Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

சாதி – தேசம் – பண்பாடு - பகுதி-3

இன்று இந்தியஎதிர்ப்புப் பேச சிங்கள மக்கள் மத்தியில் சின்னஞ் சிறிய சக்திகூட எதுவுமில்லை. இப்படியொரு பூரண சரணாகதி. ஜனாதிபதி இனப்பிரச்சினைத் தீர்விற்கு 13-வது திருத்தச்சட்டம் என்று எதற்கும் உதவாத ஒரு சரக்கைப்பற்றி பேசியபோது, முன்னர்; (1987-1989-ல்) தீவிர இந்திய எதிர்ப்புப் போராட்டங்களை நடாத்திய ஜே.வி.பி. ஒரு சுவரொட்டி இயக்கத்தை செய்துவிட்டு மௌனம் காத்தது. ”இந்தியாவின் ஆணைக்குப் பணிந்து 13-வது திருத்தத்தை அமுல்படுத்தாதே” என்ற வீரவசனம் மட்டும் சுவரொட்டியில் இருந்தது. மற்ற எல்லாவற்றிலும் இந்திய ஆணைக்கு இலங்கை கட்டுப்பட்டுக் கிடப்பதைத் தீவிர அரசியல் ஞானம் பெற்ற அவர்கள் காணவில்லiயாம். (இப்படி கண்டுகொள்ளாமல் இருந்தபடி அற்ப விடயமொன்றை பூதாகாரப்படுத்திப் பூச்சாண்டி காட்டி சிங்கள மக்களை ஏமாற்றுவதற்கு எவ்வளவு வாங்கியிருப்பார்களோ!) ஆக ஈழத்தமிழ்த் தேசியத்தை முறியடித்துக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சிங்களப் பேரினவாதம் சிங்கள மக்களின் இறைமையைத் தாரைவார்த்துவிடவேண்டிய கையறு நிலை.

(3)

ஏன்ன நடந்து விட்டது? நாம் சிறிய அடையாளங்களுக்குமான கவன ஈர்ப்பை அக்கறையோடு விவாதித்துக்கொண்டிருக்க, பெருங் கதையாடலுக்கான அரங்கு உலக மேலாதிக்க—பிராந்திய மேலாதிக்க சக்திகளால் புரட்டிப் போடப்படுகின்றது, வைத்தால் கூந்தல், அடித்தால் மொட்டை என்று இருந்துவிட முடியாது. இருபக்கங்கள் மீதுமான அக்கறை அவசியம்.

பின்நவீனத்துவக் கேடு

ஏந்தவொரு போக்கிலும், விடயத்திலும், இரு அம்சங்கள் உள்ளன. ஒன்றைக் கவனித்து மற்றதைத் தவிர்ப்பின் நாம் காணவிரும்பிய பெறுபேறன்றித் தீமையே வந்தமையும். தலித் பிரச்சினையில், பின்நவீனத்துவ நிலைப்பாட்டுடன் கவனயீர்ப்பை மேற்கொண்டபோது சோஷலிசத்திற்கான பெருங்கதையாடல் வேண்டியதில்லை எனப்பட்டது. தலித்தியவாதத்தை உலகமயமாதல் பிளவுபடுத்தல் தந்திரோபாயப்படி மக்கள் விரோத நிலைப்பாட்டிலேயே கையாண்டுள்ளது. அவ்வாறே இலங்கையின் தேசிய இனப்பிரசிசினையும் மேலாதிக்க சக்திகள் உத்தரவின்றி உள்வரக் கையாளப்படும் அற்ப விவகாரம் ஆக்கப்பட்டுள்ளது.

மகத்தான அக்டோபர் 1917-புரட்சி வாயிலாக சோவியத் ருஷ்யா உருவானபோது, தேசியப் பிரச்சினை சோஷலிசத்தின் பகுதியாக ஆனது. இன்று அவ்வாறில்லை. மேலாதிக்க சக்திகள் விளையாடும் வேட்டைக்காடாக தேசிய இனப்பிரச்சினை மாறியுள்ளது.

இத்தகைய மாற்றச் சூழலில் பின் நவீனத்துவக் கேடுகெட்ட பெருங்கதையாடல் — அடையாள அரசியல் என்பனவல்ல பேசும் பொருட்கள். மக்கள் விடுதலையை நாடும் சக்திகள் சமூக மாற்றத்திற்கான வடிவங்களைத் தேடுகின்ற அதேவேளை ஒவ்வொரு பிரிவினரது சுயநிர்ணயத்தைப் பேண ஏற்ற வழிமுறைகளைக் கண்டறிவதும் அவசியம். மார்க்சிய உலக நோக்கு வழி–இயங்கியல் பொருள்முதல்வாத அணுகுமுறையில்–இவை குறித்த தேடலுக்கான அக்கறை வளர்க்கப்படாமல், இன்னமும் அற்ப விடயங்களையே பூதாகாரப்படுத்திக் கொண்டிருப்போமாயின், ஆதிக்கசக்திகளே ஆதாயங்களைப் பெருக்கிக் கொண்டு போவர்.

இயக்கப் போக்கொன்றில் சரியான இயங்கியல் அணுகுமுறையைக் கையாளும்போது தீய அம்சத்தையும் நல்ல அம்சமாக மாற்றமுடியும். பின்நவீனத்துவம் பல கேடுகளை இழைத்த போதிலும் சாதிமுறை குறித்த ஆழமான கற்றலுக்கு அதுவே வழிவகுத்துத் தந்தது.

ஐரோப்பிய வர்க்க முறையை அப்படியே பிரயோகிக்க முனைந்தது!

இதன் பேறாக நாம் வந்தடைந்துள்ள ஒரு முடிவு மிக மிக அடிப்படைப் பண்பு வேறுபாடு சார்ந்த ஒன்று. இதனைக் கவனத்திற் கொள்ளாமல் நமது சமூக மாற்றத்துக்கான மார்க்கத்தையோ, வழிமுறைக்கான தந்திரோபாயங்களையோ, கண்டடைய முடியாது. ஆம், நமது சமூக அடிப்படை வர்க்கப் பிளவடைந்த ஏற்றத்தாழ்வைப் பெற்றில்லை, இனக்குழு மேலாதிக்க ஒடுக்குமுறையுடைய சாதியச் சமூகம் எனும் அடிப்படைப் பண்பு வேறுபாட்டைக் கொணடுள்ளது.

ஜரோப்பிய வர்க்க முறையை அப்படியே பியோகிக்க முனைந்தது தோல்வியடைந்ததைப் போன்றே, சாதிச் சமூகம்  என்பதற்கான தலித்தியவாதத்தைப் பிரயோகித்தமையும் தோல்வியையே தழுவியுள்ளது. மார்க்ஸ், லெனின் ஆகியோரது எழுத்துக்களுள் முடங்கிவிடாமல், அவற்றினூடே மார்க்சிய—லெனினிய சிந்தனை முறையைக் கற்றுக்கொண்டு நமது சாதியச் சமூகத்திற்கு அமைவாகப் பிரயோகிப்பது அவசியம். அந்தவகையிலும், சாதியத் தகர்ப்பின் பொருட்டும், உழகை;கும் மக்களாகவே மிகப் பெரும்பான்மையியரான தலித் மக்கள் உள்ளமையினாலும், மார்க்சிய அடிப்படையில் தலித் பிரச்சினை அணுகப்படுவது அதிக முக்கியத்துவமுடைய ஒன்றாகியுள்ளது. அதேவேளை பல்வேறு சாதிப்பிரிவினரும் பாட்டாளிவர்க்கமாக உள்ள காரணத்தாலும், ஏற்றத்தாழ்வைத் தகர்த்து சமத்துவ சமூகம ;படைப்பதும், சாதிபேதங்களை ஒழிப்பதும் அதனூடாக மட்டுமே சாத்தியப்படும் என்பதாலும் மார்க்சிய—லெனனியக் கற்றலை புதிய நோக்கில் ஆழப்படுத்துவது அவசியமாகும்.

முதலாளித்துவம் அனைத்துச் சாதிகளுக்குள்ளும் பல்வேறு வர்க்கப்பிரிவைச் சாத்தியப்படுத்தி விட்டது என்பது முழு உண்மையில்லை என்பது இன்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. “இந்தியாவின் டாலர் பில்லியனர்களில் ஐந்து அல்லது ஆறுபேரைத் தவிர ஏனைய அனைவரும் பார்ப்பன, பனியா, தாக்கூர் சாதியினர். அதாவது மக்கட் தொகையில் 10-வீதத்திற்கும் குறைவாகவுள்ள பார்ப்பன, பனியா, தாக்கூர் இந்திய ஆளும் வர்க்கத்தின் 90-வீத மக்கட் தொகையில், 90-வீதமான தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட சாதியினரும், மதச் சிறுபான்மையினரும் 10-வீதத்திற்கும் குறைவு.” எனக் கூறும் ப.கு.ராஜன் தொடர்ந்து இப்படிச் சொல்வார்:- “இந்தப் புள்ளி விபரங்களைத் தொடரலாம். காவல்துறை, நீதிமன்றங்கள், ஊடகங்கள், உயர்கல்வி ஆசிரியர்கள் என எல்லாவற்றிலும் இதுதான் நிலை. இத்தோடு மதம் மற்றும் மதத் தலைமை என்பதையும் கணக்கில் கொண்டால் சித்திரம் முழுமையடையும். அது என்ன? இந்தியாவின் ஆளும் வர்க்கமும் ஆதிக்க சாதியும் ஒன்றுதான். வேறு வேறு அல்ல. ஒரே கட்டமைப்பில் இருவேறு பக்கவாட்டுத் தோற்றம்தான். ஓன்றுக்கெதிரான போராட்டம் தவிர்க்கவொண்ணாத வகையில் மற்றதற்கும் எதிரான போராட்டம்தான். உயர்சாதியைச் சேர்ந்தவர்களும் இந்தப் போராட்டத்தில் வருகின்றார்களே. அவர்களுக்கு என்ன பதில்? அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

பாட்டாளி வர்க்கச் சிந்தனைமுறை!

பாட்டாளி வர்க்க விடுதலைக்கு மார்க்சும், ஏங்கெல்சும், லெனினும் போராடியது அவர்கள் பால் கொண்ட அனுதாபத்தால் அல்ல. பாட்டாளிவர்க்க விடுதலையில்தான் சகல பிறவர்க்கங்களின் விடுதலையும் அடங்கியுள்ளது என்பதனால் தான! இதனைப் புரிந்துகொண்டு, நம்மோடு இருந்து பணி புரியும் பிறவர்க்கத்து தோழர்கள் இல்லையா? அதேபோல எல்லாச் சாதிகளையும் சேர்ந்த எல்லா மக்களின் விடுதலையும் சாதி அடுக்கின் அடிமட்டத்தில் உள்ள தலித்துக்களின் விடுதலையில்தான் தங்கியுள்ளது என்பதை அவர்களில் பெரும்பகுதி புரிந்துகொள்வார்கள். பிற்படுத்தப்பட்ட மக்கள் பகுதியிலும், பெரும்பகுதி புரிந்துகொள்வார்கள். புரியச் செய்யவேண்டியது பெரும்பணிதான். ஆனால் ஒரு சிறுபகுதி புரிந்துகொள்ளவில்லை என்றால் கவலைப்பட வேண்டியதில்லை. இவர்களை உத்தேசித்து சொல்ல வேண்டியதைச் சொல்லாது மென்று விழுங்கினால், பெரும்பகுதித் தலித், பிற்படுத்தப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெறவது இயலாது” (ப.கு. ராஜன், “சாதியும் வர்க்கமு;ம்” புதுவிசை இதழ் 2, ஜீலை-செப்டெம்பர் 2008. பக். 43 மற்றும் 49)

அந்தக் கட்டுரை முழுமையும் மிகுந்த முக்கியத்துவம் மிக்க விடயங்களைப் பேசுகின்ற வகையில் ஆழ்ந்த கற்றலுக்குரியது. ஆயினும், இங்கு காட்டப்பட்டுள்ள பகுதியில் வெளிப்படுமாறு உள்ள ஒரு விடயம் குறித்து எச்சரிக்கை உணர்வு அவசியமாகும். தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சமன் பாட்டாளி வர்க்கம் என்ற தொனி இங்கு மேலோங்குவதைக் காணலாம். இந்த மக்கள் பிரிவினரே பாட்டாளி வர்க்கத்தை மிகமிகப் பெரும்பான்மையினராய்க் கொண்டுள்ளனர் என்ற போதிலும், சாதித்தளம் சார்நத்தாகப் புரட்சிகர சக்தியை இனங் காண்பது சரியல்ல. மார்க்சிய வடிவிலான பாட்டாளி வர்க்கச் சிந்தனை முறை என்பது மனிதகுலம் ஏற்றத்தாழ்வைத் தகர்த்தெறியக் கண்டறிந்த உன்னதமான சிந்தனை முறையாகும். இன்று உலகமயமாதல் பாட்டாளி வர்க்கத்தை “இழப்பதற்கு எதுவுமற்ற வர்க்கம்” எனும் நிலையிலிருந்து சிதைத்துப் போர்க்குணத்தை மழுங்கடிக்க சதிகள் பல செய்திருக்கலாம். உழைக்கும் மக்களும் சமூக மாற்றத்தை விரும்புவோரும் பாட்டாளிவர்க்கச் சிந்தனை முறையை வரிப்பதனால் மட்டுமே சமத்துவ சமூகத்தை வென்றெடுக்க முடியும் என்பது கவனிப்புக்குரியது.

மாறாக சாதித்தளத்தை புரட்சிக்குயதாக கருதும்போது, சமூகமாற்றத்தை எட்டமுடியாத தடை அங்கே இருப்பதைக் காணலாம். வெற்றிபெறும் சாதி தனது நோக்கிலான மாற்றத்தை எட்டமுனையும் பட்சத்தில் பழிவாங்கலுக்கான வாய்ப்பும், தமது நலன்களைப் பெருக்க முனையும் என்பதும் நிராகரிக்க முடியாதது, பாட்டாளிவர்க்க நிலைப்பாடு என்பது, பாட்டாளிவர்க்கம் எந்தச் சொத்தும் அற்றது என்கின்ற வகையில், வர்க்க ஒழிப்பில் மட்டுமே தனது விமோசனத்தை எட்டக்கூடிய வாழ்முறை உடையது என்ற வகையிலே புரட்சிகரச் சக்தியாய்க் கணிக்கப்பட்டது. மாற்றத்தை விரும்பும் வாழ்முறையுடைய தலித்-பிற்படுத்தப்பட்ட சாதியினர் தமது சாதியுணர்வையும் களைந்தெறியும் பண்பாட்டுப் புரட்சியை முதலில் தமக்குள் நிகழ்த்தியாக வேண்டும்., எமக்கான சமூகமாற்ற வடிவமே சாதியம் காரணமாய்ப் பண்பாட்டுப் புரட்சிதான் என்பதும் கவனிப்புக்குரியது. அனைத்துச் சாதியினரதும் சாதியபிமானங்களை   விட்டொழிப்பதற்கான பண்பாட்டுப் புரட்சி வடிவம் கண்டடையப்படவேண்டு;ம்.

(4)

இனக்குழு வாழ்முறை தகர்வுறாமலே சுரண்டல் அமைப்பிற்குரிய வகையில் சாதிகளாக்கப்பட்டுள்ளது என்கிற வகையில் நமது சிந்தனைகள்–வழக்காறுகள்–பண்பாட்டுக் கோலங்களில் இனக்குழுப் பண்புகள் விரவிக் காணப்படுகின்றன. இதன் பேறாக புதிய வர்க்க உறவு சார்ந்த சமூக மாற்றத்தை எட்டுவதற்கு முன்தேவைவயாக பண்பாட்டுப் புரட்சியை முன்னெடுக்க வேண்டியுள்ளது. கிரேக்க-ரோம் அடிமைப் புரட்சி, பிரன்சிய முதலாளித்துவப் புரட்சி போல இங்கு ஏற்படவில்லை என்பதால் சமூக மாற்றங்களே இங்கு ஏற்படவில்லை என்பது பொருளல்ல. பௌத்தத்தினுர்டாக நிகழ்ந்தேறிய பண்பாட்டுப் புரட்சியின் பேறான வணிக எழுச்சி குறித்து எம்.என். ராய் பேசியுள்ளார். பக்திப் பேரியக்கம் நிலவுடமை அதிகாரத்திற்கு வழிகோலியதை கைலாசபதி காட்டியுள்ளார். சுதந்திரப் போராட்டத்தில் காந்தி அரசியல் அதனிலும் அறம் ஓங்கும் வகையில் ஆன்மீகப் புரட்சியை இணைத்தது குறித்தப் பலரும் பேசியுள்ளனர்;.

ஆக, நமது சமத்துவ சமூகத்தை வெற்றி கொள்ளும் புரட்சியின் வடிவத்தில் பண்பாட்டு இயக்க வேலைமுறையொன்றை வகுப்பது, இயங்காற்றல் மிக்க சக்திகளது தேடலுக்குரியதாகும். ஏற்கனவே சமூக மாற்றத்தில் நமக்கான பாதை பண்பாட்டுப் புரட்சி சார்ந்தது என்பது குறித்து நிறைய எழுதப்பட்டுள்ளது., தவிர நடைமுறைப் பிரயோகம் வாயிலாக கணடறியும் போது மட்டுமே எதுவும் முழுமைபெற முடியும். சும்மா பேசிப் பேசிப் பயனேதும் இல்லை. செய்தாக வேண்டும். இல்லையெனில் செத்தொழிந்து போவோம்.

“செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்”  (குறள்-466)

பிற்குறிப்பு:- இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்கும் போது அடிப்படையான சில விடயங்கள் போதியளவுக்கு விவாதிக்ப்படவில்லை என்ற குறைபாடு எழுவதற்கு இடமுண்டு. இன்றைய சூழலில் சுயநிர்ணயத்தை எவ்வாறு வரையறை செய்து? இலங்கையில் முப்பது வருடங்களாக ஆயுதமேந்திப் போராடிய ஈழத் தமிழினத் தேசியத்தின் தீர்வுடன் முஸ்லிம்–மலையக தமிழ் மக்களது தீர்வுக்கான வடிவம் எது? ஏவ்வாறு அதனை வென்றெடுப்பது? சாதித் தேசியம் தனது சுயநிர்ணயத்தை எவ்வகையில் வடிவப்படுத்தவும், வென்றெடுக்கவும் இயலும்? பண்பாட்டுப் புரட்சிக்கான வேலைத்திட்டம் எத்தகையது?

இவை விவாதிக்கப்பட வேண்டியன எனும் சுட்டுணர்வை ஏற்படுத்த முடிந்திருந்தாலே, இக்கட்டுரை தனது பணியைப் பெரும்பகுதி நிறைவு செய்துள்ளது என்ற நம்பிக்கை எனக்குண்டு. கட்டுரையை நீட்டி முழக்க வேண்டாம் என்ற உச்சர்க்கையுடன், இத்தகைய ஒரு களத்திலேயே எல்லாத் தீர்வுகளையும் கண்டடைந்து விட முடியாது என்ற எல்லைப்பாட்டையும் புரிந்துகொண்ட காரணத்தால், இவ்வகையாக அமைந்துள்ளது கட்டுரை. இயங்கும் பலதரப்பட்ட சக்திகளும், தலைமைப் பாத்திரத்தை வழங்வேண்டிய பாட்டாளி வர்க்கக்-கட்சிகளும் பரந்த மனப்பான்மையுடன கூட்டு விவாதங்களை நடாத்தி இவற்றை வடிவப்படுத்த வேண்டும்.

“தமிழ்Pழ மக்கள், தமக்கான நேசசக்திகளை தமிழகத்திலும் கொஸோவோவிலும் தேடுவதற்கு முன், சிங்கள—முஸ்லிம்–உழைக்கும் மக்களிடையே தேட முயலவேண்டும். ஒடுக்கப்படும் விடுதலைக்கான குறுக்கு வழி ஏதும் இல்லை. ‘பெரிய அண்ணன்களை’ நாடுவது புதிய அடிமைத்தனத்திற்கு கொண்டு சென்றுவிடும்” என்பார் எஸ்.வி. ராஜதுரை. (எஸ்.வி. ராஜதுரை “ஒரு மைய உவகமும் தேசிய இன விடுதலையும்” எதுவரை? செப்டெம்பர்—அக்டோபர் 2009 ப. 40) பெரிய அண்ணன்களுக்கு உதவியாக இருந்து ஐந்தாம்படை நிலைப்பாட்டிலே காட்டிக்கொடுப்பு வேலையை செய்வதனூடாக வெற்றி பெறலாம் எனும் நினைப்போடு, ஈழத்தமிழ்த் தேசியம் ஆரம்பம் முதல் முழுத் தோல்வியைக் கண்ட வரையில் இருந்தமையைக் காட்டியிருந்தோம். இன்றும் அதே வாய்ப்புகளை நாடியபடிதான்.

இந்த இருப்பினை சிங்கள மக்கள் புரிந்துகொண்டு தீர்வின் அவசியத்தை வலியுறுத்துவதாயும் இல்லை. அவ்வாறு மக்களைச் சிந்திக்கத் தூண்டவல்ல சக்திகள் சிங்களப் பேரினவாதத்தால் அழித்தொழிக்கப்படடு விட்டார்கள். அந்நியர்களாயும் நாட்டினில் வந்து குடியேறி, இன்றும் அந்நிய ஊடுருவல்களுக்கு வழிகோலுபவர்கள் என்று சிறு தேசிய இனங்கனைச் சிங்கள மக்கள் பார்க்கும் வகையில் ஊடகங்கள் செயற்படுகின்றன. உண்மையில் எதிர்நோக்கப்படும் தேசிய இனப்பிரசிசினை அவர்களுக்கு போதிய அளவு புரிய வைக்கப்படவில்லை. அந்தவகையில் இதுவரை வடிவப்படுத்தப்பட்ட தீர்வுத்திட்டங்களை விட அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கும் விரிந்த தளத்திலான விவாதங்கள் ஊடாகவே சரியான தீர்வுத்திட்டத்தை கண்டடையவும், செயற்படுத்தவும் முடியும்.

இலங்கையில் முஸ்லிம் மக்களும், மலையகத் தமிழ்மக்களும் சிங்கள–இலங்கைத்  தமிழ் மக்கள் மத்தியில் சிதறி வாழ்கின்றனர். இவ்வகையில் இவர்களுக்கான சுயநிர்ணயம் உள்-சுயாட்சி அமைப்பு முறையிலாக தீர்க்கப்படவேண்டும். இது பற்றிய விவாதங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. ஏற்கப்படும் வகையில் சரியான வரையறை எட்டப்படவில்லை.

பொதுப்பிரச்சினைகள், ஒத்த பண்பாட்டுக் கூறுகள், வரலாற்றுச் செல்நெறி, ஒடுக்குமுறைக்கு உள்ளாதல் எனும் அம்சங்களையுடையவை ‘தேசம்’ என வரையறுக்கப்பட்டு, அவை தமக்கான சுயநிர்ணயத்தை தாமே வரையறுப்பதற்கு உரிமையுடையவர்கள் என்பது இன்று சர்வதேச அளவில் ஏற்கப்படுகின்றது. அந்தவகையில் ஓரே நிலத்தொடர்பு இல்லாபோதிலும் உள்-சுயாட்சி வடிவில் தீர்வை அவர்கள் பெற இயலுமாகியுள்ளது. பல நாடுகளில் செயற்படுத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்குவதனையும் காணமுடிகிறது. சாதித் தேசம் என்பதும் இலங்கையின் முஸ்லிம்-மலையகத் தமிழர் அளவுக்கு இல்லையெனினும், தமக்கான சுயநிர்ணயத்தை வரையறுக்க அவசியமுள்ள மக்கள் பிரிவினர் என்பதை இனியும் மறுக்கமுடியாது. அம்பேத்கர் இரட்டை வாக்குரிமைக் கோரிக்கைக்காக போராடியது முத்ல், இன்று பல்வேறு சக்திகள் வரையும் சாதித் தேசத்தின் சுயநிர்ணயத்தைக் கண்டடையும் முயற்சிகளையே மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்கள் மிகுந்த ஆளுமையுடன் புத்துலகத்திற்கு தலைமையேற்கும் வீறுடன் போராடியதால், சாதி சார்ந்த தனியான தீர்வுத்திட்டம் எதுவும் அன்று முன்வைக்கப்படட்தில்லை. அந்த மக்களது தலைமைப் பண்பு குறித்த புரிதல் இல்லாமல், உயர்சாதிச் சதியென அதனைக் கொச்சைப்படுத்துவது, புலம்பெயர் தலித்தியச் சிந்தனையாளர்களது அறியாமைதான். இன்று அவர்கள் விவாதத்திற்கு உள்ளாக்கும் அனைத்து விடயங்களையும் அதற்காக நிராகரித்துவிட முடியாது. இன்று யதார்த்தமாகியுள்ள மேலாதிக்க சக்திகளின் ஊடுருவல்களுக்குக் காட்டிகொடுப்பதாக அல்லாமல், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தீர்வுக்கான தேடல் எனும் அடிப்படையில் ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுப்போம்.

விவாதக் களங்களை கண்டடைவது, தீர்வு முயற்சிக்கு ஏற்றவகையில், மக்களை வீதிக்கு கொண்டு வருவது, தோல்விகளால் முடங்கிய உளச்சிக்கல்களை நிவர்த்திப்பதற்கான வெகுஜனப் பங்கேற்புக் களங்களை ஏற்படுத்துவது என்பவை வாயிலாக ப்ண்பாட்டு இயக்க களங்கள் சாத்தியமாகும். புண்பாட்டுப் புரட்சி வடிவம் அதன் செல்நெறி மூலமாகவே கண்டடையப்படும்.  இன்னமும் இவை குறித்து உரையாட் நிறையவே உண்டு. நீங்களும் பேசுங்கள்.!

சாதி, தேசம், பண்பாடு: ந. இரவீந்திரன் – பகுதி-1

சாதி, தேசம், பண்பாடு: ந. இரவீந்திரன் – பகுதி-2