Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

தேர்தல் இனவாதிகளின் களமாகின்றது!

தேர்தல் வரும் பின்னே… அதன் ஓசைகள் வரும் முன்னே!

நாட்டில் நடைபெறவுள்ள மூன்று மாகாணசபைத் தேர்தல்களில், வடக்கின் தேர்தல் இனவாதிகளின் களமாகப் போகின்றது. இதற்கு இரு இனவாதத் தரப்பபும், தாங்கள் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்லர் என்பதைப் பறைசாற்றுகின்றனர்.

தமிழர் கூட்டமைப்பு விக்கினேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்ததில் இருந்து இந்த இரு தரப்பும் "தமிழ் ஈழக் கனவில்" இருந்து சஞ்சரித்து தத்தம் கருமங்களை ஆற்றுகின்றன.

இதில் முதலில் பேரினவாதத் தரப்பின் இனவெறிச் சஞ்சாரங்களைப் கவனிப்போம்:

"தமிழ்த்தேசியக் கூட்மைப்பின் தலைவர் சம்பந்தன் நன்கு ஆராய்ந்த பின்னரே மாவை சேனாதிராசாவை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தாது சி.வி.விக்னேஸ்வரனை நிறுத்தியுள்ளார்."

"இவர்களின் நோக்கம் மத்திய அரசுடன் வடமாகாணம் மோத வேண்டும். 13வது திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களை முழு அளவில் சட்டரீதியாக பெற்றுக் கொண்டு, தனி தமிழீழ ஆட்சியை அமைப்பதற்கான அடித்தளமே இன்று இடப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் இந்தியா மற்றும் அனைத்துலக பிரிவினைவாத புலி ஆதரவாளர்களும் உள்ளார்கள். வடமாகாண சபை தேர்தலின் ஊடாக தமிழீழம் உருவாவதை தடுக்க தேவையான அனைத்து போராட்டங்களையும் முன்னெடுப்போம். அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழ போராட்டத்திற்கும் உயிர் கொடுப்பதாகவே கூட்டமைப்பின் செயற்பாடு அமைந்துள்ளது. அன்ரன் பாலசிங்கத்தின் அவதாரத்தை இன்று சி.வி.விக்னேஸ்வரன் எடுத்துள்ளார். இதனையும் தோற்கடிக்க வேண்டும்". என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாஸ அமரசேகர இனவெறி கொண்டு கத்துகின்றார்.

மறுபுறத்தில் "சிங்களத்தின் சிங்கக் கொடியை தூக்கிய சம்பந்தன்" கடந்த வாரம் மகிந்தாவை சந்தித்து தமது சொந்த நலன்களை உறுதி செய்து கொண்ட பின்னர், வாசுதேவ நாணயக்காராவின் சம்பந்தியான விக்கினேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளர் ஆக்கியுள்ளார். மாவையை ஆக்கியிருந்தால், அவர் தமிழ் ஈழத்தின் முதுகெலும்பாக செயற்படுவாராம். இந்தியாவை எதிர்ப்பாராம்."

"சிங்களத்தின்… கீழ்த்தர சம்பந்தி வசைபாடும் தமிழ் ஈழக் கனவாளிகள்"…. புலிகளின் தலைவர்களில் ஒருவரான நடேசனும், சிங்களத்தின் சம்பந்ததியாகத்தான் இருந்து அரசியல் செய்தவர் என்பதையும் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.

தமிழ்த்தேசியத்தின் மிதவாதத் அரசியல் தரப்பு (சேர்.பொன்னம்பலம் ராமநாதன், ஜீ.ஜீ.பொன்னம்பலம், தந்தை செல்வா முதல் சம்பந்தன் விக்கினேஸ்வரன் வரை) தங்கள் வர்க்க நலன் கொண்ட அரசியலுக்காக தமிழ் மக்கள் நலனை, அபிலாசைகளை கணக்கில் கொள்ளாமல் எப்படி சுயநல அரசியல் செய்தார்களோ, செய்கின்றார்களோ, அப்படியே "தமிழ்ஈழப் போராட்டத்தின் தம்பியும் (பிரேமதாச காலம் முதல் மகிந்தா காலம் வரை) அரசியல் செய்தவர் தான் என்பதையும் ஞாபகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அத்தோடு மகிந்தாவை முதல் தடவை ஜனாதிபதியாக்கிய காலத்தில், அவரிடம் பல்லாயிரம் கோடியில் பணம் வாங்கினார் என்பதை ஊர்-உலகு அறியும். வாங்கியது ஒருபுறமிருக்க மகிந்தாவை வரச்செய்த நேரம் ரணிலை வரச்செய்திருந்தால் தமிழ் மக்களுக்கு இந்நிலைமை வந்திருக்குமா? என்ற வக்கற்ற அரசியலை எதன்பாற்படுத்துவது..

ஆகவே தமிழ்த்தேசியத்தின் சந்ததியான தந்தையும், மைந்தர்களும், அண்ணன் தம்பிகளும் தங்கள் தேவைக்கேற்ப சிங்கள ஆளும் வர்க்கத்திடம் சோரம் போனவர்கள்தான். இதை மறந்து "பானையைப் பார்த்து சட்டி, கறுப்பெனும்" தத்துவம் தமிழ் மக்களை மடையர்கள் ஆக்கும் சாத்தான் வேதம் ஓதுதல் பாணிதான்.

இங்கே மாவையை விட விக்கினேஸ்வரனே என்பதும், விக்கினேஸ்வரனை விட மாவை என்பதும் கொழுக்கட்டை மோதகம் போன்றதுதான். இது தெரியாமல் பலர் மல்லுக்கட்டலுடன் கூடிய சமாந்திரக் கணக்குகளைக் கணிக்கின்றார்கள்.

இப்படிப் பார்த்தால் விக்கினேஸ்வரனுக்கு இருக்கிற தகுதியெல்லாம் இருந்தால்தான் மாகாண முதல்வர் ஆகலாமோ?.. சரி பிள்ளையான் சட்டவல்லுனராகி, நீதிபதி போன்ற பதவிகள் வகித்துத்தான் மாகாணசபை முதல்வர் ஆனாரோ?... இந்தக் குளையடிப்பு சமாந்திரக் கதைகள் எல்லாம் உயர்-இந்து மேட்டுக்குடிகளின் பட்டுவேட்டிகளுக்கும் குங்குமப் பொட்டுகளுக்கும் வலுச் சேர்க்கும் கதைகள்தான்.

இதில் மாவை தமிழ் ஈழப் போராட்ட மறவன் என்பது, கழுதையிலும் குதிரைச் சவாரி செய்யலாம் என்பது போன்றதுதான்.

எனவே தேர்தல்வரை, தேர்தல் களம் இனவாதிகளின் இனவாதக் களமாகத்தான் மல்லுக் கட்டப்போகின்றது. இங்கே இவர்களில் யார் மக்களுக்கானவர்கள் என்றால் எவரும் இல்லையென்று துணிந்து கூறலாம்.

மக்களுக்கானவர்களின் செயற்பாடு இனவாதம் கொண்டதல்ல. சகல இனவாதங்களுக்கும் எதிரானதும், அதைத் தாண்டிச் செல்வதுமாகும். இச்செயற்பாடு மக்களின் வெகுஜனப் போராட்ட மார்க்கத்தின் பாற்பட்டது. இப்போராட்ட மார்க்கத்தை மக்களுக்கானவர்களின் சகல தரப்பும் தத்தம் போராட்டங்களுக்கு ஊடாக முன்னெடுக்க வேண்டும். இதற்கூடாகவே மக்களிற்கானவற்றை மக்களுக்காக செய்யமுடியும்.