Sun01232022

Last updateSun, 19 Apr 2020 8am

ஜல்லிக்கட்டிற்கு தடை என்றால் தமிழன், திருமணம் என்றால் தேவன்

தன் பாட்டில் நிற்கும் மாட்டை இழுத்து வந்து ஓட விட்டு துன்பப்படுத்தி தேவர்சாதிக்குஞ்சுகள் தங்களது வீரத்தை மாட்டிடம் காட்டுவார்கள், எந்த ஒரு விளையாட்டுப் போட்டியும் இரு தரப்பினரின் ஒப்புதலுடனேயே நடக்க வேண்டும். இந்த தேவர்சாதி வீரமறவர்களிடம் எந்த மாடு வந்து நாங்கள் ஜல்லிக்கட்டு விளையாடுவோம், "ஒண்டிக்கு ஒண்டி வாறியா" என்று சவால் விட்டது? எந்த ஒரு மிருகமும் உணவிற்காக அன்றி வேறொரு மிருகத்தை கொல்வதில்லை. தமக்கு உயிராபத்து வந்தாலும் இயலுமான அளவு தவிர்த்து தம் வழி போகும். இனி பொறுப்பதில்லை எனும் போதே அவை தம்மிடையே மோதும்.

ஒரு மாட்டை பல பேர் சூழ்ந்து கொண்டு அடக்குகிறார்கள். என்ன ஒரு வில்லத்தனம், மன்னிகவும் வீரத்தனம். நீங்கள் தான் ஆறறிவு படைத்த ஆண்ட பரம்பரையாச்சே, உங்கள் செங்கோல் வழுவா நீதி இது தானா? ஏன் பல மாடுகளிற்கு மத்தியில் ஒரு தேவர்குலச்சிங்கம் நின்று தன் தளரா வீரத்தைக் காட்டக் கூடாது. மேலும் இந்த வீராதிவீரர்கள் இலை, குழைகளை உண்ணும் வளர்ப்பு விலங்கான மாட்டிடம் தமது வீரத்தையும், பலத்தையும் காட்டுவதை விட்டு ஏன் சிங்கம், புலி, கரடிகளுடன் ஜல்லிக்கட்டு விளையாடக் கூடாது. அப்படி சிங்கம், புலியுடன் ஜல்லிக்கட்டு விளையாடினீர்கள் என்றால் இந்த அகில உலகமும் அலங்காநல்லூரிற்கு வந்து ஆவென்று வாய் பிளந்து நிற்குமே?

இந்த ஜல்லிக்கட்டு என்ற மிருகவதை தேவர் சாதியினரால் ஒழுங்கு செய்யப்படுகிறது. பங்கெடுப்பவர்களிலும் மிகப்பெரும்பாலானவர்களாக அவர்களே இருக்கிறார்கள். இப்படி மாடுகளை துன்புறுத்துவதற்கு தடை என்று வந்தால் தமிழனின் வீர விளையாட்டிற்கு தடை என்று கூச்சல் எழும். அப்போது அவர்கள் தேவர் சாதி இல்லை. அவர்கள் தமிழர்கள். தமிழ் இன ஒற்றுமை பேசுவார்கள். தமிழர்களின் வீர விளையாட்டிற்கு அன்னியர்கள் தடை போடுகிறார்கள் தமிழர்களே இன்னுமா உறக்கம் என்று பள்ளியெழுச்சி பாடுவார்கள்.

ஆனால் ஒரு தேவர் சாதி அல்லாத ஆண், குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த ஆண் தேவர் சாதிப் பெண்ணை காதலித்தால், திருமணம் செய்து கொண்டால் தமிழர் வேசம் கலைந்து விடும். தமிழர்கள் தேவர்களாகி கொலை செய்வார்கள். சங்கர் என்ற இளைஞர் கெளசல்யா என்ற பெண்ணை விரும்பி மணம் முடித்ததற்காக துடிக்க துடிக்க வெட்டிக் கொன்றிருக்கிறார்கள் தேவர் சாதி வெறியர்கள்.

மாடுகளை சித்திரவதை செய்வதற்கு தடை என்றவுடன் தமிழ்த் தேசியவாதிகள் பதறி எழுந்து தமிழ்ப்பண்பாட்டிற்கு ஆபத்து என்று பொதுவெளி எங்கும் அலறித் துடித்தார்கள். இன்று ஒரு இளைஞர் தான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக கொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்த் தேசியவாதிகளின் வாய்கள் மூடிக் கொண்டு விட்டன. சங்கர் தமிழர் இல்லையா? அவர் பேசியது தமிழ் மொழி இல்லையா? அவர் வாழ்ந்தது தமிழ்நாடு இல்லையா?

அய்யா ராமதாசு சமுகநீதி பற்றி அரைமணி நேரம் முழங்கிய ஒரு கூட்டத்தில் சங்கரின் கொலை பற்றி ஒரு ஊடகவியலாளர் கருத்து கேட்ட போது சங்கரின் மரணத்தைப் பற்றி, தேவர்சாதி வெறியர்களின் ஆணவக் கொலையைப் பற்றி வாயே திறவாமல் "நான் இவ்வளவு நேரமும் சொன்னதைப் போடுங்கள்" என்று எழுந்து சென்றார். அய்யாவின் அல்லக்கைகள் நாற்றவாய்கள் திறந்து நக்கலாக சிரித்தன. தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் வன்னியப்பெண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றி கல்யாணம் செய்து கொள்கிறார்கள் என்று சொன்ன வன்னிய சாதி வெறியர் வேறென்ன சொல்வார்.

இந்து மதம் என்ற மனித குல விரோத சமயத்தின் சாதி என்ற பயங்கரவாதம் இருக்கும் வரை இந்தக் கொடுமைகள் இருந்து கொண்டே இருக்கும். மேலிருந்து கீழாக ஒவ்வொரு மனிதனையும் பிறப்பில் இருந்து இறப்பு வரை உயர்வு தாழ்வு கற்பிக்கும் மூடத்தனம் இருந்து கொண்டே இருக்கும். சாதி என்ற மடமையை வேரோடும், வேரடி மண்ணோடும் வெட்டிச் சாய்த்து பாலை மனம் எங்கும் அன்பு மழை பெய்யச் செய்வோம்.