Sun10242021

Last updateSun, 19 Apr 2020 8am

ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்

உலகின் ஐந்து பெரிய பணக்கார நாடுகளுள் ஒன்றான ஜெர்மனி நாட்டில் உள்ள அதே எண்ணிக்கையில் இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் (பில்லியனர்) இருக்கிறார்களாம். சமீபத்தில் இந்தியத் தொலைக் காட்சிகள் அறிவித்த இன்னுமொரு பெருமை. அப்பேர்ப்பட்ட பெருமை பெற்ற இந்தியத் திருநாட்டில் சுமார் எண்பது கோடிப் பேர் கால் பட்டினி கிடக்கிறார்கள், அதாவது நூற்றுக்கு எண்பது சதவீதம் பேர் அன்றாடம் இருபது ரூபாய் கூட சம்பாதிக்க வக்கின்றி காலம் தள்ளுகிறார்கள். இதுவும் இந்திய மக்களின் வறுமை பற்றி இந்தியத் திட்டக் கமிசன் வெளியிட்டுள்ள அதிகாரப் பூர்வமான புள்ளி விபரம்.

 

இந்தியாவின் பொருளாதாரம் ஆண்டுக்கு பத்து சதவீதம் வளர்கிறது. அதே வேளை, சாதாரண மக்கள் வாங்கிப் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் ஆண்டுக்கு இருபது வீதம் விலை ஏறுகிறது. டெல்லி மக்களில் பாதிப் பேருக்கு மேல் வீடு இல்லை பெரும்பகுதி நகர மக்கள் குடியிருப்பது சேரிகளில். ஆனாலும், கடந்த வருடம் இந்திய அரசு நடத்திய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் செலவு சுமார் எழுபது ஆயிரம் கோடி. போட்டி நடத்த வாங்கிய கடனுக்குண்டான வட்டியைச் சேர்த்தால் தலைக்கு ஆயிரம் ரூபாய் – அல்லது குடும்பத்திற்கு ஐந்தாயிரம் ரூபாய் இரண்டு வாரம் நடந்த விளையாட்டப் போட்டிக்கு செலவாகியிருக்கிறது. இதுதான் கும்பி கூழுக்கு அழ கொண்டை பூவுக்கு அழுகிறது என்னும் பழமொழி போலும்.

சாதனை மேல் சாதனை: ஆயுதம் வாங்குவதிலும் சாதனை

மன்மோகன் சிங் நிதியமைச்சர் ஆகி, பின்னர் உலக வங்கியால் பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னால் மக்கள் பணத்தைத் திருடுவது, பொதுச் சொத்துகளைச் சுருட்டுவது, அரசுக் கருவூலத்தைக் கொள்ளையிடுவது என்று எத்தனையோ சாதனைகள் இந்தியாவில் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமானது ஆயுதம் வாங்குவது. இந்த வருடம் (2010) இந்தியா படைத்த உலக சாதனைகளில்  இதுவும் ஒன்று. இந்தியாவின் பாதுகாப்பு என்ற பெயரில் இந்தக் கொள்ளை நடைபெறுவதால் பெரும்பாலும் இது வெளியில் அதிகம் பேசப்படுவதில்லை.

உலகில் ஆயுத ஏற்றுமதி செய்யும் ஆயுதங்களில் பெரும்பகுதி அமெரிக்கா, பிரிட்டன, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, சுவீடன், ரஷ்ய, போன்ற ‘வளர்ந்த’ நாடுகளில் இருந்து நடக்கிறது. இறக்குமதியில் முன்னணியில் இருக்கும் நாடுகள் இந்தியா, பிரேசில், மெக்ஸிகோ, பாகிஸ்தான், சவுதி அரபிய, ஈராக், போன்ற ஏழை நாடுகள். உலகில் ஏற்றுமதியான அனைத்து ஆயுதங்களில் பத்தில் ஒரு பகுதி இந்தியாவுக்கு வந்து சேர்ந்து இருக்கிறது. பிரான்ஸ் அதிபர் சார்கோசியும், அமெரிக்க அதிபர் ஒபாமாவும், பிரிட்டன பிரதமர் டேவிட் காமருனும் இந்தியாவுக்கு வந்தது ஆயுதம் விற்கத்தான். ஆனாலும் நமது தொலைக் காட்சிகள் இவர்களைப் பற்றியும் இவர்களுடைய மனைவிமார் பற்றியும் வரிந்து வார்ந்து எழுதின. பிரபல டி.வி பத்திரிகைகள் சார்கொசியின் சினிமா நடிகை மனைவி என்ன உள்பாவாடை அணிந்திருந்தார், கையில்லாத ரவிக்கை அணிந்திருந்த ஒபாமாவின் மனைவி எவ்வளவு அழகு என்ற விபரங்களையெல்லாம் விலாவாரியாக செய்தி வெளியிட்டார்கள். ஆனால் அவர்கள் ஆயுதம் விற்க வந்தது பற்றி எதுவும் எழுதவில்லை.

 

ஒரு குடும்பத்திற்கு ஆயுதம் வாங்கும் செலவு- 15 ஆயிரம்

இந்த ஒரு ஆண்டுக்கான ஆயுத இறக்குமதி செலவு சுமார் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் கோடி. அதாவது தலைக்கு ஆயிரத்து ஐநூறு ரூபாய; அல்லது ஒரு குடும்பத்துக்கு ஏழாயிரத்து ஐநூறு ரூபாய். நூற்றுக்கு என்பது வீதம் ஏழைகளைக் கொண்ட இந்திய அரசு ஒரு குடும்பத்துக்கு ஏழாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு ஆயுதம் வாங்குகிறது. இதுபோக இன்னும் உள்நாட்டு ஆயுதங்கள் தனி. அதையும் ராணுவத்தின் செலவுகளுடன் சேர்த்தால் இன்னும் ஒரு ஏழாயிரத்து ஐநூறு ரூபாய். ஆக, பட்டினி கிடக்கும் இந்திய குடும்பங்களைக் காப்பற்றுவதாகச் சொல்லி அரசாங்கம் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு பதினைந்தாயிரம் ருபாய் செலவு செய்கிறது. எந்தப் போரும் சமீபத்தில் நடைபெறுவதாக தெரியவில்லை.ஆனாலும் ஆயுதங்கள் வாங்குவது மட்டும் கூடிக் கொண்டே வருகிறது.

இப்போது புரிந்திருக்கும் உங்களுக்கு ஏன் டாட்டா போன்ற பெரிய நிறுவனங்கள் ஆயுத இறக்குமதியில் இறங்கியுள்ளன என்று. அமேரிக்கா, ரசியா, ஜேர்மனி, பிரான்ஸ், சுவீடன் போன்ற நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு இந்தியாவில் கூட்டு நிறுவங்களை அமைத்து வருகின்றன. டாட்டா, மஹிந்திர போன்ற நிறுவனங்ககள் ஆயுத தயாரிப்பில் இறங்கி விற்றும் வருகின்றன.

இந்தியக் கோமாளி நடிகர்கள் – சாஹித் கபூர்; கிரிக்கெட் கேடிகள் டோனி, சுருட்டல் பேர்வழி ரத்தன் டாட்டா போன்றவர்கள் போர் விமானங்களில் ஏறி விளம்பரத்திற்காக சுற்றி வந்தார்கள். தாங்கள் ஏறி இறங்கிய விமானத்தில் எப்படியெல்லாம் வசதிகள் உள்ளன என்று விலாவரியாக விளக்கி டி.வி பார்க்கும் இந்திய ஏமாளிகளைப் புல்லரிக்க வைத்தார்கள்.

இந்திய முதலாளி ரத்தன் டாட்டா f-18 விமானத்தில்;

இந்தி சினிமாக் கோமாளி நடிகர் சாஹித் கபூர் F- 16 விமானத்தில்.

பிரிட்டனில் இருந்து கடற்படை விமானங்கள், பிரான்சிலிருந்து விமானப்படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ரஸ்ஸியாவிலிருந்து போர்க்கப்பல்கள், விமானந்தாங்கிக் கப்பல்கள், அமெரிக்காவிலிருந்து போர் விமான்கள், சரக்கு விமான்கள் என்று பலவகை ஆயுதங்கள் வருகின்றன. கூடவே, இஸ்ரேலில் இருந்து உளவுப்படைக்கான கருவிகள், தொலைத் தொடர்புக் கருவிகள் வருகின்றன. ஏறக்குறைய மூட வேண்டிய நிலையில் இருந்த அமெரிக்காவின் போயிங் நிறுவனம் இந்தியா வாங்கும் போர் விமானங்களால் தப்பிப் பிழைத்தது. தமது இந்தியப் பயனத்தால் விற்கப்பட்ட போயிங் விமானங்கள் மூலம் 27,000 பேருக்கு வேலை கிடைத்துள்ளதாக ஒபாமா பெருமைப்பட அறிவித்துள்ளார்.

ஒரு மாற்றத்திற்காக, இந்த ஆண்டு முதல் அமெரிக்க ஆயுதங்கள் கூடுதலாக இறக்குமதியாக உள்ளன. இனிமேல் அமெரிக்காவின் எப்-16 (F16) விமானங்கள் பாகிஸ்தானிலும் பறக்கும் கூடவே இந்தியாவிலும் பறக்கும். ஆக, தேசபக்தி பாகிஸ்தானியருக்கும், இந்தியருக்கும் இனி அமெரிக்கவிலிருந்து தான் வரப் போகிறது என்பது கூடுதல் செய்தி. போயிங் கம்பெனி தயாரிக்கும் F-16 விமானங்களைக் கொண்டுதான்  இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும். கூடவே, விமானிகள் அமெரிக்கப் பானமான கோகோ கோலாவைக் குடித்துக் கொள்வார்கள். அதுவும் அமெரிக்கக் கம்பெனிதான்.

 

அமெரிக்கா இப்படியென்றால், ஐரோப்பியர்கள் சளைத்தவர்களா?

இந்தியாவின் சாதனையில் தம்மையும் இணைத்துக் கொள்ள (பணம் சுருட்டிக் கொள்ள) அவர்களால் ஆன வழியில் நடிகர்கள் வியாபாரிகள் சகிதமாக வலம் வருகிறார்கள். லஞ்சம, ஊழல், மோசடியை ஒரு நிர்வாக வழிமுறையாக இந்தியாவில் அறிமுகம் செய்து அதைப் பயன்படுத்திய பெருமை பிரிட்டிஷ்கார்களுக்கு உண்டு. அந்த வழியை இன்னமும் பின்பற்றி லஞ்சம கொடுத்து தங்கள் ஆயுதங்களை விற்கிறார்கள். இந்திய அரசியல்வாதிகள், அதிகாரிகள் அமைத்துள்ள கூட்டணி ஊழலை ஒரு வாழ்க்கை முறையாகவே நடத்தி வருவதால் மிகவும் மகிழ்ச்சி அடைவது ஐரோப்பிய வங்கிகளும் அரசாங்கங்களும் தான். இப்படியாக, ஆயுதம் வாங்குவதில் பெரும்பகுதி லஞ்சமாகி, கமிஷனாகி அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு போய்ச் சேர்ந்து மீண்டும் ஐரோப்பிய வங்கிகளுக்கே வந்து சேர்ந்து விடுவதால் அனைவருக்கும் கொண்டாட்டம்.

 

ஆயுதம் வாங்குவதன் மூலம் கறுப்புப் பணம்

இந்திய சாதனை வரிசையில் தற்போதைய மிகப் பெரும் சாதனை கறுப்புப் பணம், அதாவது இந்தியப் பணத்தை வெளி நாட்டு வங்கிகளில் சேர்த்து வைப்பது. இந்திய முதலாளிகளும் அரசியல்வாதிகளும் முன்னணி வகிப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகில் கறுப்புப் பணம் என்று கண்டறியப்பட்டுள்ள மொத்தப் பணத்தில் சுமார் எண்பது சதவீதம் இந்தியர்கள் குவித்து வைத்திருக்கும் பணம் தான். அந்தப் பணம் ஆயுதம் விற்கும் நாடுகளில் முதன்மையான பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் பதுக்கி வைக்கப் பட்டுள்ளது.

1971 ம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியா எந்தப் பெரிய போரையும் நடத்தவில்லை, ஆனாலும் ஆயுதம் வாங்குவது மட்டும் கூடிக்கொண்டே போகிறது. காலாவதியாகும் ஆயுதங்களை அமெரிக்கா, பிரிட்டன மற்றும் பல நாடுகளின் படைகளுடன் போர் விளையாட்டுகள், ஒத்திகைகள் நடத்தி ஆண்டுக்கு ஒரு முறை வெடிக்க வைத்து மீண்டும் மீண்டும் புதிய ஆயுதங்கள் வாங்குகிறார்கள். வாங்கும் பொழுது கூடவே இந்தியப் பாதுகாப்பு என்று வெளியில் சொல்கிறார்கள். யாருடைய பாதுகாப்பு என்று உங்களுக்குப் புரிந்திருக்கும். ஒரு நாளைக்கு இருபது ரூபாய் கூட சம்பாதிக்க வக்கில்லாத எண்பது கோடி ஏழைகளுக்கு என்ன பாதுகாப்பு வேண்டியிருக்கிறது.

 

கிரிக்கெட் கேடிகள், கோமாளி நடிகர்கள் விற்கும் ஆயுதங்கள்

நமது ஊர் கிரிக்கெட் கேடிகளும், கோமாளி நடிகர்களும் கோகோ கோலாவை மட்டும் விற்பதில்லை. ஆயுதங்களையும் விற்கிறார்கள். இன்னும் சில நாட்களில் டி.விக்கள் விளம்பரங்களை வெளியிட்டாலும் ஆச்சர்யப்பட  வேண்டியதில்லை. சமீபத்தில் என்.டி.டிவி யில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடத்தி அமெரிக்க ஆயுதங்கள் எவ்வளவு உசத்தியானவை என்று அதன் நிருபர்கள் அமெரிக்காவுக்கே பறந்து சென்று தங்கள் அனுபவத்தை இந்திய மக்களுக்கு விளக்கிக் காட்டினார்கள்.

 

இந்தியக் கோமாளி நடிகர் சாஹித் கபூர் அளக்கும் கதையை இங்கே கேளுங்கள்:

http://www.ndtv.com/video/player/news/top-gun-shahid/190987

இந்தியக் கிரிக்கெட் கேடி தோனி அளக்கும் கதை இங்கே:

http://www.ndtv.com/video/player/news/stars-descend-at-aero-india/190810

என்.டி.டிவி. நிறுவன நிருபர்கள் ஹெர்குலஸ் விமானத்தில் பறந்து தங்கள் அனுபவத்தை விற்பனை செய்வதைப் பாருங்கள்:

http://www.ndtv.com/video/player/news/ndtv-inside-the-wc-130j-hercules/190868

பவானி

14/03/2011