Sat04272024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழ் மக்களை அரசியல் அநாதையாக்கும் தமிழ் பாராளுமன்றவாதிகள் ...!

இலங்கையில் ஒரேயொரு தேசிய இனமே உண்டு என்று கூறி, ஒடுக்கும் பேரினவாதம் தான், தமிழினவாதத்தை தொடர்ந்து உருவாக்கின்றது. தமிழ் பாராளுமன்றவாதிகளோ, இதை குறுகிய தமிழினவாதமாக மாற்றிவிடுகின்றனர்.

 

தமிழர் விடுதலைக் கூட்டணியும், மற்றைய பாராளுமன்ற தமிழ்க் கட்சிகளும், குறுகிய தங்கள் தமிழ் இனவாதம் மூலம், மக்களின் பால் அன்பும் ஆதரவும் கொண்டவர்களாக தம்மைக் காட்டிக்கொண்டு மக்களிடையே வெறுப்பை வளர்க்கின்றனர். தம்மையொத்த சிங்கள அரசியல்வாதிகள் தான் இனவாதிகளாக இருக்கின்றனர் என்பதை சொல்லாது, மொத்த இனமக்களையும் எதிரியாக காட்டி தமிழ் இனத்தை ஒடுக்க உதவி செய்கின்றனர். மேற்கு நாடுகள், இந்தியா, சீனா ரசியா வரை சென்று எமது இனப்பிரச்சனையை விளக்கி தீர்வு காண முனைவதாக தம்மைக் காட்டிக்கொள்ளும் இந்த குறுந்தமிழ்தேசியவாதிகள், சிங்கள மக்களிடம் விளக்கி தீர்வு காண்பதற்கான முயற்சி எதையும் செய்வதில்லை. அன்று முதல் இன்று வரை, இதுதான் அதன் குறுந்தேசிய அரசியல். இந்த அரசியல் இனவிரிசலையே, இனங்கள் மத்தியில் தொடர்ந்து திணிக்கின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி 1976ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானமாக தமிழீழம் என்ற கோரிக்கையை முன்வைத்தது. இதன் மூலம் தொடர்ந்து தமிழ் மக்களின் முதுகில் ஏறி சவாரி செய்யப் புறப்பட்டது. இதன் தொடர்ச்சியில் தங்கள் அரசியல் எதிரிகளை அழிக்க உருவாக்கபட்ட கூலிக் குழுதான் "புதிய புலிகள்" என்ற அன்றைய புலிகளின் அமைப்பாகும். இந்த அரசியல் நீட்சியாக, புலிகளின் அரசியலும் தொடர்ந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் இந்த அரசியலானது குறுகிய இனவாதம் மூலம் தங்கள் பாராளுமன்றக் கதிரைகளை தக்கவைத்து, தமது சொந்த வாழ்வியலை மேம்படுத்தவும் முனைந்தது.

இப்படி செயல்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியினர், தமக்கு வேண்டாத போட்டியான எதிராளிகளை அரசியலிலிருந்து அழிப்பதற்காக, பிரபாகரன் போன்ற இளைஞர்களை பயன்படுத்தினர். இந்த தனிநபர் அழிப்பை, இனவிடுதலைக்கான பாதையாக இந்த பாராளுமன்றவாதிகள் வழிகாட்டிய படிதான், தங்கள் அரசியல் எதிரிகளைக் கொன்றனர். இதைச் செய்த புலிகள் பேரினவாதத்தின் ஒடுக்குமுறையால் விரிவான இராணுவ வடிவத்தைப் பெற்றபோது, கூட்டணியின் சுயநலனுக்கு ஏற்ற கூலிக்குழுவாக அதனால் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை. அதனுடன் முரண்பட்ட இந்தப் பாராளுமன்றவாதிகள், தம் முந்தைய தீர்மானங்களை தொடர்ச்சியாக கைவிட்டு வந்தனர். த.வி.கூ வினர் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில், தமக்கான சுகபோகங்களைப் பெறுவதில் குறியாக இருந்தனர்.

தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்றோ, அவர்கள் சுயநிர்ணயத்துடன் வாழவழி கோலவேண்டும் என்றோ எண்ணிப்பாராது..., அதற்காக முனையாது குறுகிய இனவாதத்தில் மக்களை ஏய்க்க முனைந்தனர். அரசின் இன நடவடிக்கைகளை மக்கள் முன் எதிர்ப்பதுபோல நடித்தபடி, திரை மறைவில் அரசுடன் இணைந்து செயற்படவும் செய்தனர். தேர்தல்கள் நடக்கும்போது இனவாதத்தை தூண்டி மக்களின் நண்பர்களாகவும், மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கேட்பவர்களாக வலம் வருகின்றனர். தமிழ் மக்களோ.., இவர்களைச் செயற்பாட்டளவிலோ அல்லது மாற்று அரசியல் சக்தியாகவோ அடிப்படையில் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், இவர்களுக்கு மாற்றாக ஒரு சக்தியும் இல்லாததால் இவர்களுக்கு வாக்களிக்கின்றனர். ஜனநாயகம் என்றால் வாக்குரிமை என்ற இந்த முதலாளித்துவ அரசுகளின் பிரச்சாரங்களாலும், இதனால் பிரச்சனையை தீர்க்க முடியும் என்று உருவாகும் பிரமையினாலும், தமது வாக்குகளை இந்த இனவாதக் கட்சிகளுக்கே தொடர்ந்து போடுகின்றனர். இதற்கு ஏற்றாற் போல் தமிழர் விடுதலைக் கூட்டணியினர், மேடைகளில் வீராவேசமான பாசாங்கு வார்த்தைகளை அள்ளி வீசுவதன் மூலம், மக்களின் வாக்குகளை பெற்று வந்தனர். இவ்வகையில் வாக்குரிமையை பெற்று தமது வாழ்வினை சுகபோகமாக அனுபவிக்கவும், தாம் நினைத்த நேரங்களில் வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்களை மேற்கொள்ளவும், தமிழ் மக்களிடையே மீண்டும் மீண்டும் பொய்யான பிரச்சாரங்களை செய்யலானார்கள். இப்படி அவர்களின் அந்த அரசியல் சுயபோக அரசியலாகியது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்கள் மூலம், மக்களைத் தேர்தலில் பங்குபற்றாது மறித்த போது, மக்கள் மந்தைகளாக வாக்குகளை பதிவு செய்யாமல் ஒதுங்கிக் கொண்டனர். ஆனால் இதே தமிழீழ விடுதலைப் புலிகள், பின்னர் மக்களிடம் ஓட்டுகளை பதிவு செய்யவும் கோரினர். இவ்வாறு மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றவும், தமது சுய இலாபத்திற்காகவும், இந்த வாக்குரிமையை பாவிக்கலானார்கள் இந்த குறுந்தேசிய ஏமாற்றுப் பேர்வழிகள். அதேபோல 80களில் ஆயுதப் போராட்டம் மூலமே தமிழீழம் பெற்றுக் கொள்வோம் எனப் புறப்பட்ட பல இயக்கங்களும், பின்பு ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு, மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்தும் கட்சிகளாக தம்மை மாற்றிக்கொண்டு, மக்களிடையே வாக்குகளைத் தேடி அலைகின்றனர். இதில் பிழைப்பு வாதத்தைவிட, தமிழ் மக்களின் இனச் சுயத்தினை அழிக்கும் கட்சியாக திகழ்கின்ற ஈபிடிபி முதல் பிள்ளையான் வரை தமக்கு அதிகமான வாக்குகள் வேண்டும் என்பதற்காக, மக்களைப் பலவழிகளாலும் பயமுறுத்தி தமக்கே வாக்குகளைப் போடவேண்டும் எனக் கோருகின்றனர்.

இவ்வாறான தமிழ் மக்களின் நலனில் நின்று எந்த கட்சியும் செயற்படுவது கிடையாது. மாறாக தமது சுய நலனில் நின்றே இயங்குகின்றன. வன்னி மக்கள், இடப் பெயர்வால் பாதிக்கப்பட்ட போது, அவர்களுக்கு ஆதரவாக நிற்க முடியாத இந்தக் கட்சிகள், தமிழர்களுக்கான தீர்வின் வரைவினைப் பற்றி, இந்தியா மற்றும் மேற்கத்தைய வல்லரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனராம். இவர்கள் என்ன பேச்சு வார்த்தை நடத்தினாலும், தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கக் கூறி மக்களைச் சார்ந்து நின்று போராட்டத்தை இதுவரை நடத்தியது கிடையாது. ஆங்காங்கே பேசும் போது ஆண்ட பரம்பரை, மீண்டுமொருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை எனக் கேட்பார்கள். இவ்வாறு அடுக்குமொழியில் பேசும் இவர்கள், தமிழ் மக்கள் இலங்கையின் ஒரு தேசியஇனம் என்றும், அதற்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதையும், வலியுறுத்துவதில்லை. அதை அடையும் வழிமுறைகள் எதையும் முன்வைப்பதில்லை.

இந்தியா வரும் என்ற எல்லைக்குள், சுயநிர்ணயத்தை அன்னியனுடன் சேர்ந்து காவு கொடுத்தனர். தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக தம்மைக் காட்ட முற்படும் இன்றைய தமிழ்க் கூட்டமைப்பு, ஒரு தமிழினத் துரோக அமைப்பு என்பதை யாரும் மறந்திட முடியாது. யுத்த காலத்தில் தம்மையும் தமது நலனையும் மட்டுமே கவனத்தில் கொண்டிருந்த இவர்கள், யுத்தப் பிரதேசத்தில் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டபோது என்ன செய்தார்கள். தொடர்ந்தும் தமது பதவிகளில் இருந்த வண்ணம், ஆங்காங்கே அறிக்கை விட்டுக் கொண்டிருந்தனர். இதைவிட தற்போது கூட்டமைப்பாக மாறி அரசாங்கத்துடன் நடத்தும் பேச்சு வார்த்தைகள் பற்றி விபரம் வெளியிடப்படமாட்டாது என்று வேறு அறிவித்துள்ளார்கள். மக்களுக்கு தாங்கள் என்ன பேசுகின்றோம் என்பதை மறைப்பது என்பது, தொடரும் மக்கள் விரோத செயற்பாடாகும். அரசியல் பேச்சு வார்த்தை உள்ளடக்கங்களை வெளியிட மறுப்பது என்பதும்.., ஒரு இனமக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்.., இந்த கூட்டமைப்பு தன் சொந்த துரோகத்தை மூடிமறைப்பதாகும். இந்த கூட்டமைப்பினர் என்ன சொன்னாலும், தமிழ் மக்களுக்காக எதையும் செய்யப்போவதில்லை என்பது திண்ணம். தமிழ் மக்கள் தமது சுயநிர்ணயத்தை நிறுவ, அதை சிங்கள மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் . இதற்காக சிங்களதொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து நின்று போராட வேண்டும், தமது சுயநிர்ணயக் கோரிக்கை சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல என்பதை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். ஆனால் இந்தப் பாராளுமன்ற குறுந்தேசிய பிழைப்புவாதிகள் இதை செய்யப்போவதில்லை. இதுவல்லாத இந்த அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளில் இருந்து, மக்களை முதலில் வென்றெடுப்பது அவசியமானது.

குறுந்தேசிய பராளுமன்றமும் சரி, ஆயுதமேந்திய தியாகங்களும் சரி, சுயநிர்ணயத்தை பெற்றுதாரது. இந்த குறுந்தேசியம் மூலம் சுயநிர்ணயம் கிடைக்கும் என்பதும் பொய்யாகும். கடந்த 60 வருட குறுந்தேசிய அரசியலால் இது சாத்தியமில்லை என்பது நிரூபணமாகியுள்ள நிலையில், மக்கள் தமக்கான போராட்டம் மூலம் மட்டுமே இதைப்பெற முடியும். பாராளுமன்றவாதிகளை நம்பி நிற்காது, மக்கள் தமக்கான உரிமைக்காக போராட வேண்டும். புலிகளின் ஆயுதப் போராட்டம் தோற்றதால், தமிழ்த் தேசிய இனத்திற்கான போராட்டம் தோற்றுவிட்டதாக இல்லை. ஒடுக்குமுறை இருக்கும் வரை, எமது போராட்டமும் தொடர்ந்த வண்ணம் இருக்கும்.

பாராளுமன்ற அரசியல் என்றும் போலியானதே. அதற்கு மாறாக ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க கோருங்கள்.., அதற்காக போராடுகள்..!

சிங்கள மக்களே..!

தமிழ் மக்கள் இனரீதியாக ஒடுக்கப்படுவதை அங்கீகரிக்காதீர்கள் அதற்கு எதிராகப் போராடுங்கள்.

தமிழ் மக்களே..!

குறுந்தேசியத்தை ஆதரிக்காதீர்கள். அதற்கு எதிராக போராடுங்கள்.

சிங்கள மக்களே..! தமிழ் மக்களே..!!

எங்கள் சுயநிர்ணயத்துக்காக குரல் கொடுங்கள்..! அதற்காக போராடுங்கள்..!

-சீலன்.

முன்னணி (இதழ் -2)