Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

சிரியா மீதான மேற்கு ஏகாதிபத்தியம் நடத்திய போலித் தாக்குதல்

சிரியாவில் உள்ள இரசாயன ஆயுதங்களை அழிக்க போவதாகக் கூறி, வரிந்துகட்டிய வலிந்த யுத்தப் பிரகடனத்தை அமெரிக்கா – பிரான்ஸ் - பிரிட்டன் செய்திருந்தனர். இதையடுத்து சிரியா மீதான மேற்கின் வலிந்த எந்தத் தாக்குதலையும் முறியடிக்கப் போவதாகவும், தாக்குதல் நடத்தும் ஏவுதளங்களை அழிக்கப் போவதாகவும் ருசியா எச்சரிக்கையை விடுத்தது. ஆக மூன்றாவது உலக யுத்தத்தின் விளிம்பிற்கு, வலிந்த தாக்குதல் அறிவிப்புகள் இட்டுச் சென்று இருந்தது.

பொருட்களை வரைமுறையின்றி நுகர்ந்து கொண்டு இருந்த சந்தைச் சூழலில், மூலதனத்தை குவிப்பதில் தீவிரமாக இயங்கிக் கொண்டு இருந்த முதலாளித்துவத்தின் அமைதியான சூழலுக்கு, இந்த யுத்த அறிவிப்பு முரண்பாடாக வெளிவந்தது. அதாவது பதற்றமற்ற உலக சூழலில், ஏகாதிபத்திய தலைவர்களின் தனிப்பட்ட உள்நாட்டு அரசியல் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள விடுத்த இந்த தாக்குதல் அறிவிப்பு, பெரும் யுத்தமாக மாறும் நிலைக்கு இட்டுச் சென்றது. இதன் பின் விழித்துக் கொண்ட ஆளும் வர்க்கங்கள், யுத்தத்தை தவிர்க்கும் பேரத்தை முரண்பட்ட ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் நடத்தியது. இறுதியில் எப்படி எங்கு எந்த நேரத்தில் தாக்குவது என்ற பேரத்தை ருசியாவுடன் செய்ததன் மூலம், வரையறுக்கப்பட்ட தாக்குதலை நடத்தி முடித்தனர். அதாவது  தங்கள் "மீசையில் மண் படவில்லை" என்ற வீறாப்பு பேசி மேற்கு மக்களை ஏமாற்றும் வண்ணம், இரு தரப்பு ஓப்புதலுடன் தாக்குதல் வரையறுக்கப்பட்டு நடத்தப்பட்டது.

 

பெரும் மூலதனத்தின் கைக்கூலித் தலைவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்குள்ளான யுத்த முனைப்பை, உலக மூலதனம் தடுத்து நிறுத்தியிருக்கின்றது. உலக யுத்தம் என்பது முரண்பட்ட மூலதனத்தை அழித்து தங்களை தாங்கள் விரிவாக்கும் வளர்ச்சியின் பொது விதியுடன் தான் அரங்குக்கு வரமுடியும். இது தான் மூலதனத்தின் வளர்ச்சி விதியாகும். உலக யுத்தம் இன்றைய மூலதனத்தின் (உடனடி) வளர்ச்சி விதிக்கு முரண்பட்டதால், யுத்த நாடகமாகவே நடத்தி முடிக்கப்பட்டது.

இரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டதா, அப்படி பயன்படுத்தி இருந்தால் யாரால் என்ற விசாரணை செய்ய ஐ.நா அனுப்பிய குழு சிரியாவில் இறங்கிய அந்தக் கணமே, தாக்குதல் நடத்தப்பட்டதுடன், யுத்த நாடகமும் முடிந்துவிட்டது. எந்தவிதமான ஆதாரங்களுமின்றி தாக்குதலை நடத்தியவர்கள், தம்மிடம் ஆதாரமுண்டு என்று கூறியவர்கள், அதை வெளிப்படையாக உலகின் முன்வைக்காமலேயே தாக்குதலை நடத்தி முடித்துவிட்டனர். அதே நேரம் உலகை ஓழுங்குபடுத்துவதற்கு புதிய வழிமுறையை, இந்த தாக்குதல் மூலம் ஓத்திகை பார்க்கப்பட்டு இருக்கின்றது.

அதாவது 2ம் உலக யுத்தத்தின் பின்னான முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரக் கட்டமைப்பை ஒழுங்குபடுத்திய ஐ.நாவின் பொது (வீற்றோ அதிகாரம் கொண்ட) முடிவுகளை மீறி, வலிந்து தாக்கும் புதிய உலக ஓழுங்குமுறைக்கு, சிரியா மீதான தாக்குதல் மூலம் வித்திடப்பட்டு இருக்கின்றது.

இதன் மூலம் ஐ.நாவை செயலற்ற உறுப்பாக மேற்கு மாற்றி இருக்கின்றது. ஐ.நாவின் முடிவை மீறி தாக்கியதன் மூலம், சட்டவிரோதமாக – ஜனநாயக விரோதமாக மேற்கு செயற்பட்டு இருக்கின்றது. இந்த பின்னணியில் ருசியாவுடன் இணக்கப்பாட்டுக்கு உட்பட்ட போலித் தாக்குதலையே, மேற்கு ஏகாதிபத்தியங்களால நடத்த முடிந்து இருக்கின்றது.

ஓடுக்கப்பட்ட உலக மக்களை மிரட்டவும், சொந்த நாட்டு முரண்பாடுகளை திசை திருப்பவும் முனைந்த ஏகாதிபத்தியத் தலைவர்களும், மூலதனத்துக்கு பாய் விரித்து "விபச்சாரம்" செய்யும் ஊடகங்களும், நடந்த தாக்குதலை தங்கள் தேசத்தின் வெற்றியாக ஊதிப்பெருக்கி, ஏகாதிபத்திய தேச பக்தியை ஊட்ட முனைகின்றனர்.

இந்தப் பின்னணியில் சர்வதேசியம் என்பது ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிரான, ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து நிற்றலே. ஏகாதிபத்தியம் நடத்தும் யுத்தத்தை எதிர்த்து அணிதிரளுதல் மூலம், ஒடுக்கப்பட்ட சிரிய மக்களை முன்னிறுத்தி சிரிய அரசையும், ஏகாதிபத்தியங்களையும் தூக்கி எறிவது தான்.