்கின்ற வன்முறை கொண்ட அமைப்பாகும். இந்த பின்னணியில் தான் தலித் குடும்பம் நிர்வாணமாகக்பட்டது என்பதே பொது உண்மையாகும்.