Sat04272024

Last updateSun, 19 Apr 2020 8am

இராணுவ ஆட்சிக்கான முன் தயாரிப்புகள்..! – (பகுதி3)


மாணவர் - ஆசிரியருக்கான கட்டாய இராணுவப் பயிற்சி இராணுவ ஆட்சிக்கான முன் தயாரிப்பாகும்...

மகிந்தா குடும்பம் வடக்குக் கிழக்கில் திணித்துள்ள இராணுவ ஆட்சியை, இலங்கை முழுக்க நடைமுறையாக்கும் படிக்கல் தான் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டாய இராணுவப் பயிற்சியாகும். வடக்கு கிழக்கு உற்பத்திப் பொருட்களை தன் இராணுவ ஆட்சி மூலம் மலிவு விலையில் வாங்கி, அதை மலிவாக சிங்கள மக்களுக்கு விற்றதன் மூலம், முதலில் இலங்கையில் இராணுவ ஆட்சியின் அவசியத்தை புரியவைக்க முனைந்த இந்த பேரினவாத அரசுதான், இன்று கட்டாய இராணுவப் பயிற்சியை மாணவர்களுக்கு திணித்த அரசு, அடுத்து அதை ஆசிரியர்களுக்கு திணிக்கவுள்ளது. மகிந்த முன்தள்ளும் பாசிச சிந்தனையின் மகத்துவம் இதுதான்.

நாட்டை இனி மகிந்த குடும்பம் தான் பரம்பரை பரம்பரையாக ஆளவேண்டும். இதுதான் மகிந்த குடும்பத்தின் சிந்தனையாகும். மன்னர்கள் போல் தாமும் பரம்பரை பரம்பரையாக ஆட்சி அதிகாரத்தில் வாழ வேண்டும், இதனால் மன்னர்கள் உயிர்ப்பிக்கப்படுகின்றனர். வரலாற்றுப் புரட்டுகள் திணிக்கப்படுகின்றது. மன்னர்களை பேரினவாதத்தின் அடையாளமாகக் காட்டி, தங்கள் பேரினவாத பாசிச ஆட்சியை அதன் தொடர்ச்சியாககாட்டி அதைத் திணிக்க முனைகின்றனர்.

 

தங்கள் குடும்ப ஆட்சியை நிலைநிறுத்த பாராளுமன்ற ஜனநாயகம் முதல் இராணுவ ஆட்சியை நிறுவுதல் வரையான, அனைத்து வகை பாசிச மயமாக்கலையும் படிப்படியாக இன்று திணித்து வருகின்றனர். தங்கள் ஆட்சி அதிகாரத்தை தக்கவைக்கும் தெரிவுகளை அடிப்படையாக கொண்டு தான், மகிந்தா குடும்ப அரசு தன்னைச் சுற்றி அனைத்துவிதமான பாசிசமயமாக்கலை செய்கின்றது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு அடுத்து ஆசிரியர்களுக்கு வழங்குகின்ற கட்டாய இராணுவப் பயிற்சி மூலம், மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இராணுவத்துக்குரிய அடிமைப் புத்தியையும், கூலிப்படைக்குரிய குணாம்சத்தையும் வலுக்கட்டாயமாக திணிக்க முனைகின்றது. இது இந்தப் பயிற்சியின் அடிப்படையான உள்ளடக்கம். இதன் மூலம் தன் குடும்ப அதிகாரத்தை தொடர்ந்து தக்கவைக்கும் கனவுதான், மகிந்த சிந்தனையிலான இந்த இராணுவப் பயிற்சியாகின்றது.

தனது இந்த இராணுவத்தைக் கொண்டு ஓர் இனத்தையும் அதன் வாழ்வாதாரங்களையும் அழித்த மகிந்தா அரசு, அதன் மீள் குடியேற்றம் மற்றும் மீள் கட்டுமானத்துக்கு எதையும் முன்னெடுக்காது அதன் மேல் தன் வக்கற்ற இராணுவ ஆட்சியை இன்று நிறுவியுள்ளது. யுத்தத்தின் கொடூரத்தால் வாழ்விழந்து வாழ வழியற்றுப் போன மக்கள் மேல், இராணுவ கண்காணிப்புக் கொண்ட இராணுவ ஆட்சியை திணித்து, அவர்கள் மூச்சுக்கூட விட முடியாத வண்ணம் சிவில் சமூக செயற்பாட்டை முடக்கி வருகின்றது. இன்று இதைத்தான் இலங்கை முழுக்க திணிக்க முனையும் மகிந்தா குடும்பம், பல்கலைக் கழகத்தில் அதை முதலில் திணிக்க முனைகின்றது. மாணவர்களின் சுதந்திரமான சிந்தனை முதல் அதன் செயற்பாடுகளை முடக்குவதுதான், மகிந்த சிந்தனையின் முதல் இலக்காகின்றது. வடக்குக் கிழக்கில் இது ஏற்கனவே அமுலில் உள்ளது. இந்த வடக்கு கிழக்கு மக்கள் மேலான இராணுவக் கண்காணிப்புக் கொண்ட சிவில் கட்டமைப்பானது:

•தமிழ் பகுதியை சிங்கள மயமாக்கும் வண்ணம், திட்டமிட்ட சதிகளை அடிப்படையாகக் கொண்டு அனைத்தையும் தன் பலத்தால் மாற்றி அமைக்கின்றது.

•வடக்குக்கிழக்கில் சுதந்திரமான எந்தச் செயற்பாட்டையும் முடக்கி, பண்பாட்டு கலாச்சார பொருளாதார அடிமைகளைக் கொண்ட அடிமை சமூகத்தை உருவாக்குகின்றது.

• மகிந்தா குடும்ப சர்வாதிகாரத்தை இலங்கை முழுக்க திணிக்கும் வண்ணம், தன் பாசிச சிந்தனைக்கு ஏற்ற பரீட்சார்த்தமான பரிசோதனைக் கூடமாக வடக்கு கிழக்கை மகிந்தா குடும்பம் மாற்றியுள்ளது.

இந்த வகையில் இராணுவத்தையும், தன் அரசில் உள்ள தமிழ் கூலிக்குழு தலைவர்களையும், சிவில் அதிகாரிகளையும் ஒருங்கிணைத்த இராணுவ ஆட்சியைத்தான் மகிந்த சிந்தனை வடக்கு கிழக்கில் முன்னெடுக்கின்றது. இது மேலிருந்து கீழாக எல்லா மட்டத்திலும் அமுல் செய்யப்படுகின்றது. வடக்கின் இராணுவத் தளபதி, அரச அதிபர், டக்ளஸ் இன்றி சுயாதீனமான நிகழ்வுகள் எதுவும் இன்று நடக்க முடியாது என்ற அளவுக்கு கண்காணிப்புக் கொண்ட பாசிசமயமாக்கல் எங்கும் நடைமுறையில் உள்ளது. சாதாரண திருமணங்கள் முதல் மரண வீடுகளில் கூட இராணுவம் அழையா விருந்தாளியாக அல்லது கௌரவ விருந்தாளியாக அழைக்கப்படுகின்றனர். அல்லது தாமாக பிரசன்னமாகின்றனர். இப்படி அழைக்காவிட்டால் கறுப்பு பட்டியலுக்குரியவராக அடையாளம் காணப்படும் அவலமும், அச்சமும், வில்லங்கமாக அவர்களை அழைக்கும் கட்டாய பண்பாடாக மாற்றப்படுகின்றது. இராணுவ மயமாக்கலின் பொது விளைவுகள் இவை.

இன்று பல்கலைக்கழக மாணவருக்கு இராணுவப் பயிற்சி என்பது, இலங்கை முழுக்க இராணுவ மயமாக்கும் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இது இராணுவத்தை சிவில் சமூக நிகழ்வுக்குள் புகுத்துகின்ற சதித் திட்டமாகும். வடக்கு கிழக்கு மக்களின் விளைபொருட்களை தன் இராணுவ அதிகாரங்கள் மூலம் வாங்கி, வடக்கு கிழக்கு அல்லாத மக்களுக்கு மலிவாக சந்தைப்படுத்தி இராணுவமயமாக்கும் திட்டத்தை ஏற்கனவே அமூலாக்கியுள்ளது. இந்த மலிவு விலைக் கடை மூலம் சிங்கள மக்களை மயக்க, வடக்கு கிழக்கு மக்கள் மலிவாக தங்கள் உற்பத்தியை இராணுவத்திற்கு விற்கவேண்டிய அளவுக்கு அங்கு இராணுவ ஆட்சி நிலவுகின்றது.

இராணுவம் பற்றி சிங்கள மக்கள் நம்பிக்கை கொள்ள வைப்பதன் மூலம், வடக்கு கிழக்கு அல்லாத பகுதியிலும் இராணுவ ஆட்சியை மகிந்தா குடும்பம் மெல்ல மெல்ல புகுத்தி வருகின்றது. இதன் மற்றொரு அங்கம் தான், பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி.

வடக்கு கிழக்கில் உள்ள இராணுவக் கட்டமைப்பையும், இதன் கீழ் வாழ்கின்ற தமிழ்மக்களின் அவலத்தையும், அவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதையும் சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லாத வரை, சிங்கள மக்கள் மேலான இராணுவமயமாக்கல் என்பது ஓர் இனத்துக்கு எதிரான உணர்வு மூலம் திணிக்கப்படும். மறுதளத்தில் சிங்கள மக்கள் ஆசியுடன் வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி தொடரும் நிலையும் நீடிக்கும். தமிழ், சிங்கள மக்கள் பரஸ்பரம் ஒருவர் மற்றவரை புரிந்து செயற்படாத வரை, அதற்காக எமது சக்தி அனைத்தையும் திரட்டி நாம் போராடாத வரை, மகிந்தா குடும்பத்தின் இராணுவ ஆட்சியின் சிவில் வடிவங்கள் மூலம் மக்களை ஒடுக்குவதே இலங்கையின் பொதுவான இயல்பு வாழ்வாகிவிடும். அதை நோக்கி இலங்கை செல்லுகின்றது என்பதே, எங்கும் தளுவிய பொது உண்மையாக உள்ளது. இதை உணராத மடமையே, எமது சிந்தனையை ஆக்கிரமித்து நிற்கின்றது. இதை மாற்றாத வரை, மாற்றப் போராடாத வரை, மகிந்தா குடும்பம் சர்வாதிகாரம் மூலம் சமூகத்தை மேலும் பாசிசமயமாக்கியபடியே, இராணுவ ஆட்சியைக் கொண்டு நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும்.

இரயாகரன்

முன்னணி (இதழ் -2)