Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

தமிழ் மக்களின் சுயத்தை அழிக்கும் புலம்பெயர்ந்த "உதவிகள்"

ஏகாதிபத்தியங்கள் மூன்றாம் உலக நாடுகளின் சுயத்தை "ஏழ்மையாகக்" காட்டி, அரசு சார்பற்ற ஏகாதிபத்திய நிதியாதாரங்கள் மூலம் நாடுகளினதும் - மக்களினதும் சுயசார்பை அழித்தனர். இதுபோல் புலம்பெயர் சமூகம் மக்களின் வாழ்வு சார்ந்த சுயத்தை "ஏழ்மையாகக்" காட்டி, தங்கள் "குறுகிய உதவிகள்" மூலம் சுயசார்பை அழிக்கத் தொடங்கி இருக்கின்றனர். இன்று இவை குறித்த பொது விவாதம் அவசியமாகியுள்ளது.

பிறருக்கு "உதவுகின்றவர்கள்" இலங்கையில் தாங்கள் வாழ்ந்த காலத்தில் சந்தித்த சுய நெருக்கடிகளில் இருந்தும், அன்று தமக்கு தேவைப்பட்ட உதவிகளின் நோக்கில் இருந்தும், "உதவுகின்றதே" பொதுவான உதவியின் சாரம். எந்த சுய உள்நோக்கமும் இல்லாத பெரும்பாலானவர்களின் உணர்வுநிலை இதுவாகும். இந்த உணர்வுகள் கொச்சைப்படுத்த முடியாதவை. ஆனால் உணர்வுபூர்வமான அறிவு, பகுத்தறிவுபூர்வமானதல்ல. உணர்வுபூர்வமான அறிவும், பகுத்தறிவுபூர்வமான அறிவும் வேறுவேறானவை. இரண்டும் ஒன்றாக மாறும் போது மட்டும் தான், அது சரியானதாக மாறும்.

இன்றைய "உதவிகள்" உணர்ச்சிபூர்வமானதாக இருக்கின்றதே ஒழிய, அவை சமூகத்துக்கு பயன்படும் வண்ணம் அறிவுபூர்வமானதல்ல. உணர்ச்சிபூர்வமான முடிவுகள் சமூகத்தை அழிக்கும். இந்த வகையில் கடந்த யுத்தம் மட்டும் சமூகத்தை சீரழிக்கவில்லை, இன்றைய "உதவிகள்" கூட சமூகத்தை அழிக்கின்றது.

உணர்ச்சி சார்ந்த "உதவிகள்" தமிழ் சமூகத்தின் சுயத்தையே அழிக்கின்றது. பிறர் உழைப்பில் தங்கி வாழாத சுயமே, சமூக இருப்பின் அடித்தளம். உழைத்து வாழ்வதைப் பெருமையாகவும், தன் தேவைக்காக பிறரைச் சார்ந்து வாழ்வதை இழிவானதாகவும் கருதும் போது மட்டும் தான், சமூகம் முன்னேறும். இந்த அடிப்படையில் இன்று தமிழ்ச் சமூகம் வாழவில்லை. பிறரில் தங்கி வாழ்வதை தேர்வாக கொண்டு வாழக்கூடிய, அறம் சாராத வாழ்வை விரும்புகின்ற சூழலில் "உதவிகள்" அதை ஆழப்படுத்தி, சமூகத்தையே அழிக்கத் தொடங்கி இருக்கின்றது.

 

"உதவுகின்றவர்களுக்கு" மனம் சார்ந்த "நல்ல" மனித உணர்வு இருக்கலாம், ஆனால் அதனால் சமூகத்துக்கு என்ன பயன் என்பதை ஆராய்ந்து, அதற்கு பொறுப்புக் கூறுவது சமூகப் பொறுப்புள்ள சமூக மனப்பான்மையாக இருக்க முடியும். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விளைவு இருக்கின்ற போது, "உதவியின்" பின் என்ன நடந்தது என்று ஆராயாத உதவிகள் என்பது அபத்தமானது.

"உதவிகள்" குறித்து புலம்பெயர்ந்தவர்களின் "அறிவு" சார்ந்த அளவுகோல் என்ன? தன் கண்ணுக்கும், தன் வாழ்க்கை முறைமைக்கும் எது ஏழ்மையாகத் தெரிகின்றதோ, அதற்கு உதவினால் சரி என்பதைத் தாண்டி, வேறு எந்த அளவுகோலும் கிடையாது. பணத்தைக் கொடுத்தால் முன்னேறிவிடுவார்கள் என்று நம்பும் அளவுக்கு, பணத்தைக் கொண்டு அளவிடும் பண அளவீடுகள்.

இந்த அடிப்படையில் பெரும்பாலும் தனிநபர்களை முன்னிறுத்தி கல்வி சார்ந்த உதவிகள், சிறு தொழில் சார்ந்த உதவிகள், வாழ்க்கைத் தேவையையொட்டிய பொருட்கள் … என்று, ஆளுக்காள் உதவுகின்றனர். சிலர் கோயில்;கள், பாடசாலைக் கட்டிடங்கள்.. என்று உதவுகின்றனர்.

ஆனால் இவை எவையும் சமூகத்தின் பொது முன்னேற்றம் சார்ந்ததல்ல. தனிநபர் சார்ந்தது. இதனால் சமூகம் முன்னேறி உள்ளதா?

உதாரணத்துக்கு குடும்பரீதியாக தங்கள் குடும்பத்துக்கு செய்து வந்த கடந்தகால உதவிகள், அவர்களை சொந்தக் காலில் வாழவைக்காமல் அல்லது அவர்களின் சுயத்தை அழித்து உங்களில் தங்கி வாழும் நிலையை உருவாக்கியதா? ஆம், உழைத்து வாழ விரும்பாத, தலைமுறையை உருவாக்கியது.

புலம்பெயர் சமூகத்தின் உழைப்பில் தங்கி வாழும் மனித உறவாகவும், புலம்பெயர் உறவுகளையும் - சமூகத்தையும் ஏமாற்றிப் பிழைப்பது வாழ்வாகவும், அதேநேரம் ஊழல்கள் - லஞ்சத்தில் தங்கி வாழ்வது, புலம்பெயர் நிதியங்கள் உள்ளிட்ட பொது நிதியங்களை கையாடுவது .. எல்லாம் உழைத்து வாழ விரும்பாத சமூகத்தில் இருந்து வீரியம் பெற்று வளர்கின்றது. பண உறவின் விளைவு இது.

உதாரணத்துக்கு பழைய மாணவர் சங்க பொது நிதியங்களின் ஒரு பகுதியை, பாடசாலை நிர்வாகங்கள் விருந்துகளை நடத்துமளவுக்கு சமூகம் தரம் தாழ்ந்திருக்கின்றது. இதை எதிர்த்து ஒரு ஆசிரியர்  கூட, பொது சமூக நோக்கில் மறுதளிப்பதில்லை. ஒரு ஆசிரியர் கூட சமூக பொது நோக்கில் இலவசமாக மாணவர்களுக்கு கல்வியை கற்பிப்பதில்லை. கல்வி உதவிகள் பின்னால் நடப்பவை இவை.  இப்படி பல விடையங்களை இனம் காண முடியும். அங்கு சமூகநோக்கு இல்லாத போது, புலம்பெயர்ந்தவனுக்கு மட்டும் எதற்கு சமூக உணர்வு இருக்க வேண்டும்?

உதாரணத்துக்கு எனக்கு தெரிந்து, நான் உட்பட பலர் உதவிய குடும்பம் ஒன்றின், குடும்ப உறுப்பினர் ஒருவர் காணாமல் போனார். அந்த குடும்பத்தை மேம்படுத்தும் உதவிகள் பல வழிகளில் செய்யப்பட்ட போது, அந்தக் குடும்பத்தின் வாழ்நிலையை விட பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்கள் கூட நிதியை சேகரித்து கொடுத்தது மட்டுமின்றி - பாரிய உடல் உழைப்பு மூலம் அவர்களின் வாழ்வியல் சூழல் சார்ந்த தேவைகளை மேம்படுத்த உதவினர். இவ்வாறு அண்மைக்காலம் வரை தொடரும் உதவி – மறுபக்கத்தில் அண்மையில் அந்தக் குடும்பம் ஜந்து இலட்சம் செலவழித்து சாமர்த்தியச் சடங்கை நடத்தியது வரை போயிருந்தது.

இது எதைக் காட்டுகின்றது சமூக உணர்வை ஊட்டாத, சமூக உணர்வுடன் பெறாத "உதவி" இது போன்ற விளைவுகளை உருவாக்குகின்றது.

"உதவிகள்" என்பது சுரண்டலாக மாறிவிடுவதைக் காண முடியும். உண்மையான உதவி தேவைப்பட்டவர்களை இனம் காண்பது என்பது, சமூகரீதியான உணர்வோட்டத்தில் இரு தரப்பும் இணைகின்ற புள்ளியில் மட்டும் தான் சாத்தியம். சமூக உணர்வற்று பணத்தைப் பெறுவதும் சரி, கொடுப்பதும் சரி, ஒரு புள்ளியில் சந்திப்பதல்ல, ஒரு நேர்கோடாக தொடர வேண்டும்.

இதை விடுத்த "உதவிகள்" சமூகத்தை மையப்படுத்திய உதவிகளை மறுக்கின்ற சமூகமாக மாறி இருக்கின்றது. உதாரணமாக

1.மக்களிற்கும்  - மாணவர்களுக்கும் சமூகம் குறித்த பொதுக் கல்வி கிடைக்கும் வண்ணம் நூலகங்களை அமைப்பதில்லை. பல்வேறு துறை சார்ந்த அறிவைப் பெறும் வண்ணம், நூல்களை அறிமுகம் செய்வதில்லை. நூல்களை வாசிக்கும் வண்ணம், ஊக்குவிப்புக்களுக்கும் - திட்டங்களுக்கும் உதவுவதில்லை. இது சமூகம் சுய அறிவு – சுயத்தை பெறும் வண்ணம் உதவுவதை மறுக்கின்றது.

2.நல்ல குடி தண்ணிர் மக்களுக்கு கிடைக்கும் வண்ணம், குளத்தை உருவாக்குவதோ, மழை நீரைத் தேக்குவதற்கோ உதவுவதில்லை. நீரை வர்த்தகமாக்கும் சர்வதேச சூழலுக்கு அமைவாக, நீரைப் பாதுகாக்கும் மக்களின் உரிமையை உதவியாக காண்பதில்லை. இவை குறித்த பொதுக் கல்வியை கொண்டு, அதை செய்ய முன்வருவதுமில்லை.

3.மக்களுக்கு பயன்படும் வண்ணம் மரங்களை நடுவதில்லை. அது ஏன் அவசியம் என்று கூறுவதுமில்லை

இப்படி சமூகம் சார்ந்து பல விடையங்கள் இருக்க, தனிநபர்களை தேர்வு செய்வது என்பது என்? சமூக சுயத்தை அழிக்கின்ற அந்த உள்ளடக்கம் எப்படி எங்கிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றது?

தனிநபர் முன்னேற்றம் மூலம், சுய அழிவுக்கான உதவிக் கொள்கை 

அரசு சார்பற்ற ஏகாதிபத்திய நிறுவனங்கள் நிதியாதாரங்கள் மூலம் 1980 - 1990 களில் முன்னெடுத்த அதே கொள்கைகளை, புலம்பெயர் சமூகம் தமதாக்கிக் கொண்டுள்ளது. இன்று வீரியம் பெற்று நவதாராளவாதத்தின் கூறாகிவிட்ட இந்தக் கொள்கையே - இன்றைய நடைமுறையாக இருக்கின்றது. பணத்தைக் கொண்டு சமூகத்தை மாற்றவும் - முன்னேற்றவும் முடியும் என்று வழிகாட்டி திட்டமிட்டு சுயத்தைச் சீரழிக்கும் அரசு சார்பற்ற ஏகாதிபத்திய நிதியாதாரக் கொள்கை - புலம்பெயர் சமூகத்தின் பகுதி நடைமுறையாக மாறி இருக்கின்றது.

ஏகாதிபத்திய தன்னார்வ நிதிச் செயற்பாடுகள் ஏன், எதற்கு, எப்படி.. முன்னெடுக்கப்படுகின்றது    என்பதை புரிந்து கொள்வதன் மூலம், புலம்பெயர் தமிழனின் உதவிகள் எப்படி சமூகத்தை காயடிக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

அதேநேரம் ஏகாதிபத்திய தன்னார்வ நிதிச் செயற்பாடுகளுக்கு திட்டமிட்ட நோக்கம் பல இருப்பது போல், புலம்பெயர் உதவிக்கு கிடையாது என்பது உண்மை. ஆனால் விளைவு ஒன்று.  இரண்டும் பணத்தைக் கொண்டு சமூகத்தை "மாற்றுகின்றதான" விம்பம், சமூகத்தின் சுயத்தை  அழிப்பதில் ஓன்றுபட்டு  நிற்கின்றது.

ஏகாதிபத்திய நாடுகளாலும், பெரும் பன்னாட்டு பண முதலைகளாலும் உருவாக்கப்பட்ட தன்னார்வ நிதி உதவியானது, வறிய நாடுகளை குறிவைக்கின்றது. அதிலும் ஏழைகளை இலக்காகக் கொண்டு இருந்தது. இதன் மூலம் நாடுகளினதும் -  தனிநபர்களினதும் சுய சார்பையும், சுய வளர்ச்சியையும் சிதைக்கவும் முடிந்தது. இதன் மூலம் பன்னாட்டு மூலதனங்கள் கொழுக்க முடிந்தது. இதற்காக பாரிய நிதிகளை ஏழை எளிய மக்கள் மத்தியில் பாய்ச்சி, அதை அறுவடை செய்தனர். சமூகத்தின் முன்னோடிகளை விலைக்கு வாங்கி, அவர்களைக் கொண்டு சமூகத்தின் சுயத்தை உறிஞ்சினர். சுயசார்பற்ற மக்கள் கூட்டத்தை இதன் மூலம் உருவாக்கி, சமூகத்தை தமக்கு ஏற்ப மாற்றினர். இதன் மூலம் மனிதர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் ஏகாதிபத்தியங்கள் கொண்டு வந்தன.

இந்தப் பின்னணியில் பணம் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரங்கள் மீது பாய்ச்சப்பட்டது. இதன் மூலம் சுய சார்பு, சுய ஆளுமையை ஒழித்துக் கட்டி, பணமே சமூகத்தின் தீர்மானகரமான கூறாக முன்னிறுத்தப்;பட்டது.

சமூகமே முன்னின்று தன் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டடைவதற்குப் பதில், வெளியில் இருந்து வரும் பணம் மூலம் தீர்வு காண முடியும் என்ற புதிய வடிவத்தை உருவாக்கியது. சமூகத்தை தனிநபராக பிரித்து, தனித்தனியாக சிந்திக்குமாறு பண்ணியது. அதேநேரம் பணத்தை கொடுத்து மாற்றத்தை கொண்டு வர முடியும் என்ற சிந்தனையை விதைத்தது. இன்று புலம்பெயர் சமூகத்தின் சிந்தனைமுறையும் இதுதான்.

மனிதனின் சுய ஆளுமையையும், சுய சார்பையும் வளர்க்கவே உதவிகள் ஒழிய அதை அழிக்க அல்ல. சமூகம் சாராது தனிமனிதனை முன்னோக்காகக் கொண்ட பண உதவிகள், சுயத்தை அழிக்கும். பணம் பெறுபவன் மட்டுமல்ல, பணம் கொடுப்பவனும் சமூகம் சார்ந்து நின்றால் மட்டும் தான், அந்த உதவி சமூகம் சார்ந்து செயற்படும். வெறுமனே பணத்தைக் கொடுப்பதால், சுய ஆளுமையையும், சுய சார்பையும் ஏற்படுத்த முடியாது. வெறும் பணம் அதை அழிக்கும்.

இன்றைய சமூக அவலத்துக்கு காரணமான சமூகத்தையும், சமூக சிந்தனையையும் கடந்த உதவிகளே, சுய ஆளுமையையும், சுய சார்பையும் உருவாக்கும்.

"ஏழையாகப்" பார்த்து, பணத்தால் உதவுவதன் மூலம், தனிமனிதன் தொடங்கி சமூகம் வரை  முன்னேறிவிடும் என்று கூறுகின்ற பித்தலாட்டங்கள், 2009க்கு (புலிக்கு) பின் வீரியம் பெற்ற சமூக அழிவு நிகழச்சிநிரல்.

ஏழைகள், கைகால் இல்லாதவர்கள், துணையை இழந்தவர்களைக் காட்டி, அவர்களுக்கு உதவக் கோரும் வண்ணம் உணர்ச்சியைத் தூண்டும் "மனிதாபிமான" செயற்பாட்டை, சமூக அக்கறையாக பிதற்றத் தொடங்கி இருக்கின்றனர். இதைத்தான் அன்று அரசு சார்பற்ற ஏகாதிபத்திய நிதியாதாரங்கள் செய்தன.

இந்த பின்னணியில் சமூகத்தின் அவலத்திற்கு காரணமான சமூக அமைப்புமுறையை ஆதரிக்கின்றவர்கள் தான், இங்கு கல்வி உதவித் திட்டங்கள் தொடங்கி கை-கால் அற்ற மனிதர்களுக்கு உதவுவதே சமூகப்பணி என்று கூறி, அதை செயல்படுத்த முனைகின்றனர்.

2009 இற்கு முன் பணத்தைக் கொடுத்து போராட்டத்தை அழித்த புலம்பெயர் சமூகம், இன்று பணத்தைக் கொடுத்து சமூகத்தின் சுயத்தை அழிக்கின்றது. சமூகம் பிறரில் தங்கி தன் சுய ஆளுமையையும், சுய சார்பையும் இழந்து வருகின்றது. பணம் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது.

இருக்கின்ற சுயசார்பை ஏழ்மையாகவும், இல்லாமையாகவும் காட்டி, அச் சுயசார்பை அழிக்கின்ற வேலையைத்தான், புலம்பெயர் சமூகம் தொடங்கி இருக்கின்றது. "ஏழையாக" பார்த்து உதவுவதன் மூலம் சமூகம் முன்னேறும் என்று பிதற்றுகின்றனர். ஒரு சமூகத்தை கட்டமைப்பது பணமா!? பணம் இல்லாததால் தானா, மனிதன் ஏழையாக இருக்கின்றான்!? பணம் இல்லாததால் தான், கல்வி பின்தங்கி இருக்கின்றதா!? பணத்தை வைத்திருக்கும் புலம்பெயர் சமூகம், இப்படிதான் அணுகுகின்றது.

புலம்பெயர் தமிழன் இதைத்தான் செய்கின்றான். சமூகத்தின் பிரச்சனைகளை தனிநபர் பிரச்சனையாக காட்டி, தனிநபருக்கு உதவுவதன் மூலம் தீர்வு காண முடியும் என்று கூறுகின்ற சமூக விரோத வக்கிரம், நவதாராளவாத உதவிக் கோட்பாடாக வளர்ச்சிபெற்று வருகின்றது.

தங்கள் பணியை "புனிதமானதாகவும்", இதை கேள்விக்கு உள்ளாக்குவது  வரட்டுவாதமாகவும்,  மனிதாபிமானமற்ற மனிதர்களின் நடத்தையாகக் காட்டி, சமூகத்தின் சுயத்தை அழிப்பதையே, தங்கள் கொள்கையாக முன்வைக்கின்றனர். பிச்சைப் பாத்திரத்தைப் பார்த்து பிச்சை போடுகின்றதைத் தாண்டி சிந்திக்க முடியாதளவுக்கு புலம்பெயர் சமூகம் கூனிக் குறுகி நிற்கின்றது. அதேநேரம் சமூகத்தின் சுயத்தை ஏழ்மையாக காட்டி அழிக்கின்றது.