Sat04272024

Last updateSun, 19 Apr 2020 8am

நடையண்ணை பறைஞ்சா - கதை கேட்டவர் முத்தையா

இன்றைக்கு இருக்கின்ற இந்தச் சமுதாயம் நேற்று இருந்திருக்கேலாது எண்டது விளங்குதோ உனக்கு?


அப்படி விளங்கியிருந்தா சமுதாயம் எண்டா என்னடாப்பன் சொல்லு பாப்பம். தலையைச் சொறியிறது உனக்குத் தொழில். உனக்கு விளங்கப்படுத்த படாதபாடு படுகிறது என்ர தொழில் தம்பி.


மனிசராகப்பட்ட நாங்கள் தனிச்சு வாழலேலாது தம்பி. மற்ற மனுசர்களோட ஒரு ஒழுங்கு முறையுக்குள்ள சேர்ந்து பகிர்ந்து வாழுறது தான் சமுதாயம் எண்டிறம் தம்பி. தனிச்ச மனிசனாக சமுதாயத்தினுடைய எந்தப் பொருளையோ உறவையோ தீண்டாம வாழ ஏலாது தம்பி. நாங்க ஒவ்வொருத்தரும் சீவிக்கிறதுக்கு மற்ற மனிசர் கைபட்டு உருவாகின பொருள் எதையுமே தீண்டாம, மனிசரிட தொடர்ப முற்றுமுழுசாக அறுத்துக் கொண்டு வாழ ஏலாது தம்பி. பிறந்தவுடனேயே தாய்ப்பாலுக்கும் அணைப்புக்கும் பாதுகாப்புக்கும் பராமரிப்புக்கும் எண்டு ஆரம்பிக்கிற வாழ்க்கை அதின்ர ஓட்டத்தில மனிசர்களோட சங்கிலித் தொடரா இணைஞ்சு வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கோ இல்லையோ?

 


மனிசன் ஒரு சமூகப்பிராணி எண்டு சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறியோ? ஒரு சிந்திக்கத் தெரிந்த கூட்டுப்பிராணிகளான மனுசக் குழுமத்தில் நாங்கள் எங்கட வாழ்க்கைய இணைச்சுக்கொண்டு வாழுறமோ இல்லையோ? அப்படி எதிலயும் எவரிலயும் இணக்கமில்லாமல் தனிச்சு வாழ ஏலாது தம்பி. வாழ்க்கையெண்டது நாம அறியாமலே பரஸ்பரம் எங்களுக்கிடையில மனிசர்களுக்கிடையில நடக்கிற கையெழுத்துப் போடாத ஒப்பந்தம் - இணக்கம் எண்டதை நினைக்கவேணும்.


சரி சமூகம் எண்டது விளங்குது. இந்தச் சமுதாயம் ஏன் நிலையா இருக்காம நேற்றைக்கு ஒரு ஞாயம் இண்டைக்கு ஒரு ஞாயம் எண்டு மாறவேணும் அது விளங்கேல்ல?


அப்ப, நாங்க கொஞ்சம் பழய காலத்துக்கு போய் வருவமோ தம்பி. சோக்கான ஒரு கேள்வியொண்டு கேட்கிறன். நீ இப்ப சோறு காச்சுகிறாய் தம்பி. என்ன அடுப்பிலயே சோறு காச்சிறனி?

நான் என்னவோ விளக்கம் கேக்க நீங்கள் சம்பந்தா சம்பந்தம் இல்லாம சில்லறைச் சமையல் சமாச்சாரத்துக்குள்ள குசினிக்குள்ள ஏன் கதையைக் கொண்டு போறியள்? ஊரில அம்மா விறகு அடுப்பில ஊதி ஊதி பத்த வச்சு காய்ச்சி வடிப்பா. நான் இஞ்ச ஒரு எலக்றிக் அடுப்பில சோறு காச்சுவன்.


சோறு காச்சிறதெண்ட இந்தச் சின்ன விசயத்துக்கே இப்படி ஒரு ரெண்டு விதமான நிலவரம் நீ வாழுற காலத்திலேயே இருக்கிறதெண்டா பழைய காலத்தில தம்பி, சோறு காச்சிறதுக்கு நெருப்பு இல்லாத, அதை மனிசன் கண்டுபிடிக்காத காலம் ஒண்டு இருந்திருக்கும் - ஒத்துக் கொள்ளிறியோ?


என்னண்ணை அடுப்பில இருந்து இப்ப நெருப்புக்க பாஞ்சிட்டியள்?


அடுப்போ நெருப்போ விசயம் இது தான். நெருப்பு எண்டது இல்லாத காலத்தில சோறு எண்டது சமைச்சிருக்க ஏலாது. மனிசன் என்னத்தையும் அவிச்சு சாப்பிட்டிருக்க ஏலாது. அப்ப பச்சையா வேக வைக்காமத்தான் சாப்பிட்டிருக்கேலும். மனிசன்ர பசிக்கு நீ இப்ப மக்டொனால்ஸில வாங்கி விழுங்கிற மாதிரியெல்லாம் இருந்திருக்க ஏலாது. இப்பிடி பின்னுக்கு பின்னுக்கு போய் மனிசன்ர வாழ்க்கைமுறையைக் கிளறினமெண்டால் மனிசன் தன்ர, தன்னைச் சார்ந்தவங்களின்ர பசிக்கு மிருகங்களையும் காய்கறி, பழவகைகளையும் தான் பச்சையா அவிக்காம சாப்பிட்டிருக்க வேணும்..


ஓமோம் நெருப்பைக் மனிசன் கண்டுபிடிக்க முந்தி மனிசன் காத்தைக் குடிச்சு மட்டும் சீவியம் நடத்தியிருக்கேலாது. அப்படியொரு நிலமையில பச்சையா காய்கறிகளை பழங்களை மரத்திலயிருந்து பிடுங்கி மிருகங்களின்ர இறைச்சியை பச்சையாகத்தான் சாப்பிட்டு உயிர் வாழ்ந்திருக்க வேணும். அது விளங்குது. ஆனால் மனிசன் பிறகு இறைச்சியை வேகவைச்சு சாப்பிடோணும் எண்டு ஏன் நினைச்சான்? மனிசனுக்கு அவிச்ச இறைச்சி ருசிக்கும் எண்டு யார் சொல்லிக் குடுத்தது?

தம்பி எப்பவுமே மனிசன் எதைக் கண்டுபிடிச்சாலும் அதை அவன் வானத்திலயிருந்து வாற அசரீரியிலயிருந்து பெறயில்லையடா. அறிவையோ ஆக்கத்திறமையையோ இயற்கையிலிருந்தும் தனக்கு தேவையான கருவிகளையோ பண்டங்களையோ உருவாக்கிறபோது கிடைக்கிற அநுபவத்திலயும் இருந்து தான் மனிசன் கிரகிச்சுக் கற்றுக் கொண்டிருக்க வேணும். படிப்படியாக முன்னேறியிருக்க வேணும். அந்த அறிவை இன்னொரு மட்டத்துக்கு விருத்தியாக்க அவன் தான் முன்னமே பெற்றுக் கொண்ட அநுபவத்தை தான் உருவாக்கியிருந்த பண்டங்களின்ர குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முனைகிறபோது அவன் புதிதாக ஒன்றை கண்டுபிடிக்கிறான். அவன்ர அறிவின் அடித்தளம் எண்டது இது தான். உனக்கு ஒரு சின்னக் கதை சொல்லவேணும். கேப்பியோ?

 

சின்னக் கதையெண்டு சொல்லி நீட்டி முழக்காமல் நித்திரை கொள்ளாம கேக்கக் கூடியதா புதுக்கதையா அவிட்டுவிட்டா கேக்க எனக்கு புளிக்காது.

 

நீ கேட்ட கேள்விக்கே திரும்பிப் போவம். மிருகங்களின்ர பச்சை இறைச்சியை வேகவைக்காமல் சாப்பிட்ட மனிசன் அது வேக வைத்தால் ருசியில் மாற்றமும் சப்புவதற்கு பதமாகவும் இருக்கும் எண்டது அவன்ர சிந்தனைக்கு எப்படி வந்தது எண்டு கேட்டாய். அந்த நெருப்பின்ர கதையை சொல்லுறன் கேளு. நீண்ட பெருங்காடு. மழை பெய்யும். காற்றடிக்கும். மரங்கள் செழித்திருக்கும். மிருகங்கள் கொழுத்திருக்கும்...

 

சரியாப் போச்சு அண்ண இந்த ஆலாபரன அடுக்குமொழியை விட்டிட்டு விசயத்துக்கு கெதியா வாங்கோவன் அண்ணை.


தம்பி அவசரப்படாத விசயத்தோட தான்ரா நான் இதைச் சொல்லுறன். நீ காட்டில வேற என்ன நடந்திருக்குமெண்டு நினைக்கிறா. வேட்டையாடி மிருகத்தை கொண்டு பச்சை இறைச்சியை திண்டு வாழ்ந்த மனிசனுக்கு அவிச்ச இறைச்சி கிடைத்தது மாயமோ மந்திரமோ அல்ல. இயற்கை படைத்த விருந்தடாப்பன் அது.


பூடகக் கதையள் சொல்லாமல் புட்டு வையுங்கோ விசயத்தை.


தம்பி நீ அவுஸ்திரேலியாவில அடிக்கடி நடக்கிற சம்பவம் ஒன்று சொல்லுபாப்பம்.
அண்ணே நீங்கள் நாசமாப் போக. தண்ணியைக் கிண்ணியைப் போட்டுட்டு தடுமாறுறியளோ அவுஸ்திரேலியாவுக்கும் அவிச்ச இறைச்சிக்கும் என்ன சம்பந்தம்?


இருக்கடா தம்பி. நீ கட்டுங்கடங்காமல் அங்க அடிக்கடி பரவுற காட்டுத்தீ பற்றிக் கேள்விப்படயில்லையே. கேள்விப்பட்டிருப்பாய். அப்படி எண்டால் உன்ர புத்தியில இப்ப அதைப்போட்டுப்பார். நீ சும்மா லேசுப்பட்ட ஆளில்ல. படு லாவகமாக விசயங்கள தொகுத்து பார்க்கிறதில நீ கெட்டிக்காரன்ராப்பா. இந்த இடத்தில நான் உனக்கு கதை சொல்லுறத நிப்பாட்டுறன். நீ தான் இப்ப இந்த கதையை முடிச்சு வைக்கவேணும். நான் உம் கொட்டிக் கொண்டு கதை கேட்கிறன். இப்ப நீ அண்ண. நான் தம்பி விளங்குதோ?


அண்ணை எனக்கு இதுக்கு மேலயும் விளங்காட்டி என்ர மண்டைக்குள்ள இருக்கிறது களிமண் எண்டு நீங்கள் கைதட்டிச் சிரிக்கிற கொடுமையை பாக்கேலாது. கொஞ்சம் பொறுங்கோ. ஒரு முறடு தேத்தண்ணியால மூளையை சுறுசுறுப்பாக்கிப் போட்டு எங்கட விடுகதைக்கு, நான் உங்களின்ர தயவில்லாமல் விளக்கம் தாறன். நீங்கள் சொல்லுதிறதில வெளிச்சமா எனக்கு என்ன தெரியுதெண்டா, நீங்கள் தொடங்கினபடி மழை மரம் மிருகங்கள் எண்டு; மனிசர்கள் ஒரு ஆதிகாலச் சூழல்ல காட்டில இயற்கையோட வசிச்ச காலங்கள்ள காட்டுத் தீயும் இருந்திருக்கு. அந்தக் காட்டுத் தீ இண்டைக்கு அவுஸ்திரேலியாவில பற்றிப் பரவுகிற மாதிரி மரங்களில பற்றி எரிந்த போது மிருகங்கள் அதில அகப்பட்டிருக்கு. என்ணண்ண இந்தத் தம்பி போகிற தடம் சரியோ பிழையோ?


நீ சூரப்புலியடா சொல்லிக் கொண்டு போ நான் கேட்கிறன். எனக்கு சீடனாய் நீ இருக்காதே. உன்ர புத்தியை நீயாகவே தீட்டு. ம்... சரி சொல்லு.


இந்தத் நெருப்பில அகப்பட்ட முழுசும் கருகாமல் கரியாகாமல் மிஞ்சின மிருகங்களின்ர இறைச்சிதான் இயற்கை அவனுக்கு குடுத்த முதல் அவியல் விருந்து. அந்த ஆதிகால மனிசன் இயல்பாக பசிக்கு இந்த நெருப்பு நடத்திய வேட்டையில் வெந்த இறைச்சியை புசித்திருப்பான். ஒன்று அவனுக்கு உடன வெளிச்சமாப் போச்சு அதென்ணெண்டால் இறைச்சியை வேக வைக்க காட்டுத்தீயில தங்காமல் நெருப்பைக் கடையிறதெப்படி கட்டுப்படுத்திறதெப்படி எண்டும் அதுக்கான சாதனங்கள் என்ன எண்டதையும் கண்டறிய அவன் மூளையைக் குடைஞ்சிருப்பான். அப்ப இறைச்சியை வேக வைச்சு சாப்பிடலாம் எண்ட அறிவு மனிசனுக்கு இயற்கையால ஊட்டப்பட்டது எண்டாகிறது. ஆனால் அண்ணே ஒரு சின்னச் சந்தேகம். மனிசன் எப்படியண்ணே நெருப்புக்குச்சியைக் கண்டுபிடிச்சிருப்பான்.


இப்ப நீ உன்ர வயசுப் புத்தியைக் காட்டிட்டாய். அவசரப்பட்டிட்டாய். கொஞ்சம். நிதானமா யோசி. உனக்கு பொறி தட்டும்.


ஓமண்ணை கொஞ்சமில்லை நான் வலுவா அவசரப்பட்டிட்டன். நெருப்புக்குச்சிக்கும் அந்த ஆதிகால மனுசனுக்கும் இடையில எத்தனையோ ஆயிரம் வருசம் எண்டதை மறந்திட்டன். விறகு அடுப்புக்கும் எலக்றிக் அடுப்புக்கும் நீங்கள் சொன்ன தொடர்பு என்னவோ அதுவே தான் நெருப்புக்குச்சிக்கும் அந்தக்கால ஆதிகாலத்தில நெருப்பை மனிசன் உருவாக்கினதுக்கும் இருக்கின்ற அறிவு இடைவெளி. இதைத் தெரியாம நான் அவசரக் குடுக்கையாகியிட்டன். ஆனாலும் ஒண்டு நெருடுது. நெருப்புக் குச்சியை உரசி அந்த உரசல்ல தான் அதைப் பத்தவைக்கிறம். உரசி சூடு உருவாக்கலாம் எண்டது எப்படி மனுசனுக்கு தெரிஞ்சது. கையை கையையும் உரசிப் பாத்து சூடுகிளம்பிறதை பாத்தானா அல்லது?

 

இல்லை இல்லை. அண்ணை நீங்க வாயே திறக்க வேணாம். இப்ப எனக்கு விளங்குது. மனிசன் அந்தக் காலத்தில காட்டில அலைஞ்சு திரிஞ்சு மிருகங்களை துரத்தி வேட்டையாடி புசித்து பசியாறுகிறவனா இருந்திருப்பான். இந்தக் காட்டுத் தீ எப்படி உருவாகுது எண்டதை கண்டுகொள்ள அவன் தேடி அலைஞ்சு உலைஞ்சிருப்பான். காய்ஞ்ச சருகுகள் மரக்குச்சிகள்

 

மேல சாதுவா நெருப்பு பத்தக் கூடியது எண்டதையும் கண்டு விளங்கியிருப்பான். ஆனால் நெருப்பை எப்படி தான் நினைத்தபோது உருவாக்கிறது எண்டதற்கு விடை தேடி அலைஞ்சிருப்பான். இதுக்கு விடையைக் கண்டவன் தான் அண்டைக்கும் இண்டைக்குமான நாகரீக உலகத்தின்ர கதவைத்திறந்து விட்ட விஞ்ஞானியாகவும் இருந்திருப்பான்.

 

சரி தம்பி ஆனால் இந்த நெருப்பை உருவாக்கிற வித்தையை கண்டுபிடிச்ச விசயத்தை ஒரு தனிமனிதச் சாதனையா சொல்லுறது பிழை. அது ஒரு கூட்டுக் கண்டுபிடிப்படா மோனே.

 

அதைவிடுவம் அண்ண. அது வேற விசயம். நெருப்பு உருவாக்கிறதெப்படி எண்ட விசயத்தை மனிசன் என்ன விதத்தில அறிஞ்சிருப்பான் எண்டால் இந்தக் காட்டுத் தீ உருவாகிறபோது அது எங்கே ஆரம்பிக்கிறது எவ்வாறு ஆரம்பிக்கிறது எண்டதை அவதானிக்க அவனுக்கு பல பேர்களுடைய அவதானம் தேவைப்பட்டது. இங்கதான் வருகுது நீங்க சொன்ன கூட்டுக் கண்டுபிடிப்பு. இப்படி அவதானிச்ச போது தான் இது உலர்ந்த மரக்காடுகளுக்கிடையே மூங்கில் மரங்கள் உரசுகிற போது பறக்கிற பொறிகள் உலர்ந்த சருகுகளில் பற்றிப் பிடித்து இது சுவாலையாகி பரவுகிறது என்ற அவதானத்தின் மூலமான அறிவு அவனுக்கு கிடைக்கிறது. கண் பார்த்துவிட்டது. கைகள் இப்போ தீக்கடையும் மரக்கருவிகளையும் கல்லோடு உரசும் கருவிகளையும் உருவாக்குகிறது. நாகரீகம் பிறக்கிறது. அப்பாடா மூச்சுவிடாமல் இப்ப நான் ஒரு பிரசங்கமே செய்திட்டன். மனிசன் அண்டையிலிருந்து இறைச்சியை வேக வைக்கத் தொடங்கிவிட்டான்.

 

இன்னுமொண்டு நீ மறந்திட்டாயடா தம்பி.


என்ணண்ணே அது.


நெருப்பு இறைச்சியை வேக வைக்கும். அகப்பட்டதையெல்லாம் பொசுக்கும். எண்டதை மனிசன் கண்டுகொண்டான். அதை தானாகவே தனது தேவைக்கா உருவாக்கும் நுட்பத்தையும் கருவிகளையும் கண்டு பிடிச்சுவிட்டான். அதோட சேர்த்து இன்னொரு அறிவும் அவனுக்கு அனுபவத்தில கிடைச்சது.


அது என்னடாவெண்டால் நெருப்பில அழியாமல் இருந்த ஒரு பொருள். ஒண்டுமில்ல இது அவன் காலடி மண். மண் நெருப்பில அழியாம இருந்திருக்கு. நீ படுசுட்டி எண்டது எனக்கு தெரியும்.


நெருப்பில மண் அழியாம அப்படியே இருக்கிறதெண்டதும் மனிசனுக்கு சாதகமாய்ப் போய் அது இன்னுமொரு கண்டுபிடிப்பை உருவாக்கிச்சு. தீயை உருவாக்கத் தெரிஞ்ச மனிசனுக்கு தீ தீமையும் செய்யும் எண்டது விளங்காமல் போகுமோ அந்த அறிவு தான் சோதிப்பிழம்பாய் இறைவன் தோன்றி நந்தன் பக்தியை மெச்சி ஆட்கொண்டருளினார் என்று சுபம் சொல்லி நந்தன் கதையை நயவஞ்சகமாய் முடித்தது. உயிரோடு எரித்தது. தீயிலிட்டு கொலை செய்வது என்பது பக்தி மார்க்கத்தில் சோதியில் கலந்து முக்தி பெறுவது என்ற வஞ்சகக்காரர்களின் கருவியுமாயிற்று.


அது சரி அந்த இன்னுமொரு கண்டுபிடிப்பெண்டு சொன்னனியள் அது என்னண்ணே.
அது நீண்டு போயிடும் தம்பி. இன்னொரு நாளைக்கு ஞாபகப்படுத்து கதைப்பம்.


மண்ணுக்கும் நெருப்புக்குமான எதிர்நிலைத் தன்மையை மனிசன் மடக்கிப்பிடிச்சான் பாரு இது இன்னுமொரு பாய்ச்சல். அதுக்கு கிளைக்கதைகளெல்லாம் இருக்குது அப்பன். பிறகு பாப்பம். ஆனால் இந்த வேக வைக்கிற இறைச்சி, மழை, மண், நெருப்பு எல்லாம் அங்கயும் வரும் நீர் வாருமன் இன்னொரு நாளைக்கு விளக்கமா பேசுவம். நான் ஆரம்பிச்சு கதை சொன்னா நீ விளக்கத்தோட முடிச்சு வைக்க வேணும் எண்ட அந்த முறையை மறக்காதையடா தம்பி. சரி நா வறண்டு போச்சு. ஒரு பிளேன்ரீக்கும் கடிக்க இரண்டு வடைக்கும் ஓடர் குடுத்துவிட்டுப் போவன். என்ன குறைஞ்சே போயிடுவாய். சமுதாயத்தில தொடங்கி நெருப்பில நிற்கிறம். எல்லாம் போகப்போக விளங்கும். போயிட்டு வா அப்பனே.


அது சரி அந்த அடுத்த பாய்ச்சல் என்ணெண்டு சொல்லுங்கோவன் நான் மண்டையையைக் குடையாமல் நிம்மதியா நித்திரை கொள்ளுவன்.


அட தம்பி ஆவி பறக்கிற தேத்தண்ணியில நான் கொஞ்சம் நாக்க நனைக்க விடு. பிறகு வா கதையளை மட்டும் கேட்டா காத்திருக்கிற காரியங்கள் கெட்டு போயிடும். போய் நாலு பத்து காரியங்கள் உனக்கெண்டு காத்துக்கிடக்கும். முடிச்சுப்போட்டு நேரம் கிடைக்கிற வேளையில வா.


”நானடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட” ரெஸ்ரோரன்டில் தமிழ் ரேடியோ அதட்டல் விட்டுக் கொண்டிருந்தது.

தொடரும்

முன்னணி (இதழ் -1)