Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

மாணவர்களின் கொலைகளிற்குப் பின் மறைந்திருக்கும் நயவஞ்சகர்கள்

நடராசா கஜன், பவுண்ராஜ் சுலக்சன் என்னும் இரு யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர்கள் இலங்கையின் காவல்துறையினரால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த மாணவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள்? மிக வேகமாக சென்ற அவர்கள் இருவரையும் பொலிசார் இடை மறித்த போது தமது வாகனத்தை நிறுத்தாமல் சென்றதற்காகத் தான் அவர்கள் மீது பொலிசார் சுட்டார்களா? இலங்கையில் பெரும்பாலான சாரதிகள் மிக வேகமாகவும், சாலை விதிகளை மதிக்காமலும் தான் வாகனத்தைச் செலுத்துகிறார்கள். அவர்கள் எவரும் சுடப்பட்டதில்லை என்னும் போது இந்த இரு மாணவர்களும் ஏன் சுடப்பட்டார்கள்?

அப்படிச் சுட்டாலும் காயம் விளைவித்து வண்டியை நிறுத்தக் கூடிய அளவிற்கு பலத்தை பிரயோகிக்காமல் அவர்கள் இருவரும் மரணமடையும் அளவிற்கு ஏன் யாழ்ப்பாணப் பொலிசார் சுட்டார்கள்? இவர்கள் இருவரும் சமுக விரோதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் அதனால் தான் சுட்டோம் என்று இலங்கை அரசும், பொலிசாரும் சொல்லப் போகிறார்களா? அப்படியானால் ஏன் இது வரை எந்த ஆதாரங்களையும் வெளியிடவில்லை? யாழ்ப்பாணத்திலும், அகில இலங்கையிலும் கொள்ளைக் கோஸ்டிகள், வன்முறைக் குழுக்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள் என்று எத்தனையோ சமுகவிரோதிகள் பகிரங்கமாகத் திரிகிறார்கள். யாழ்ப்பாணத்தில் "ஆவா குழு" என்று ஒரு கூட்டம் களவு, வன்முறை, வாள்வெட்டு என்று திரிகிறதே? ஏன் பொலிசார் அவர்களை பின் தொடர்வதில்லை; ஏன் அவர்களை இடை மறிப்பதில்லை?

இந்தக் கேள்விகளிற்கு எல்லாம் ஒரேயொரு மறுமொழி தான் இருக்கிறது. இந்த மாணவர்களின் படுகொலைகள் இலங்கை அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்டவை. இலங்கை அரசிற்கு தமிழ்ப்பகுதிகளில் குடியியல் சட்டங்கள் தான் நடைமுறையில் இருக்கின்றன என்று காட்ட வேண்டிய தேவை இருக்கிறது. இலங்கையின் பிற பகுதிகளைப் போல தமிழ்ப் பிரதேசங்களிலும் குடியியல் சட்டங்களை கண்காணிக்க நீதிமன்றமும், இலங்கையின் காவல்துறையும் தான் இருக்கின்றன என்பதைக் காட்ட வேண்டிய தேவைப்பாடு இருக்கிறது. போர் முடிந்து இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் இலங்கை இராணுவத்தினர் தமிழ்ப்பகுதிகளில் இலட்சக்கணக்கில் இருப்பது ஏன் என்ற கேள்விகளிற்கு விடையளிக்க வேண்டிய தேவை இருக்கிறது.

இலங்கை அரசின் இந்த தேவைகளிற்காக நடத்தப்பட்டவை தான் இந்த இரு மாணவர்களின் படுகொலைகள். போக்குவரத்து விதிகளை மீறி விரைவாக வாகனத்தை செலுத்தியவர்களை உலகின் எந்த நாட்டிலும் உள்ளது போல இலங்கையின் தமிழ்ப்பகுதிகளிலும் காவல்துறை தான் கண்காணிக்கிறது. நடவடிகை எடுக்கிறது. இலங்கையில், குறிப்பாக தமிழ்ப்பகுதிகளில் இராணுவம், கடற்படை, விமானப்படை என்னும் முப்படையினரும் நாட்டின் பாதுகாப்பிற்காக முகாம்களில் மட்டுமே இருக்கிறார்கள். அவர்கள் பொதுமக்களின் வாழ்க்கைக்குள் தலையிடுவதில்லை என்பதைக் காட்டவே இந்தக் கொலைகள் நடந்தன.

இலங்கையில் குடியியல் விவகாரங்களில் இராணுவம் தலையிடுவதில்லை. இலங்கையின் காவல்துறை தான் நடவடிக்கை எடுக்கிறது என்பதை உலகத்திற்கு காட்ட கொலை செய்து தான் நிரூபிக்க வேண்டுமா என்று சிலர் கேட்கலாம். உலகம் முழுவதும் உள்ள அயோக்கிய அரசியல்வாதிகள் இதைத் தான் செய்து வருகிறார்கள். 27.02.1933 அன்று ஜேர்மன் தேசபக்தர்கள் என்று தம்மைச் சொல்லிக் கொண்ட நாசி வெறியர்கள் தமது சொந்த நாட்டுப் பாராளுமன்றத்தையே எரித்து விட்டு கொம்யுனிஸ்ட்டுக்களின் மேல் பழி சுமத்தினர். இதற்கு சரியாக நான்கு வாரங்களிற்கு முன்பு தான் (30.01.1933 ) அடோல்ப் கிட்லர் ஜெர்மனியின் அதிபராகப் பதவியேற்று இருந்தான். இத்தீயணைப்பு சம்பவத்தை சாட்டாக வைத்து அடோல்ப் கிட்லர் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து சகல குடியியல் உரிமைகளையும் நிறுத்தி வைத்து தனது கொலையாட்சியை தொடங்கினான். (Reichstag's fire).

உலக மகா அயோக்கியர்களான அமெரிக்கர்கள் தமக்கு எதிரான நாடுகளில் தலையிடுவதற்காக தமது அடிமைகளைக் கொண்டு நடத்திய கொடூர நாடகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதை அனைவரும் அறிவர். வியட்நாமில் இருந்து இன்றைய எரியும் சாட்சியமான சிரியா வரை அமெரிக்கா என்னும் இரத்தம் குடிக்கும் பேய்களின் அநியாயங்கள் தொடர்கின்றன. இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த கொலைகாரன் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா 1983 தமிழ் மக்களின் மீதான இனக்கலவரத்தை தன் குண்டர்களை கொண்டு நடத்திவிட்டு இலங்கையின் இடதுசாரிக் கட்சிகளின் மீது பழி போட்டான்.

"களவுகள், வன்முறைகள், குழு மோதல்கள்கள் என்பன தமிழ்ப்பகுதிகளில் மிக மோசமாக அதிகரித்துச் செல்கின்றன. சட்டம், ஒழுங்கு, சமுக இயல்பு என்பன பாதிக்கப்படுகின்றன" என்று சமுதாயத்தின் மேல் அக்கறை கொண்டவர்களைப் போல நாடகமாடி இலங்கை அரசின் இந்த நயவஞ்சகத் திட்டங்களிற்கான விதைகள் விதைக்கப்பட்டன. போரினாலும் அதனால் இயல்பான சமுதாய வாழ்க்கை அழிந்து வறுமை சூழ்ந்ததினாலும் சிலர் களவுகள், வன்முறைகளில் இறங்கினர். இவர்களைப் போன்றவர்களை இலங்கை அரசின் புலனாய்வாளர்களும், இராணுவத்தினரும் பயன்படுத்தி வருகின்றனர்.

"ஆவா குழு" என்பன போன்ற சமுக விரோத வன்முறைக் குழுக்கள் இலங்கை பொலிசாரினதும், இராணுவத்தினதும் உதவிகள் இன்றி இயங்க முடியாது என்பதை எவராலும் உணர்ந்து கொள்ள முடியும். மிகப் பெரும் அமைப்பாக இருந்த புலிகளை அழித்து விட்டோம் என்று சொல்லிக் கொள்ளும் இலங்கை அரசிற்கு நாலு வாளும், நாலைந்து பேரும் உள்ள "ஆவா குழுவை" பிடிக்க முடியாதாம், நாங்கள் நம்ப வேண்டுமாம். இந்த வன்முறையாளர்களிடம் இருந்து, சட்டத்தை மீறுபவர்களிடம் இருந்து மக்களை காப்பாற்ற இலங்கைப் பொலிசார் கடமையில் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவதற்காக இரு இளம் உயிர்களை பலி எடுத்திருக்கிறார்கள்.

ஏன் ஒரு வன்முறையாளனை கொலை செய்து தமது கடமை உணர்வைக் காட்டியிருக்கக் கூடாது என்று கேட்கலாம்? ஒரு வன்முறையாளனை கொலை செய்திருந்தால் அதை இன்றுள்ள சமுக நிலைமைகளில் பொதுமக்கள் கண்டிக்கப் போவதில்லை. ஏன் வேகமாக வாகனத்தைச் செலுத்தும் ஒரு தமிழரை கொல்லவில்லை என்றால் முள்ளிவாய்க்காலில் அத்தனை தமிழ்மக்களைக் கொன்ற போது பயத்தில் அசைவின்றி இருந்த சமுதாயத்தில் (இதைக் குற்றம் சாட்டும் நோக்கில் சொல்லவில்லை) ஒரு பொது மனிதரது மரணம் பெரியளவில் சலனங்கள் எதையும் ஏற்படுத்தப் போவதில்லை.

ஆனால் பல்கலைக் கழக மாணவர்கள் தமது சக மாணவர்களிற்காக வீதியில் இறங்குவார்கள் என்பது அவர்களிற்கு தெரியும். அத்துடன் சுலக்சன், கஜன் என்னும் இரு மாணவர்களும் அரசியல் செயற்பாட்டாளர்கள். சுலக்சன் தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் ஆதரவாளர். அவர்களைக் கொலை செய்தால் போராட்டங்கள் எழும். இப்பிரச்சனை சர்வதேச அளவில் வெளிப்படுத்தப்படும் என்பதற்காகவே இந்த இரு உயிர்களும் பறிக்கப்பட்டன. இக்கொலைகள் மூலம் அவர்கள் திட்டமிட்டது போலவே தமிழ்ப்பகுதிகளில் பொலிசார் தான் கடமையில் இருக்கிறார்கள்; இராணுவத்தினர் முகாம்களில் மட்டுமே இருக்கிறார்கள் என்பதை உலகிற்கு காட்டியிருக்கிறார்கள். சட்டத்தை மீறியவர்களை சுட்ட பொலிசார் தவறுதலாக உயிர் போகும் அளவிற்கு சுட்டிருக்கிறார்கள் எனினும் அவர்களின் தவறிற்காக அவர்களை கைது செய்து விசாரணை செய்கிறோம் என்று "நீதி தவறா இலங்கை அரசு" உலகிற்கு சொல்கிறது.

இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும், சட்டம் - ஒழுங்கிற்கு பொறுப்பான அமைச்சர் சேகல ரட்ணாயக்காவும் இக்கொலைகள் நடக்கும் போது இலங்கையில் இருக்கவில்லை; அவர்கள் இருவரும் ஐரோப்பிய ஒன்றியத்தினரை சந்திப்பதற்காக பெல்ஜியம் சென்றிருந்தார்கள் என்பதும் தற்செயலாகத் தானா? மாணவர்கள் இருவரும் இருபதாம் திகதி சுடப்பட்டார்கள். பிரதமரும், சட்டம்- ஒழுங்கிற்கு பொறுப்பான அமைச்சரும் இருபத்தொராம் திகதி இலங்கைக்கு திரும்புகிறார்கள் என்பதும் தற்செயலானது தானா?

இந்த இரு மாணவர்களின் கொலைக்காக இலங்கையின் அனைத்துப் பல்கலைக் கழக மாணவர்களும் இணைந்து போராடினார்கள். இனி வரும் காலங்களில் இது தொடர வேண்டும். இலங்கையின் பயங்கரவாத அரசுகளை இலங்கையின் ஒடுக்கப்படும் மக்கள் இணைந்து எதிர்ப்பதன் மூலம் கஜன், சுலக்சன் மற்றும் அவர்கள் போல் அநியாயமாகக் கொல்லப்பட்ட ஆயிரம், ஆயிரம் மக்களிற்கு நம் அஞ்சலிகளை செலுத்துவோம்.