Sun04282024

Last updateSun, 19 Apr 2020 8am

இராணுவ ஆட்சிக்கான முன் தயாரிப்புகள்..! – (பகுதி2)

 

 

 

2.யுத்தத்தின் பின் பௌத்தமூலம் தமிழினத்தை அழிக்கின்றது...

யுத்தத்தின் பெயரில் ஓர் இனத்தைக் கொன்று குவித்தவர்கள், யுத்தத்தின் பின் அதை நிறுத்திவிடவில்லை. ஆனால் அதன் வடிவத்தை மட்டும் மாற்றியுள்ளனர். 1940கள் முதல் எல்லையோரத்தில் திட்டமிட்டு நடாத்தி வந்த இன அழிப்புக் குடியேற்றம், யுத்தத்தின் பின் தமிழர் செறிந்து வாழும் பகுதிகளுக்குள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் பேரினவாதம் தன் இன அழிப்புக்கு, இன்று பௌத்த மதத்தை முதன்மைப்படுத்தி முன்நிறுத்துகின்றது. அரசு தன்னை மதத்தின் ஊடாக அடையாளப்படுத்தி, பேரினவாதத்தை முன்தள்ளுகின்றது. ஆயுத மூலமான இன அழிப்பில் புலிகள் மீதான படை நடவடிக்கை மூலம் அழிப்புகள் முடிந்த நிலையில், பௌத்த மதத்தைக் கொண்டும் அதனைச் செய்கின்றது. யுத்தத்தின் பின்னான இன அழிப்பில் இன்று மதம் பாவிக்கப்படுகின்றது.

 

தமிழ் பகுதியை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள இராணுவத்தின் வழிபாடு சார்ந்து நிர்மாணமாகும் புத்தர் சிலைகள், திட்டமிட்ட வகையில் முக்கிய சந்திகளில் தொடர்ச்சியாக வைக்கப்படுகின்றது. இப்படி இராணுவ மூலம், அந்த மக்கள் வழி படாத ஒரு மதத்தை முன்நிறுத்த நிறுவப்படும் பௌத்த சின்னங்கள், திட்டமிட்ட ஓர் இன அழிப்பு வன்முறையாக திணிக்கப்படுகின்றது.

வவுனியா சந்தியில் நிறுவப்பட்ட புத்தர் சிலை 1980இன் முன் இருந்தது கிடையாது. 1981இல் திடீரென வைக்கப்பட்ட குட்டியான புத்தர் சிலை, இன்று பேரினவாதத்தின் பலத்துக்கு ஏற்ப அதன் உயரமும் பருமனும் அதிகரித்துச் செல்லுகின்றது. இனவாதத்தின் வளர்ச்சிக்கும் பலத்துக்கும் ஏற்ப அதுவும் கொழுக்கின்றது.

அமைதியும் சமாதானமும் என நிலவிய காலத்தில், திருகோணமலை பஸ் நிலையத்தில் நிறுவிய திடீர் புத்தர் சிலைகளை தொடர்ச்சியாக திட்டமிட்டு நிறுவிய அரசு, யுத்தத்தின் பின் இராணுவம் மூலம் பெருமெடுப்பில் நிறுவி வருகின்றது. தொடர்ந்து இனக் குரோதமும், இன அழிப்பு என்பதும் திட்டமிட்டு விதைக்கப்படுகின்றது.

1948 முதல் பேரினவாத அரசு காலத்துக்கு காலம், சூழலுக்கு சூழல் இன ஒடுக்குமுறை வடிவத்தை மாற்றி வந்துள்ளது. இந்த இன ஒடுக்குமுறை தான், இன்று இன அழிப்பாக மாறியுள்ளது. இந்த இன ஒடுக்குமுறை தான், இலங்கையில் இன யுத்தத்தை உருவாக்கியது. அதுதான் புலியையும் உருவாக்கியது. அரசு தன்னை மூடிமறைத்தபடி புலிப் பயங்கரவாதம் தான் நாட்டை பிளவுபடுத்துவதாக கூறியது. புலியின் யுத்தம் தான் நாட்டின் சமாதானத்துக்கும் அமைதிக்கும் எதிராக இருப்பதாக கூறியது. இப்படிக் கூறித்தான், தமிழின அழிப்பாக யுத்தத்தை அரசு திட்டமிட்டு நடத்தியது. சமாதானத்தையும், அமைதியையும், தமிழ் மக்களுக்கான தீர்வையும் யுத்தத்தின் பின் வழங்குவதாக அரசு கூறி வந்த வாக்குறுதியை, யுத்தத்தின் பின் அதை தன் இனவாத வரலாற்றுத் தொடர்ச்சிக்குள் புதைத்துவிட்டு, தமிழர்மீதான இன அழிப்பையே அது தொடருகின்றது. காலத்துக்குக் காலம் பேச்சுவார்த்தைகள் எனவும்  தீர்வைக் காணுவதற்கான குழுக்கள் முதல் ஒப்பந்தங்கள் வரை, அனைத்தும் பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப, இன ஒடுக்குமுறையின் தொடர்ச்சியாகவே அதை பாவிக்கின்றது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மறுப்பதுதான், அரசின் பேரினவாதக் கொள்கையும் நடைமுறையுமாகும்.

இதைப் பாராளுமன்ற வழிகளில் தீர்க்க முற்பட்டவர்களும், ஆயுத மூலம் தீர்வுகாண முற்பட்டவர்களும், தோற்றுப் போனதே எம்மைச் சுற்றிய வரலாறாகின்றது. அதே இனவாத எல்லைக்குள் நின்று இதை நாம் அணுகியதால் தான், இது நிகழ்ந்தது. குறுகிய தமிழ் இனவாதத்தை கொண்டு பேரினவாதம் தன்னை பலப்படுத்தியது. இதைக் கொண்டு தான், இனவழிப்பாக அதை மாற்றியது.

இனவாத அரசை தனிமைப்படுத்தும் அரசியல் வழி முறையை முன்னெடுக்காத குறுந்தேசிய தமிழ் இனவாதம், பேரினவாத சிங்கள அரசுடன் தான் பேரம் பேசியது. சிங்கள மக்களுடன் பேசத்தவறியது என்பது, அதை தொடர்ந்து அரசியல் ரீதியாக நிராகரிப்பது என்பது, தொடர்ந்தும் பேரினவாதத்தை பலப்படுத்துகின்றது. அரசு சிங்கள மக்களின் அறியாமையை தனது இனவாதத்துக்கு ஆதரவுக் கருத்தாக மாற்றிக்கொண்டு, தொடர்ந்து இன அழிப்பை நடத்துகின்றது. இன்று பௌத்தத்தைக் கொண்டு தமிழ் இன அழிப்பை முடுக்கிவிட்டுள்ளநிலையில் பேரம் பேசும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியாது. இந்தியா முதல் அமெரிக்கா வரை சென்று முறையிடுவதன் மூலம், இதை தீர்க்கவும் முடியாது. இதுதான் எம்மைச் சுற்றிய 60 வருட வரலாறு. இப்படி இருக்க, தொடர்ந்து பேரம் பேசுவதையும், இந்தியா
முதல் அமெரிக்கா வரை வழிகாட்டி தமிழினத்தை காவு கொடுப்பதும் தான் தமிழ் குறுந்தேசிய அரசியலாக தொடருகின்றது.

இதற்கு மாறாக இதை சிங்கள மக்களிடம் எடுத்துச் சென்று அவர்களின் மனநிலையில் கருத்தியல் மாற்றீடு செய்வதன் மூலந்தான் இப்படித் தொடர்கின்ற இன அழிப்பை தடுத்து நிறுத்த முடியும். இதற்கான முதற்படியை நாம் எடுத்து வைக்க, சிங்கள மக்களிடம் எம் பிரச்சினையை கொண்டு செல்ல வேண்டும்.

இன ஒடுக்குமுறை முதல் இன அழிப்பு வரை சிங்கள மக்கள் செய்யவில்லை, பேரினவாத அரசு தான் செய்தது - செய்கின்றது. சிங்கள மக்களுடன் சேர்ந்து, அரசுக்கு எதிராக போராடுவதன் மூலந்தான், நாம் எம்மீதான இன ஒடுக்குமுறையை தடுத்து நிறுத்த முடியும்.

இதைவிட வேறு எந்த மார்க்கமும், மாற்று வழிகளும் கிடையாது என்பதையே எமது 60 வருட வரலாறு எடுத்துக் காட்டுகின்றது. எங்களின் இந்த 60 வருட வழிமுறைகள், இன அழிவையே ஏற்படுத்தியிருக்கின்றது. தொடரும் இன அழிப்பு, கடந்தகால எமது அரசியல் வழிமுறை ஊடாகத்தான் பலம்பெற்று வந்திருக்கின்றது. அது எம்மை அநாதையாக்கியிருக்கின்றது. இதைப் புரிந்து கொண்டு, எம்மை நாம் விமர்சனமும் சுயவிமர்சனமும் செய்யாவிட்டால், தமிழினம் இலங்கையில் தன் அடையாளத்தை இழந்து அழிந்து போவது என்பது எம் வரலாறாக எஞ்சும். அதற்கு நாங்கள் காரணமாக இருப்போம்.

இரயாகரன்

முன்னணி (இதழ் -2)