Tue12062022

Last updateSun, 19 Apr 2020 8am

சாதி - தேசம் - பண்பாடு - பகுதி-1

சாதியத்  தேசியம் சாத்தியமாவது குறித்துப் பேசும் போது அதன் சுயநிர்ணயம் எத்தகையது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. இந்தியா-இலங்கை எனும் நாட்டுத் தேசியங்களினுள் (குறிப்பாக இங்கே இலங்கையை முன்நிறுத்தி) தமிழ் இனத் தேசியமும் அதனுள் இந்த சாதித் தேசியம் பெறத்தக்க இடம் பற்றியும் பேச வேண்டியுள்ளது. இன்றைய மாறிவரும் உறவுச் செல்நெறிகளில் இவை குறித்த வரையறைகள் செயற்படும் இயக்கங்களுக்கு அவசியமானதாகின்றது. வர்க்க சக்திகளிடையிலும், தேசங்களிடையேயும் இடம்பெறும் சமநிலை மாற்றங்கள் எவ்வளவு விரைவில் கணிப்பிட்டு  ஏற்ற தந்திரோபாயங்களை வகுத்து செயற்பட முடிகிறதோ, அதில்தான் பாட்டாளி வர்க்க இயக்கமொன்றின் முன்னேறித் தாக்குதலுடனான வெற்றிகள் சாத்தியமாக முடியும். அந்த வகையில் சாதியச் தேச இருப்பும் அதன்மீதான பணபாட்டின் தாக்கமும் குறித்து இக்கட்டுரை அலசும்.

இந்தியா, இலங்கை எனும் நாட்டுத் தேசியம் கட்டமைக்கப்பட்ட போது, கூடவே பாகிஸ்தான் உருவாகி ஏற்பட்ட பிரிவினையோடு இணைந்த இனங்களிடையே இடம் பெற்ற வன்முறைக் கொலைத்தாண்டவம் கேடான அனுபவமாய் அமைந்தது. அதன் பேறாக எமது மார்க்சிச அமைப்புகள் இனத் தேசியங்களின்  சுயநிர்ணயத்தையே ஏற்க விருப்பமற்ற சூழலைத் தோற்றுவித்தது. இலங்கையில் எழுபதுகளில் தமிழ் இனத் தேசிய எழுச்சியோடு சுயநிர்ணயம் குறித்த தேடல் தொடங்கிய போது, இங்கை கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் இனம் ஒரு தேசிய இனமே இல்லையென வாதிட்டு, சுயநிர்ணயத்தை மறுக்க முயன்றது. பிரிவினையானது ஆபத்தான விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்ற நிலைப்பாட்டிலிருந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. தொடர்ந்த வரலாற்றுப் போக்கு தமிழினத்தை தனியான தேசிய இனம் என்பதை வலுவாக  காட்டியதுடன், பிரிவினை மோகம் எத்தனை மோசமான கேடுகளை ஏற்படுத்தும் என்பதையும் காட்டிச் சென்றுள்ளது.

இத்தகைய வளர்ச்சியோடு சுயநிர்ணயம் என்பதைப் பிரிவினையிலிருந்து வேறுபடுத்தும் அதேவேளை மார்க்சிச அமைப்புக்கள்  முன்னர்பேர்ல் இறுக்கமாகவன்றி, பரந்த தளங்களில் விரிவுபடுத்தி பிரயோகிக்க முன்வந்துள்ளன. இது தொடர்பில் நேபாள அனுபவங்கள் கவனத்திற் கொள்ளத்தக்கது. சாதிக் கட்சிகள் யதார்த்தமாகியுள்ள சூழலில் சாதித் தேசத்துக்கான சுயநிர்ணயத்தை நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுக்கள் நடைமுறையாக்கும் முயற்சிக்கான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை கவனிப்புக்குரியவை. சாதியத் தேசியமும் அதன் சுயநிர்ணயமும் எனும் வகையில், அது இல்லாத போதிலும், அ. மார்க்ஸ் நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுக்கள் “புரட்சியில் இட  ஒதுக்கீட்டு” நடைமுறையைப் பிரயோகிப்பது பற்றிக் கூறுவது, உண்மையில் சாதித் தேசத்துக்கான சுயநிர்ணயத்தையே காட்டுகிறது. (அதன் பொருளில் இன்னமும் விரிவாக்கம் பெற இடமுண்டு)

“நேபாள அரசியல் இதற்கு இன்னொரு சான்று. அங்கே 12-ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தை நடாத்திக்கொண்டிருந்த மாவோயிஸ்ட்டுக்கள், அங்கு புதிதாக உருவாகியிருந்த அடையாள உறுதியாக்கங்களைப் புரிந்து, உள்வாங்கி ஏற்றுக்கொண்டனர். அதற்கு ஏற்ப தம் கட்சித் திட்டத்தையும் மாற்றியமைத்தனர். 20-ஆண்டுகளுக்கு முன் அங்கே மாதேசி, ஜனஜாதி தலித் முதலான அடையாள உருவாக்கங்கள் வலுவாகச் செயற்பட்தில்லை. ஜனஜாதி, தலித் முதலான சொற்கள் நேபாளி மொழியில் இல்லாதவை. முன்னது வங்க மொழிச் சொல். பின்னது மராத்தி. மாதேசி இந்திய வம்சாவழியினரைக் குறிப்பது. ஆயுதப் போராட்டத்தின் மூலம் சுமார் 9-மாவட்டங்களை மாவோயிஸ்ட்டுக்கள் விடுதலை பிரதேசங்களாக அறிவித்தபோது, ஒன்று தலித் தலைமையில் உருவாக்கப்பட்டது. மேலும் ஐந்து முற்குறிப்பிட்ட அடையாளங்களின் அடிப்படையில் தலைமைகள் உருவாக்கப்பட்டன. புரட்சியிலும் இட ஒதுக்கீடு என்கின்ற புதுமை அங்கே ஏற்றுக்கொள்ளப்பட்டது”. (அ. மார்க்ஸ் 2009 அரசு, இறையாண்மை, ஆயுதப்போராட்டங்கள்,– புலம், சென்னை. பக்.24-25) என்பார் அ. மார்க்ஸ். மாதேசி, ஜனஜாதி, தலித் போன்ற தேசியப் பிரச்சினையின் வடிவத்தை, அடையாளங்களாக குறுக்கிப் பார்ப்பதில் உள்ள தவறு, இங்கு நாம் தொடர்ந்து விவாதித்துச் செல்லும்போது, தீர்வுக்குள்ளாக்க வல்லது. அவ்வாறே சிறு அடையாளங்களையே  முழுதாகக் கவனங்கொண்டு, சமூக மாற்றத்திற்கான அக்கறையைப் பெருங் கதையாடல்களாக நிராகரிப்பது, (அல்லது குறைத்து மதிப்பிடுவது) எவ்வகைக் கேடு என்பதையும் பின்னாலே பேசிக்கொள்வோம்.

சாதித்தேசம் பற்றிய விவாதம் உடனடித் தேவை

ஏனைய தேச வடிவங்களை விடுத்து, இங்கே சாதித் தேசம் குறித்து விவாதிப்பது உடனடித் தேவையாக உள்ளது. சாதி எவ்வாறு தேசத்துக்கான பண்பைப் பெற முடிகின்றது. சாதிகளின் தோற்றம் வளர்ச்சி இன்றைய இயங்காற்றல் என்பனவற்றிலிருந்து இதனைப் புரிந்துகொள்ள முடியும். பல தளங்களில் இவை குறித்த ஆரோக்கியமான ஆய்வுகள் வெளிப்பட்டுள்ளன. அதிலும் தமிழகத்தில் மிகக் காத்திரமான பங்களிப்புக்கள் இது தொடர்பில் உண்டு. பிராமணியத்துக்கு எதிரான திராவிடரியக்க எழுச்சி,  அதற்கான களம் அமைத்துக் கொடுப்பதாக அமைந்தது. தவிர, திணைகளாக இயங்கிய தமிழக வரலாற்றுத் தொடக்கத்தில் மருதத்தினை ஏனைய திணைகளை வென்றடக்கி அரசுருவாக்கத்தை ஏற்படுத்தியதை அறிவோம். இது சாதித் தோற்றத்தை விளங்குவதற்கான கோட்பாட்டு உருவாக்கததை வழங்க ஏற்றதாக அமைந்துள்ளமையும் கவனிப்புக்குரியது. திணைக் கோட்பாடு சார்ந்து சிவத்தம்பி முன்வைத்த கருத்துக்கள் சாதி குறித்த ஆய்வில், ஏற்கனவே தாக்கம் செலுத்தியுள்ளன. ஆயினும் இலக்கிய-இலக்கண பயன்பாடுகள் சார்ந்து திணைக் கோட்பாடு கவனங் கொள்ளப்பட்ட அளவோடு ஒப்பிடுமபோது சமூக உருவாக்கத் தளம் சார்ந்து, அதன் பரிமாணங்கள் வெறும் ஆரம்ப மட்டத்திலேயே இருக்கிறது. இங்கும் தமது பேசு பொருள் சார்ந்து சில அடிப்படை அம்சங்களை கவனத்திலெடுத்து மேற்கொண்டு ஏனையவற்றையே பேச வேண்டியிருக்கும். (ஆழமான ஆய்வுக்கான அவசியத்தை ஏற்கும் பட்சத்தில் இனிவரும் காலம் அதனைத் தானே வெளிக்கொணரும்.)

சங்ககாலம் என அறியப்படும் வீரயுகத்தில் ஏற்பட்ட சமூக மாற்றச் செல்நெறியை ராஜ்கௌதமன் தனி நூலாகத் தந்துள்ளார். அது முற்றிலும் இலக்கிய ஆதாரங்களை மட்டும் கவனங் கொண்டு எழுதப்பட்டது. அந்த வகையில் அதன் போதாமை குறித்து விமர்சிக்கப்படடதுண்டு. ஏனைய வரலாற்று மூலங்களை கவனம் கொள்ளாத போதிலும், அவரது இலக்கிய வழி வெளிப்பாடு ஏனைய ஆதாரங்களால் நிராகரிக்கப்பட வல்லதான, பலவீனப்பட்ட நிலையில் இல்லை. என்பதே நிதர்சனம். ராஜ்கௌதமன் வெளிப்பாட்டிலுள்ள இடைவெளியை நிறைவு செய்வதாக இலங்கையில் தமழினத்துவ உருவாக்கம் சார்ந்த இந்திரபாலாவின் நூல் அமைந்துள்ளது. இந்திரபாலா தமிழக வரலாற்றுத் தொடக்கத்தை பல்வேறு வரலாற்று மூலங்களின் வழி வெளிப்படுதிதியுள்ளார்.

தமிழகத்தின் சாதிய வரலாற்றுத் தொடக்கம்

தமிழகத்தின் வரலாறற்றுத் தொடக்கம் உலகின் ஏனைய பகுதிகள் போல் விவசாய எழுச்சியைத் தொடர்ந்த – வணிக எழுச்சியைக் காட்டுவதில்லை. விவசாய எழுச்சிக்கு முன்னரே வணிகம் சாத்தியப்பட்ட வரலாற்றுத் தொடக்கம், தமிழின் பல தனித்துவங்களுக்கு வழி வகுத்துள்ளது. ஐந்து திணைகள் ஆளுமையோடு அடையாளங் காணப்படுவதற்கு அதுவே வாய்ப்பளித்ததாக அமைந்தது. விவசாயத்திற்கு முந்திய வணிக சாத்தியம், சுமேரிய வணிகக் குழுக்களின் குடியேற்றத்தினாலாக இருக்கும் வாய்ப்பை இந்திரபாலா காட்டியுள்ளார். அதேவேளை ஏனைய இடங்கள் போல விவசாய எழுச்சியுடன் வணிக எழுச்சி பற்றியும் பேசும்போது முந்திய வணிக எழுச்சி விவசாயம் சாராமல் இருக்க முடிந்ததன் வரலாற்று முக்கியத்துவத்தை போதியளவு புரிந்து கொள்ளாதவராகிறார். பிந்திய வணிக எழுச்சி சங்க மருவிய காலத்திற்குரியது. இதற்கு நெடுங்காலம் முன்னதாக சுமேரிய வணிகக் குழுக்களின் வருகைக்குக் காரணமான குறிஞ்சித் திணையின் ஏலம், கறுவா, கராம்பு, நீல மாணிக்கம் மற்றும் நெய்தலின் முத்து வணிகம் சார்ந்து அந்தத் திணைகள் பெற்ற ஆளுமை பிரத்தியேக கவனிபுக்குரியது. இவை விவசாய எழுச்சிக்கு முந்தியவை. இக் காரணத்தினாலேயே வீரயுக இலக்கியத்தில் வணிகக் கருத்தியலுக்கான  சமண, பௌத்த, ஆசீலக கவிதைகள் இடம்பெற முடிந்துள்ளன.

சேர அரசுருவாக்கத்தின் போது அதன் சின்னமாக உள்ள அம்பு வில் முல்லையைக் குறிப்பதாக சொல்வோருளர். அது முல்லைக்குரியதல்ல. குறிஞ்சிக்குரியது. சேர அரசுருவாக்க நகர்கள் குறிஞ்சித் திணையோடு தொடர்பு பட்டிருக்கக் காணலாம். பாண்டிய அரசுருவாக்கத்தில் மீன்கொடி நெய்தல் திணையை நினைவுபடுத்துவது, அதன் முத்து வணிகம் கவனிப்புக்குரியது. அது தொடர்பில் ஒரு யவன அரசர் தனது மகனை மணம் முடித்துக் கொடுத்ததுடன், சீதனமாக பாண்டிய அரசை விங்கியதான குறிப்பு கவனிப்புக்குரியது. இதுபற்றி கங்காதரன் தனது நூலில் கூறியுள்ளதை பார்ப்பது அவசியம்.

ஆயினும் குறிஞ்சி, நெய்தல் திணைகள் நேரடியாக அரசுருவாக்கத்தை சாதித்தன எனக் கொள்ள முடியாது. படை நடத்தவும், குடியோம்பவும் ஏற்ற  செல் உற்பத்தி சாத்தியமான மருதத்திணைப் பண்பு வாய்ந்த பின்னரே அரசுருவாக்கம் சாத்தியமாகியிருக்க முடியும். குறிஞ்சி, நெய்தல் ஆகிய திணைகளின் வணிக முன்னேற்ததுடன் ஆற்று நீர்ப்பாசன வாய்ப்புள்ள மருதத் திணைக்கு மாறி வளர்ந்த இனக் குழுக்களிடம் முந்திய தொன்மங்களின் நீடிப்பாக அம்பு வில், மீன் ஆகிய கொடிகள் தொடர்வதாகவே இதனை விளங்கிக் கொள்ள வேண்டும். படை நடத்த வல்லதாக மருதத்தினை ஏற்படுத்தித் தந்த வாய்ப்புடன் குறிஞ்சி, நெய்தல், முல்லை, பாலை ஆகிய திணைகள் வென்றடக்கப்பட்டு சாதிகளாக்கப்பட்டமை தொடர் வரலாறு. இந்தளவில் திணைக் கோட்பாட்டின் சமூக உருவாக்க – விரிவாக்க தேடல் இங்கு போதும்.

“யாதும் ஊரே யாவரும் கேளீர்;” எனும் வீரயுகப் பிரகடனத்தை அறிவோம்”.

தனித்திருந்த இனக் குழு வாழ்முறை பேரரசு எல்லைக்குள் வேறு இனக் குழுக்களுடன் உறவு கொள்ளும் நிர்ப்பந்தத்தின் வெளிப்பாடு இது. பல்வேறு தொழில்சார் கிராமிய வாழ்வின் உறவுக்கு ஏற்புடையதாக இவ்வகையில் மாற்றப்பட்ட இனக்குழுக்கள் சாதிகளாக்கப்பட்டன.

விவசாய உற்பத்திக்கு அமைவாக வென்றெடுக்கப்பட்டு இவ்வாறு சாதிகளாக்கப்பட்ட இனக்குழுக்கள் தாம் இருந்த இடத்துக்கு அமைவான தொழிலைப் பரம்பரை பரம்பரையாக தொடர நிர்ப்பந்திக்கப்பட்டதன் பேறுதான் சாதி. மேலாதிக்கம் பெற்ற இனக்குழு ஆளும் சாதியமாகவும், ஏனையவை இறங்குவரிசைப் படிநிலைக்குரிய சாதிகளாகவும் கட்ட்மைக்கப்பட்டன. இவ்வகையில் குறித்த தொழில் வம்சாவழியாக நீடிப்பதனை உறுதிப்படுத்தும் வகையில் அகமணமுறை கட்டாயமாக்கப்பட்டது. இனக்குழு வாழ்முறையில் இருந்த தீட்டு கோட்பாடு சாதிகள் சார்ந்த வகையில் படிவரிசை இறக்கங்யளுக்குரியதாக மாற்றிப் பிரயோகிக்கப்பட்டது.

இத்தகைய இனக்குழு மேலாதிக்கம் சார்ந்த சுரண்டல் அமைப்பு சாதி முறையாக ஆகியமை சில நூற்றாண்டுகள் முன்னதாக வட இந்தியாவில் எற்பட்டிருந்தது. அதற்கு அமைவாக சாதியக் கருதியலைப் பிராமணியம் வழங்கியிருந்தது. இத்தகைய இனக்குழு மேலாதிக்கம் ஆரியர் வருகைக்குப் முன்னரே சிந்துவெளிப் பண்பாட்டுக்குரியோரிடம் ஏற்பட்டதாக கூறுவோர் உளர். ஆரியரின் வர்ணாசிரமக் கருத்தியலே சாதியத்தை தோற்றுவித்தது என்பர் வேறு சிலர். இனக்குழு வாழ்முறையுடைய ஆரியர்களதும் முன்னேறிய சுரண்டல் சமூகத்துக்கான மேலாதிக்க இனக்குழு வாழ் முறை சாத்தியமான சிந்து வெளிப் பணபாட்டுச் சுதேசிகளதும் பண்பாட்டுக் கலப்பில் உருவான புதுவகைப் பிராமணர்கள், இரு வழி முறைகளதும் இணைப்பில் கண்டு வெளிப்படுத்திய கருத்தியலே சாதியம். ஆக ஏற்கனவே சாத்தியமான சாதி வாழ் முறையின் வெளிப்பாடே பிராமணியம் முன்வைத்த சாதியக் கருத்தியல்.

சாதியம் தொடர்பான பல்வேறு சிந்தனைப் போக்குகளைத் தொகுத்து வழங்கி இனக்குழு மேலாதிக்க வாழ்முறையின் வெளிப்பாடே சாதியம் என்பதை கோ. கேசவன் தனது “சாதியம்” எனும் நூலில் காட்டியுள்ளார். சரியாகவே அதனை இனங் கண்டபோதிலும் தீண்டாமையுடன் கூடிய நிலவுடமைக் கருத்தியலாக மட்டுமே சாதியத்தை அவர் காணும் தவறையும் அங்கே வெளிப்படுத்தினார். நிலவுடமைக்கு முந்திய சாதியத்தை உருவாகிவரும் முன்தேவைப்பாடாகவும், நவீன சமூகத்தில் அதன் நீடிப்பை அரை நிலபிரபுத்துவம் இன்னமும் இருப்பதன் பேறான கருத்தியல் எச்சமாகவும் கேசவன் காண்கின்றார்.

உண்மையில் மேலாதிக்க இனக் குழுச் சுரண்டலுக்கான அரசுருவாக்கத்தின் உடன் விளைவான பிராமணியத்தோடு வருணக் கருத்தியல் முன்வைக்கப்பட்ட போதே சாதியக் கருத்தியல் தோற்றம் பெற்றுவிட்டது. வர்க்கப் பிளவடைந்த அடிமைச் சமூகத்தை உடைய கிரேக்கம், ரோம் போலத் தனி மனிதர்களாயல்லாமல் ஒடுக்கப்படுகின்ற உழைக்கும் இனக்குழுக்கள் எனும் சமூகவகை அடிமைப்பாட்டிற்கு ஏற்ப புனிதம் மற்றும் இரத்தக் கலப்பற்ற இனக்குழுத் தூய்மை சார்பான கருத்தியலாக ஆரம்பகாலச் சாதியக் கருத்தியல் அமைந்தது. அதுவே நிலவுடமைச் சமுதாயத்தில் நிலத்துடன் பிணைக்கப்பட்ட உழைப்போர்  தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுவதான தீட்டுக் கோட்பாடாகியது. முன்னதாக படியிறக்கத்துடன் புனிதம் குறைவடைந்து செல்வதான கருத்தியல் தீட்டுக் கோட்பாட்டின் இன்னொரு முகமேயாயினும், தீண்டாமையானது நிலவுடமை வாழ் முறையுடன் பெற்ற பொருளியல் தேவைப் பரிணமிப்பும், அதற்கேற்புடைய தீண்டாமைக் கருத்தியலும் புதுவகையானது. இதன் காரணமாக தீண்டாமையே-அவ்வகையில் நிலவுடமைக்குரியதே-சாதியம் எனப் பலரும் மயங்க நேர்கிறது.

சாதிக் கட்சிகள்

நவீன முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஸ்தாபனபமயப்படல் பிரதான அம்சம். முதலாளித்துவ சமூகத்துக்கான அரசியல் தேவைகளுக்கு ஏற்ப வர்க்க சக்திகளுக்கானதாக கட்சிகள் அமையும். வர்க்கப் பிளவுபடாத சாதிய சமூகத்தில் ஒரே சாதியினர் கிராம எல்லைகள் கடந்து ஸ்தாபன மயப்படுவதும், சாதிக்கட்சிகள் சாத்தியிப்படுவதுமாக இங்கே சாதியக் கருத்தியல் பரந்த தளத்தில் ஸ்தாபனமயப்படுதல் என்பதாக மாற்றம் பெற்றுள்ளது. நிலவுடமைச் சமுதாயத்தில் ஒரு கிராமத்தின் விவசாய உற்பத்திக்கு அமைவாக பல்வேறு சாதிகளின் உறவு அமைந்தது. வெவ்வேறு கிராமங்களில் ஒரே சாதியினர் இன்று போல் அப்போது ஒன்றுபடுவதை விட, ஒரு கிராமத்திற்குரிய வெவ்வேறு சாதியினரது  தொடர்பாடல் அதிக வலுவுடையது. இன்றைய தேவை கிராம எல்லை கடந்து சாதி உறவை கட்டமைக்க வலியுறுத்துகிறது. இவ்வகையில் ஸ்தாபன மயப்பட்ட கட்சி அமைப்புக்குச் சாத்தியப்படும் முதலாளித்துவக் கருத்தியலை இன்று சாதியம் பெற்றதன் பேறுதான் சாதிக்கட்சிகள்.

ஏதோ சாதிக் கட்சிகள் என அண்மைக் காலங்களில் இனங்காணப்பட்ட சில கட்சிகள் தாம் சாதித் தேசியத்துக்குரியன என்றில்லை. எந்தவொரு கட்சியும் அடிப்படையில் ஏதோவொரு சாதி நலனை முதன்மைப்படுத்தி அதன் தலைமையில் ஏனைய சாதிகளை ஐக்கியப்படுத்துபனவாயே இருந்துள்ளன. “யாதும் ஊரே யாவரும் கேளீர்;” எனத் தமிழகம் முடிவேந்தர்கள் மூவரது பேரரசு என்ற எல்லைக்குள் கொண்டு வரப்பட்ட போது, வெள்ளாளர் ஆதிக்கத்துக்குள் அனைத்து சாதிகளும் கொண்டுவரப்பட்டனர். 2,000-வருடங்களின் முன்னர் வெறும் அரசு இயந்திர அடக்கு முறையால் மட்டும் இதனைச் சாதித்து விட முடியாது. (அதுவும் ஒரு பகுதியாக அமைய வேண்டியிருந்ததாலேயே வீரயுக யுத்தப் பேரிகை–அதற்கு உணர்வூட்டும் வீரயுகப் பாடல்கள்) மூவேந்தர்கள் இவ் வகையில் பேரரசுகளாக எழுச்சி பெற்ற போது வென்றெடுத்த நிலங்களைப் பிராமணர்களுக்கு வழங்கி ஏற்றத் தாழ்வை வலியுறுத்தும் சாதியக் கருத்தியலையுடைய  பிராமணியத்தை இந்த மண்ணுக்குரியதாக்கினர். இவ்வாறு கருத்தியல் ஏற்பை சாத்தியமாக்கியதன் வாயிலாகவே வெற்றி பெற்ற சாதி தனது அதிகாரத்தை நிலைநிறுத்த முடிந்தது.

(தொடரும்)