Thu01272022

Last updateSun, 19 Apr 2020 8am

"கருணா அம்மான்" - நோய்க்குறி

ஸ்ரொக்கோம் நோய்க்குறி (Stockholm syndrome) என்பது பணயக்கைதிகள் தம்மை கடத்தியவர்களின் மீது அனுதாபம் கொள்ளுவதைக் குறிக்கும். ஸ்ரொக்கோம் நோய்க்குறி கொண்டவர்கள் தம்மை துன்புறுத்துவர்களின் சித்திரவதைகளையும்,முறைகேடுகளையும் தம் மீது காட்டப்பபடும் கருணையாக எடுத்துக் கொள்ளுவார்கள். தம்மை அடிமைப்படுத்துபவர்களுடன் மற்றவர்களிற்கு அதிர்ச்சியை உண்டாக்கும் ஒரு பிணைப்பை வளர்த்துக் கொள்ளுவார்கள்.

இந்த மனநிலை பகுத்தறிவு அற்றதாக இருப்பதனால் தம் மீது செய்யப்படும் சித்திரவதைகள் அவர்களிற்கு ஆபத்தை உண்டாக்கினாலும் அதை பொறுத்துக் கொள்ளும் நிலைக்கு வந்து விடுவார்கள். ஒரு கட்டத்தில் தம்மை அடிமைப்படுத்துபவர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு தானும் அவர்களில் ஒருவன் என்று நினைத்துக் கொண்டு தன்னை அடிமைப்படுத்துபவர்களை நியாயப்படுத்த தொடங்கி விடுவார்கள்.

இதை வாசித்தவுடன் உங்களிற்கு கருணா அம்மான், மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச என்ற பெயர்கள் ஞாபகத்திற்கு வரலாம். கருணா அம்மான் என்ற அடிமை ஸ்ரொக்கோம் சின்ட்ரம் காரணமாக தனது எஜமானர்களான ராஜபக்ச குடும்பத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, தன்னை அவர்களில் ஒருவனாக நினைத்துக் கொண்டு இலங்கை பாராளுமன்றத்தில் இங்கிலீசில் முழங்கியது அந்த நோயின் காரணமாகத் தான் என்று நினைக்கலாம். ராஜபக்ச குடும்பத்தின் தலைமையிலான பேரினவாத இலங்கை அரசின் தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளை, இனப்படுகொலையை நியாயப்படுத்தி பேசியது இந்த நோயின் அறிகுறியாக தென்படலாம்.

ஆனால் கருணா போன்றவர்கள் மனநோயாளிகள் அல்ல. இவர்கள் கொலைகாரர்கள். பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும் எதையும் செய்யக் கூடியவர்கள். புலிகளுடன் தனக்கு ஏற்பட்ட பிரச்சனைகளிற்காக கொலைகார இலங்கை அரசுடன் கூட்டு சேர்ந்தவர்கள். புலிகளின் தலைமைக்கும் தனக்கும் இடையே இருந்த தனிப்பட்ட பிரச்சனைகளை வடக்கு, கிழக்கு தமிழர்களிற்கு இடையேயான பிரச்சனையாக உருமாற்றி கிழக்கு மாகாணத்தில் வசித்த வடமாகாணத் தமிழர்களை கொன்ற பயங்கரவாதி. (மறுபக்கத்தில் "தமிழர்களின் தேசியத் தலைவர்", கருணாவின் கட்டுப்பாட்டிற்குள் சிக்குப்பட்ட ஆயிரக்கணக்கான கிழக்குமாகாண தமிழ்ப்போராளிகளை ஒரே நாளில் துரோகிகளாக்கி தமது அரசியல் மேதாவித்தனத்தை உலகிற்கு எடுத்துக் காட்டினார்).

Massacre என்றால் என்ன, Rescue என்றால் என்ன என்று தனது விஞ்ஞான விளக்கத்தை கொடுத்து மகிந்த ராஜபக்சவின் இலங்கை அரசும், இலங்கை இராணுவமும் வன்னியில் தமிழ்மக்களை காப்பாற்றியதாக இந்த முன்னாள் மட்டக்களப்பு தேசியத் தலைவர் எள்ளளவும் தயக்கமின்றி ஊளையிட்டார். காடைத்தனத்திற்கு மகிந்த ராஜபக்கவின் முன்னோடியான சிங்கள இனவெறியன் பிரேமதாசாவிடமிருந்து புலிகள் ஆயுதங்களை பெற்றுக் கொண்டார்கள் என்று ஏற்கனவே தனது ஆங்கிலப்பேச்சால் அதிர்ந்து போயிருந்தவர்களிற்கு மற்றொரு அதிர்ச்சியைக் கொடுப்பதாக நினைத்து எல்லோருக்கும் தெரிந்த ஒரு ராணுவ ரகசியத்தை சொல்லி விட்டு இந்த "ரகசியம் போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று சவால் விட்டார்.

ஆனால் இப்படியான தகவல்கள் புதியனவும் அல்ல, புதுமையானவையும் அல்ல. மக்களின் அடிப்படைப் பிரச்சனை வறுமை என்பதை மூடி மறைத்து விட்டு மொழி, இனம், மதம், பிராந்தியம் என்பன தான் மக்களின் பிரச்சனைகள் என்று ஏமாற்றும் வலதுசாரி கும்பல்கள் எப்போதும் அதிகாரசக்திகளுடன் கூடிக் குலாவ தயங்குவதில்லை. கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளுகிறோம் என்று சொல்லிக் கொண்டு மக்கள் விரோத சக்திகளுடன் சேர்ந்து தமது சொந்த மக்களை அழிவிற்குள் தள்ளுகிறார்கள். தமிழ் காங்கிரஸ், தமிழ் அரசுக்கட்சி, தமிழ்க் கூட்டமைப்பு, ஆயுதப்போராட்ட இயக்கங்கள் என்று எல்லோருமே இலங்கை அரசு, இந்திய அரசு,மேற்கத்தைய நாடுகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு மக்களை காட்டிக் கொடுக்கிறார்கள்.

ஜெருசலம் சின்ட்ரோம் (Jerusalem syndrome) என்றொரு மனநோய் இருக்கிறது. இஸ்ரேலியர்களாலும், பாலஸ்தீனியர்களாலும் தமது நகரம் என்று கொண்டாடப்படும் ஜெருசலத்திற்கு செல்பவர்கள் சிலர் திடீரென்று மதம் சம்பந்தப்பட்ட கற்பனைகளால் ஆட்டிப் படைக்கப்படுவதை இந்த நோய் குறிக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் ஜூதர்கள், கிறீஸ்தவர்கள், முஸ்லீம்கள் என்று எல்லா மதத்தவர்களும் ஜெருசலத்திற்கு வரும் போது இந்த நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். அதே போல தமக்குள் மோதிக் கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகள் எல்லோரும் பிரேமதாசா, ராஜபக்சா, நரேந்திர மோடி, பராக் ஒபாமா என்று மக்கள் விரோதிகளின் முன் செல்லும் போது தமிழ்மக்களை காட்டிக் கொடுத்தல் என்னும் நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்.

இறுதியாக இன்னொரு மனநோய் இருக்கிறது. இது தமிழர்களிற்கு மட்டுமே வரும் மிக ஆபத்தான மனநோய். உலகத்திலுள்ள எந்த மொழிக்காரர்கள் இருவர் சந்தித்தாலும் தமது மொழியில் பேசுவார்கள், ஆனால் இரு தமிழர்கள் மட்டுமே தமக்குள் ஆங்கிலத்தில் பேசுவார்கள். தண்ணி அடிக்கும் தமிழர்களிற்கும் இந்த மனநோய் அடிக்கடி வரும். (சென்னைத் தமிழர்கள் அப்ப எந்த நேரமும் தண்ணியிலேயா இருக்கிறார்கள் என்று கேட்க கூடாது.) இலங்கைப் பாராளுமன்றத்தில் தமிழ் மொழிபெயர்ப்பு வசதி இருக்கிறது. ஆங்கிலத்தில் பேச வேண்டிய தேவையே இல்லை. அப்படி இருக்கும் போது கருணா அம்மான் தானும் கஸ்டப்பட்டு மற்றவர்களையும் தலையை பிய்க்க வைத்து ஆங்கிலம் பேசியதை பார்த்த போது இந்த நோய்க்கு "கருணா அம்மான் சின்ட்ரம்" என்று வைப்பது தான் மிகப் பொருத்தமாக இருக்கும்.