Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

யாழ் மையவாதச் சிந்தனையா! "சொர்க்கத்தில் பிசா" சைக் காட்சிப்படுத்துவதை தடுத்தது!?

"சொர்க்கத்தில் பிசாசு" படம் காட்சிப்படுத்தப்படுவது நிறுத்தப்பட்டதற்குப் பின்னால் மக்கள் விரோதமான அதிகாரமானது - ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எதிரானதே. அதே போன்றதே ஒடுக்கப்பட்ட மக்களைச் சாராது முன்னிறுத்துகின்ற ஜனநாயகத்தின் குரலும். அதிகாரத்தின் குரல் போன்று, ஜனநாயகத்தின் குரலும் ஒடுக்கும் தரப்பு சார்பில் இருந்து எழுகின்றது.

இந்த வகையான ஜனநாயகமானது உலகை ஆக்கிரமிக்க அமெரிக்கா முன்வைக்கும் ஜனநாயகத்திற்கு நிகரானது. இந்திய பாசிச பார்ப்பனியத்தின் ஜனநாயகத்துக்கு ஒத்தது. இதை நாம் புரியும் வகையில் கூறினால் யாழ் வெள்ளாளிய சிந்தனையிலான ஜனநாயகம். அதாவது ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களைச் சாராதா ஜனநாயகம் என்பது, இயல்பில் வெள்ளாளியச் சிந்தனையிலானது.

இது சாராம்சத்தில் புலிகளின் ஜனநாயகத்துக்கு நிகரானது. புலிகள் தங்களுக்கும் - தங்கள் போராட்ட வழிமுறைக்குமான குறுகிய ஜனநாயகத்தை முன்னிறுத்தி – ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயகத்தை மறுத்ததிற்கு எந்தவிதத்திலும் குறைந்ததல்ல. ஒரு ஒடுக்குமுறையைக் காட்டி பிற ஓடுக்குமுறைகளால் ஒடுக்கியது போன்று, இங்கு ஜனநாயகம் குறுக்கப்படுகின்றது.

இன்று ஜனநாயகம் பேசுகின்றவர்களில் பெரும்பான்மையானவர்கள்  - புலிகள் உள்ளிட்ட தமிழ் தேசிய விடுதலை இயக்கங்கள் ஜனநாயகத்தை மறுத்தபோது, மக்களுக்காக போராடுவதற்காக என்று கூறி ஜனநாயகத்தைக் கோரியவர்கள் தான். ஆனால் புலிக்கு பின் தொடர்ந்து இனரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சார்பாக - அரசு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மறுக்கும் ஜனநாயகத்தை கோரி செயற்படவில்லை. மாறாக புலிகளையும் - மக்களையும் ஒடுக்கிய, ஒடுக்குகின்ற அரசுக்கு சார்பாக ஜனநாயகத்தைப் பேசுகின்றவர்களாகவே இன்று இருக்கின்றனர்.

 

"சொர்க்கத்தில் பிசாசு" படம் காட்சிப்படுத்தப்படுவது நிறுத்தப்பட்ட பின்னணியில் பேசும் ஜனநாயகம், ஒடுக்கும் அரசுக்கு சார்பாக செயல்படுகிற அவரவர் அரசியல் பின்னணியில் இருந்து எழுகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து இவை எழுப்பப்படவில்லை.

மாறாக இன்று இனரீதியாக ஒடுக்குமுறைக்கு முகம் கொடுக்கும் மக்கள் தொடங்கி தேசியம், புலி என்று எல்லாக் குரல்களையும், ஒடுக்குகின்ற ஒரு பின்னணியில் இருந்து, இன்று  ஜனநாயகம் பேசப்படுகின்றது.

இந்தப் படச் சர்ச்சையை அடுத்து இனரீதியாக ஒடுக்கும் அரசு தரப்பும், ஜனநாயகம் பேசுகின்றது. இரண்டுக்கும் கடுகளவு கூட வித்தியாசமிருப்பதில்லை. ஒடுக்கப்பட்ட மக்களைச் சாராது, ஒடுக்கும் மற்றொரு தரப்பிற்கு மறுக்கப்பட்ட ஜனநாயகத்துக்கு குரல் கொடுக்கின்றனர்.  அரசோ தமிழர்களின் ஜனநாயக மறுப்பாக குரல் கொடுக்கின்ற அளவுக்கு, ஆளும் வர்க்க இனவொடுக்குமுறைக்கு ஜனநாயகம் என்பது கவசமாகி இருக்கின்றது.

இந்தப் படம் குறித்து 99.9 சதவீதமான மக்களுக்கு எதுவும் தெரியாது. ஆனால் தமிழ்மக்கள் வன்முறையாளராக, பிற கருத்தை மறுப்பவராக அவதூறு பூசப்பட்டு – அவர்கள்  ஜனநாயகத்தின் பெயரில் ஒடுக்கப்படுவது நியாயப்படுத்தப்படுகின்றது. "மக்களைக் கொன்றாவது புலியைக் கொல்" என்பதற்கு இணங்க, ஒடுக்குகின்ற தரப்புக்குச் சார்பாக  ஜனநாயகத்தை முன்வைத்ததன் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஒடுக்கு என்பது ஜனநாயகமாகி இருக்கின்றது.

ஜனநாயகம் சார்பற்றதா!?

ஜனநாயகத்தை தூய்மையானதாக முன்னிறுத்தி நிற்கின்ற அனைவரும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஜனநாயகத்தையே பேசுகின்றனர் என்பது பொருள். ஆணாதிக்க சமுதாயத்தில், சாதிய சமூகத்தில், இனவாத-மதவாத-நிறவாதம் என பிரிந்து கிடக்கும் சமூகத்தில், வர்க்க சமூக அமைப்பில் ஜனநாயகம் என்பது, ஒரு நாளும் நடுநிலையானதாக இருப்பதில்லை. பக்கச் சார்பானது. ஒடுக்கும் தன்மையைக் கொண்டதாகவும் இருக்கின்றது. இதை வேறுபடுத்தி யார் கருத்தை முன்னிறுத்துகின்றனர்.

கலை கலைக்காக என்று கூறுகின்ற – ஒடுக்கப்பட்ட மக்களைச் சாராத இலக்கிய பிண்டங்கள், தங்களையும் தங்கள் இருப்பையும் முன்னிறுத்திக் கொள்ள ஜனநாயகத்தை விலைபேசுகின்றனர்.

இப்படி ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து நிற்காத ஜனநாயகம் என்பது, எப்போதும் - எங்கும்  ஒடுக்குகின்ற தரப்புக்கு சார்பான ஜனநாயகம் தான்.

இன்று ஜனநாயகம் குறித்தான பொதுப் புதியானது,  தேர்தல் ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட முதலாளித்துவ ஜனநாயகம் தான். முதலாளித்துவ ஜனநாயகத்தை தாண்டி ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயகத்தை முன்னிறுத்தி – ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து ஜனநாயகத்தை முன்வைத்ததில்லை.

 

"DEMONS IN PARADISE" படத்துக்கான காட்சித்தடை

1.இப்படம் புலியெதிர்ப்பை அரசியலாகக் கொண்ட, அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட, செயல்படுகின்றவர்களால் எடுக்கப்பட்ட படம். புலிகளின் அதே பாணியில் பயணிக்கின்றவர்கள் இவர்கள். புலிகள் எப்படி ஜனநாயகத்தை அனுமதிப்பதில்லையோ – அதே போன்று தான் அரசு ஒடுக்கப்பட்ட மக்களை தொடர்ந்து ஒடுக்கி வருகின்றது.

2.திரைப்படத்தை யாழ்ப்பாணத்தில் காட்டும் குழு, ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து நின்று - படங்களை காட்சிப்படுத்தியது கிடையாது. மாறாக மக்களை ஒடுக்குகின்ற தரப்புகளின் நிதி ஆதரவில் செயற்படுகிறவர்கள்.

இவை அனைத்தும் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்ந்த விவகாரமல்ல. ஒடுக்குகின்ற மூன்று தரப்புகளுக்கு இடையில் - ஜனநாயகத்தை முன்னிறுத்தி ஒரு சார்பை ஆதரிக்கின்ற அளவுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதாக இந்த விவகாரம் இருக்கின்றது. புலிகள் காலத்தில் புலியெதிர்ப்பு அரசியலின் நீட்சி தான், ஜனநாயகச் கூச்சல்.

என்.எல்.எவ்.ரியைச் சேர்ந்த மனோரஞ்சன்

இங்கு என்.எல்.எவ்.ரியைச் சேர்ந்த மனோரஞ்சன் என்பது கூட, ஒரு வகை அரசியல் திரிபு. படத்துக்கு இடதுசாயம் பூசி நியாயப்படுத்துவதற்கு இது உதவுகின்றது. என்.எல்.எவ்.ரியின் அன்றைய அரசியலுக்கு முரணானது இந்த படம்.

1984 இல் இந்தியாவில் வைத்து என்.எல்.எவ்.ரியுடன் சேர்ந்து கொண்ட ஒருவர் தான்; மனோரஞ்சன். சேர்ந்தவுடன் மத்தியகுழுவில் தன்னை இணைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர். அதை நிராகரித்த என்.எல்.எவ்.ரி - நாட்டிற்கு திரும்பி வந்து வேலை செய்ய கோரிய போது மறுத்தவர். அதன் பின் 1985 - 1986 என்.எல்.எவ்.ரி அமைப்பில் இருந்ததில்லை. இடதுசாரியம் தேசிய விடுதலைக்கு தடையாக இருப்பதாக கூறி, இடதுசாரியத்துக்கு எதிராக தேசியத்தை முன்னிறுத்தி பிரிந்த பி.எல்.எவ்.ரியுடன் சென்றவர். அவரின் பிந்தைய காலம் என்.எல்.எவ்.ரிக்கு அரசியலுக்கு தொடர்பற்றது. ஏன் பி.எல்.எவ்.ரிக்கு அரசியலுக்கு கூட தொடர்பற்றது.

பி.எல்.எவ்.ரிக்கு பின் சந்திரிகாவின் இனவொடுக்குமுறைக்கு கம்பளம் விரித்து – உலகம் முழுக்க பறந்து திரிந்தவர். புலியெதிர்ப்பு அரசியலை தேர்ந்தெடுத்து, புலி அழிப்பை முன்வைத்து மக்களைப் பாதுகாக்கும் இடதுசாரிய அரசியலுக்கு எதிராக பயணித்தவர். மக்களைக் கொல்லும் வலதுசாரி அரசியலை முன்வைத்தவர். அவரின் இந்த அரசியல் பின்னணியில் இருந்து தான் படம் தயாரிக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களைச் சாராத புலியெதிர்ப்பு ஜனநாயகம் துள்ளிக் குதிப்பது இதனால் தான்.