Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

என்.ஜி.ஓ நாச்சியப்பனின் “மனிதஉரிமை” அவதாரமும் புலம்பெயர் ‘தலைவர்களின்’ கோவணத்தை கழட்டிய ‘இந்தி’ய அரசும்!

கடந்த மாதம் ஜீன் 14ம் மற்றும் 15ம் திகதிகளில் இந்திய அரசின் உளவுத்துறையின் அணுசரணையுடன் உருவாக்கப்பட்ட 'மனித உரிமைகள், உலக பொருளாதார வளர்ச்சிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பு' (Parliamentarian Forum On Human Rights – FOR GLOBAL DEVELOPMENT –PFHRGD) என்ற என்.ஜி.ஓ (NGO) மாநாட்டில், தமிழக பாராளுமன்ற (மேலவை) உறுப்பினர் சுதர்சன் நாச்சியப்பன் தலைமையில் புலம்பெயர் "தமிழர்" தலைவர்களும் இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களும் பங்கெடுத்துக் கொண்டது அனைவருக்கும் நினைவிருக்கக் கூடும்.

புலம்பெயர் சூழலில் நன்கு அறியப்பட்டவரும் இனியொரு வெளியீடான ஜயர் எழுதிய “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” நூலை புலத்தில் முன்னெடுத்து சென்றவரும் பிரான்சில் அசை (சமூக அசைவிற்க்கான எழுத்தியக்கம்) முன்னின்று நடத்திய உரையாடலில் முதன்மைபடுத்தப்பட்டவருமான தமிழ் மாணவர் பேரவையினை சேர்ந்த திரு.சத்தியசீலன் அவர்கள், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு மாநாட்டை முன்னின்று நடாத்தியதுடன் மாநாட்டில் முன்மொழியப்பட்டவைகளை தனது பெயரில் அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளார்.

நாச்சியப்பன் யார்? இதன் அதிகாரம் என்ன? யார் இவர்கள்?

 

இலங்கையில் தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்றோ அல்லது அவர்களிற்கு சுயநிர்ணய உரிமை உள்ளது என்றோ இலங்கையில் இனப்படுகொலை நடந்துள்ளது என்பதைப் பற்றியோ பேசியிருப்பவர் என யாராவது நினைத்திருந்தால் (மாநாட்டில் கலந்து கொண்டவர்களை மனதில் கொண்டு) உங்கள் நினைவில் மண் அள்ளி கொட்டிவிடுங்கள்.

சுதர்சன் நாச்சியப்பன் MP (தற்போது துணை அமைச்சர்) இலங்கையில் இன அழிப்பு போரை முன்னின்று நடத்திய பேரினவாத ராஜபட்ச அரசாங்கத்திற்கு ஆயுதம் மற்றும் இராணுவத்தினை அனுப்பி ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை கொன்று அனைத்து அழிவுகளையும் நடத்திய இந்திய அரசின் அப்போதைய உள்துறை அமைச்சர் பா.சிதம்பரத்தின் கைதடி அல்லது அல்லக்கை. ஏதாவது ஒரு பதவியில் எப்படியாவது ஒட்டிக் கொண்டு திரியும் இந்த நபரின் பல்வேறு வேசங்களில் ஒன்று தான் மனித உரிமை காவலன்!.

மேலும் FoodFirst Information and Action Network (FIAN) – என்று அழைக்கப்படும் ஜேர்மனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சர்வதேச என்.ஜி.ஓ (NGO) அமைப்பான FIAN-ல் உயர்மட்ட அமைப்பின் உறுப்பினர் இந்த நாச்சியப்பன். FIAN சர்வதேச அளவில் பல்வேறு என்.ஜி.ஓ (NGO) அமைப்புக்களுடன் சேர்ந்து இயங்கி வருகின்றது. OXFAM மற்றும் CARE போன்ற என்.ஜி.ஓ (NGO) அமைப்புக்களுடன் சேர்ந்து பணியாற்றவதுடன், ஜக்கிய நாடுகளின் அறிக்கைகளுக்கு பின்புலமாக தனது கருத்துக்களை பயன்படுத்த உதவி செய்கின்றது.

FIAN- INGO அமைப்பு தன்னை மனித உரிமை மீறல் மற்றும் உணவுக்கான உரிமை குறித்து செயல்படும் அமைப்பாக அறிவித்து வருகின்றது. இதனுடன் இணைந்து மனித உரிமை கருத்தாக்கத்துடனும் உணவுக்கான தேவைக்குமான அமைப்பாக உருவாக்கப்பட்டது தான் சுதர்சன் நாச்சியப்பன் தலைமையிலான மனித உரிமைகள், உலக பொருளாதார வளர்ச்சிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பு (PFHRGD). இந்த அமைப்பு FIAN அமைப்பின் செயல்திட்டமான பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு அமைப்பை உருவாக்குதல் என்பதன் செயல்வடிவாகும்.

இந்த அமைப்பின் அடிப்படை முக்கியத்துவமே பல்வேறு என்.ஜி.ஓ (NGO) அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது என்பதும் தேசிய மற்றும் உலக அளவில் நடைபெறும் அரசியலில் மனித உரிமைகளை பாதுகாக்கும் விதமான கருத்துருவாக்கத்தை கொண்டதுமாகும் என கூறிக் கொள்கிறது மனித உரிமைகள், உலக பொருளாதார வளர்ச்சிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் அமைப்பு (PFHRGD). இந்த அமைப்பின் தலைவர் தான் சுதர்சன் நாச்சியப்பன். இவர் 2011-ல் “துயரும் தீர்வும்” என்ற தலைப்பில் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியை (ஈ.என்.டி.எல்.எஃப்) மாநாட்டு ஏற்ப்பாட்டாளர்களாக வைத்து இலங்கையில் உள்ள தமிழ் தலைவர்களை அழைத்து கூட்டம் நடத்த முயற்சித்தார். 2005 ஆண்டிலேயே என்.ஜி.ஓ அமைப்பான FIAN  உடன் இணைந்து கூட்டத்தை டெல்லியில் நடத்தியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பிறகு பாசிச ராஜபட்ச அழைப்பின் பேரில் சென்ற புலம்பெயர் தமிழர்களில் சிலரும் தற்போதைய டெல்லி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

2009 ஆண்டு ராஜபட்ச அழைப்பின் பேரில் சென்று விருந்துண்டு வந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் காங்கிரஸின் சார்பில் கலந்து கொண்டவர்களில் நாச்சியப்பனும் ஒருவர். 2012இல் நான்கு உறுப்பினர் கொண்ட இந்திய நாடாளுமன்ற குழு இலங்கைக்கு சென்றது. அதில் நாச்சியப்பனும் ஒருவர். இவரின் பயணக்குழு மன்மோகன் சிங்கிற்கு அளித்த அறிக்கை:

இந்தியா அதிக முதலீடுகளை செய்வதன் மூலமும் முதலீடுகளை ஊக்குவிப்பதன் மூலமும் இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்த முடியும் என குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அரசு அழைப்பு விடுத்தால் புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடு செய்ய இந்தியா ஒரு வலைப்பின்னலை உருவாக்கித் தரும் என கூறியுள்ளார். இது தான் நாச்சியப்பனின் மனித உரிமை இலட்சணம்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து முடிந்த பிறகு தன் மீதான விமர்சன தாக்குதலை எதிர் கொள்ள இயலாத நிலையில் புலம்பெயர் தமிழர்களிற்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என கருணாநிதி அறிக்கை விட உடனே சிதம்பரம் பாய்ந்து வந்து கருணாநிதியை சந்தித்த பிறகு குடியுரிமை பற்றி மௌனம் காத்த நேரத்தில், ஆக்டோபர் 2009-ல் நாச்சியப்பனின் அறிக்கை புல்லரிக்க வைத்தது.

புலம்பெயர் தமிழர்கள் குடும்பத்தில் ஒருவராவது தமிழர் பகுதிக்கு விரைந்து சென்று இழந்த நிலத்தையும் பிறப்புரிமையையும் மீட்க வேண்டும். இல்லையெனில் தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் நடத்திவிடுவார்கள் என அறிக்கை விட்டுள்ளார். ஆதலால் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று புலம் பெயர் தமிழர்களிற்கு (தமிழ்நாடு) இந்திய குடியுரிமை வழங்கக் கூடாது என கூறியுள்ளார்.

2012-ன் இலங்கை பயணத்தின் போது வடக்கு பகுதியில் ராணுவம் இருக்கிறதே என ஒரு பேச்சுக்கு போட்டு வைக்க, மகிந்தாவின் செய்தி தொடர்பாளர் “ராணுவம் இலங்கை முழுவதும் தான் உள்ளது” என நக்கல் அடித்ததை கண்டும் காணாது வந்த கும்பல்தான் நாச்சியப்பன் கும்பல்.

இந்த அடிவருடி கும்பலின் தலைமை தான் 13வது சட்ட திருத்தத்தை அவ்வப்போது நீர்ந்து போக செய்து வந்த இலங்கை பேரினவாத அரசுக்கு ஒத்து ஊதி வந்தது. அன்றைய இந்திய அரசின் தீட்சித்தில் இருந்து கிருஸ்ணா வரை இலங்கை பேரினவாதிகளின் கூட்டு களவாணிகளே!.

போராளிகளிற்கு ஆயுதங்களை வழங்கி இயக்கங்களிடையே மோதலை ஏற்ப்படுத்தி அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்ற இந்திய அரசு, தொடர்ந்து தனது கருத்துருவாக்கத்திற்கு இசைவான புலம்பெயர்ந்த தமிழ் குழுக்களை உருவாக்கி புலத்திலும் தனது “திருவிளையாடலை” அரங்கேற்றி வருகின்றது. சுயாதீனமான கருத்துக்கள் வந்து விடக் கூடாது என்பதில் இலங்கை பேரினவாத அரசும் பாசிச இந்திய அரசும் ஒரே வகையில் இணைந்து செயல்படுகின்றன.

LLRC - அறிக்கைக்கு ஆதரவு, ஜநா மனித உரிமை ஓட்டெடுப்பு நாடகம், தற்போது 13வது சட்ட திருத்தம் என ஒவ்வொன்றின் கீழும் இந்திய - இலங்கை அரசுகளின் அந்தரங்க நிகழ்ச்சி நிரலுக்கு ‘புலம்பெயர் தலைவர்கள்’ விலைபோவது தான் கவலையளிக்கக் கூடியதாக இருக்கின்றது.

இன அழிப்பு போருக்கு மிகப்பெருமளவில் ராணுவ உதவிகள் வழங்கிய இந்திய அரசின் செயல்பாட்டை நியாயப்படுத்தும் விதமாக இலங்கையை இன்னொரு பாக்கிஸ்தானாக மாற்ற முயலவில்லை என கூறியுள்ளார் நாச்சியப்பன்.

அதாவது நாங்க உதவி செய்ததால் தான் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். மற்றவர்கள் (பாக்கிஸ்தான், சீனா....) செய்திருந்தால் இந்த எண்ணிக்கை கூடியிருக்கும். நாச்சியப்பன் இனஅழிப்பு போரை இப்படியாகத்தான் அர்த்தப்படுத்துகிறார்.

பிறவி என்.ஜி.ஓ (NGO) எதிர்ப்பாளர்களாக காட்டிக் கொண்டவர்களின் ஆசான்கள், தோழர்கள், தோழியர், இயக்க நண்பர்கள் தான் டெல்லி என்.ஜி.ஓ (NGO) மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். தெற்காசிய புரட்சிக்கே வழிகாட்டும் இவர்கள், தமது ஆசான்கள், நண்பர்களை வழிமறித்தாவது கூறியிருக்கலாம். மாநாட்டிற்கு முன்பே அதிர்வு இணையத்தளம் மாநாட்டில் கலந்து கொள்பவர்களிடம் கேள்வி எழுப்பி இருந்தது.

இருப்பினும் இந்த இந்திய அரசின் உளவு மற்றும் என்.ஜி.ஓ (NGO) மாநாட்டைப் பற்றி எதுவும் குறிப்பிடாமல் “அம்மன் கோயிலுக்கு நீர்ப்பாளையம் ஊத்த போய் வந்தவர்கள்” கணக்காக செய்திகளை வெளியிட்டு தனது வரலாற்று கடைமைகளை முடித்துக் கொண்ட இந்த நுண்ணறிவு பெருந்தகைகளின் இந்திய - இலங்கை அரசின் இரகசிய உறவு வெளிவரும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

-யோகேந்திரன்

உசாத்துணைகள்

http://www.indiajapansummit.org/en/index.php?page=speakerdetails&id=228

http://pfhrgd.org/

http://pfhrgd.org/contact-us/

Why is PFHRGD important?

PFHRGD cooperates with different NGOs, it serves as a special opportunity to include civil society actors in the political debate and to add new aspects in the MPs human rights work. IPU emphasis that parliamentarians should cooperate with national actors involved in human rights activities, as a means to get information on the human rights situation in the country and to strengthen the public human rights awareness. In addition, cooperation with NGOs will provide an opportunity for PFHR to mobilize broad support on human rights related issues and further strengthen the forum’s ability to act on human rights violations.

http://pfhrgd.org/why-pfhr-is-important/

In Action

Cooperate with various governmental and non-governmental organisations (NGOs) that work on development policies and human rights

http://pfhrgd.org/how-pfhr-work/

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36371

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=36366

http://www.bbc.co.uk/sinhala/news/story/2012/04/120429_north_india_investment.shtml

http://www.sundaytimes.lk/091011/News/nws_02.html

http://www.newstodaynet.com/newsindex.php?section=6&id=19680