Wed10162019

Last updateSat, 29 Jun 2019 5am

இடதுசாரியத்தை ஏன் பலப்படுத்தவேண்டும்?

சங்கானைக் என் வணக்கம்

எச்சாமம் வந்து எதிரி நுழைந்தாலும்

நிச்சாமக் கண்கள் நெருப்பெறிந்து நீறாக்கும்

இது அன்றைய இடதுசாரிகளின் போராட்ட அறைகூவலுக்கு சங்கானை நிச்சாமம் மக்களின் எழுச்சியினைப் போற்றுகின்ற கவிதைக்குரல். சுபத்திரன் கவிதையின் சூடேறிய வரிகள். சங்கானை சங்காயாய் மாறிக் கொண்டிருக்கின்றது என்று அமிர்தலிங்கம் அன்று பாராளுமன்றத்தில் அபாயச் சங்கொலி எழுப்பி ஒப்பாரி வைக்கும் அளவுக்கு போராட்டத் தீயானது சுவாலைகள் விட்டெரிந்து சமூகக் கொடுமைகளைப் பொசுக்கித் தள்ளிய காலம் ஒன்றிருந்தது.

இடதுசாரியம் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பரந்துபட்டரீதியில் மக்களை அணிதிரட்டி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு வழிகாட்டி போராட்டங்களின் மூலம் வென்று நிலைநிறுத்திக் கொண்டவைகளே இன்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அநுபவிக்கும் சமூக உரிமைகள்.

இது பற்றிய வரலாற்று மீள்பார்வை ஒன்று போராட்டம் பத்திரிகையின் இந்த இதழிலேயே வெளிவருகின்றது. வடக்கில் இடதுசாரி இயக்கம் ஆரம்பம் கட்டுரையினை வாசித்து இடதுசாரியம் எவ்வாறு தமிழ் மக்கள் மத்தியில் பலம் வாய்ந்த ஒரு போராட்ட அமைப்பாக வளர்ந்திருந்தது என்பதை நீங்கள் அறியலாம்.

வரலாறு இவ்வாறு இருந்தபோதும் இடதுசாரியத்துக்கும் அதன் நடைமுறைக்கும் பரிச்சயமில்லாத இளைய தலைமுறை ஒன்றைகடந்த முப்பது ஆண்டு காலப் போர் இன்று விட்டுச் சென்றிருக்கின்றது.

தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் அது சரி ஆனால் ஒடுக்கப்படுகின்ற சிங்கள மக்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது யார் அவர்கள் எங்கே இருக்கிறார்கள" என்று
கேட்டுமளவுக்கு சமூகப் பொருளாதார ஒடுக்குமுறைகளைப் பற்றியும், இனம் மத ஒடுக்குமுறை மட்டுமல்ல, அவற்றையும் தாண்டி பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு மக்கள் ஆளாகிறார்கள் என்பதுவும் பேசப்படாத விடயமாகவே போய் விட்டதற்கு அந்த இளம் தலைமுறையினர் காரணமல்ல.

இனவாதம் வலதுசாரி அரசுகளால் தூபமிடப்பட்டு வளர்க்கப்படுகின்ற ஒன்று தான். ஒடுக்கப்படுகின்ற சுரண்டப்படுகின்ற தொழிலாளர் உழைப்பாளர் சக்திகள் கொண்டுள்ள சமூகப் பொருளாதார முரண்பாடுகளையும் ஏனைய முரண்பாடுகளையும் பின்தள்ளிவிட்டு பிரதான முரணாக இனப்பிரச்சனை முன்தள்ளப்பட்டு இருந்தது. இனப்பிரச்சனை நெருக்கடிக்குள் வாழ்ந்த இந்தத் தலைமுறை, வேறு முரண்பாடுகள் மற்றும் ஒடுக்குமுறைகள் பற்றிய கவனத்தை கொண்டிருப்பது எதிர்பார்க்க முடியாததொன்று.

இந்த இன முரண்பாட்டின் மீது போராட்டத்தினைக் கட்டியமைத்தவர்களும் வலதுசாரிகளாகவே இருந்து இடதுசாரிக் கருத்துக்கள் மற்றும் ஏனைய சமூகப் பொருளாதார ஒடுக்குமுறைகளைப் பற்றி பேச மறுத்தவர்களாகவே அல்லது அக்கருத்துகளைக் கொண்டவர்களை துடைத்து அழித்தவர்களாகவே இருந்தனர். 30 வருடங்களாக வலதுசாரி கருத்தமைவுக்குள் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இடதுசாரியம் புதிதான ஒன்றாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. அது அவர்களின் தவறுமல்ல.

இன மத சமூகக் கோடுகளைத் தாண்டி ஒடுக்கப்படுகின்ற சுரண்டப்படுகின்ற தொழிலாளர் உழைப்பாளர் சக்திகள் திரண்டுவிடக் கூடாது என்கின்ற தேவை வலதுசாரிகளுக்கு எப்பவுமே உண்டு. எனவே இன மத வேறுபாடுகளை முன்னிலைக்கு எடுத்து வருவதற்கான தேவையும் வலதுசாரி சக்திகளுக்கே உண்டு. எனவே தான் கடந்த 66 வருட வலதுசாரி ஆட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு
வந்திருந்தும் இனப்பிரச்சனையானது மேலும் மேலும் ஆழப்படுத்தப்பட்டு 30 வருட கால அழிவுப் போருக்குள் நாட்டினையும் நாட்டு மக்களையும் இழுத்து விட்டதுடன், பிராந்திய மற்றும் மேற்கத்திய நாடுகளின் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்குள் சிக்கிக் கொள்ளுமளவுக்கு நாடு கொண்டு செல்லப்பட்டது-

முதலாளித்துவ வலதுசாரி சக்திகள், அவர்கள் தமக்குள்ளான ஆட்சியதிகாரப் போட்டிக்கும் மக்களைக் கட்டியாளுவதற்கும், மக்கள் தமது உண்மையான பிரச்சனைகளை உணராது வைத்திருப்பதற்கும் வசதியானதான இருப்பது இன -மத பாகுபாடுகளை எரியும் பிரச்சனையாக உருவாக்கி வைத்தலே ஆகும்.

முதலாளித்துவ அரசமுறைமை தன்னுடைய அந்த முறைமையின் காரணமாகவே உற்பத்தியாக்கப்படும் பிரச்சனைகள் எதற்கும் எவ்வாறு அந்த முறைமைக்குள்ளேயே தீர்வுகளைத் தரமுடியும்? அந்த முறைமை தோற்றுவிக்கும் பிரச்சனைகள் அந்த முறைமை இல்லாது போகின்றபோது தான்
இல்லாது போகும். முதலாளித்துவ முறைமைகளே தாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு காரணம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள முடியாமல் தடுத்து வைப்பதினூடாகவே முதலாளித்துவ முறைமை தன்னுடைய இருப்பினை எதிர்ப்புகள் இன்றி பாதுகாத்துக் கொள்ள முடியும். எனவே தான் உண்மையான பிரச்சனைகள் மக்கள் உணரா வண்ணம், மக்கள் தனக்கெதிராக அணிதிரளாமல் வைத்திருப்பதற்கும் வேறு பிரச்சனைகளை மக்கள் முன்தள்ளி அவர்களை அதற்குள் ஆழ்த்தி வைக்கும் கைங்கரியங்களை செய்யும். அவ்வாறு செய்யாதிருப்பின் அந்த முறைமையின் இருப்பு மக்களால் நிராகரிக்கப்பட்டுத் தூக்கியெறியப்படும்.

இதனையே நாங்கள், மக்களது புரட்சிகர நடவடிக்கைகளால் போராட்டங்களால், முதலாளித்துவ முறைமைகளுக்கு முன்னதான நிலவுடைமை மன்னராட்சி முறைமைகள் ஒழிக்கப்பட்டு அவை இருந்த இடத்தில் மாற்றீடாக முதலாளித்துவ முறைமை தோற்றுவிக்கப்பட்டதனை வரலாற்றில் காண்கிறோம். மன்னராட்சியின் கீழ் மக்கள் அனுபவிக்க முடியாத ஜனநாயகத்தை, மக்கள் தாம் அடைந்துகொள்வதற்காக அந்த முறைமையினையே தூக்கியெறிந்து மன்னராட்சி முறைமையை விட மேம்பட்ட முற்போக்கான முதலாளித்துவ முறைமைகளை மக்கள் தான் தோற்றுவித்தார்கள்.

மன்னராட்சி முறைமையை மக்கள் உலகெங்கும் தோற்கடித்தது போலவே, முதலாளித்துவ சுரண்டல் முறைமை தோற்றுவிக்கின்ற, மக்கள் எதிர்கொள்ளும்
உண்மையான பிரச்சனைகள், முதலாளித்துவ முறைமைக்குள் கொழுக்கும் மூலதனச் சக்திகளை தோற்கடிக்கும் இன்னொரு முறைமை மாற்றத்துக்கு மக்களை அணிதிரட்டிவிடும் என்பதற்காகவே முதலாளித்துவ தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காய் அனைத்து நேரடியான மறைமுகமான சூட்சுமமான அடக்குமுறை வடிவங்களைக் கைக்கொள்வதோடு, தனது முறைமை உற்பத்தியாக்கும் பிரச்சனைகளை மக்கள் இனம் கண்டு கொண்டு முரண்படாத வண்ணம் வேறு பிரச்சனைகளை உருவாக்கி அவற்றை முன்தள்ளும். அவற்றை பாரிய முரண்பாடாக உருவாக்கி போர்களையும் நாசங்களையும் விளைவிக்கும்.

எனவே ஆட்சிமுறைமை முதலாளித்துவ முறைமையாக இருக்கின்றவரை அந்த
முறைமைக்குள்ளேயே தீர்க்கப்படக்கூடிய இனப்பிரச்சனைகளைக் கூட நேர்மையான முறையில் முதலாளித்துவ முறைமை தீர்க்க முயலாது. அத்தோடு இன்றுள்ள ஏகாதிபத்திய நவதாராளவாதப் பொருளாதார முறைமை கொண்ட உலகமயமான ஏகாதிபத்திய முதலாளித்துவம் அதாவது நமது நாட்டு நிலம், நீர், கடல், கனிமங்கள் போன்ற அனைத்து வளங்களும், அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளும், அறிவுத்துறை சேவைத்துறைகளும் எமது நாட்டின் சொந்தக் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு உலக மூலதனங்களால் கட்டுப்படுத்தப்பட்டு உள்நாட்டு மக்கள் கூலிகளாக ஒட்டச் சுரண்டப்பட்டு தேசங்கள், சொந்தக் கலாச்சாரங்கள், மொழிகள் அழிவுக்கும் சிதைவுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கின்ற ஆபத்திலிருக்கின்ற முழு நாட்டு மக்களதும் சுயநிர்ணய
உரிமை ஏகாதிபத்தியங்களால் மிதிக்கப்பட்டிருக்கின்றபோது அதற்கு ஒத்திசைவாக இருக்கின்ற உள்நாட்டு முதலாளித்துவ ஏற்பாட்டாளர்களின் ஆட்சிகள் தேர்தல்கள் மூலம் ஏகாதிபத்தியத்தின் நவதாராளமய பொருளாதாரத்துக்கு கூடிய நன்மை யாரால் கிடைக்கும் என்பதைப் பொறுத்து ஏதாதிபத்தியங்களுக்குள் இடையில் எழுகின்ற சொந்த முரண்பாடுகளைப் பொறுத்து ஆட்சிகள் மாற்றப்படுமே ஒழிய அதே முறைமை தொடர்ந்தும் கோலோச்சும்.

எனவே இந்த முறைமைக்கு பதிலாக இவற்றையெல்லாம் தூக்கியெறிந்து எழுந்து வர வேண்டிய, இடதுசாரி முறைமை ஒன்று தான் மக்களது உண்மையான பிரச்சனைகளுக்கான வழியாக எம்முன் உள்ளது.

இனவாத மதவாதங்கள் முதலாளித்துவத்துக்கு தேவையானதே ஒழிய அனைத்துத் தொழிலாளர்களினதும் உழைக்கும் மக்களினதும் ஐக்கியத்தில் அடிப்படை கொண்டுள்ள இடதுசாரி சோஷலிசத்துக்கு அல்ல.

முதலாளித்துவ முறைமையை தோற்கடித்து, ஏகாதிபத்திய மூலதன சுரண்டல் பொருளாதார முறைமைக்குப் பதில் சோஷலிசப் பொருளாதார முறைமையை நிர்மாணிக்கும் இடதுசாரி முறைமையை மக்கள் நிறுவுவதே மக்களது உண்மையான பிரச்சனைகளுக்கான தீர்வாகும்.