Wed12072022

Last updateSun, 19 Apr 2020 8am

திருமலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாதி வெறி அரசியல்!

கடந்த வைகாசி மாதம் 2 ஆம் மற்றும் 3 ஆம் திகதிகளில் திருகோணமலையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தைப் பற்றி தமிழ் தேசிய ஊடகங்களோ அல்லது இலங்கை ஆதிக்க நிலையிலுள்ள ஊடகங்களோ கணக்கிலெடுக்கவில்லை. காரணம், திருகோணமலையின் நகரசபை உப-நகரபிதா சேனாதிராஜா ஸ்ரீஸ்கந்தராஜா கூறியது போல, போராட்டத்தை நடாத்தியவர்கள் "வழமையான மனிதர்கள்" அல்ல என்ற காரணமாக இருக்கலாம்.

அதாவது, தமிழ் சைவ வெள்ளாள மேலாதிக்க சிந்தனையைச் சிரம் மேற் கொண்டு தமிழ் தேசியத்துக்குள் இடமில்லாமல் ஒதுக்கப்பட்ட- ஒடுக்கப்பட்ட நகர சுத்திகரிப்புத் தொழிலாளர்களால் அந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதனால், எவரதும் கண் பார்வையும் அவர்களின் போராட்டத்தின் மீது விழவில்லை. எமது "போராட்டம்" பத்திரிகையின் சகோதரப் பத்திரிகையான, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக குரல் கொடுக்கும் சிங்கள மொழியில் வெளிவரும் வாரப்பத்திரிகை (மக்கள் அலை) ஜனரல மற்றும் சில இடதுசாரிப் பத்திரிகைகள் அப்போரட்டதைப் பற்றி செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளன.

போராட்டத்தின் பின்னணி

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சமூக மக்கள், திருகோணமலை நகரமாக வளர ஆரம்பித்த காலத்திலிருந்தே நகர சுத்திகரிப்பு தொழிலாளர்களாக உள்ளனர். கடந்த 26 வருடங்களாக இத் தொழிலாலர்களுக்கு அவர்களின் ஊதியம் உயர்த்தப்படவில்லை. 26 வருடங்களுக்கு முன் என்ன ஊதியம் வழங்கப்பட்டதோ, அதுதான் இன்றும் வழங்கப்படுகின்றது. நூற்றுக்கும் அதிகமான பெண்களும் ஆண்களும் நிரந்தர நியமனம் இல்லாமல் நாள் கூலிகளாகவே இன்றும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். நிரந்தர நியமனம் இல்லாததனால், ஊழியர் நலக் கொடுப்பனவுகள், பிள்ளைப் பேறுகால கொடுப்பனவுகள், மருத்துவ விடுமுறைக்கால கொடுப்பனவுகள், விடுமுறைக் கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியம் போன்ற ஏனையவர்களுக்கு கிடைக்கும் உரிமைகள் இவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இது இலங்கையின் தொழிற்சட்டம், ஊழியர் நலச்சட்டம் மற்றும் அரச நிர்வாகச் சட்டதிற்கு முரணானதாதும், சட்ட மீறலுமாகும்.

சாதிய அடிப்படையில் மிகவும் கொடுமையான ஒடுக்குமுறையைச் அனுபவித்து வரும் இச் சமூகத்தின் பிள்ளைகள், இன்று ஓரளவுக்கு கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். ஆனாலும், இச் சமூக இளையோருக்கு வழங்கப்படும் பணிகள், இவர்களின் முன்னோர்கள் செய்த துப்பரவுப் பணியே! அதுவும் கூட நிரந்தரமானது அல்ல. அப்பன், ஆச்சியின் தொழில் பிள்ளைக்குக்கு என்பதே நியதியாகவுள்ளது! அதேவேளை, இச் சமூக இளையோரைவிட மிகக் குறைந்த கல்வித் தகுதியைக் கொண்ட ஆதிக்க சாதியினர், துப்பரவுப் பணியாளர்களை மேற்பார்வை செய்யும் வேலை, மற்றும் மேலாண்மை செய்யும் பணிகளில் அதிக சம்பளத்துடன் நியமிக்கப்படுகின்றனர்.

புலிகள் தமிழ் தேசியத்தைக் "குத்தகை" எடுப்பதற்கு முன்பு, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) தமிழ் மேலாதிக்க சாதிகளால் ஒடுக்கப்பட்ட இம் மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்திய அமைப்பாகும். திருகோணமலைப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 9 கிராமங்களில் வாழும் இம் மக்களை, சக்கிலியர் எனக் கூறி தமிழ் தேசியத்தின் ஆதிக்க சாதிகள் காலங் காலமாக ஒடுக்கியும் - ஒதுக்கியும் வந்தாலும், முப்பது வருடங்களுக்கு மேலாக நடாத்தப்பட்ட "தமிழ் தேசிய" விடுதலைப் போராட்டத்துக்காக - தம்மை ஒதுக்கியும், ஒடுக்கியும் வந்த தமிழ் தேசியத்துக்காக, முன்நூறுக்கு மேலான போராளிகளைப் பலி கொடுத்ததும் இச் சமூகம் தான். அதிகமானோர் புலிகள் இயக்கப் போராளிகளாகவே தம் உயிரைத் தமிழ் தேசியத்துக்காக அற்பணித்தனர்.

புலிகளின் அழிவின் பின் தமிழ் தேசியத்தை குத்தகைக்கு எடுத்துள்ள, யாழ் சைவ வேளாள ஆதிக்க சிந்தனையைக் கொண்ட சாதியின் கட்டுப்பாட்டிலேயே இன்று திருகோணமலை நகரசபை உள்ளது. இங்கு நகர பிதாவாக உள்ளவர் தொடக்கம் நிர்வாக அதிகாரம் கொண்டவர்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் (TNA) சேர்ந்தவர்களே. மேம்போக்காகா தமிழ் "தேசிய" அரசியலைக் கவனிப்போருக்குக் கூடத் தெரியும், திருகோணமலைப் பிரதேசத்தில் யாரின் கட்டுப்பாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) இயங்குகிறதென்பது. ஆம். திருகோணமலை நகரசபை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பாத்திரம் வகிக்கும் ராஜவோதயம் சம்பந்தனின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே இயங்குகிறது. சம்பந்தனின் அடியாட்களாக இயங்கும் நபர்களே இன்று மேற்படி துப்பரவுத் தொழிலாளர்களின் உரிமைகளை மறுப்பவர்களாக, சாதி அடிப்படையில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவோராக உள்ளார். இவர்களுக்கு எதிராகவே துப்புரவுத் தொழிலாள இன்று மக்கள் போராடுகின்றனர்.

சாதிவெறி

வைகாசி 2 ஆம், 3 ஆம் திகதிகளில் தமது உரிமைகள் மறுக்கப்பட்டதனை எதிர்த்துப் போராடிய மக்களின் குரலை பகிரங்கப்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட சகோதர மொழி பேசும் ஊடகவியலாளர்கள் இருவர் திருகோணமலை நகரசபைத் தலைமையைத் தொடர்பு கொண்டனர். உப நகரபிதா சேனாதிராஜா ஸ்ரீஸ்கந்தராஜா மேற்படி ஊடகவியலாளருடன் உரையாட முன் வந்தார்.

பல விதமான கேள்விகளுக்கு சாக்குபோக்கான பதில்களையும் - முன்னாள் அரசு மற்றும் யுத்த சூழ் நிலையையும் முன்னிறுத்தி தமது அரசியல் அதிகார நடவடிக்கைகளை நியாயப்படுத்தினார். பேட்டியின் இறுதியில் ஊடகவியலாளர்கள், உபநகர பிதாவான சேனாதிராஜா ஸ்ரீஸ்கந்தராஜா பின்வரும் கேள்வியைத் தொடுத்தனர் .

கேள்வி: "துப்பரவுத் தொழிலாளர் சமூகத்தில் பல உயர்தரக் கல்வி கற்றவர்கள் உள்ளனர். அவர்களுக்கு அவர்களின் மூதாதயர் போலவே மலம் அள்ளுவது, அழுக்குத் துப்பரவு செய்வது, குப்பை பெருக்குதல் போன்ற வேலைகளே வழங்கி வருகிறீகள். இச்சமூக இளையோர் எந்த மேலாளர் வேலைக்கு விண்ணப்பித்தாலும் அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் மறுக்கப்படுகிறன. அதேவேளை கல்வித்தகைமை குறைந்த மேலாதிக்க சாதியைச் சேர்ந்தவர்களுக்கு பதவிகள் வழங்கப்படுகின்றன. உயர்கவி கற்று, வேறு பணிகள் மறுக்கப்பட்டு துப்பரவுத் தொழிலாளர்களாக தொடர்ந்தும் வேலை செய்வோருக்கு, மேற்பார்வை செய்யும் மேலாளர் அதிகாரி பதவிகள் மறுக்கப்படுவது வழமையாகவுள்ளது. இது சாதி அடிபடையிலான ஒடுக்குமுறை இல்லையா? சட்டத்துக்கு முரணானது இல்லையா ?

துணைநகரபிதா சேனாதிராஜா ஸ்ரீஸ்கந்தராஜாவின் பதில்: மிகப் பெரிய கேள்வி . நாம் NORMAL -வழமையான மனிதர்களையே பணிக்கமர்த்துகிறோம்.

கேள்வி: அப்படியானால் துப்பரவுப் பணி செய்யும் சமூகத்தவர்கள் Normal Human "வழமையான மனிதர்கள்" இல்லையா? உங்கள் கருத்தின் அடிப்படையில் அவரகள் "கீழ்" சாதி என்பதனாலா நீங்கள் அவர்களின் தகுதிக்கு ஏற்ப பணிகள் வழங்க மறுக்குறீர்கள்?

துணைநகரபிதா சேனாதிராஜா ஸ்ரீஸ்கந்தராஜாவின் பதில்: இக் கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை!

வேண்டுகோள்

தமிழ் தேசியத்துக்காக அனைத்தையும் இழந்த மக்கள் இன்று, பேரினவாத அரசுகளால் மட்டுமல்ல, எந்த தேசியத்துக்காக தியாகம் செய்தார்களோ அந்த தேசியத்தின் பெயராலேயே அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டோரால், ஆதிக்க சக்திகாளால் ஒடுக்கப்படுகின்றனர். சாதியை முன்னிறுத்தி உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த ஒடுக்கப்படும் திருகோணமலை நகர சுத்திகரிப்புத் தொழிலாளர்கள், "கிழக்கு பிராந்திய சுத்திகரிப்புத் தொழிலாளர் சங்கம்" என்ற போராட்ட அமைப்பை உருவாக்கித் தமது உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். இந்த வகையில் தமது உரிமைகளுக்காகவும், சாதி ஒடுக்குமுறைக்கும், தமிழ் தேசியத்தின் பெயரால் அதிகாரம் செலுத்தும் ஆதிக்க சக்திகளுக்கும் எதிராகப் போராடும் திருமலை மக்களுக்கு அனைத்துவகை ஒத்தாசைகளையும் வழங்கி ஆதரிக்க வேண்டியது எமது முக்கிய கடைமையாகும்.