Mon08152022

Last updateSun, 19 Apr 2020 8am

மகாசபையின் அறம்சார் போராட்டங்கள் (சாதியமும்--தமிழ் தேசியமும்....பகுதி-8)


சாதியத்திற்கொதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் வரலாறு, சிறுபான்மைத் தமிழர் மகாசபை உதயமாவதற்கு முன் பன்முகத்தன்மை கொண்ட பல தளங்களிற்கு ஊடாகவே சமூக அசைவியக்கம் பெற்று வளர்ந்து வந்தது. இதை கடந்த ஆறு பகுதிகள் கொண்டு கண்டுகொண்டோம். மேலும் மகாசபையின் தோற்றத்தையும் அதன் செயற்பாட்டுத் தளத்தையும் கடந்த பகுதிக்கூடாகவும் இன்னும் பார்ப்போம்.

சோல்பரி ஆணைக்குழு முன்னான சாட்சியம்!

1945-ல் இலங்கை அரசியல் திட்டத்தில் சீர்திருத்தம் செய்யும் நோக்கில் பிரித்தானியாவில் இருந்து சோல்பரி ஆணைக்குழு இலங்கை வந்தது. இவ்-ஆணைக்குழு முன்பாக, ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக சாட்சியம் அளிக்கப்பட வேண்டும்மென மகாசபை தீர்மானித்தது. அவ்வேளை 'உயர் இந்து மேட்டுக்குடியின்' ஆண்டபரம்பரைப் பிரதிநிதியான  'ஜாம்பவான்' ஜீ.ஜீ. பொன்னம்பலம், ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பான சாட்சியம் தேவையில்லையென, மகாசபைக்கு உத்தரவிட்டார். இதை மகாசபை மறுத்தது.

இதையடுத்து சாட்சியம் அளிப்பது சம்பந்தமான கூட்டமொன்று மகாசபையால் கூட்டப்பட்டபொழுது, அதில் ஜீ.ஜீ. பொன்னம்பலமும் கலந்து கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் மத்தியில் நிலவும் சாதியத்-தீண்டாமை, அத்துடன் அவர்களின்  காணி, கல்வி, தொழில் போன்ற முக்கிய பிரச்சினைகள் சம்பந்தமாக, தாங்கள் சாட்சியம் அளித்தால், மகாசபை சோலப்பரி முன் சாடசியம் அளிக்க முற்படாது என்ற வேண்டுகோளை விடுத்தது. அப்போது தான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதியாக மட்டுமே சாட்சியமளிப்பேனே தவிர,  தன்னால் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை சார்ந்து ஒருபோதும் சாட்சியமளிக்க முடியாதென, மகாசபையின் வெண்டுகோளை நிராகரித்துச் சென்றுவிட்டார். இதில் இவரின்  முக்கிய நோக்கம தமிழர்கள் மத்தியில் 'இருவிதமான தமிழர்கள்' வாழ்கின்றார்கள் என்பதை உலகறியக்கூடாதெனும் அடக்கியாள்- சாதித்திமிர் கொண்ட ஆண்ட பரமபரை நோக்கே!

இதையடுத்து இத்திமிர் நோக்கை நிராகரித்து, சோல்பரி ஆணைக்குழு முன்பாக டி.ஜேம்ஸ், ஜே.டி. ஆசீர்வாதம், செல்வி எம்.வி;. கட்கின்ஸ்; ஆகியோர் மகாசபை சார்பாக சாட்சியமளித்தனர். சாட்சிய முடிவில் வடபகுதிக்கு வரும்போது ஓடுக்கப்பட்ட மக்களின் நிலையைக் கண்டறியும்படி மகாசபையால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதை அவ்வாணைக்குழு ஏற்றுக்கொண்டது. வேண்டுகோளின் பிரகாரம் சோல்பரி ஆணைக்குழு வடபகுதிக்கு தனது பயணத்தை மேற்கொண்டது. அன்றைய சட்டசபையின் பருத்தித்துறை பிரதிநிதியான ஜீ.ஜீ. பொன்னம்பலம் தலைமையில் நெல்லியடி பருத்தித்துறைப் பகுதிகளில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

வரவேற்பு முடிந்ததும் சோல்பரியை பொன்னம்பலம் பருத்தித்துறைக்கு அழைத்துச் சென்றசமயம் ஆணைக்குழுவின் இதர மூன்று உறுப்பினர்களை (றீஸ்-பறோஸ்-ஸ்மித்) மகாசபையினர் கன்பொல்லைக் கிராமத்திற்கு அழைத்துச் சென்று ஒடுக்கப்பட்ட மக்களின் அவல நிலையை காண்பித்தனர். இவர்கள் வாகனங்களில் சென்று இறங்கியபோது, சாதி வெறியர்கள் தாக்க வருகின்றனரோ என அங்கலாய்த்து அக்கிராம மக்கள் ஓடி ஒளிய முற்பட்டனர். அக்கிராம மக்கள் தம்குடிசைகளுக்குள் உள்ளிருந்து குனிந்து வருவதையும், அக்குடிசைகளுக்கு சிவர்கள் மட்டுமல்லாமல், மறைப்புத் தட்டிகளோ, இல்லாமல் வாழ்ந்ததையும் கண்ணுற்றனர். இம்மக்கள் தம்குடிசைகளுக்கு மறைப்பில்லாமல் வாழும்படி உத்தரவிட்ட சாதிவெறியர்களின் அராஜகப் போக்கையும், அதனூடான சாதிய-நடைமுறை கொண்ட நடவடிக்கைகளும் சோல்பரி உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

ஆணைக்குழு உறுப்பினர்களை கன்பொல்லைக் கிராமத்திற்கு மகாசபையினர் அழைத்துச் சென்றதை அறிந்ததில் சாதிவெறியர்கள் அகோர ஏற்றம் கொண்டனர். இதனால் சோல்பரி உறுப்பினர்களை அழைத்துச்சென்ற மகாசபையின் பிரதிநிதிகளான எம்.சி. சுப்பிரமணியம், வ.ஆ. கணபதிப்பிள்ளை, டி. ஜேம்ஸ் ஆகியோர் நெல்லியடிச் சந்திக்கு வந்தபோது, வழிமறித்து சாதிமான்களால் தாக்க முற்பட்டவேளை, எதிர்பாராத விதமாக அவ்விடத்தால் பொலிசாரின் வருகையாலும், சில நண்பாகளின் உதவியனாலும், தாக்குதல்களில் இருந்து தப்பிததுக்கொண்டனர்.

சோல்பரி அரசியல் திட்டத்தின் கீழ் முதலாவது பாராளுமன்றத்தின் தேர்தல் 1947-ல் நடைபெற்றது. ஜீ.ஜீ.யின் காங்கிரசும், யூ.என். பி.யும் தமிழ்மக்கள் மத்தியில் போட்டியிட்டன. சில தொகுதிகளில் இடதுசாரிகளும் போட்டியிட்டன. மகாசபை யாருக்கும் வேலை செய்வதில்லையென்ற முடிவிற்கு வந்தது. இருந்தும் அதன் சில தலைவர்களால் அதை நடைமுறைப்படுத்த இயலாமல் போய்விட்டது. முதலியார் ஏ.பி. ராஜேந்திரா யூ.என்.பிக்கு பகிரங்கமாக வேலை செய்தார். இதனால் தேர்தலின்பின் யூ.என்.பி. ஆட்சியின் செனட்டர் ஆக்கப்பட்டார். ஆனால் இதையடுத்து யூ. என்.பி. ஆட்சிக்கு வந்ததாலோ, ராஜேந்திரா சென்ட்டர் ஆகியதன் மூலமோ, அன்றி 48-ல் சுதந்திரம் கிடைத்ததாலோ, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆனதொன்றுமில்லை என்பதே வரலாற்று நியதியாயிற்று.

மகாசபையின் 12-வது மாநாடு

31-8-1955-ல் நடைபெற்ற மகாசபையின் 12-வது மாநாடு சாதி-தீண்டாமைக்கு எதிரான பலதீர்மானங்களை நிறைவேற்றியது. பொது இடங்களில் (கோவில்-தேனீர்க்கடை-சலூன்-சலவைத் தொழில் நிலையம்-பாடசாலை-பொதுக்கிணறு-மயானம்) உள்ள சமத்துவமின்மையையும், சில கிராமங்களில் ஒடுக்கபட்ட மக்கள் செருப்பு போட முடியாத, பெண்கள் மேற்சட்டை போட முடியாத, தாலி கட்டமுடியாத்நிலை போன்ற பல அடிமை-குடிமை நிலைமைகளையும் சுட்டிக்காட்டியது. இதற்கும் மேலால் கிராமங்களில் தாம் விரும்பும் வேட்பாளர்களக்கு வாக்களிக்க முடியா நிலையையும் எடுத்துக்காட்டியது. அத்துடன் சாதியத்திற்கு எதிராக உறுதியான சட்டம் கொண்டுவரப்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்தியது.

இதனடிப்படையில் 12-6-1956-ல் 'உயர்சாதியனருக்கு எதிரான வேண்டுகோள்' எனும் தலைப்பில் ஓர் துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டது. அகிம்சைப் போராட்டங்களின் மூலம் (சத்தியாக்கிரகம்) போராட்டங்களை முன்னெடுக்கப்படும் எனும் நோக்கிலேயே இப்பிரசுரம் வெளியானது. இதை மகாசபையின் மாநாட்டில் ஜி. நல்லையா, ஆ. கணபதிப்பிள்ளை ஆகியோர் முன்வைத்தனர்.

இத்துண்டுப் பிரசுரத்தின் பலாபலன் கல்வி கற்ற சில இந்துக்களிடையேயும், நல்லெண்ணம் கொண்ட உயர்சாதியினர் இடையிலும் ஓர் தாக்கத்தை ஏற்hடுத்தியது. இப்பிரசுரம் வந்த சில நாட்களில், 'ஆலயப் பிரவேச உரிமை அளிக்கும் சபை' என ஓர் அமைப்பு உருவாகிற்று. இச்சபையை ஸி. குமாரசாமி தலைவராகவும் (முன்னாள் இலங்கையின் இந்தியத் தூதுவர்), உயர் நீதிமன்ற நீதிபதிகளான சிறிஸ்கந்தராசா, சிவபாதசுந்தரம் ஆகியோர் இணைச் செயலாளர்களாகவும் முன்னின்று இயக்கினர்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் உட்பட்ட ஏனைய ஆலயங்களில் ஆலயப்பிரவேசம்! மகாசபையின் வேண்டுகொளினாலும், ஆலயப் பிரவேச உரிமை அளிக்கும் சபையின் முன்முயற்சியாலும் 9-7-1956-ல் அன்று யாழ்-நகரின் பிரசித்தி பெற்ற ஆலயங்களான நல்லூர் கந்தசுவாமி கோவில், யாழ்-பெருமாள் கோவில், வண்ணை சிவன்கோவில் ஆகியவற்றில் ஆலயப்பிரவேசம் நடைபெற்றன. இதில் முதல் தடவையாக மகாசபையின் ஐந்து பிரதிநிதிகள் ஆலயப் பிரவேசத்தில் ஈடுபட்டனர். இருந்தும் ஆலயப்பிரவேசம் நடைபெற்ற அன்றிரவு, நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சாதிமான்கள் தம் சாதிவெறி கொண்ட அகம்பாவங்களை மேற்கொணடனர். கோவில் மண்டபத்தில் மாமிச உணவுகள், மதுபான வகைகள் போன்றவைகளை படைத்து, தம் சாதி-அகம்பாவ வெறியை வெளிப்படுத்தினர்.

தவிரவும் யாழ்-நகரின் பிரசித்தி பெற்ற இவ்வாலயங்களின் ஆலயப் பிரவேசமானது, ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் சமத்துவத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகவும், ஓர் மைல் கல்லாகவும் கொள்ளமுடியும்!

(தொடரும்)