Sun04282024

Last updateSun, 19 Apr 2020 8am

பாக்கியசாலிகளின் வாழ்வால் எழுதப்பட்ட அந்த அற்புதமான இலக்கியம்

1930.10.17ம் திகதி பகத்சிங்குக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. கூடவே ராஜ்குருவுக்கும், சுக்தேவிற்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.


இற்றைக்கு 80 வருடங்களுக்கு முன்பு இவ் அழகிய இலக்கியம் படைப்பாகியது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் 1931ம் ஆண்டு மார்ச் மாதம் 23ம் திகதி பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிப்பட்டபோது அது பிறந்தது. பகத்சிங்கும் அவர்களது தோழர்களும் தூக்கிலிடப்பட்டவுடன் பிரிட்டிஷ் அரசு இவர்கள் பற்றிய நூல்கள் அனைத்தையும் தடைசெய்தது. தமிழ் நாட்டில் மட்டும் 11 தமிழ் நூல்கள் தடைசெய்யப்பட்டன. ஆனாலும், பகத்சிங்கும் அவரது தோழர்களும் தூக்கிலிடப்பட்ட ஐந்து மாத இடைவெளிக்குள் அவர்கள் பற்றிய புத்தகமொன்று 6தடவைகள் பதிப்பைப் பெற்றிருந்தது. ஆறாவது பதிப்பு மட்டும் 5000 பிரதிகளைப் பெற்றிருந்தது.

 


1931.03.23 மாலை 3.00 மணி...

லாகூர் சிறையின் போக்குவரத்துக்கள் நின்றுவிட்டன. பகத்சிங்கும் அவர்களது தோழர்களும் வழக்கம் போலவே முகமகிழ்ச்சியுடன் இருந்தனர். மறுநாட் காலையில் தங்களைத் தூக்கிலிடப் போவதாகவே நினைத்துக் கொண்டிருந்தனர். வழக்கத்துக்கு மாறாக கைதிகள் அனைவரும் இன்று முன்னதாகவே அவரவர் அறையில் அடைக்கப்பட்டனர். பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் வலிமைமிகு சட்டத்தின் காவலாளிகளான ”மாஜிஸ்ரேட்” மற்றும் சிறைச்சாலைகளின் இன்ஸ்பெக்டர்கள் ”ஜெனரல்” முதலியோர் வழமைபோல பெரிய வாயில் வழியாக உள்நுழையாமல் மறைவாக விசேட விசாரணை கோட்டுக்குப் போகும் வாயில் வழியாகப் புகுந்து வந்தனர். ”மாஜிஸ்ரேட்” வந்து பகத்சிங்கை அழைத்தபோது ”மாஜிஸ்ரேட் அவர்களே! தாங்கள் அதிஸ்டசாலி! சுதந்திரப் போராட்டத்தில் இறக்கும் வீரர் எவ்விதம் தூக்கு மேடையைத் தழுவுவர் என்பதை நாங்கள் தங்களுக்கு இதோ நேரில் காட்டுகிறோம்” எனப் பகத்சிங் பதிலளித்தார். இதைக்கேட்ட ”மாஜிஸ்ரேட்” கிறுகிறுத்துப்போனார். அவர்கள் மூவரையும் அறைகளை விட்டு வெளியே கொண்டு வந்ததும், சிறையின் மூலை முடுக்குக்களில் இருந்து கைதிகள் ”புரட்சி நீடூழி வாழ்க!, ஏகாதிபத்தியம் ஒழிக!, ஏழைகள் வாழ்க!” என ஆரவாரித்து கூச்சலாக எழுப்பினர். பிறகு, அவர்கள் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.


”உயிர் பிரிந்திடினும் தாய்த்திருநாடே!


பிரியாதே உந்தன் இனிய நினைவுகள்


கலந்திடும் இந்த மண் உந்தன் மண்ணில்


கலந்ததால் இந்த மண்ணும்


மணங்கமழும் உனதன்பாலே!”


என்று மூவரும் கைகோர்த்தபடி, துள்ளு நடைபோட்டு ஆனந்தமாகப் பாடிச் சென்றனர். தூக்கு மேடைக்கு அருகில் சென்றதும் மூவரும் அதன் மீது தாவி ஏற முயன்றனர். சம்பிரதாயப்படி சில காரியங்கள் செய்யப்பட்டபின் அவர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டனர். பகத்சிங் நடுவிலும், வலது பக்கமாக ராஜ்குருவும், இடது புறமாக சுக்தேவ்வும் நிறுத்தப்பட்டனர். சுருக்குக் கயிறு அவர்களின் கழுத்தில் மாட்டப்பட்டது. தங்கள் கண்களை துணியால் மறைக்கவேண்டாம் என அவர்கள் சொல்லிவிட்டனர். தாம் இறக்கும் போது கூட தம் தாய்நாட்டைப் பார்த்தபடியே இறக்கவேண்டும் எனச் சொன்னனர். மூவரும் தூக்குக் கயிற்றை காதலோடு முத்தமிட்டனர். பின்னர் ஆனந்தம் பீறிட்டெழ ஒருவரை ஒருவர் ஆரத்தழுவிக் கொண்டனர். அப்போது சுக்தேவ் ”ஒரு நிமிடம் சற்றே பிரிந்திருந்தாலும், மீண்டும் மூவரும் ஒன்று சேர்ந்து அஸாத், பகவதி சரணர், யதீந்திரதாஸ் ஆகியோர்களுடன் கூடி, நமது கட்சியின் மத்திய கமிட்டிக்கூட்டத்தை நடத்தச் சொல்லலாம்” என்றார்.

 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே தூக்குப் பலகை தட்டிவிடப்பட்டது. பகத்சிங் ஒரு கணத்துக்குள் உயிர் துறந்தார். மெலிந்திருந்த ஏனைய இருவரும் இரண்டொரு விநாடிகளில் உயிர் துறந்தனர். 40 நிமிடங்களின் பின்னர் அவர்களது உடல்கள் இறக்கப்பட்டன.

முன்னணி (இதழ் -1)