Mon03182024

Last updateSun, 19 Apr 2020 8am

மீ.ரூவும் (MeToo) ஆணாதிக்கமும் - மீ.ரூ பகுதி 1

ஒரு பெண் மீ.ரூ மூலம் தனக்கு எதிரான பாலியல் வன்முறையை குற்றச்சாட்டாக முன்வைக்கும் போது, அதை எந்த நிபந்தனையின்றியும் ஆதரிக்க வேண்டும். அதற்காக நிபந்தனையின்றி குரல் கொடுக்கவும் வேண்டும். அவளின் பிற கருத்துக்களுக்காக – செயற்பாட்டுக்காக மறுப்பதும், குறித்த பெண்ணின் வர்க்கம், சாதி, நிறம், இனம், மதம் .. போன்ற எந்த குறுகிய அடையாளங்களைக் கொண்டு, ஒடுக்கப்பட்ட பெண்ணுக்கு குரல் கொடுக்க மறுப்பது, ஓடுக்கும் ஆணாதிக்க அதிகாரத்துக்கான குரல்களாகவே இருக்க முடியும். இதன் மூலம் பெண்ணைத் தொடர்ந்து தங்கள் பாலியல் அடிமையாக வைத்திருக்க விரும்பும், தனிப்பட்ட ஆண்களின் வெளிப்படையான பொது ஆணாதிக்க மனப்பாங்காக மட்டுமே இருக்க முடியும்.

குறிப்பாக ஆண்கள் பெண்ணுக்காக குரல் கொடுக்க மறுத்து, பெண்ணை கேள்விக்குள்ளாக்குவதே, காலாகாலமாக இந்திய சமூக அமைப்பில் நடந்து வருகின்றது. பெண் மீதான ஆணின் பாலியல் குற்றங்களுக்கு, குறித்த பெண்ணையும்  - அவளின் "நடத்தையையும்" காரணமாக கற்பிற்கின்ற கருத்தியல் வாதங்கள் தொடக்கம் நீதிமன்றங்கள் வரை, பெண்ணை குற்றவாளியாகக் காட்டுவதையே தொடர்ந்து செய்து வருகின்றன.

பாதிக்கப்பட்ட பெண்கள் மீ.ரூ மூலம் தனக்கு நடந்த பாலியல் கொடுமையை வெளிப்படையாகக் கூறுவதை பொய் என்று நிறுவமுனைவது - குறித்த பெண்ணை குற்றவாளியாக்குவதும் – அவளின் இழி "நடத்தையாக்கி" அதற்கு பட்டத்தை கொடுக்க முனைகின்ற பொதுப் பின்னணிக்கு, ஆணாதிக்க ஊடகங்கள் தலைமை தாங்குவதுடன் - அவள் பற்றி பொது அவதூறுகளைப் பரப்புகின்றன.

 

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பிதற்றுகின்ற ஆணாதிக்க இன, மத, வர்க்க, சாதி, நிற.. சார்ந்த  பாலியல் தூசணங்கள் தொடக்கம் இழிவான ஆணாதிக்க வசைபாடல்களின் பின் கட்டமைக்கும் ஆணாதிக்க கருத்தியல்  தர்க்கங்களையே, ஊடகங்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான கேள்வியாக  முன்வைப்பதுடன் – ஆணாதிக்க ஆண்களை பாதுகாப்பதே ஊடகங்களின் செயற்பாடாக இருக்கின்றது. தமிழக ஊடகங்கள் மீ.ரூ பற்றி கொண்டிருக்கும் பொதுக் கண்ணோட்டம் இதுவாகும்.

இந்த பின்னணியில் பெண் மீதான குற்றங்களுக்கு எதிராக உலகளவில் மீ.ரூ இயக்கம் கொண்டிருக்கும் வெளிப்படையான தன்மையும் - குற்றத்தின் பொதுத் தன்மையும், இந்திய மீ.ரூ களில் வெளிப்படவில்லை. அதாவது இந்தியப் பெண்கள் மீதான பாலியல் குற்றத்தின் முழு வடிவத்தையும் பொது வெளியில் மீ.ரூ மூலம் முன்வைக்க முடியாதளவுக்கு, பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க குறுக்கு விசாரணையாக மாற்றப்படுகின்றது. இந்த பின்னணியில் ஆணாதிக்க மனநிலையை முன்னிறுத்தியே ஊடகங்கள் இயங்குகின்றது. ஊடகங்கள் பெண்ணுக்கு எதிரான குற்றத்துக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு பதில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை அங்குலம் அங்குலமாக ஆராயும் வண்ணம், பாதிப்பை பாலியல் கொசிப்பாக்குவதையே ஊடகங்கள் செய்கின்றன. அதாவது சினிமாவில் - விளம்பரத்தில் பெண்ணை எப்படி உடலாக காட்டப்படுகின்றதோ, அதற்கு நிகராக பாதிக்கப்பட்ட பெண்ணை உடலாக காட்டி விடுவதே, ஊடக செயற்பாடாக இருக்கின்றது.

இந்த அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்களை நோக்கிய கேள்விகளையும் - தர்க்கங்களையும் முன்வைத்து, பாதிக்கப்பட்ட பெண்களை குற்றவாளியாக சமூகத்தின் முன்னிறுத்த முனைவதே, பொதுவாக நடந்துவருகின்றது.

குறிப்பாக இந்தியாவிலும் - அதிலும் தமிழகத்தில் மீ.ரூ இயக்கம் என்பது, அதிலும் பாதிக்ப்பட்ட பெண்கள் ஆணாதிக்க ஊடாகங்களை எதிர்கொள்வதில் ஒரு போராட்டத்தை நடந்த வேண்டி இருக்கின்றது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குரல்கொடுக்க வேண்டிய ஊடகங்கள், தங்களுக்கு எதிராக மாறிவிடுவதே பெண்களின் பொது அனுபவமாகி வருகின்றது.  தனக்கு நிகழ்ந்த பாலியல் வன்முறைக்கு நிகராக, ஊடகங்களின்  ஆணாதிக்க கேள்விகள் மூலம் கட்டமைக்கப்படும் கருத்தியல் வன்முறையை - பெண்கள் உணர்வது தவிர்க்க முடியாததாகின்றது. தங்கள் சுதந்திரமான குரல்களை அடக்கியொடுக்கும் வண்ணம், ஓரே கேள்வியை மீண்டும் மீண்டும் எழுப்புவதும், மீ.ரூவால் அப்பாவி ஆண்கள் பாதிக்கப்படலாம் என்ற கேலிக்குரிய வகையில் கேள்வி எழுப்பி விவாதிக்கின்ற அளவுக்கு, மீ.ரூ மீதான கருத்தியலாக – விமர்சனமாக மாறி இருக்கின்றது. "அப்பாவி" ஆண்கள் பாதிக்கப்படலாம் என்று உலகில் வேறு எங்கும் முன்வைத்து, அதை விவாதிப்பது கிடையாது. இந்தியாவின் ஆணாதிக்க பார்ப்பனிய சாதிய சமூக அமைப்பில் மட்டும் தான் - குற்றங்களை நியாயப்படுத்தும் விவாதங்களை நடத்த முடியும்.

இந்த பின்னணியில் உலகில் எங்குமில்லாத அளவுக்கு தமிழகத்தில் மட்டுமே, மீ.ரூ க்கு எதிராகவும், பெண்களுக்கும் எதிராகவும், ஆணாதிக்க அவதூறுகள் மேலெழுந்து இருக்கின்றது. இந்த ஆணாதிக்க அரசியல் சூழலை கட்டமைக்கும் பின்னணியில் இனவாதமும், போலிப் பெரியாரியமும், மார்க்சியத்தை திரித்து புரட்டும் இடதுசாரிய போலிகளின் கோட்பாடுகள்  அடிப்படையில் இருப்பது, வெளிப்படையாக காணமுடிகின்றது. பாதிக்கப்பட்ட பெண்களையும் குறுக்கு விசாரணை செய்வது, அவதூறு பரப்பும் ஆணாதிக்கமாக பரிணாமமடைய வைக்க முடிகின்றது.

இது பெண்களுக்கு எதிரானதும், அதிகாரத்தில் உள்ள ஆண்கள் தொடர்ந்து பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டும் உரிமையை கேள்விக்குள்ளாக முடியாத அளவுக்கு – குற்றம்சாட்டும் பெண்களையே எதிராக முன்னிறுத்துகின்றது. இந்த ஆணாதிக்க வக்கிரங்களை கூறு கூறாக அம்பலப்படுத்த வேண்டி இருக்கின்றது.

இந்த வகையில் மீ.ரூ இயக்கம் பூர்சுவா வர்க்கத்தின் குரலா? மீ.ரூ தமிழனுக்கு எதிரான பார்ப்பனிய சாதியின் அவதூறா? மீ.ரூ சமூகத்தில் மேலே இருக்கும் ஆண்களுக்கு எதிரான பெண்களின் அவதூறா? மீ.ரூ சமூகத்தின் பிற பிரச்சனைகளை திசைதிருப்ப பயன்படுத்தப்படுகின்றதா? ஏன் இப்ப குற்றம் சாட்ட வேண்டும்?

தொடரும்