Tue12062022

Last updateSun, 19 Apr 2020 8am

கண்களிருந்தும் நாம் குருடர்கள் ஆகிறோமா ………………………………..?

68 வருடங்களாக இலங்கையின் அரசியல் எதுவித மாற்றமுமின்றி “இனவாதம்” என்ற மையப் புள்ளியையே சுற்றிச் சுற்றி சுழன்று கொண்டிருக்கிறது. அதே கட்சிகள். அதே வாரிசுகள். அதே கோரிக்கைகள். அதே சுலோகங்கள். நாடு தனது சுயாதீனத்தை இழந்து விட்டது. கடந்த அரசாங்கங்கள் போல தற்போதை அரசாங்கமும் உலக மயமாக்கல் பொருளாதாரத்தை நமது நாட்டில் நடைமுறைப்படுத்தும் ‘தரகு’ ஏஜன்சியாகவே செயற்படுகிறது.

நாடுபூராவும் குடிமக்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். யுத்த பாதிப்பு தொடருகிறது. களவு-வன்முறை-போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது. கைது-துன்புறுத்தல்-கொலை குறையவில்லை. நீதிமன்ற ஆணைகளையும் மீறி அடக்குமுறை பாய்கிறது. குடிமக்கள் அச்சத்துடனேயே வாழ்கிறார்கள்.

ஆனால் மக்களால் ஆளும் அதிகாரம் பெற்றவர்கள் மக்கள் மீதான தமது கடமைகளை -பொறுப்புக்களை நிறைவேற்றாமல் தங்கள் அதிகாரத்தை மேலும் மேலும் அதிகரிக்க வேண்டிய முயற்சிகளிலேயே ஈடுபட்டுள்ளனர்.

அதில் எமது மக்கள் பிரதிநிதிகள் மிகவும் புத்திசாலிகளாகவும் - துணிச்சல் படைத்தவர்களாகவும் - விடாமுயற்சி உடையவர்களாகவும் விளங்குகின்றனர். 68 வருடங்களாக தமிழ்ப் பேசும் மக்கள் தலையில் மிளகாய் அரைத்தபடி தங்களைத் தக்க வைத்துக் கொண்டு மக்கள் முதுகில் சவாரி செய்தபடி அதிகாரப் போட்டியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

“யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் வடக்கில் 18,883 பேர் வலது குறைந்தவராகியுள்ளனர். இவர்களில் 4,163 பேருக்கு தலா 3ஆயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் ஏனையவர்களுக்கு வடமாகாண சபையினூடாக மாதாந்த கொடுப்பனவு வழங்க முடியுமான போதிலும் அது வழங்கப்படவில்லையெனவும் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார்.”

வடமாகாண சபை இதுவரை யுத்த பாதிப்பு தொடர்பாக ஒரு ஆய்வு செய்ததாக அன்றி செய்து கொண்டிருப்பதாக தகவல் இல்லை. மாறாக சில அரசியல் வியாபார விஷமிகள் கட்டிவிட்ட வதந்தியை சாட்டி முன்னாள் போராளிகள் மத்தியில் நஞ்சு ஊசி ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். ஆனால் யுத்தத்தினால் மாற்றுத் திறனாளிகளாக்கப்பட்ட மக்களுக்கென நிதி ஒதுக்கீடு இருந்தும் கொடுப்பனவு வழங்குவதை நடைமுறைப்படுத்தவில்லை.

வட கிழக்கு ஒரே பிரதேசம் என்கிறார்கள். மொழி மக்களை இணைக்கும் என்கிறார்கள். ஆனால் வன்னியிலிருந்து குடிநீரை யாழ்ப்பாணம் கொண்டு வருவதற்கு இவர்களே தடையாக உள்ளனர். கிழக்கில் சம்பூர் அனல் மின்சார திட்டத்தை ஆதரித்து அவ்வூர் மக்களின் வாழ்வாதாரத்தை இவர்களே மறுத்தார்கள். வெளியேற்றப்பட்ட இஸ்லாமிய மக்களின் மீள்குடியேற்றம் மாகாண சபையின் நிகழ்ச்சி நிரலில் இடம் பெறவே இல்லை. வட கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ்ப் பேசும் மக்களை கருத்தில் எடுக்காமல் இனவாதத் தணலுக்கு எண்ணெய் ஊற்றும் விதத்தில் அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளுகின்றனர்.

இவர்கள் காலங்காலமாக நாட்டின் குடிமக்களை பிளவுபடுத்தும் அரசியலையே மேற்கொண்டு வருகிறார்கள். மக்களை உணர்ச்சி வசப்படுத்தி சுயலாபம் தேடுவதே இவர்களின் இலக்கே ஒழிய மக்களை ஒற்றுமைப்படுத்துவதல்ல. காரணம் மக்கள் ஒன்றுபட்டால் இவர்களது சுயலாபம் அடிபட்டுப் போகும் என்பதே ஆகும்.

கடந்த சனாதிபதி தேர்தலில் “தமிழர்களின்” வாக்குகளே சர்வாதிகாரத்தை தோற்கடித்தது என்கிறார்கள். உண்மையில் வடகிழக்குத் தமிழர்களினதும் இஸ்லாமிய-மலையக தமிழ்ப் பேசும் மக்களின் வாக்குகளும் சிங்களம் பேசும் மக்களின் வாக்குகளும் சேர்ந்தே புதிய சனாதிபதியை தெரிவு செய்தது.

இன்று புதிய அரசியல் யாப்பு இனப்பிரச்சனைக்குரிய தீர்வை தரவேண்டும் எனக் கூறுபவர்கள் செய்ய வேண்டியது தீர்மானங்களோ-அறிக்கைகளோ-வெட்டிவாய் பேச்சுக்களோ-உணர்ச்சிகளைக் சீண்டிவிடும் ஊர்வலங்களோ அல்ல. இதயசுத்தி இருந்தால் இவர்கள் முதலில் செய்யவேண்டியது நியாயமான தீர்வை நிறைவேற்றத் தேவைப்படும் வாக்குகள் கொண்ட இஸ்லாமிய-மலையக-சிங்கள குடிமக்களுடன் உரையாடலை ஆரம்பிப்பதேயாகும்.

அத்தகைய உரையாடலை சிங்கள மக்களுடன் இலகுவாக நடாத்துவதற்கு இன்றைய பாராளுமன்ற எதிர்க் கட்சித் தலைவருக்கு சகல தகுதியும் அதிகாரமும் உண்டு. நாட்டின் அனைத்துக் குடிமக்களின் நலன்களையும் பாதுகாக்க வேண்டிய பாரிய பெரும் பொறுப்பும் அவருக்கு உண்டு. இன்றைய இணக்க அரசியல் சூழலையும்-நல்லிணக்க அரசாங்கத்தின் வளங்களையும் தாராளமாகப் பயன்படுத்தி அவரால் தென்னிலங்கை மக்களின் இதயங்களை வென்றெடுக்க முடியும்.

சனநாயக ஆட்சி மலர்ந்த பின்னும் தென்னிலங்கையில் காவல் நிலையங்களில் மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். மக்கள் உரிமைகளுக்கான ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் வன்முறை கொண்டு அடக்கப்படுகின்றன. உல்லாச விடுதிகளுக்கு முன்னுரிமை வழங்குவதனால் ஊர் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எதிர்கட்சித் தலைவர் இவைகள் பற்றிக் குரல் எழுப்புவதன் மூலம் அம் மக்களின் கவனத்தை ஈர்க்கலாம்.

ஆனால் இவர்கள் அவர்களுக்காக பேசவும் மாட்டார்கள். அவர்களுடனான உரையாடலை நடாத்தவும் மாட்டார்கள். பேசினால்-நடாத்தினால் நாட்டில் ‘இணைவாக்கம்’ வந்துவிடும். இவர்களது பிழைப்புக் கெட்டுவிடும். இவர்களது வெளிநாட்டு எசமானர்களின் வருமானங்கள் படுத்துவிடும்.

அன்று இணக்க அரசியலை கையாண்டவர்களை துரோகி என்று கூறியவர்கள் இன்று மட்டுமல்ல முன்னரும் பல தடவைகள் சிங்களப் பேரினவாத அரசாங்கங்களுடன் இணங்கிப் போன வரலாறு உண்டு. துரோகிகள் எனப் பிரகடனம் செய்து தண்டனை வழங்கியவர்கள் கூட அதே பேரினவாத அரசுடன் இணங்கிப் போனதும் இலங்கையின் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.

இது “நாங்கள் இணங்கினால் அது தந்திரோபாயம். அடுத்தவர் செய்தால் அது துரோகம்” என்ற எங்களது பாரம்பரிய-பரம்பரை-பண்பாட்டு சிந்தனையின் பிரதிபலிப்பாகும்.

நமது கண் கூடாக நாம் நாட்டில் நடப்பவற்றையெல்லாம் பார்த்து-கேட்டு- உணர்ந்து-அனுபவித்து அழிவுகளுக்கு ஆளாகிய பின்னரும் கூட தொடர்ந்தும் இன்றைய அரசியலைப் பின்பற்றுவோமேயானால்,

கண்ணிருந்தும் குருடாக,

காதிருந்தும் செவிடாக,

அறிவிருந்தும் மூடமாக ஆகிவிட்ட ஒரு சமூகம் நாம் என்பது உறுதிப்படுத்தப்படும்.