Wed09222021

Last updateSun, 19 Apr 2020 8am

வடபகுதியில் 1966 களில் இருந்து 1970 வரை மார்க்ஸிஸ்ட் லெனிஸ்ட்டுக்களின் போராட்டங்களும் சாதனைகளும்!

சென்ற இதழ் தொடர்ச்சி...

புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் தோற்றத்தை அடுத்து, 1966ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ம் திகதி சாதி அமைப்பு தகரட்டும் சமத்துவ நீதி ஒங்கட்டும் என்ற கோஷத்துடன் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இருந்து ஆரம்பமாகிய சட்டவிரோத ஊர்வலம், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தை தாண்டும் பொழுது, வடபகுதி பொலிஸ் நிலையங்களில் இருந்து திரட்டப்பட்ட பொலிஸார் ஊர்வலத்தினர் மீதாக பலமான தாக்குதல் நடாத்தினர்.

இதற்கும் மேலதிகமாக கலகம் அடக்கும் பொலிஸார் பெட்டன்பொல்லு மற்றும் கண்ணீர்புகைக்குண்டு தாக்குதல் மேற்கொண்டனர். பதிலுக்கு ஊர்வலத்தினர் கற்களாலும், கொடிதடிகளாலும் பொலிஸாரை திருப்பித் தாக்கினர். பொலிஸார் பிரம்பு கேடயங்களால் ஊர்வலத்தினரை சிதறடித்தனர்.சிதறடிக்கப்பட்ட ஊர்வலத்தினர் மீண்டும் ஒன்றிணைந்து மௌன ஊர்வலமாக யாழ் கோட்டை மைதானத்தை அடைந்தனர்.

ஊர்வலத்திற்கு தலைமை தாங்கிய தோழர்கள் தாக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டனர். யாழ் கோட்டை மைதானத்தை அடைந்த ஊர்வலத்தினர் அங்கு பொதுக்கூட்டத்தை நடத்தினர். அங்கு (புரட்சிகர) கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுசெயலாளர் தோழர் நா.சண்முகதாஸன் உரையாற்றுகையில் இனிவரும் நாட்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒவ்வொரு சொட்டுக்கண்ணீரும் ஒவ்வொரு வெடிகுண்டாக மாறும் என்றார். அதேபோல் 1966 ஒக்ரோபரில் இருந்து 1970ஆம் ஆண்டு வரை வடபகுதி எங்கும் வெடிச்சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருந்தது.

வடபகுதியில் தாழ்த்தப்பட்ட மக்கள் உயர்சாதியினருடன் ஒரேவாங்கில் அமர்ந்து ஒரேமேசையில் சமத்துவமாக உணவு அருந்தவும், உயர்சாதியினருக்கு தேனீர் வழங்கும் டம்ளரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தேனீர் வழங்கும் உரிமையையும், சகல தேனீர்க்கடைகள், போஷனசாலைகள், ஹோட்டல்கள் அனைத்திலும் வாழை இலைகள் மற்றும் உயர்சாதியினருக்கென வைத்திருக்கும் தட்டுகளிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கும்படியும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு என வைத்திருந்த கறள் பிடித்த பேணிகள், தட்டுகள் அனைத்தும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் எனக்கோரி வடக்கிலுள்ள சகல பொது போஷனசாலைகள், தேனீர்க்கடைகள், ஹோட்டல்களில் போராட்டங்களை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆரம்பித்தனர். சில தேனீர்க்கடைகள், ஹோட்டல்கள், போஷனசாலைகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமத்துவமாக திறந்து விடப்பட்டது. அதேவேளை பல தேனீர்க்கடைகள், ஹோட்டல்கள், போஷனசாலைகள் சமத்துவமாக திறந்துவிடப்படாததுடன், தேனீர்க்கடை பிரவேசம் செய்தவர்களை துரத்தியடித்தனர்.

1967இல் இவ்வாறான தாக்குதல் சங்கானையில் வலுவடைந்தது. இருபகுதியினரும் மிக மோசமாக மோதிக்கொண்டனர். இம்மோதல் சங்கானை கிராமங்களுக்கும் பரவியது. சங்கானை சந்தை, புளியடி, நிச்சாமம், சண்டிலிப்பாய், சுளிபுரம், போன்ற ஊர்களுக்கும் பரவியது. இதனால் சங்கானையும் அதனை அண்டிய பிரதேசங்களும் யுத்த பூமியாக மாறியது.

1967 ஒக்ரோபர் 21ஆம் திகதி இப்போராட்டத்தை விரிவுபடுத்த கட்சியின் தலைமையில் வெகுஐன இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அது தான் தீண்டாமை ஒழிப்பு வெகுஐன இயக்கம். இதன் தலைமையில் தேனீர்க்கடை திறப்புப் போராட்டமும், புகழ் பெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், பன்றிதலைச்சி அம்மன் கோவில் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சியும், தாழ்த்தப்பட்ட தமிழர்களும், முற்போக்காளர்களும் பெருமளவில் பங்கேற்றனர். இப்போராட்டம் வடமராட்சி, தென்மராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது நெல்லியடி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு, அச்சுவேலி, கோப்பாய், இருபாலை, அதேபோல் சாவகச்சேரி, கொடிகாமம், பளை போன்ற நகர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. பல இடங்களில் சமாதானமாக தேனீர்க்கடைகள் சமத்துவமாக திறந்துவிடப்பட்டது.

நெல்லியடி, அச்சுவேலி, சங்கானை ஆகிய இடங்களில் பிற்போக்குவாதிகள் மறுதலித்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் மோசமாhன தாக்குதல்கள் சங்கானையிலுள்ள நிச்சாமம் என்ற கிராமத்தை சுற்றி நடந்தது. இதுபற்றி யூ.என்.பி ஆட்சியில் பாராளுமன்றத்திலும் விவாதங்கள் நடந்தன முன்னாள் கம்பஹா எம்.பி அமரர் எஸ்.டி.பண்டாரநாயக்கா தமிழரசுக் கட்சி எம்.பி.மார்களிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முன்னாள் வட்டுக்கோட்டை எம்.பி. அமரர் அ.அமிர்தலிங்கம் சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் சங்கானையில் ஒரு சங்காயை (சீனநகர்) உருவாக்க முயற்சிக்கிறார்கள் அதை அரசாங்கம் தடுத்து நிறுத்தவேண்டும் எனக்கூறி தமிழரசுக் கட்சியின் பிற்போக்குத்தனத்தையும், சாதி வெறியர்களுக்கான ஆதரவையும் வெளிப்படுத்தினார்.

சங்கானை பிரதேச தோட்டங்களிலும், வயல்களிலும் இருபகுதியினராலும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாமல் போனது. தற்போது கண்ணிவெடி போன்று அன்று நாட்டு வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டிருந்தது. இதனால் இருபகுதியினரதும் விவசாயம் தடைப்பட்டது.

பொதுக் கோயில்களில் உயர்சாதி தமிழர்கள் வழிபடும் தூரம்வரை, தாழ்த்தப்பட்ட தமிழர்கள் உட்சென்று கடவுளை வணங்க அனுமதிக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட தமிழர்கள் கோயிலின் வெளியில் நின்றுதான் கடவுளை கும்பிடமுடியும். இந்த அநீதியை எதிர்த்து தீண்டாமை ஒழிப்பு வெகுஐன இயக்கம், பெரிய கோவிலான மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், பன்றித்தலைச்சி அம்மன் கோவில் ஆகிய கோவில்களில் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்கள் உட்சென்று கடவுளை கும்பிட அனுமதிக்கும்படி கோவில் நிர்வாகத்திடம் வேண்டுகோள விடுத்தனர். இந்த வேண்டுகோள் கோவில் நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தினர் ஆலயப்பிரவேசம் செய்தனர். ஆலய நிர்வாகம் கோவிலைப் பூட்டியது உற்சவ காலத்தில் மட்டும் பொலிஸ் பாதுகாப்புடன் கோவிலை திறந்து நடாத்தினார்கள்.

வெகுஐன இயக்கத்தின் தலைமையில் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் மீண்டும் ஆலயப்பிரவேசம் செய்தார்கள். கோவில் நிர்வாகம் பொலிசாரின் உதவியுடன் தடுத்து நிறுத்தியது. இவ்வாறு மூன்று வருடங்கள் நடைபெற்றது. மூன்றாவது வருடம் நடைபெற்ற திருவிழாவின் போது பொலிஸ் தடையையும் மீறி தாழ்த்தப்பட்ட தமிழர்கள் ஆலயப்பிரவேசம் செய்ய முயன்றார்கள். இதனால் பெரும் கலவரம் மூண்டது, பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுப் பிரயோகம் செய்தனர். துப்பாக்கிச் சூடுகளும் நடைபெற்றது,

வெடிகுண்டுகளும் வெடித்தது. பலர் காயப்பட்டார்கள். தீண்டாமை ஒழிப்பு வெகுஐன இயக்கத்தின் பிரதேச தலைவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்கள் மீதாக வழக்கு தொடரப்பட்டது. இவ்வாறான போராட்டங்கள் மூலமாகத்தான் மேற்படி இரண்டு கோவில்களும் சமத்துவமாக திறந்துவிடப்பட்டது.

மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் காலம் சென்ற தமிழரசுக் கட்சி தலைவரின் தொகுதிக்கு உட்பட்ட பிரதேசமாகும். அவர் முயற்சித்திருந்தால் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கு அக்கோவிலை சமரசமாக திறந்துவிட்டிருக்க முடியும். ஆனால் அவர் இவ்விவகாரத்தில் மதில்மேல் பூனையாக இருந்துகொண்டார். அதேபோல்தான் சாவகச்சேரி தொகுதியில்தான் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் இருக்கிறது. அத்தொகுதியின் எம்.பியாக காலம் சென்ற நவரத்தினம் அவர்கள் இருந்தார். அவர் தமிழரசுக் கடசி எம்.பி, பன்றிதலைச்சி அம்மன் கோவில் பிரவேச போராட்டத்தின் போது அப்போராட்டத்தை சமரசமாக தீர்த்துவைப்பதற்குப் பதிலாக மதில்மேல் பூனையாகவே இருந்து கொண்டார்.

இதில் இருந்து விளங்கிக்கொள்ளக்கூடிய உண்மைதான் இவர்களும், இவர்களது கட்சியும், இவர்களது கொள்கைகளும் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பிரபுத்துவ எண்ணம் கொண்ட முதலாளித்துவ சாதிவெறியர்களின் ஆதிக்கத்துக்கான போராட்டமேயன்றி, சாதாரண தமிழ் மக்களினதும், தாழ்த்தப்பட்ட தமிழர்களினதும் விடுதலைக்கான போராட்டம் அல்ல என்பதாகும். இந்தக் கொள்கையின் தொடர்ச்சிதான் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கொள்கையாகும்.

மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், பன்றித்தலைச்சி அம்மன் கோவில் இரண்டும் சமத்துவமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு திறந்துவிடப்பட்டதைத் தொடர்ந்து, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கோவில், வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் கோவில் போன்ற பிரசித்திபெற்ற கோவில்கள் அனைத்தும் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கு சமரசமாக திறந்துவிடப்பட்டன.

மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக சங்கானை பிரதேச மக்கள் குறிப்பாக நிச்சாம கிராம மக்கள் சாதி வெறியர்களினதும், பிற்போக்காளர்களினதும் சுற்றிவளைப்புக்குள் இருந்தும் விட்டுக்கொடுக்காத போராட்டத்தினூடாக தேனீர்க் கடைகளில் சமத்துவ உரிமையை வென்றெடுத்தனர். அத்தோடு சிலர் தோட்ட நிலங்களின் உரிமையையும், குத்தகை உரிமையையும், கூலி உயர்வுகளையும் வென்றெடுத்தனர். சமகாலத்திலேயே அச்சுவேலியிலும், நெல்லியடியிலும் தேனீர்க்கடைப் போராட்டம் வெற்றி பெற்றது. அச்சுவேலிப்பகுதியின் பிரதான சாதிவெறியர்கள் சிலரின் கொட்டங்கள் அடக்கப்பட்டதும், அச்சுவேலி தேனீர்க்கடைகள் சமத்துவமாக திறந்து விடப்பட்டதும் நெல்லியடி தேனீர்கடைகள் அருகில் இருந்த கன்பொல்லை மக்களின் விட்டுக்கொடுக்காத தொடர்ச்சியான போராட்டத்தாலும், சாதிவெறியர்கள் அடக்கப்பட்டதாலும், அப்பகுதியில் இருந்த புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனபலத்தாலும் தேனீர்க்கடைகள் அனைத்தும் சமத்துவமாக திறக்கப்பட்டது.

இப்போராட்டத்தின்போது 12பேர் தியாகிகளானார்கள். எதிரிகள் தரப்பில் 13பேர் கொல்லப்பட்டனர். மொத்தத்தில் 1966 ஒக்ரோபரில் இருந்து 1970 வரை புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களையும் வடபிரதேசத்தின் முற்போக்காளர்களையும் திரட்டி 4ஆண்டுகள் நடாத்திய தொடர்ச்சியான போராட்டங்களினூடாக அனைத்து கோவில்களும், அனைத்து தேனீர்க்கடைகளும் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கு, உயர்சாதி தமிழர்களுக்கு சமமான உரிமையை பெற்றுக்கொடுத்தது. இந்த வெற்றிக்குரிய புகழ் புரட்சிகர இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதன் வாலிபர் சம்மேளனத்துக்கும், தீண்டாமைஒழிப்பு இயக்கத்துக்கும் உரியது.

இப்போராட்டத்திற்கு பலதுறைகளைச் சேர்ந்தவர்களும் தமது பங்களிப்பை செய்துள்ளனர். எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஓவியர்கள், நாடக எழுத்தாளர்கள், நாடகக்கலைஞர்கள் என பலதுறைகளைச் சார்ந்தவர்களும் பங்களிப்புச் செய்துள்ளனர். நிச்சாமம் மக்களைப்பற்றி பாடிய ஒரு கவிஞன், "எச்சாமம் எதிரி நுழைந்தாலும் நிச்சாமக் கண்கள்நெருப்பெறிந்து நீறாக்கும்" என்றான். மற்றொரு கவிஞன் ஆற்றல்மிகு கரத்தில் ஆயுதங்கள் ஏந்துவதே மாற்றத்துக்கான வழி மாற்றுவழி ஏதுமில்லை எனப் பாடினான். இக்காலத்தில் தான் தோழர் டானியல் அவர்களின் பஞ்சமர் நாவல் வெளிவந்தது. மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலைப்பற்றிய புகழ்பெற்ற நாடகமான கந்தன் கருணை என்னும் நாடகம் நாடுபூராவும் மேடையேறி மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது.

இது போன்ற அற்புதங்கள் நாட்டில் நிகழ்ந்தது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சமத்துவ உரிமை பெற்றுக்கொடுப்பதுடன் மட்டும் புரட்சிகர இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தன்னை மட்டுப்படுத்தவில்லை. சர்வதேச விடுதலை இயக்கங்களுக்கும் தனது ஆதரவை வெளிப்படுத்தி வந்தது. வியட்நாம் மக்களின்
விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 1967இல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இலங்கைக்கான ஸ்தானிகரின் யாழ் விஐயத்தை எதிர்த்தது, யாழ். நூலகத்தில் அமெரிக்க நூலகப் பிரிவொன்றை திறக்கவந்த வேளை அவருக்கெதிராக கூழ்முட்டை வீச்சுப் போராட்டத்தை நடத்தியது. அதேபோல் பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரவேலுக்கு எதிராகவும் ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், சுவரொட்டி இயக்கங்கள், துண்டுப்பிரசுரங்கள் பல வெளியிட்டு முற்போக்காளர்களின் ஆதரவை தெரிவித்தது.

1969இல் மே தினம் கொண்டாடுவதை யூ.என்.பி அரசாங்கம் தடைசெய்தது. அந்தத்தடையை ஏற்றுக்கொள்ளாத புரட்சிகர இலங்கை கம்யூனிஸ்ட கட்சி கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் தடையை மீறி ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடாத்தியது. பொலிஸாரும் ஊர்வலக்காரர்களும் மோதலில் ஈடுபட்டனர். பலர் பொலிஸாரின் தாக்குதலில் படுகாயமுற்றனர். ஊர்வலத்துக்கு தலைமை தாங்கிய தோழர்கள் பொலிஸ் காவலுடன் வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றில் ஆஐர் செய்யப்பட்டனர். அக்காலத்தில் தொடர்ச்சியாக பல கூட்டங்களை நடாத்தி பாராளுமன்றத்திற்கு உண்மையான அதிகாரம் இல்லை, உண்மையான அதிகாரம் ஆயுதப்படை, பொலிஸ்படை, விமானப்படை, கடற்படை, நீதிமன்றம், சிறைச்சாலைகள், உயர் அரச அதிகாரிகள் இவர்களிடமே உண்மையான அதிகாரம் இருக்கிறது. இதை அடித்து நொருக்கி பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் புதிய ஐனநாயக அரசு ஒன்றைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற மார்க்ஸிஸ லெனினிஸ வகுப்புகளால் தெளிவுபடுத்தப்பட்டது.

கே.கே.எஸ் சீமெந்துத் தொழிற்சாலை, பரந்தன் கெமிக்கல் தொழிற்சாலை, ஒட்டிசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை, மில்க்வைட் சோப் தொழிற்சாலை, சுருட்டு தொழிற்சாலைகள், ஆர்.வி.ஜி பீடிக் கம்பனி, யாழ் மாநகரசபை தொழிலாளர்கள், சினிமா தியேட்டர் தொழிலாளர்கள் சார்பில் தொழிலாளரை நிரந்தரமாக்குவது, சம்பள உயர்வுக் கோரிக்கைகள், லீவு, வேலைநேரம் சம்மந்தமாகவும் தொழிற்சங்க போராட்டங்களையும், தொழில் வழக்குகளையும் புரட்சிகர கமயூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமே தலைமைத்துவம் வழங்கி தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளை வென்றெடுத்துக் கொடுத்தது.

அதேவேளை தமிழரசுக் கட்சி தொழிற்சாலை நிர்வாகத்துக்காகவும் முதலாளிகளுக்கு சார்பாகவுமே செயற்பட்டது. அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆலாலசுந்தரம் தொழில் நீதிமன்றங்களில் தொழிற்சாலை நிர்வாகத்துக்கு சார்பாகவும், முதலாளிகளுக்கு ஆதரவாகவுமே வாதிட்டார். தொழிலாள வர்க்கத்தின் சார்பாக புரட்சிகர கம்யூனிஸ்ட்கட்சி பொதுச் செயலாளர் தோழர் நா.சண்முகதாசன் ஆஐராகி பல வெற்றிகளை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுத்தார்.

தென்னிலங்கையில் 1966க்கும் 1970க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் குறிப்பிடக்கூடிய பாட்டாளி வர்க்க போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. 1966 இல் டட்லி செல்வா ஒபப்பந்தத்தில் மாவட்ட சபை வழங்கப்பட்டிருந்தது. சிறிலங்கா சுதந்திரக்கட்சியும், கெனமன் கட்சியும், சமசமாஐக் கட்சியும் மசால வடே அப்பிட்ட ஏப்பா என்ற ஊர்வலத்தை நடாத்தி நாட்டில் இனக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார்கள். இந்தப் போராட்டத்தால் டட்லி செல்வா ஒப்பந்தத்தை அரசு கிழித்தெறிந்தது. அந்த ஊர்வலத்தில் ஜே.வி.பி தலைவர் ரோகண விஐயவீரா கலந்து கொண்டார். இது தொடர்பில் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி அவரிடம் வினா எழுப்பியபோது அதுபற்றி எதுவும் சொல்லாமல் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்தும் அதன் வாலிப முன்னணியிலிருந்தும் வெளியேறி ஐனதா விமுக்தி பெரமுன என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். 1971 இல் ஜே.வி.பி ஆயுதக் கிளர்ச்சியை ஆரம்பித்து அதில் தோல்வி கண்டார். அக்கிளர்ச்சி அடக்கப்பட்டபோது, புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களையும் கைது செய்து அக்கட்சியும் அடக்கி சிதைக்கப்பட்டது. சிறிது
காலத்தின்பின் அக்கட்சி வளர்ச்சி அடைந்தது. அரசின் தமிழ்மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும், தமிழ் கட்சிகளின் சிங்கள மக்களுக்கு எதிரான கொள்கைகளை எதிர்த்தும் பொதுக் கூட்டங்களையும் ஊர்வலங்களையும், சுவரொட்டிகளையும், துண்டுப்பிரசுரங்களையும், பத்திரிகை அறிக்கைகளையும் தொடர்ச்சியாக வெளியிட்டு தேசியக் கடமையை கட்சி செய்துவந்தது.

தொடரும்

1. வடக்கில் இடதுசாரி இயக்கம் ஆரம்பம்