Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

ஜனநாயகம் - சர்வாதிகாரம் குறித்து, அரசியல் தடுமாற்றங்கள்

மக்களை ஒடுக்கியாள்பவர்கள், தாங்கள் உருவாக்கிய சிவில் சட்ட அமைப்பில் நம்பிக்கையற்றவர்களாக, சிவில் சட்டத்தை பொருட்டாக மதிக்காதவர்களாக, சிவில் சட்டம் தமக்கு பொருந்தாது என்று நம்புகின்றவர்களாக இருக்கின்ற போது, சதிகள் மூலம் ஆட்சிக்கவிழ்ப்பில் ஈடுபடுகின்றனர். இதனால் தேர்தல் ஜனநாயகமும், அது உருவாக்கும் ஜனநாயக வடிவங்களைக் கூட, தம் அதிகாரத்துக்கு எதிரானதாக பார்க்கின்றனர். இதனால் ஆட்சியை சட்டவிரோதமாக கைப்பற்றுகின்றனர்.

மகிந்த – மைத்திரி தரப்பு தங்கள் கட்சியின் ஆதரவை பெரும்பான்மையிலிருந்து விலக்கியவர்கள், ஜனநாயக முறைப்படி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிறுவக் கோரவில்லை. மாறாக தமக்கு பெரும்பான்மை இல்லையென்பதாலேயே சட்டவிரோதமாக ஆட்சியைக் கவிழ்த்து, சட்டவிரோதமான ஒரு ஆட்சியை அமைத்திருக்கின்றனர்.

தேர்தல் "ஜனநாயகத்துக்கு" மக்களை வழிகாட்டி, பாராளுமன்ற ஜனநாயகமே புனிதமானது என்று கூறியவர்கள் தான், பாராளுமன்றத்திற்கு வெளியில் சர்வாதிகார ஆட்சி அதிகாரம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கின்றனர். ஜனாதிபதியுடன் சேர்ந்து கூட்டாக தாங்கள் நடத்திய இந்த சதிக்கு - பாராளுமன்றம் மூலம் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, பணத்தையும்;, பதவிகளையும் பரிசாக கொடுப்பது தொடங்கியிருக்கின்றது. இதன் மூலம் பெரும்பான்மையை விலைக்கு வாங்கிப் பெற்று, தங்கள் ஆட்சியே "ஜனநாயக"மானது என்று, சிவில் சட்டம் நடைமுறைகள் மூலம் நிலைநாட்ட முனைகின்றனர்.

 

உலகளாவில் முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயகத்தின் புனிதத்தை காக்க முனையும் ஏகாதிபத்தியங்கள், இதைக் கண்டு பதறிப் போய் நிற்கின்றனர். பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்க கோருகின்றனர்.

"கொள்கை" அடிப்படையில் முடிவு, "மக்கள் நலனில்" இருந்து முடிவு என்று, கட்சிகள் தொடங்கி தனிநபர்கள் வரை, ஜனநாயகத்தை கூறுபோட்டு விலை பேசி விற்கின்றனர். ஒடுக்கப்பட்ட  இனங்களைச் சேர்ந்த கட்சிகளின்; சொந்த இனவாத நிலைப்பாடும் - தனிநபர் பிழைப்புவாதமும், ஓடுக்கப்பட்ட இனங்களினாலேயே தங்கள் ஆட்சி பறிபோனது என்று இனவாதம் பேசுவதற்கும் - அதன் மூலம் புதிய இனவொடுக்குமுறையாக பரிணாமடைய - இந்த ஆட்சி கவிழ்ப்பு வித்திட்டு இருக்கின்றது. ஆட்சிக் கவிழ்ப்பு வெற்றி பெறும் பட்சத்தில் மேற்கு நாடுகள் போர்க்குற்றம் தொடர்பான பழைய பைலை தூசுதட்டி, மேசையில் இட்டு தங்கள் நலனுக்கு ஏற்ப அதை முன்னுக்கு கொண்டு வருவதன் மூலம் - ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான இனவொடுக்குமுறையாக மாற்றும்.

இப்படி இந்த ஆட்சிக்கவிப்புக்கு பல பரிணாமங்கள் உண்டு. மக்களின் அடிப்படை ஜனநாயகப் பிரச்சனையாகவும், ஓடுக்குமுறையாகவும் பரிணமிக்கும். ஜனநாயகத்தை மறுப்பது, ஓடுக்குமுறை வீரியமடைவதும் என்பது, இதன் பின்னான பொது சமூக விளைவாக மாறும்.

ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக அரசியல்ரீதியாக மக்கள் வழிகாட்டப்படாமல் - மக்கள் தனித்துவிடப்பட்டு இருக்கின்றனர்.

தேர்தல் "ஜனநாயகம்" தான் மக்களின் வாழ்விற்கான "விடிவெள்ளி" என்று கூறுகின்றவர்களும், காலத்துக்கு காலம் தேர்தலில் யாரை ஆதரித்தால் மக்களுக்கு "விடுதலை" கிடைக்கும் என்றும் வழிகாட்டுகின்ற "அறிவுப்" பன்னாடைகளும், மக்களின் ஜனநாயகத்தையும் - மக்கள் அதிகாரத்தையும் மறுக்கின்றவராக தொடர்ந்து இருக்கின்ற பின்னணியில், ஜனநாயகம் தூக்கில் போடப்படுகின்றது.

இன்;று நடப்பதை மக்கள் எப்படி அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்பதைக் கூறக் கூடிய, அரசியல் நேர்மை இவர்களிடம் கிடையாது. மக்கள் தங்கள் சொந்த அரசியல் வழியில் எதிர்கொள்வது மட்டும் தான், இதற்கு தீர்வு என்பதை முன்வைக்க வேண்டுமே ஓழிய, நடக்கின்றவற்றுக்குள் அங்குமிங்குமுள்ள ஓட்டைகளுக்குள் புகுந்து கொண்டு கருத்து கூறுகின்ற பிழைப்புவாதம், மக்கள் சார்ந்ததல்ல.

ஆட்சிக்கவிழ்ப்பை பாராளுமன்றம் சாக்கடைக்குள்ளும், கள்ளர் குகைக்குள்ளும், பிரபுகளுக்கு இடையிலான சண்டையாகவும் காட்டும் இடதுசாரிகள், தங்கள் அதிகாரத்தில் கிடைக்கும் ஜனநாயகத்தையே இதற்கு தீர்வாக முன்வைக்கின்றனர். நடைமுறையில் பறிக்கப்படும் ஜனநாயகத்திற்கு எதிராக போராடவும், மக்களை வழிகாட்டவும் முன்வரவில்லை.

ஜனநாயக விரோதமான இந்த ஆட்சிக்கவிழ்ப்பு முறைமை வெற்றிபெறும் போது, மக்களுக்கு எதிரான ஜனநாயக மறுப்பாகவும், ஒடுக்குமுறையாகவும் விரிவடையும் என்பதே, இதன் பின் இருக்கும் பொதுக் குணாம்சம்;. இதை இடதுசாரிகள் தங்கள் வரட்டுத்தனத்தால் புறக்கணிக்கின்றனர். குறிப்பாக ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு எதிராக பரிணமிக்கும். இதன் மூலம் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கும்.

முடிவாக

ஜனநாயகவிரோதமான சர்வாதிகாரம், தன்னை முன்னிறுத்தி நிலைநிறுத்துவதற்கு தடையாக இருக்க கூடிய, ஜனநாயகத்தின் எந்த வடிவமாக இருந்தாலும் அவற்றை ஒடுக்கும்;. பாராளுமன்ற ஜனநாயகமானது சர்வாதிகாரத்துக்கு தடையாக இருக்கும் போது, அதை அனுமதிப்பதில்லை. இன்று நடப்பது அதுதான். பாராளுமன்றம் சாக்கடையாக இருந்தாலும், கள்ளர் குகையாக இருந்தாலும், பிரபுகளின் அடிதடியாக இருந்தாலும்.., இதைவிட மோசமான சர்வாதிகாரத்துக்கு தடையாக நிற்குமாயின் அதை அனுமதிக்காது என்பது ஜனநாயக பிரச்சனை.

ஜனநாயகம் குறித்த பொதுப் பிரச்சனை. ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக லட்சக்கணக்கான மக்கள்  கூடியதும் ஜனநாயகத்துக்காக தான். இடதுசாரிகள் ஜனநாயகத்துக்காக குரல் கொடுக்காது இருப்பது என்பது, ஜனநாயகத்துக்கு குரல் கொடுக்க மறுப்பது என்பது தான் பொருள்.

வர்க்க சமூக அமைப்பில் ஜனநாயகம் தான் - மனித வாழ்விற்கான நெம்புகோல். இருக்கும் ஜனநாயகம் மறுக்கப்பட்டு, அதைவிட மோசமான ஆட்சியை கொண்டு வரும் போது, அதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டும். அதேநேரம் சட்டவிரோத ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக குரல் கொடுத்தாக வேண்டும்.

பாராளுமன்றம் என்பது சாக்கடைதான். கள்ளர் குகை தான். இடதுசாரிகள் மக்களுக்கு இன்று இருப்பதை விட, உயர்வான ஜனநாயகத்துக்காக  போராடுபவர்களாக கூட இருக்கலாம். இதனால் இன்றுள்ள ஜனநாயகப் பிரச்சனையில் போராடாமல் விட முடியாது. வெகுஞன அரசியல் தளத்தில், பாராளுமன்ற ஜனநாயகம் ஒடுக்கப்பட்டு மறுக்கப்படும் போது, அதற்காக குரல்கொடுத்துப் போராட வேண்டும். இடதுசாரிகள் இதைச் செய்யத் தவறுவது என்பது, அரசியல் வரட்டுவாதமாகிவிடும்.

பாராளுமன்ற சாக்கடைக்கான தேர்தலைக் கூட வர்க்க அரசியலுக்கு பயன்படுத்த முடியுமாயின், அந்தப் பாராளுமன்ற ஜனநாயகம் சிதைக்கப்படும் போது, வர்க்க அணுகுமுறையில் நின்று ஜனநாயகத்துக்குக் குரல் கொடுத்தாக வேண்டும்.  ஜனநாயகமில்லை எனின், எதற்காகவும் போராட முடியாததாகிவிடும். அதைத்தான் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் செய்ய முனைகின்றனர்.