Tue12062022

Last updateSun, 19 Apr 2020 8am

மீளா அடிமை உமக்கே ஆனோம்!!!

எம் மக்கள் உயிரை இழந்தனர். உயிரின் உயிரானவரை இழந்தனர். வாழ்வை இழந்தனர். எல்லாப் பக்கமும் வன்முறை சூழ்ந்து கொண்டது. வறுமை சூழ்ந்து வற்றிப் போனது வாழ்க்கை. ஒளித்துப் பிடித்து விளையாடிய குழந்தைகள் கண்டுபிடிக்கப்படாமல் காணாமல் போயினர். பாடிய பாடல்கள் பாதியிலேயே நின்றது போல் வண்ணத்துப் பூச்சிகளாக சிறகடிக்கத் தொடங்கிய வாலிபத்திலேயே வாழ்வை இழந்தனர் நம் பிள்ளைகள்.

இந்த வன்முறைகளிற்கு, தமிழ்மக்கள் மீது சிங்கள பேரினவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைகளிற்கு இலங்கை அரச பேரினவாதிகளிடமிருந்து நீதியோ, நியாயமோ என்றைக்கும் கிடைக்கப் போவதில்லை. தமிழ்மக்களை கொன்று குவித்த மகிந்த ராஜபக்ச கும்பல் ஆணைக்குழு ஒன்றை அமைத்து கொலைகாரர்களை கண்டுபிடிக்க போகிறோம் என்று நாடகம் ஆடியது. மகிந்த ராஜபக்சவுடன் பங்கு போடுவதில் ஏற்பட்ட பகை காரணமாக வெளியேற்றப்பட்ட சரத் பொன்சேகா எதிர்க்கட்சி தொடங்கி மகிந்தாவின் ஊழல்களை மக்கள் முன் வைப்பேன் என்று வீர சபதம் இட்டார். ஆனால் தமிழ்மக்களின் இனப்படுகொலையில் மகிந்தாவிற்கும்,சரத் பொன்சேகாவிற்கும் எதுவித கருத்து வேறுபாடும் இல்லை. ஆம்,தமிழ்மக்கள் சிங்களப் பேரினவாத அரசினால் படுகொலை செய்யப்படவில்லை என்று இரண்டு கொலையாளிகளும் ஒத்த குரலில் சொல்கிறார்கள். 

தமிழ்மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து அரசுத்தலைவர் மகிந்தாவும்,படைத்தலைவர் சரத் பொன்சேகாவும் காப்பாற்றினார்களாம். இலங்கை இராணுவத்தினால் ஒரு தமிழர் கூட கொல்லப்படவில்லையாம். இறந்த எம் பெண்போராளிகளின் உடல்களின் மீது கூட வன்முறை செய்த இலங்கை இராணுவம் கடமை,கண்ணியம்,கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டதாம். மகிந்தாவும், சரத்தும் சொல்கிறார்கள். இந்த நாய்கள் இத்தனை ஆயிரம் தமிழ்மக்களைக் கொன்று விட்டு நாக்கூசாமல் இப்படி பொய் சொல்கிறார்கள் என்றால் தமிழ்மக்களின் வாக்குகளைப் பொறுக்கிய தமிழ்க்கூட்டமைப்பு கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் சரத் பொன்சேகாவை,மைத்திரிபால சிரிசேனாவை ஆதரிக்கின்றது.

ஒரு லட்சத்திற்கும் அதிகமான எமது மக்களின் மரணத்தை ஒன்றுமே இல்லாத விடயம் போல கடந்து போய் இனப்படுகொலையாளிகளை தமிழ்கூட்டமைப்பினர் ஆதரித்தார்கள். தேர்தல் முடிந்து இவர்கள் ஆதரித்த மைத்திரி சிறிசேனா ஆட்சிக்கும் வந்து விட்டார். தமிழ்க் கூட்டமைப்பினர் தமிழ்மக்களிற்கு என்ன தீர்வை பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். தேசிய நிறைவேற்று சபை என்னும் அமைப்பில் அரசை ஆதரிக்கும் எல்லாக் கட்சிகளும் சேர்ந்து அரசியல் அமைப்பு திருத்தங்கள், கடந்த அரசின் ஊழல், சட்டவிரோத நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள், நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது நடைபெற்ற முறைகேடுகள், கொழும்பு மாநகரிலும், வட-கிழக்கு உட்பட நாடு முழுக்க நடைபெற்ற காணிக்கொள்ளைகள் என்பன தொடர்பாக அலசி ஆராயப் போவதாக அறிக்கைகள் விட்டார்கள்.

இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க மாட்டோம் என்று மைத்திரி அரசு சொல்கிறது. உயர் பாதுகாப்புவலயம் என்ற பெயரில் பறிக்கப்பட்ட மக்களின் நிலங்கள் திருப்பிக் கொடுக்கப்படவில்லை. வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படாமலேயே வருடக்கணக்கில் வெங்கொடுமைச் சிறைக்குள் வாடுகின்ற அப்பாவித்தமிழ் மக்கள் விடுவிக்கப்படவில்லை. பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தனா வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை குறைக்க போவதில்லை என்று யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்திருக்கிறார். முகமாலை சோதனைச்சாவடி கூட அகற்றப்படவில்லை. பின்பு எதற்காக தமிழ்க்கூட்டமைப்பு மைத்திரி சிரிசேனாவை ஆதரித்தது?. எதற்காக தேசிய நிறைவேற்று சபையில் அங்கம் வகிக்கிறது?.

 

தமிழ்க் காங்கிரஸ் கட்சி,தமிழ் அரசுக் கட்சி,தமிழர் விடுதலைக் கூட்டணி,தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று தமிழ் வலதுசாரிக் கட்சிகளின் வரலாறு முழுவதும் தமிழ் மக்களைக் காட்டிக் கொடுத்த வரலாறு தவிர வேறொன்றும் இல்லை. மான்களின் நடுவில் சிங்கம் இருந்தாலும், சிங்கத்தின் இடத்தில் மான்கள் இருந்தாலும் அழிவு மானிற்கு தான் என்று தமிழ் மான்கள் சிங்கள சிங்கங்களுடன் என்றுமே சேர்ந்து வாழ முடியாது என்று கண்ராவி கதைகள் சொன்னார்கள். 

மான் இல்லா விட்டால் சிங்கம் உணவின்றி அழிந்து விடும்; சிங்கம் இல்லாது விட்டால் இயற்கையான சமநிலை குழம்பி மான்களின் தொகை அதிகரித்து காடு அழிந்து விடும். காடு இல்லாவிட்டால் மழை இல்லை, மனிதன் இல்லை என்ற இயற்கையின் விதியை பொய்யாக மானும்,சிங்கமும் சேர்ந்து வாழ முடியாது என்று சொன்னது போலவே தமிழர்கள்,சிங்களவர்கள் என்னும் மனிதர்கள் இலங்கையில் சேர்ந்து வாழ முடியாது என்று பொய்யுரைக்கிறார்கள். சிங்களவர்களின் தோலில் செருப்பு தைப்போம் என்று பச்சை இனவாதம் பேசினார்கள். ஆனால் கணபதிப்பிள்ளை காங்கேசர் பொன்னம்பலம்,திருச்செல்வம் என்று தமிழ் தலைவர்கள் சிங்கள தலைவர்களுடன் சேர்ந்து மந்திரிகளாக பதவியேற்றபோது சிங்களப் பேரினவாதிகளிடம் பதவிப்பிச்சை பெறுகிறோம் என்று கொஞ்சமும் அவர்கள் தயங்கவில்லை.

ஐக்கிய தேசியக்கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி என்ற பேரினவாதக் கட்சிகளின் கூட்டில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனாவை, மகிந்த ராஜபக்சவின் அரசு நடத்திய தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலையின் பங்காளியை ஆதரித்தவர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து சொல்கிறார்கள் பேரினவாதக் கட்சிகளிற்கு இடமளிக்க மாட்டார்களாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் தமிழ்மக்கள் மீதான இனப்படுகொலை தொடர்பான பிரேரணையை வடமாகாண சபையில் சமர்ப்பித்து பேசுகையில் சில திருவாசகங்களை அள்ளி வழங்கியிருக்கிறார்."இரண்டாம் உலகப் போரில் இன அழிப்பைச் செய்தவர்கள் தற்போதும் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவது எந்தக் காலகட்டத்திலும் நீதி மறுக்கப்படக்கூடாது என்ற உலக மக்களின் சிந்தனைச் சிறப்பின் எதிரொலியே என்பதை நாம் மறந்து விடலாகாது. எனவே நீதியைத்தேடும் பெரும் பயணத்தில் எம்முடைய இந்தப் பிரேரணையானது அதனுடைய வகிபாகமானது முக்கியத்துவம் வாய்ந்தது". உண்மை, ஆனால் இதை இந்த மக்கள்விரோதிகள் சொல்லக் கூடாது. நாசிகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட யூத மக்களின் தலைவர்கள் எவரும் கிட்லரையோ,நாசிக் கட்சியினரையோ ஆதரிப்பது என்பதை கனவிலும் கூட நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால் சரத் பொன்சேகாவை,மைத்திரி சிரி சேனாவை ஆதரித்துக் கொண்டு இவர்கள் தமிழ்மக்களின் இனப்படுகொலைக்கு நீதி கேட்கிறார்களாம்.

"மேலும் மேன்மைதகு நிஷா பிஸ்வால் அம்மையாருடன் அண்மையில் நான் பேசிய போது அமெரிக்காவுக்கு சகாயமான அரசாங்கம் என்ற முறையில் இலங்கை அரசாங்கத்திற்கு அனுசரணையான விதத்தில் நடந்து கொள்ள விரும்புகின்றது அமெரிக்கா என்பதைப் புரிந்து கொண்டேன்". இது மேன்மை தங்கிய முதலமைச்சரின் மற்றொரு திருவாசகம். வியட்நாமில் கொன்ற அமெரிக்கா; ஈராக்கில்,அப்கானிஸ்தானில் கொல்லும் அமெரிக்கா, அமெரிக்க நிறுவனங்கள் மூலம் உலகம் முழுக்க கொள்ளையடிக்கும் அமெரிக்கா தமிழ்மக்களிற்கு அனுசரணையாக இல்லை, இலங்கை அரசிற்கு சார்பாக நடந்து கொள்கிறது என்று அய்யா விக்கி இப்போது தான் புரிந்து கொண்டாராம். ஒரு நீதிபதியாக இருந்த கல்விமான் விக்கியிற்கு அமெரிக்காவின் சுத்துமாத்துகள் தெரியாமல் இருக்கின்றதென்றால் இரண்டு முடிவுகள் தான் இருக்க முடியும். ஒன்றில் தமிழ்மக்களை பாலர்வகுப்பில் படிக்கும் பச்சிளம் பாலகர்கள் என்று அய்யா முடிவு கட்டியிருக்க வேண்டும். அல்லது அய்யாவை தமிழ்மக்கள் பாலர்வகுப்பிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அமைதிப்படை என்ற பெயரில் வந்து மிகக் குறுகிய காலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்களைக் இந்திய அரசு கொன்றது. சப்பாத்து அணிந்த கால்கள் எமது பெண்களை தரையிலே போட்டு மிதித்தன. வருடங்கள் எத்தனையோ சென்ற பின்னும் தமது தாய்,தந்தையரை கொன்ற அந்த துப்பாக்கியின் வேட்டுச் சத்தம் நமது குழந்தைகளிற்கு இன்னும் மறக்கவில்லை. ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்தியாவிற்கு அடிக்கடி காவடி எடுக்கிறது. இந்திய அரசு சொல்வதெற்கெல்லாம் தலையை ஆட்டி தாளங்கள் போட்டு பஜனை பாடுகிறது. இயற்கையை,தமது வாழ்வாதாரங்களை அழிக்க வேண்டாம் என்று போராடும் மலைவாழ் மக்களை கொன்று குவிக்கும் இந்திய அரசு இலங்கைத் தமிழ்மக்களை பாதுகாக்கும் என்று இந்த கயவர்கள் கதை சொல்கிறார்கள்.

தமிழ்க் கூட்டமைப்பு தமிழ் மக்களிற்கான கட்சி அல்ல. அவர்கள் தமிழ்மக்கள் சொல்வதை கேட்பதற்காக அரசியல் நடத்தவில்லை. அவர்கள் தமிழ்மக்களின் பிரச்சனைகளிற்கு தீர்வு காண அரசியல் செய்யவில்லை. இந்தியாவும்,மேற்கு நாடுகளுமே அவர்களின் எஜமானர்கள். ஒவ்வொரு தேர்தலிற்கு முன்னும் அவர்கள் இந்தியாவிற்கு,மேற்கு நாடுகளிற்கு போய் எஜமானர்களின் கட்டளைகளை கேட்டு வருவார்கள். தமிழ்மக்களின் முகங்களை விட கொழும்பில் உள்ள தூதர்களின் முகங்கள் கூட்டமைப்பினருக்கு மிகவும் பழக்கமானவை. அவர்களின் எஜமானர்கள் சொன்னதால் சரத் பொன்சேகாவை ஆதரித்தார்கள். மைத்திரி சிரிசேனாவை ஆதரிக்கிறார்கள். தமிழ் மக்களை கொன்ற இரத்தத்தில் நனைந்த கைகளை கட்டிப்பிடிப்பதில் அவர்களிற்கு எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லை. 

தங்களிற்கு பதவிசுகம் கிடைத்தால் போதும் என்று தமிழ்மக்களின் மீது ஏறி மிதிக்கும் இவர்களின் துரோகங்கள்  ஒருநாள் நிச்சயம் மக்கள் மன்றத்தில் அம்பலமாகியே தீரும். சிதைந்து போன வாழ்வை எண்ணி உறைந்து போயிருக்கும் மக்கள் திடீரென மேகம் கறுத்து பெய்யும் மழை போல ஒரு நாள் நெஞ்சக்கூட்டின் கனல் மூண்டு எரிய எழுவார்கள். பொய்களும், துரோகங்களும் அப்பெருநெருப்பில் கருகிச் சாம்பலாகும்.