Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

கிளம்பிட்டாங்கய்யா எல்லாரும் தேர்தலுக்கு கிளம்பிட்டாங்கய்யா!

பொன்சேகா அண்ணாச்சியும் தமிழ் மக்களின் இரட்சகன் ஆகியுள்ளார்!.

சர்வவல்லமை படைத்தவர் வடமாகாணசபைத் தேர்தலை நடாத்தலாமென சம்பந்தப்பட்டவர்களுக்கு ஓடர் போட்டுள்ளார். இவ்வறிவித்தலுடன் சகல அரசியல் கட்சிககாரர்களும் கோமணங்களை இறுகக் கட்டிக்கொண்டு தேர்தல் களம் நோக்கி கிளம்பி விட்டாங்க. இதில் நம்ம சரத் பொன்சேகா அண்ணாச்சியும் தமிழ் மக்களின் "இடைக்கால ரட்சகன்" ஆகியுள்ளார்.

இப் பொன்மனச்செம்மல் தன் பரிவாரங்களுடன் யாழ் சென்று, எப்படியோ பரிவாரங்களுக்கு ஊடாக பொது மக்களையும் சந்தித்துள்ளார். சந்திப்பில் ஒரு பெரும் ரட்சகன் ஆகி மக்களுக்கு ஜீவகாருண்ணியத்துடன் கூடிய மலைப்பிரசங்கத்தையும் செய்துள்ளார்.

"நான் வடக்கு மக்களின் பிரச்சினையை நன்கு உணர்ந்துள்ளேன். அனைத்து மக்களின் பிரச்சினைகளை தீர்த்து அனைத்து மக்களையும் ஒற்றுமையுடன் நடத்துவேன். வடக்கு மக்கள் யுத்தத்தின் பின்னர் எதிர்பார்த்த எதுவும் கிடைக்கவில்லை. மக்களுக்கு தேவையானவற்றினை எவ்வாறு முன் வைப்பது என்பது பற்றி அரசுக்குதெரியவில்லை".

"யுத்தம் மக்களை நிறைய பாதித்துள்ளது. யுத்தத்தின் பின்னரும் மக்கள் எதிர்பார்த்த சமாதானம் கிடைக்கவில்லை. யுத்தத்தினால் இலாபம், நஷடம் என்று யாருக்கும் இல்லை. அரசாங்கம் இன, மதத்திற்குள் பிரச்சினைகளை உருவாக்கி மக்களை திசை திருப்புகின்றார்கள். ஆனால் இங்குள்ள பிரச்சினை யாருக்கும் தெரியாது""

மேலும் இதைவிட இவர் 2006-ம் ஆண்டு ராணுவத் தளபதியாக இருந்து பொழுது, ஓர் தாய் தனக்கு ஏற்பட்ட சோகவாழ்வை சொல்லி அழுதபோது, (தன்னுடைய மகன் உங்களின் கட்டுப்பாட்டில் இருந்த, உங்கள் ராணுவத்தினரால்தான் கடத்தப்பட்டார். இன்றும் அவர் சிறையில் இருப்பதாகவே நம்புகிறேன் என) அதற்கும் பிராயச்சித்தம் காண்பேண் என ஆசீர்வதித்து அனுப்பியுள்ளார்.

மக்கள் விரோத பாசிஸ யுத்தம் ஒன்றை நடாத்தி, மாபெரிய மக்கள் அழிவை ஏற்படுத்திய இச்சர்வாதிகாரி "யுத்தத்தினால் யாருக்கும் லாப-நட்டம் இல்லையென" சொல்வதன் ஆதங்கம் எதன்பாற்பட்டு எங்கிருந்து வருகின்றது?

ஓர் பாசிச-கொலைவெறி அரசை பாதுகாக்க, அதற்காக சேவை செய்யும் அரச இயந்திரத்தின் கொலைவெறி ஆதங்கத்தின் பாற்பட்டதாகவும், அதிலிருந்து மக்களை நோக்கிய ஜனநாயக சிவில் சமூகப்பார்வையற்ற சுத்த இராணுவக் கண்ணோட்ட கருத்தியலைத்தான், இப் "பொனமனச் செம்மலின்" பாஸிச வார்த்தைகளுக்கு ஊடாக காணமுடிகின்றது அல்லவா?

இதெல்லாம் தேர்தல் கால முதலைக் கண்ணீர் வடிப்பல்லவா?

தேர்தல் காலங்களில் தான் கசாப்புக் கடைக்காரர்கள் ஜீவகாருண்ணியவாதிகள் ஆவார்கள்.

பாஸிசவாதிகள் ஜனநாயகவாதி ஆவார்கள்.

சந்தர்ப்பவாதிகள் தீர்க்கதரிசிகள் ஆவார்கள்!

இதில் பின்னையது கூத்தமைப்பிற்கு மிகப் பொருந்தும்.