Tue12062022

Last updateSun, 19 Apr 2020 8am

பழிவாங்கும் அரசியலால் பறிகொடுக்கப்படும் உரிமைகள்

1948ல் ஆங்கிலேயர் இலங்கையின் மீதான தமது நேரடி ஆட்சி அதிகாரங்களை "சுதந்திரம்" என்கிற பெயரில் மாற்றியமைத்த போது இலங்கையின் "அரச கட்டமைப்பை" (State structure) கட்டுப்படுத்தி செயற்படுத்திக் கொண்டிருந்தவர்கள் யாழ்ப்பாணத்து மேட்டுக்குடித் தமிழர்களே. முப்படைத் தளபதிகள் - அரச செயலாளர்கள் - திணைக்கள அதிகாரிகள் - புகையிரத நிலைய அதிகாரிகள் - நில அளவையாளர்கள் - பொலிஸ் உயர் அதிகாரிகள் ஆகியோரில் 75 விகிதாசாரத்தினர் யாழ்ப்பாண மேட்டுக்குடித் தமிழர்களே.

ஆங்கிலேயர் சிறுபான்மை தமிழ் (மேட்டுக்குடி) மக்களைப் (ஆங்கிலம்) படிப்பித்துப் பதவியில் வைத்து பெரும்பான்மை சிங்கள மக்களைக் கட்டி ஆண்டு வந்தனர். சுதந்திரத்திற்குப் பின்னர் நிலைமைகள் மாறும் என்பதனை முன் கூட்டியே உணர்ந்து கொண்ட அன்றைய யாழ்ப்பாணத் தமிழ்த் தமிழர் தலைமைகள் 1944ல் உருவாக்கியதுதான் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் ஆகும். 1949ல் அது உடைந்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உருவாக்கப்பட்டதற்கு மலையக மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டமையே காரணம் என்று காட்டப்பட்டிருந்தது. ஆனால் அன்று முதல் இன்று வரை தமிழர் அரசியலில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் யாவும் இந்த மேட்டுக்குத் தமிழர்களுக்கிடையிலான போட்டியும் பொறாமையுமே அன்றைய உடைவுக்கான உண்மையான காரணங்கள் என்பதனை உணர்த்தி நிற்கின்றன.

அதே வேளை தமிழ்-தமிழர் தாயகம் என முன்னிறுத்திய கோஷங்கள் யாவும் தங்களது அதிகாரங்களைப் பறித்தெடுக்கத் தொடங்கிய சிங்கள ஆட்சியாளர்களைப் பழிவாங்கும் ஒரு அரசியல் நடைமுறையாகவே முன் வைக்கப்பட்டதே ஒழிய தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைகளுக்காக அல்ல என்பதை கடந்த கால வரலாறு மிகத் துல்லியமாக எமக்கு உணர்த்தி நிற்கிறது.

1947 முதல் 1960 வரை யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் தெரிவு செய்யப்பட்டு வந்தார். அவரைத் தமிழர்களின் எதிரியாகவே தமிழரசுக் கட்சியினர் மக்களுக்கு அடையாளப்படுத்தி வந்தனர். 1960ல் திரு அல்பிரட் துரையப்பா சுயேட்சையாகப் போட்டியிட்டு யாழ்ப்பாணத் தொகுதிக்குத் தெரிவானார். அவரையும் தமிழினத் துரோகியாக அடையாளப்படுத்தத் தொடங்கினார்கள் தமிழரசுக் கட்சியினர். 1965ல் மீண்டும் பொன்னம்பலம் தெரிவானார்.

1947 முதல் 1965 வரையான (4 தடவைகள்) தேர்தல்களில் தொடர்ந்து தோல்விகளைக் கண்ட தமிழரசுக் கட்சி "சாதி வாய்ப்பாட்டைப்" பயன்படுத்தி டி.எக்ஸ்.மாட்டீனை வேட்பாளராகப் போட்டு 1970 பொதுத் தேர்தலில் யாழ்ப்பாணத் தொகுதியைக் கைப்பற்றிக் கொண்டது. ஆனால் அதே ஆண்டில் யாழ் மாநகர சபைத் தேர்தலில் அல்பிரட் துரையப்பா முதல்வராகத் தெரிவானது அந்த வெற்றியைக் கொண்டாட முடியாதபடி ஆக்கிவிட்டது.

அத்துடன் முதல்வராக இருந்து அவர் அடிப்படை மக்கள் நலன் கருதி செயற்படுத்திய திட்டங்கள் யாழ் மேலாதிக்கவாத சக்திகளின் கோபத்தை மேலும் கிளப்பி விட்டது. அந்தக் கோபம் தங்களது பாராளுமன்ற வெற்றியை மழுங்கடித்த துரையப்பாவைப் பழிக்குப்பழி வாங்கும் எல்லை வரை இட்டுச் சென்றதனால் ஏற்கனவே துரோகியாக அடையாளம் காட்டப்பட்டிருந்த துரையப்பா அழிக்கப்பட வேண்டியவர் என அடையாளப்படுத்தப்பட்டார்.

1970ல் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி பீடம் ஏறிய சிங்கள பேரினவாத அரசாங்கம் மேற்கொண்டிருந்த நடவடிக்கைகள் தெற்கில் ஒரு இளைஞர் கிளர்ச்சிக்கு வித்திட்டது. அதன் பாதிப்பு வடக்கில் மெது மெதுவாக இளைஞர்களின் வன்முறையாக வளர ஆரம்பித்தது.

கொள்ளைகள் - குண்டு வைப்புக்கள் - கொலை முயற்சிகள் - கொலைகள் என வன் முறைகள் விரிவடையத் தொடங்கின. அரசியல் அணுகுமுறையின் முரண்பாடுகள் பழிவாங்கல் கொலைகளால் தீர்க்கப்பட்டன. அதற்கு தமிழர்கள் எதுவிதமான கண்டனங்களையும் தெரிவிக்கவில்லை. "பழிக்குப்பழி" மனப்பாங்கினால் கொலை என்ற செயலை தேவையான - சாதாரண ஒரு நடவடிக்கையாக கருதி ஏற்றுக் கொண்டனர். அடக்குமுறை அரசாங்கத்தின் மீதான தமிழர்களின் பழிவாங்கும் மனப்போக்கு இந்த அரசியல் கொலைகளை நியாயப்படுத்திக் கொண்டது.

ஆயுதம் தூக்கியவர்களின் தலைமறைவு வாழ்க்கைக்கு மறைமுகமான உதவி ஒத்தாசைகள் செய்த யாழ்பாணத் தமிழ்த் தலைமைகள் அதனைக் கண்டும் காணமலும் இருந்து கொண்டு தமிழீழம் அடைவதற்கான அணிவகுப்புகளில் இறங்கினார்கள். 1972ல் "தமிழர் ஐக்கிய கூட்டணி" கட்டப்பட்டு பின்னர் 1976ல் "தமிழர் ஜக்கிய விடுதலைக் கூட்டணி" ஆனது.

"தமிழீழக் கோரிக்கையை" விரும்பிய தமிழர்கள் கொள்ளை-கொலைகளை எதுவித சலனமுமின்றி அங்கீகரிக்கத் தொடங்கினார்கள். அரசியல் தலைமைகள் அவற்றை வைத்து சிங்கள பேரினலாத அரசாங்கங்களுடன் பேரம் பேசிக் கொண்டிருந்தன. அந்தப் பேரம் பேசுதலுக்குப் பின்னால் "சிங்களவர்களுக்கு ஒரு பாடம் படிப்பிப்போம்" என்ற மனோநிலை அவர்களிடம் இருந்த அளவுக்கு தமிழ் மக்களின் எதிர்கால நெருக்கடிகள் அவலங்கள் பற்றிய அக்கறையும் அவாவுதலும் அவர்களிடம் இருக்கவில்லை.

காலப் போக்கில் தமிழர் அரசியல் தளத்தை ஆயுத அமைப்புக்கள் ஆக்கிரமித்துக் கொண்டன.. கொள்ளைகள், கொலைகள், தாக்குதல்கள், உரிமை கோரல் அனைத்திலும் போட்டி. அதனால் மோதல்கள். அதனைத் தொடர்ந்து பழிக்குப்பழி கொலைகள். ஆயுத அமைப்புக்களுக்கு இடையில் ஏற்பட்ட அனைத்து மோதல்கள் - கொலைகள் எவற்றுக்குமே கொள்கை முரண்பாடு காரணமாக இருக்கவில்லை. "பழிக்குப்பழி" என்பதே அடிப்படையாக அமைந்திருந்தது.

தமிழர்களிடையே நீக்கமற நிறைந்திருந்த பலவிதமான பாகுபாடுகளால் அரசியல் சிந்தனைகளின்றி வளர்ந்து வந்த ஆயுத நடவடிக்கைகள் மிதவாத தமிழ்த் தலைமைகளை ஓரம் கட்ட வைத்துவிட்டு மக்களின் மேலான அதிகாரத்தை நிலைநாட்டத் தொடங்கின. மக்கள் படிப்படியாக மௌனமாக்கப்பட்டார்கள். வசதி வாய்ப்பானவர்கள் நாட்டை விட்டு ஓட ஏனையவர்கள் பிறந்த நாட்டிலேயே அகதிகளாக ஊர் விட்டு ஊர் ஓடத் தொடங்கினார்கள்.

"பழிவாங்கும்" தாக்குதல்கள் மக்களுக்கான விடுதலைப் போராட்டம் என்ற பெயரின் கீழ் வளர்ச்சி பெற்றன. தமிழர்களுக்குள் இடம்பெற்ற கொலைகள் நியாயப்படுத்தப்பட்டன. சிங்கள மக்கள் மீதான தாக்குல்கள் பாராட்டுப் பெற்றன. விடுதலைப் போராட்டம் "இன யுத்தமாக" ஆக்கப்பட்டது. தமிழ் மக்களின் அழிவையொட்டி ஏற்பட்ட கவலையை சிங்கள மக்களின் அழிவுத் தொகைக் கணக்கு விபரத்தினால் கிடைத்த மகிழ்ச்சி மூடி மறைத்தது.

இரு தடவைகள் யுத்த நிறுத்தம் வந்தது. சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்றது. போராளிகள் தங்கள் அடையாள இலச்சனையுடன் நாடு முழுவதும் நடமாடினார்கள். உலகம் சுற்றி வந்தார்கள். ஆனால் நாட்டில் "பழிவாங்கல்" கொலைகளும் - குண்டுத் தாக்குதல்களும் தொடர்ந்த வண்ணமே இருந்தது. பெரும்பான்மையான தமிழர்கள் அவற்றைப் பாராட்டியதுடன் தங்களது பரிபூரண ஆதரவையும் வழங்கினர். உயிர் இழப்புக்கள் - அங்கங்கள் துண்டிக்கப்பட்டு துடிப்போர் - குடும்பங்களின் பரிதவிப்பு - மக்களின் சோகங்கள் எவற்றையுமே கணக்கில் எடுப்தற்கு எமது "பழிக்குப்பழி" மனோபாவம் அனுமதிக்கவில்லை.

இறுதியில் யுத்தம் முடிவுற்றபோது தமிழ்ப் பேசும் மக்கள் முன்பு தாங்கள் வைத்து இருந்த யாவற்றையும் இழந்து மிருகங்களையும் விட கேவலமாக நிறுத்தப்பட்டிருந்தனர். அப்படியிருந்தும் இன்னும் எமது அரசியல் வழிகாட்டிகளின் பாகுபாட்டுப் பார்வைகளும் பழிவாங்கல் கோஷங்களும் பழிவாங்கும் நடவடிக்கைகளும் நிறுத்தப்படவேயில்லை. தொடரவே செய்கின்றன.

அன்று தமிழர்களால் பாராட்டிப் போற்றிக் கொண்டாடப்பட்ட போராளிகள் இன்று தமிழர்களால் தமிழ்த் தலைமைகளால் பழிவாங்கப்படுகின்றனர். முன்னைய அரசாங்கத்தின் அனுசரணையுடன் பதவிகளில் அமர்த்தப்பட்ட தமிழர்கள் இன்று பாராளுமன்ற - மாகாண அதிகாரத்தில் உள்ள அரசியல் தலைமைகளால் பழிவாங்கப்படுகின்றனர். தகுதிகளும் நியமனங்களும் இடமாற்றல்களும் பழிவாங்கும் பாணியிலேயே இடம்பெற்று வருகின்றன. திட்டவரைவுகளைக் காட்டி அதற்காக ஒதுக்கப்பட்டுப் பெற்றுக் கொள்ளப்படும் நிதிகள்; கட்சி, சாதி, ஊர், சமயம் என்ற அளவுகோலால் சரிபார்க்கப்பட்டு முன்னைய எதிரணிக் கட்சியின் செயற்பாடுகளைக் கவனத்தில் கொண்ட பின்னரே அபிவிருத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பாதிக்கப்பட்ட மக்களிடையே பகைமையை விதைக்கும் வகையில் பதவி நியமனங்கள் நிரந்தரமாக்கப்படுகின்றன. ( உ+ம் தெலிப்பளை வைத்தியசாலைத் தொழிலாளர் போராட்டம்.)

தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டு அதிகாரங்களைப் பெற்றுக் கொண்ட மக்கள் பிரதிநிதிகளும் அவர்களைப் பெரும்பான்மையாக கொண்டு இயங்கும் சபைகளும் மக்களைப் பிளவுபடுத்தி அவர்களின் பழைய வரலாறுகளை ஆராய்ந்து பார்த்து பழிவாங்கும் வகையில் செயற்படுவதன் ஊடாக ஒரு பகுதி மக்களின் இருப்பிடம் - தொழில் - வாழ்வாதாரம் - கல்வி - சமூக அபிவிருத்தி ஆகிய அடிப்படை உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்படுகிறது. சுன்னாகம் குடிநீர் பிரச்சனை இன்றும் தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதன் பின்னணியில் இந்தப் பழிவாங்கல் மனப்பாங்கே காரணமாக அமைந்துள்ளது.

இலங்கையின் சிங்கள பேரினவாத அரசியல் அமைப்பை நம்பி அதனை அங்கீகரித்து தேர்தல்களில் பங்குபற்றிப் பதவிகளை வென்றெடுத்து அரசாங்க சம்பளம் - சலுகைகைள் பெற்றுக் கொள்பவர்கள் அந்த அரசாங்கத்தை ஏற்படுத்திய சிங்கள மக்களை அணுகி தமிழர்களின் நியாயங்களை விளங்கப்படுத்த விடாது தடுப்பதும் அதே பழிவாங்கல் சிந்தனைதான். அணுகக்கூடிய நல்வழிகள் பல நாட்டுக்குள்ளேயே இருக்கையில் அதனை விட்டு வெளிநாட்டு அடிமைத் தளைகளை மாட்டிக் கொள்ள தயாராவதும் எங்களது "அடிமைத்தன-பழிவாங்கல்" (எனது மூக்கு போனாலும் எதிரிக்குச் சகுனப் பிழையாகட்டும் என்ற) மனப்பான்மையே.

தமிழர்கள் தங்கள் தவறுகளை ஏற்க மறுத்து அவற்றை மறைப்பதற்கு கண்டுபிடித்த மந்திரங்களே எட்டப்பன்-காக்கைவன்னியன் - துரோகி என்ற பதங்களாகும். சாதி-சமய கட்டுமானங்களைப் பாதுகாப்பதற்காக நீதி நியாயத்தைக் கொலை செய்பவர்கள் நாம். பழிவாங்கும் மனப்பான்மையை கைவிட்டு அடுத்தவரை மனிதனாகப் பார்க்கும் மனப்பாங்கு ஏற்படாத வரை - "பழிக்குபழி" அரசியல் நீங்கி மக்களின் உரிமைகளுக்கான அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாத வரை, தமிழர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுப்பது ஒரு பகற் கனவாகும்.