Sat09232023

Last updateSun, 19 Apr 2020 8am

சமவுரிமை இயக்கம்- புதிய சமூக விஞ்ஞானம்

"சம உரிமை இயக்கம்" இன்று நாடளாவிய அளவில் இலங்கைக் குடிமக்களால் பேசப்படும்-கவனிக்கப்படும்- அணுகப்படும்- விமர்சிக்கப்படும்- சந்தேகிக்கப்படும்- அவதானிக்கப்படும் ஒரு அரசியல் அசைவாக விளங்குகிறது.

இலங்கைக் குடிமக்களின் இந்த புதிய "அரசியல் அசைவு" பலதரப்பட்ட வகை மனிதர்களுக்கு அவரவர் நலன்கள் சம்பந்தப்பட்ட கோணங்களில் விளைவுகளைத் தருவதாக அமைந்துள்ளதை இலங்கையின் அண்மைக்கால அரசியல் நகர்வுகள்-நிகழ்வுகள் சுட்டிக் காட்டி நிற்கின்றன.

இந்த அசைவு:

(1) இனவாதிகளுக்கு சாவுமணி அடிக்கிறது

(2) அரசியல் பித்தலாட்டக்காரரை தோலுரிக்கிறது

(3) சுரண்டல் பொருளாதார கட்டமைப்பை நிராகரிக்கிறது

(4) அந்நிய ஏகாதிபத்திய ஊடுருவலைத் தடுக்கிறது

(5) ஜனநாயக சீர்கேடுகளை அழித்தொழிக்கிறது

(6) மக்கள் மந்தைகளாக ஆவதை தடை செய்கிறது.

(7) மக்களை மந்தைகளாக ஆக்குவதையும் தடை செய்கிறது

(8) மனிதர்களுக்கிடையில் உள்ள வேறுபாடுகளை களைகிறது.

(9) ஆண்-பெண் சமத்துவத்தை நடைமுறைப்படுத்துகிறது.

(10) மனிதநேயமுள்ள குடிமக்களை உருவாக்குகிறது.

(11) குடிமக்களை உலகத்தின் தலைசிறந்த மனிதர்களாக விளங்கச் செய்கிறது.

(12) இலங்கையை உலகத்தின் முன்னுதாரண நாடாக ஆக்குகிறது.

இன்று எமது நாட்டிலுள்ள சூழலில் "இந்த அசைவு"க்கு எதிராக மக்களின் விரோதிகள் பற்பல பதாகைகளுடன் நின்று விமர்சனம் செய்கிறார்கள். விதம் விதமான வியாக்கியானம் வழங்குகிறார்கள். பல நிறப்பட்ட சாயங்கள் பூசுகிறார்கள். சேறு வாரி இறைக்கிறார்கள். உயிரையும் பறிக்கிறார்கள்.

"மக்களுக்கு மக்களால் மக்களை வைத்து" என்ற ஜனநாயக நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்தும் இலங்கை அரசமைப்பின் அடித்தளத்தை மாற்றுவதற்கான பொறிமுறையாக- சிகிச்சையாக-மருந்தாக- புதிய கண்டுபிடிப்பாக இந்த 'சம உரிமை இயக்கம்" இயங்குகிறது. இதனைப் பற்றிப் பேசவும்-விமர்சிக்கவும்- போற்றவும்- புழுதிவாரித் தூற்றவும்- தண்டிக்கவும் தகுதி வாய்ந்தவர்கள் அல்லது உரிமையுடையவர்கள் இலங்கைக் குடிமக்களே. அதாவது சாதாரண பாமர பாட்டாளி மக்களே.

இந்த "அசைவு" இயக்கம் பற்றி தவறான-எதிரான பிரச்சாரம் செய்பவர்கள் அனைவருக்கும் "சூடு கண்ட பூனையின்" அனுபவம் இருக்கிறது. சுயநல சிந்தனைப் பார்வை உள்ளது. இவர்கள் சுய சிந்தனை- சுய நம்பிக்கை அற்ற மனிதர்கள். மாக்ஸ்-மாவோ-மகாத்மா வரிசையில் 'தாங்கள் அடுத்தது" என்ற நப்பாசையில் உழலுபவர்கள். சுய காழ்ப்புணர்வுகளுக்காக மக்களைப் பலிக்கடா ஆக்குபவர்கள். தங்களைத் தாங்களே நம்பாதவர்கள். தங்கள் பிழைப்புக்காக சமூக முன்னேற்றத்தைத் தடுப்பவர்கள். சமூக முரண்பாடுகளில் தங்கி நின்று தங்கள் வாழ்வை வளம்படுத்தும் ஒட்டுண்ணிகள்.

ஒரு காலத்தில் சுதந்திரமாக வாழ்ந்த மக்கள் கூட்டம் அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகளால் அடிமைப்படுத்தப்பட்டு பிளவுபடுத்தப்பட்டு அடிமை மனப்பான்மை ஊட்டி வளர்க்கப்பட்டு சுய சிந்தனை அற்று எடுத்தற்கெல்லாம் அடுத்தவரிடம் கையேந்தி நிற்கும் அபலைகள் கூட்டமாக இன்று ஆக்கப்பட்டுள்ளது. "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" என்று கற்பித்த பாரம்பரியத்தில் வந்த இனம் இன்று "(வெளிநாட்டுக்கு) ஓடி வாழ்ந்தால் (நமக்கு) கூடும் நன்மை" என்று வாழத் தலைப்பட்டுக் கொண்டு அலைகிறது.

'சம உரிமை இயக்கம்" என்பது இலங்கைக் குடிமக்களின் மிக நீண்டகால வரலாற்றின் அனுபவங்களுக்கூடான படிப்பினையின் இயங்கியல் நடைமுறையாகும். இது ஒரு புதிய சமூக விஞ்ஞானக் கண்டுபிடிப்பாகும். இன்றைய இலங்கையின்- இலங்கை வாழ் அனைத்து மக்களின் சகல பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் ஒரு விஞ்ஞானப் பொறிமுறையாகும். இந்தப் புதிய இயந்திரத்தைப் பரீட்சித்துப் பார்ப்பது ஒன்றேதான் இன்று நம்முன்னே உள்ள ஒரேயொரு வழியாகும். இது சரியாக-ஒழுங்காக இயங்கினால் அனைவருக்கும் வாழ்வு. இயங்காது விட்டாலும் கூட இழப்பதற்கு எம்மிடம் எதுவுமேயில்லை.

'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு"