இடதுசாரியத்தின் மீதான சாதிய அவதூறுகளை நிறுத்துங்கள்!
- Details
- Category: மணலைமைந்தன்
-
13 Jan 2015
- Hits: 6459
பிரபாகரன் அவர்களின் தலைமையிலான புலிகள் இயக்கம் பல வெற்றிகளைக் கண்டு உச்சத்தில் இருந்தவேளை, பிரபாகரனின் சாதியை முன்னிறுத்தி புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்கள் புலம் பெயர்ந்த நாடுகளின் முன்னெடுக்கப்பட்டது.
பிரபாகரன் படிக்காதவராகவும், முரட்டுத்தனம் பிடித்த ஒருவராகவும், எதையும் செய்யத் துணிந்தவராகவும் சித்தரிக்கப்பட்டார். அத்துடன் கள்ளக்கடத்தல், களவு, கொலை போன்ற விடையங்களை செய்வதும் அவரின் இயல்பாகக் கருதப்பட்டது. இப்படியான அவரின் நடத்தைகளுக்குக் காரணம் அவரின் சாதியாவும் - யாழ்ப்பாண மொழியில் சொன்னால் "அவரின் சாதிப்புத்தியாகவும்" புலியெதிர்ப்பு ஆய்வுகள்" முன்வைக்கப்பட்டது.
சில மெத்தப்படித்த மேதாவிகள் பிரபாகரனின் பயப்படாத தன்மைக்கும், மற்றவர்களுக்கு பணிந்து போகாத நடத்தைக்கும் காரணம் அவரின் சாதித் தொழிலான மீன்பிடித்தலே காரணம் என "மானிடவியல்" விளக்கம் கொடுத்தனர். இவர்களின் மானிடவியல் விளக்கத்தை கொஞ்சம் விரிவாகப் பார்த்தோமெனில்: கடற்றொழில் செய்பவர்கள் கடலுக்கும், அதன் மூர்க்கத்தனங்களுக்கும் பழக்கப்பட்டவர்கள். புயல், மழை, வெள்ளம் என எவ்வகை மாற்றங்கள் கடற்பரப்பில் ஏற்பட்டாலும், அவற்றிற்கு பயப்படாமல் தொழில் செய்பவர்கள். அதனால் அப்பயப்படாத உளவியல் அவர்களின் சமூகத்தின் - சாதியின் உளவியலாகும். அதே போன்றோ அவரின் சாதியைச் சேர்ந்தவர்கள் வேறு சாதிகளை அல்லது சமூகங்களை சார்ந்து நின்று தமது தொழிலைச் செய்வதில்லை. அதனால், அவர்கள் மற்றவர்களை "கணக்கிலெடுத்து" மதிப்புக் கொடுப்பதில்லை. இந்த வகையில் பிரபாகரன் மீன்பிடித்தொழில் செய்யும் சாதியைச் சேர்ந்தவர். அதனால் பிரபாகரனின் நடத்தை அவர் சாதியின் தொழில் சார்ந்த "புத்தியை" பிரதிபலிக்கின்றது. இதுவே புலியெதிப்பு - பிரபாகர எதிர்ப்பு மானிடவியலின் ஆய்வியல் அடிப்படையாகும்.
ஆனால், இவர்களில் ஆய்வு பொதுபுத்தி மட்டத்தில் மேலோட்டமாக சரியானதாக இருந்தாலும் - ஒரு இடத்தில் பொருந்தவில்லை. புலிகளிலிருந்து கருணாவும் - பிள்ளையானும் பிரிந்த போதும் கூட அவர்களின் "சாதிப் புத்தியை" முன்னிறுத்தி தமிழ் ஈழத் தேசிய அபிமானிகள் பிரச்சாரம் செய்தனர். பிரபாகரன், கருணா, பிள்ளையான் என்ற மூவரின் சாதித் "தொழிலும்" மீன்பிடியாகும். இதன் அடிப்படையில் பிரபாகரனுக்கு நேர்எதிரான குணங்களைக் கொண்ட தமிழினத் துரோக சக்திகளாகவும், கோளைகளாகவும், "சிங்களத்துக்கு" சேவகம் செய்பவர்களாகவும் சித்தரிக்கப்படும் கருணாவினதும், பிள்ளையானினதும் நடத்தைகள், எந்த அடிப்படையில் அவர்களின் சாதித்தொழிலை பிரதிபலிகின்றது என இன்று வரை மேற்படி "மானிடவியலாளர்கள் " கருத்துக் கூறவில்லை.
இதில் நகைப்புக்குரிய விடையம் என்னவென்றால் இந்த மூவரின் சாதித்தொழிலும் மீன்பிடியாக இருந்தாலும், அவர்களின் குடும்பங்கள் மீன் பிடித்தொழிலை சில பரம்பரைகளுக்கு முன்பாகவே கைவிட்டு விட்டனர்.
இவ்வாறு தமது புலியெதிர்ப்பை பிரபாகரனின் சாதியை முன்னிறுத்தி அரசியல் செய்தோர் - அதாவது மேலே உள்ள "மானிடவியல்" ஆய்வுகளில் அடிப்படையில் புலியெதிர்ப்புப் பிரச்சாரம் செய்தோர், இடதுசாரிகள் என்று தம்மைக் கூறிக் கொண்டவர்கள், இலக்கியம் கதைத்தோர், பெண்ணியம் கதைத்தோர் தொடக்கம் யாழ்ப்பாணிய சாதி வெறி கொண்டவர்கள் வரை அடங்கும்.
இவர்களே, தற்போது இலங்கையிலும், புலம்பெயர் தேசங்களிலும் இடதுசாரிய அரசியலை முன்னெடுப்பவர்களை, சாதியத்தை முன்னிறுத்தி அவதூறு செய்பவர்களாக உள்ளனர். பிரபாகரனைப் போன்று, தெற்கில் போராடி மடிந்த தலைவர்களில் ஒருவர்தான் ரோகண விஜேவீர. ரோகண விஜேவீரவையும் மேற்படி "மானிடவியல்" ஆய்வாளர்கள் மீன்பிடிச் சமூகத்தவராக கணிக்கின்றனர். அவரின் "புத்தியையும்" அவரின் கரவா "சாதிப்புத்தியாகவே" கருதுகின்றனர். இதன் அடிப்படையில் அவரால் உருவாக்கப்பட்ட ஜேவிபி(JVP), மற்றும் அதனில் இருந்து பிரிந்தவர்களை தெற்கின் கரவா சாதிய கட்சிகளாகவே இவர்களால் பிரச்சாரப்படுத்தப்படுகிறது. (பிரபாகாரன், ரோகண, ஜெனரல் பொன்சேகா போன்றோரின் சாதிய பின்னணியை அடிபடையாகக் கொண்டு எழுதப்பட்ட தமிழ் போராடத்தை மறுபடியும் முன்னெடுபதற்க்கான ஆய்வுப் புத்தகம் சில வருடங்களுக்கு முன் இலண்டனில் வெளிவந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.)
இதன் தொடர்ச்சியாக புலம்பெயர் தேசங்களில் உள்ள சில இணையங்களும், சிறு குழுக்களும், தமிழ் பேசும் இடதுசாரிய தோழர்களின் சாதிய பின்னணியை இவர்களாகவே கற்பனை செய்து கொண்டு, அவர்களின் அமைப்புகளையும், கட்சிகளையும், மீன்பிடிச் சமூக "அரசியலை செய்வதாக" பிரச்சாரம் செய்கின்றனர். சில வருடங்களுக்கு முன் இதே சக்திகளை யாழ்ப்பாண வெள்ளாள அரசியல் சக்திகளாக பிரச்சாரம் செய்தனர் வேறு சிலர்.
இப்படியான படுபிற்போக்கான பிரச்சாரத்தை சாதி வெறிபிடித்த யாழ்ப்பாணிகள் செய்வதில் எந்த முரண்பாடும் இல்லை. அதுதான் அவர்களின் "அரசியல்". ஆனால், தம்மை இடதுசாரிகளாகவும், மாவோ வாதிகளாகவும், மார்சிஸ லெனினிய வாதிகளாகவும் கூறிக் கொள்வோரும் கூட சாதிவாத அரசியல் செய்வதே கவலைக்குரிய விடயமாக உள்ளது.
"எந்த வர்க்கம் / சக்தி ஒரு சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறதோ, அவ்வர்க்கத்தின் / சக்தியின் சிந்தாந்தமே - சிந்தனையே அச் சமூகத்தில் ஆதிக்க சித்தாந்தமாக - சிந்தனையா இருக்கும்". இது கார்ல் மார்க்ஸ் எழுதிய மிக முக்கிய வரிகளில் ஒன்று. மார்சிஸவாதிகள் என்று தம்மை கூறிக் கொள்வோருக்கு இவ்வரிகள் ஒன்றும் புதியவை அல்ல.
சாதியம் பற்றி பல ஆய்வு வடிவங்கள் இருந்தாலும், பொருளாதார அடிப்படையை - வர்க்கப் பார்வை ஊடக சாதியத்தை, சாதிய சிந்தனையை விளக்க முயலும் மார்க்சிச தத்துவம் இன்றும் தவிர்க்க முடியாத ஆய்வு வடிவங்களில் ஒன்றாக விளங்குகிறது.
பல நூறு வருடங்களாகவே தமிழ் சமூகத்தை ஆட்டிப் படைக்கும் ஆதிக்க சிந்தனையாக இருந்து வருவது யாழ். சைவவேளாள மேலாதிக்க சிந்தனையே. கொலோனியம் மற்றும் இலங்கை சுதத்திரம் அடைந்ததுகுப் பின்னான அரைநிலப் பிரபுத்துவம், நவகலானித்துவம் என பொருளாதர நிலைமைகளில் மாற்றங்கள் வந்தபோதும், அவற்றுடன் இன்றுவரையும் எச்ச சொச்சமாக ஒட்டியபடியே பயணம் செய்கிறது மேற்படி யாழ். சைவ வெள்ளாள மேலாதிக்க சிந்தனை.
தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப அடித்தளமாக இருந்தும் - இன்று இருந்து வருவதுவும் இந்தச் சிந்தனைதான். முற்று முழுதான முதலாளித்துவ பொருளாதார அடிப்படை இலங்கையில் ஏற்படாததால், முதாளித்துவ ஜனநாயக சிந்தனை வடிவமும் கூட இங்கு வளர்ச்சி அடையவில்லை. கருவில் சிதைவடைந்த முதலாளித்துவ பொருளாதாரமே நாட்டில் நிலவுகிறது. இப்பொருளாதாரச் சூழ்நிலையே இலங்கையின் பல முரண்பாடுகளுக்கு அடிப்படையாக உள்ளது. குறிப்பாக, தேசியப் பிரச்சனை, மற்றும் தமிழ் சமூகத்தில் இன்றும் பூரையோடியிருக்கும் சாதியம்.
இவ்வாறான பொருளாதர சூழலே யாழ். சைவ வேளாள மேலாதிக்க சிந்தனை இன்றும் ஆதிக்க சிந்தனையாக - தமிழ் தேசியவாதத்தின் எச்ச சொச்ச சிந்தனையாக இருந்து வருவதற்கு எதுவாக அமைகின்றது.
இந்தவகையில், தமிழ் தேசியப் போராட்டத்தை முன்னெடுத்த ஆரம்ப காலத்தில் இருந்தே "தந்தை" செல்வா, அமிர்தலிங்கம் போன்ற அடங்காத் தமிழர்கள் தொடக்கம் உமா மகேஸ்வரன், பிரபாகரன் ஈறாக, சோசலிசத்தின் பெயரால் தமிழ்ஈழ விடுதலைக்காக போராடிய "இடதுசாரிகள்" வரை அவர்களைப் பீடித்திருந்து யாழ். சைவ வேளாள மேலாதிக்க சிந்தனை தான்!
இதன் அர்த்தமாகப்பட்டது, ஒருவர் மீது ஆதிக்கம் செலுத்தும் சிந்தனை என்பது அவரின் உடலியல் சார்ந்ததோ அல்லது எந்தச் சாதிச் சமூகத்தை சேர்ந்தவர் அவர் என்பதைச் சார்ந்தோ வேறுபடுவதில்லை. உதாரணமாக, இன்று மேற்கு நாடுகளில் உள்ள முதலாளித்துவ நுகர்வுச் சிந்தனை அங்கு வாழும் அனைத்து வகை மக்களையும் ஆட்கொள்ளுகிறது. அது கறுப்பன், வெள்ளையன் என்று வித்தியாசம் பார்ப்பதில்லை. அதேபோல தன்னை அடக்கி ஒடுக்கும் முதலாளித்துவம் சார்ந்த சிந்தனைப் போக்கைகே உழைக்கும் வர்க்கத்தின் சிந்தனையாகவுள்ளது.
ஆனால், ஒடுக்குமுறை சார் அனுபவம், மற்றும் ஆதிக்க சிந்தனைகளுக்கு எதிரான மாற்றுக் கருத்துக்கள் தனிமனிதரிடத்திலும், வர்க்கங்களிடையிலும் பிரஞ்சயை ஏற்படுத்தும் போது, அச் சிந்தனைகளில் நின்று வெளிவரவும் - அவற்றிற்கு எதிராகப் போராடவும் செய்கின்றனர். சாதியப் போராட்டத்துக்கு தலைமை வகித்த சண்முகதாசன் அவர்களும், பாட்டாளி வர்க்க நலனுக்காகப் போராடிய முதலாளித்துவ வர்க்க பின்னணியைக் கொண்ட ஏங்கல்ஸ் அவர்களும் வரலாற்றில் இதற்கு நல்ல உதாரணங்களாவர். அதேவேளை, ஒடுக்கப்பட்ட சமூகப் பின்னணியைக் கொண்டிருந்தாலும், ஆதிக்க சிந்தனையின் வளர்ச்சிக்கு துணை போனோரையும் வரலாறு பதிந்துள்ளது.
நிறைவாக,
அவரவர் வர்க்க சிந்தனைக்கேற்ப - தமது நலனில் நின்று அரசியல் விமர்சனம் வைப்பது வரவேற்கத் தக்க விடயம். அதேவேளை, தம்மை இடதுசாரிகள் என்று கூறிக் கொண்டு, அதன் பெயரால் படுபிற்போக்குத்தனமான - சாதி வெறியை உள்ளடக்கிய அவதூறுகளை வாரிக் கொட்டுவது கைவிடப்படல் வேண்டும். புலம்பெயர்ந்து முதலாளித்துவ நாடுகளில் வாழ்ந்தாலும் அங்குள்ள முதலாளித்துவ ஜனநாயகப் பண்புகளில் கொஞ்சத்தையேனும் கூட சுவீகரிக்க முயலாது, அரசியல் செய்வது எந்த வகையிலும் நம் தேச மக்களுக்கு உதவாது.
ஆதலினால் இனியாவது, சாதி வெறி, பெண்ணொடுக்கு முறை, மதவாதம், இனவாதம் போன்ற சிந்தனைகளிலிருந்து விடுபடுவதற்கான தேடுதலை மேற்கொள்வது எல்லோருக்கும் நன்மை பயக்குமென்பதை தோழமையுடன் சுட்டிகின்றேன்.