Tue12062022

Last updateSun, 19 Apr 2020 8am

இனியொரு விதி செய்வோம் - பகுதி 11

இறுதிநேர எமாற்றத்தை தந்த கிரிக்கெட் பெருவிழா முடிவெய்தி  விட்டது. இராணுவ வெற்றியைப் போல பத்தாவது உலகக் கிண்ணக் கோப்பையைக் கைப்பற்றும் கனவு கரைந்து போய் விட்டது. ஆயினும் என்ன, தமது பணப்பையைப் பெருக்கவும் மீளாத போதையில் சனங்களை ஆட்படுத்தவும் அடுத்த ஒரு சுற்று விளையாட்டுக்கு நமது வீரர்கள் இந்தியா போய்விட்டார்கள்.

 

வென்றாலும் தோற்றாலும் இதோடு இலங்கை அணியின் தலைமையை அடுத்த தலைமுறையிடம் தாரை வார்க்கத்தான் இருந்தேன் எனக் கூறி சங்கக்கார முடி துறந்து அங்கே குட்டிச் சாம்ராச்சிய அணியொன்றுக்கு தலைமையேற்றுச் சென்றுள்ளார். இந்தப் பெரிய அணியின் முடி சூடப்போகும் பெருந்தலை எவரது?

அநேகமாய்க் கிரிக்கெட்டுக்காக மதம் மாறிய ஒரு முன்னாள் முஸ்லிம் பெருந்தகைக்கு வாய்ப்பிருக்கலாம் எனக் கதை அடிபடுகிறது. முத்தையா முரளிதரன் முடிந்த வரை தனது தமிழ் அடையாளங்களை மறந்து முக்கால் சிங்களமும் பௌத்த சிங்களப் பேரினவாத இலங்கையர் தோற்றமும் காட்டித் தான் அணியில் நிலைத்தார். இருப்பினும் கால் பதியாததாலோ, என்னவோ கௌரவத் தலைவராய்க் கூட ஒரு போதும் வர இயலவில்லை. புதியவருக்கும் முழுதாய்ச் சிங்களமாயானதற்குரிய பரிசில் கிடைக்கலாம்.

அட்டனில் நடந்த மோதல்

தவிர, அட்டனில் ஏப்ரல் தொடக்க நாட்களில் இடம் பெற்ற தமிழ் – முஸ்லிம் குட்டி இனக்கலவர மோதலில் பேரினவாதம் முஸ்லிம் தரப்போடு அணி சேர்வதாலும் மேற்படி வாய்ப்புக்கு சாத்தியமுள்ளது.  ஒரு பக்கம் தமிழ் – சிங்களப் புத்தாண்டு, மறுபக்கம் தட்டிவைக்கும் வாய்ப்பு, பௌத்த சிங்களப் பேரினவாதச் சக்கரவர்த்திக்கு காட்டில் பெருமழை!

அட்டனில் நடப்பது என்னவென்ற முழு விபரங்கள் வெளிப்படாத போதிலும் சில அடிப்படை உண்மைகள்  வெளிப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உண்மை அறியும் குழுக்கள் பூரண ஆய்வுகளோடு பல பக்கத் தரவுகளை வெளிப்படுத்த இயலுமாக இருப்பது போல இங்கு இல்லை. அதற்குரிய ஜனநாயகச் சூழல் முற்றாகவே இல்லை என்பதோடு, அதில் ஆர்வம் கொள்ளக் கூடிய சமூக அக்கறை மிக்க சக்திகள் மூன்று தசாப்தங்களின் முன் இருந்தே முளையில் கருக்கப்பட்டு வந்தமையால், இன்று எவரும் இவை குறித்து அக்கறை கொள்வதில்லை. அவ்வாறு ஆகவும், ஊடகங்கள் கக்கும் இனவாத வாந்தியை உள்ளெடுத்து ஒவ்வோர் இனத்தவரும் மற்றவர் மீது பழி சுமத்தி தத்தமது தரப்பு செய்ததெல்லாம் சரி என்ற முடிவடன் பவனி வர வாய்ப்பாகிறது. எதற்கு உண்மைகளை அறிய வேண்டும்?.  நம்ம கார், நம்ம ரோட்டு, போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதானே?.

வெறெங்கும் இத்தகைய இனப் பிரச்சனைகளில் ஏதோவொரு தரப்பில் கூடுதல் தப்பும் மற்றையதிடம் சில நியாயங்களும் இருக்கும். இலங்கையின் சிறப்புக் குணாம்சமே இலங்கை இனப்பிரச்சனையில் சிங்கள – தமிழ் – முஸ்லிம் எனும் முத்தரப்பிடமும் சம அளவான தவறுகள் உள்ளன என்பதுதான். பௌத்த சிங்களப் பேரினவாதம் ஆளும் தரப்பு என்கிற வகையில் தீர்வுக்கான பொறுப்பு சிங்களவர்க்குரியது எனினும், அவர்களிடம் பல்லினத் தேசியம் சார் இலங்கையர் என்பதை விடவும் சிங்களத் தேசியமாயே இலங்கைத் தேசியத்தைக் கருதும் பண்பு மேலோங்கியுள்ள போதிலும், தமிழரிடமும் முஸ்லிம்களிடமும் உள்ள அந்நிய நாட்டம் சார்ந்த தவறு ஒன்றுக்கொன்று ஈடுகொடுப்பதாகி விட்டது. அதாவது பேரினவாத ஒடுக்கு முறையால் சிங்கள மக்கள்  கொண்டிருக்கும் குற்றம் சொந்த மண்ணை நேசிப்பதை விட அந்நியத் தன்மை கொள்கிற ஏனைய இரு இனங்களுடனம் சமப்பட்டு விடுகிறது.

அட்டனில் மோதல் தமிழ் – முஸ்லிம் பிரிவுகளுக்கானதல்ல.  முஸ்லிம் – மலையகத் தவர்க்குரியது. மலையக மக்களுக்கு எந்தளவில் தமிழ் அடையாளப்படுமோ அந்தளவுக்கு முஸ்லிம்களுக்கும் பட்டுள்ளது. இலங்கைத் தமிழ் என்பது சிங்களத் தேசியத்துடன் பிரிவினை கோரி மோதும் வலுவுடன் ஆண்டபரம்பரை அகங்காரத்தில் இருப்பது. முஸ்லிம் – மலையக தேசிய இனங்கள் அவ்விரு பேரினவாதங்களாலும் பாதிக்கப்படுகிறவர்கள். மிகுந்த பாதிப்புக்குள்ளாகும் இந்த இரு இனங்கள் மோதுவதென்பது இத் தேசத்தின் மிகப்பெருந் துயர். பேரினவாதிகள் பயன்படுத்தும் வகையில் சாய்வு கொள்வது நாம் ஒருபோதும் உருப்படப்போவதில்லை என்பதற்கான அடையாளமா?.

தை மாதத்து உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் தமிழ் – முஸ்லிம் ஐக்கியத் துக்கான வலுவான அடையாளம் வெளிப்பட்ட பின்னர் இப்படியொரு சாபக்கேடு!.  இது இயற்கை நியதி தான். மூன்று மாதங்களுக்கு முந்திய அந்த ஐக்கியம் மக்கள் நலன் சார்ந்த மானுட விடுதலை நேசிப்புக்குரியது. இந்த மோதல் சுரண்டற் கும்பலின் மக்கள் விரோத நாட்டத்துக்குரியது.

குன்றத்து குறுநில மன்னன்!

மலையத்தின் குறுநில மன்னன் நானே என வெறியாட்டம் போடும் ஒரு ஜமீன்தார் மனோபாவத் தலைவருக்கும் உள்ளுராட்சித் தேர்தலில் தமக்கான ஆட்சியைத் தக்கவைக்க முயலும் முஸ்லிம் ஆதிக்க மனோபாவ சக்திக்குமான முரண்பாடு முஸ்லிம் – மலையக முரண்பாடாக விஸ்வரூபங்கொள்ளத் திசை முகப்படுத்தப்படுகிறது. விடுதலையை நேசிக்கும் முஸ்லிம் – மலையக மக்கள் இதற்குப் பலியாக வேண்டுமா?.  சிங்கள உழைக்கும் மக்களை நசுக்கும் பேரினவாத சக்திகளுடனேயே மோதலை மேற்கொண்ட இரு தலைமைகளும் கைகோத்துள்ளன என்பது இரகசியமான ஒன்றில்லையே (இப்படிக் கேட்பதே கேலிக்குரியதாக உள்ள அளவுக்கு அவர்கள் வெளிப்படையாக பேரினவாதிகளின் கரங்களுக்குள் திளைப்பது பட்டவர்த்தனமானது).

இன்று இலங்கைத் தமிழருக்கும் மலையக மக்களுக்கும் எதிராக முஸ்லிம் மக்களைப் பயன்படுத்த முனையும் சிங்களப் பேரினவாதம் ஒரு நாள் தமக்கு எதிராக ஆண்ட பரம்பரையோடும் குன்றத்துக் குறுநில மன்னரோடும் கூட்டுச் சேர்ந்து தாக்குதல் தொடுக்கும் என்பதை விளங்கிக் கொள்வது அவசியம். கிழக்கில் முஸ்லிம் மக்களது நிலங்கள் அபகரிக்கப்பட்டு வருவதோடு விரைவில் கிழக்கின் பெரும்பான்மையினர் சிங்களவரே எனும் நிலையை நோக்கி நடவடிக்கைகள் நகர்ந்து கொண்டிருக்கம் சூழலிலேயே ஒடுக்கப்பட்ட இனங்களின் ஐக்கியம் உணரப்பட்டு வந்தது. இதனை ஏனைய பிராந்திய முஸ்லிம் மக்கள் கண்டும் காணாததுபோல் இருந்துவிடுவதோ?

இலங்கையின் முதலாவது இனக் கலவரமான சிங்கள – முஸ்லிம் மோதல் நடந்து (1915) நூறாண்டாகவுள்ள  நிலை. அதன் போது இலங்கைத் தமிழ் ஆண்டபரம்பரையும் மலையகத் தேசியம் உருவாகும் போது இந்தியாவுக்கு போய் விட்ட இந்திய வணிகக் கூட்டமும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாதிகளுடன் கைகோர்த்து செயற்பட்டமை வரலாறு!.  அத்துயர் மிகு வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ளாமல் மீண்டும் பலியாடுகள் ஆவோமா?.  அப்போது தேசிய இனங்கள் வடிவங் கொள்ளவில்லை. இலங்கைத் தமிழர் முழுநாட்டிலும் தமது சுரண்டல் நலன் வியாபித்து இருந்த காரணத்தால் சிங்களப் பேரினவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்து மலையக மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் துரோகமிழைத்தனர். வேறெவரைக் காட்டிலும் மிக மோசமாக சிங்களப் பேரினவாதத்தால் அவர்கள் வேரறுக்கப்பட்டு நிர்க்கதியாகி விட்டனர். அதிகாரக் கும்பல்கள் இழைத்த அந்தத் துரோகங்களிலிருந்து கற்றுக் கொண்டு விடுதலை நாடும் மக்கள் சக்திகள் ஐக்கியப்பட வேண்டாமா?.

தேர்தலும் கிரிக்கெட்டும்

உள்ளுராட்சித் தேர்தல் முரண்பாட்டை மோதலாக்கும் களமாக கிரிக்கெட் போட்டி நாள் தெரிவு செய்யப்பட்டமை கவனிப்புக்குரியது. இறுதிப் போட்டி இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையே நடந்தது. இலங்கையின் 274 ஒட்டங்களை இந்தியாவால் முறியடிக்க முடியாது என்ற கணிப்பே நிலவியது.  ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணி அடுத்தடுத்து இரு விக்கெட்டுக்களை இழந்த போது அட்டன் மோதல் களத்தின் முஸ்லிம் தரப்பு வெடி கொளுத்தியது. இந்தியாவின் இடத்தில் பாகிஸ்தான் விளையயாடியிருந்தால் இவ்வாறு வெடி கொளுத்தியிருக்கக் கூடிய மலையகத் தரப்பு, இறுதியாக இந்தியா வென்றதும் ஆரவாரத்தோடு வெடி கொளுத்தியது. இவ்வாறு இலங்கையைப் பாகிஸ்தான் வீழ்த்தியிருந்தால் ஆரவாரக் கொண்டாட்டம் மேற்கொண்டிரக்கக் கூடிய முஸ்லிம் தரப்புக்கு அப்போது தேசியப் பற்று வேகமாய் மேற்கிளம்பவதற்கு இந்தியா முஸ்லிம் விரோத நாடு என்ற கற்பிதம்காரணம்!.

 

இந்தியா உலகின் இரண்டாவது முஸ்லிம்களின் பெரும்பான்மை உடைய நாடு. பல தவறுகள் இருப்பினம் மதசார்பற்ற நாடு என்ற பிரகடனத்துடன் உள்ளது. இத்துத்துவவாதிகள் மீள ஆட்சிபெற இயலா அளவில் ஜனநாயக சக்திகளும் மதசார்பற்ற சக்திகளும் விட்டுக்கொடுப்பற்ற போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். முஸ்லிம்களுக்கு எதிராக எங்கு ஒரு அநியாயம் நடப்பினும் உடனே விரைந்து இந்துத்துவத்தை வன்மையாக நிராகரிக்கும் இந்துக்களும் சரி எனைய சக்திகளும் சரி நியாயம் கிடைப்பதற்கு ஏற்ற தொடர் செயற்திட்டங்களை முன்னெடுடுக்க இயலுமாயுள்ளது. முஸ்லிமம்களைப் படுகொலை செய்த குஜராத் கலவரத்தின் தலைவர் என்கிறவகையில் முதலமைச்சர் மோடிக்கு அமெரிக்கா வருவதற்கு விசா வழங்கக்கூடாது எனப் போராடியவர்கள் அமெரிக்க வாழ் இந்துக்கள் என்பது மறக்கக்கூடிய ஒன்றா? அந்தவகையில் பாகிஸ்தானை நேசிக்கும் அதே உணர்வோடு இந்தியாவையம் நேசிக்கும் மனப்பாங்கை இங்குள்ள முஸ்லிம்கள் பெறமுடியாதா?

இந்திய ஆளும் தரப்பு தொடர்ந்து எமக்கு இழைத்து வரும் துரோகங்களை மலையக மக்களும் இலங்கைத் தமிழர்களும் பார்க்க மறுப்பதா?.  யாழ்ப்பாணத்தில் நைன்ரிகள் இந்தியா வென்றதற்கு வெடி கொளுத்திய போது இளைஞர்கள் துக்கப்பட்டனர். இளமை பொங்கும் யாழ் இரத்தம் இந்தியத் துரோகத்தை மறக்க முடியாமல் இலங்கை வெற்றியை வேண்டி நின்றனர்.  கிழட்டு யாழ் வறட்டு ரத்தத்துக்கு என்ன வந்தது – இந்திய மோகம் கொள்ள?.  மலையக மக்களின் குடியுரிமை மறுக்கப்பட்டு நாடு திரும்பிய மலையக மக்களை இந்தியராக ஏற்காது  ‘நாடு திரும்பிய அகதிகள்’ என்ற பட்டியில் அடைத்த அதிகாரவர்க்கம் எமக்காக முள்வேலி அடைப்புகளையே பரிசாகத்தரும். எமது மண்ணை நேசிப்போம். இந்திய – பாகிஸ்த்தான் மக்களை நேசிப்போம். உலக மக்களை நேசிப்போம்!. அதிகாரத்துவத்தின் அனைத்து வடிவங்களுக்கும் எதிராய் உலக மக்கள் ஒன்றிணைந்தாக வேண்டும்.

(தொடரும்)