Tue12062022

Last updateSun, 19 Apr 2020 8am

மாட்டை உண்டதற்காக மனிதரை கொல்லும் மதவெறிக் கொலையாளிகள்!

உணவிற்காக மனிதர்கள் மாட்டை உண்ட போது கொலை செய்யப்பட்டதை எதிர்த்து எழுதப்பட்ட கட்டுரை. அப்போது பம்மிக் கொண்டு இருந்து விட்டு இப்போது பொங்கி எழுந்து "புரட்சி" பேசும் சில முகநூல்காரர்களிற்கு சமர்ப்பணமாக இந்தக் கட்டுரை மறு, மறுபிரசுரம் செய்யப்படுகிறது.

இந்தியா முழுவதிலும், குறிப்பாக குஜராத்தில் இந்து மதவெறியர்கள் மாட்டிறைச்சி விற்பனை செய்பவர்கள், உண்பவர்கள் என்னும் அடித்தட்டு, ஏழை மக்களின் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள். மதவெறியர்களை எதிர்த்து 06.12.2015 வெளி வந்த கட்டுரை மறுபிரசுரம் செய்யப்படுகிறது.

எல்லா உயிரினங்களும் உணவுச்சங்கிலியில் கீழிலிருந்து மேலாக அடங்கும். ஒளிர்ந்து எரியும் சூரியனிடம் இருந்து பசும் தாவரங்கள் பச்சையம் பெற்று பசியாறும். பாய்ந்து துள்ளும் மான் அம்மரத்தின் பசுந்துளிர் கடித்து உயிர் வாழும். கானகத்து பெரும்புலி அம்மானை வேட்டையாடி அடித்து உண்ணும். எல்லா உயிரினங்களும் இரைகளே. வேட்டையாடும் மிருகம் இன்னொரு விலங்கினால் வேட்டையாடப்படும். இது தான் இயற்கை. பல்லுயிரும் பெருகி வாழும் காடு கனமழை பொழிய செய்யும். மாமழை போற்ற நாடு செழிக்கும். மனிதர் பசியின்றி வாழ்வார். இது தான் இயற்கையின் விதி, இயற்கை அன்னையின் கொடை.

தாவர உணவு உண்ணும் உயிரினங்கள், மாமிசம் உண்ணும் உயிரினங்கள் என்னும் உணவுமுறைகள் பரிணாம வளர்ச்சியின் படிமுறையில் நிகழ்ந்தவை. உயிரிகள் தாம் வாழும் சூழலிற்கு ஏற்ப தம்மை தக்க வைத்துக் கொள்ளும் இடையறாத போராட்டத்தில் அவை தமது உணவு முறைகளை அமைத்துக் கொண்டன. கடலில் வாழும் சுறா தன்னோடு கடலில் வாழும் மீனைத் தான் உண்ண முடியும். சீனாவின் மூங்கில்காடுகளில் வாழும் பண்டா கரடி மூங்கில் இலையைத் தான் உண்ணமுடியும், பண்டா பசித்தாலும் யாழ்ப்பாணம் வந்து பனை ஓலையை தின்ன முடியாது. தான்சானியாவின் செரங்கட்டி சமவெளிகளில் இருந்து கெனியாவின் மாசாய் மாரா காடுகளிற்கு ஒவ்வொரு வருடமும் வலசை போகும் இலட்சக்கணக்கான காட்டு மாடுகளைத் தான் சிங்கங்கள் இலகுவாக வேட்டையாடி பசியாறும்.

அது போலவே மனிதர்களும் தாம் வாழும் சூழலிற்கு ஏற்ப தமக்கு கிடைக்கும் உணவு வகைகளை உட் கொள்கிறார்கள். தீவுகளில் வாழும் மனிதர்கள் பிரதான உணவாக மீனை உண்பார்கள். கலவாய், கெளிறு, அறக்குளா என்று இலங்கை மக்கள் மீன்களை உண்டால் ஐரோப்பியர் சல்மன் மீனை விரும்பி உண்பர். இயற்கை வாழ்வு வாழும் பழங்குடியினர் எல்லோரும் மாமிசமே உண்ணுகின்றனர். எந்தவொரு பழங்குடியினரும் சுத்த சைவர்கள் கிடையாது. எந்தவொரு மிருகமும் விலக்கப்பட்ட மிருகம் கிடையாது.

தனிச்சொத்துடமை வந்து அதைக் காப்பாற்ற பெரும்சமயங்கள் வந்த பிறகே புனித மிருகங்கள், தீண்டத்தகாத விலங்குகள் என்னும் பைத்தியக்காரத்தனங்கள் உலா வந்தன. இந்தியாவில் தோன்றிய சமண மதம், இந்து மதம் என்பவை பசுவைப் புனிதமாக்கி மாட்டு இறைச்சி உண்ணக்கூடாது என்று தடை போடும் போது மத்திய கிழக்கில் தோன்றிய யூத சமயத்தின் கோசர் (kosher food) உணவு விதிகளும் அதன் பின் வந்த இஸ்லாமிய சமயத்தின் கலால் (halal) உணவு முறைகளும் பன்றியைப் பகைத்து விலக்கப்பட்ட உணவாக்குன்றன. ஒரே பிரதேசத்தில் தோன்றிய சமயங்கள் ஒரே உணவை விலக்கப்பட்டதாக கொள்வது தற்செயலானது அல்ல. ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் மதவாதிகள் எப்படி உணவு விடயத்தில் ஒன்று படுகின்றனர்?. சமுக, பொருளாதார, புவியியல், சூழலியல் காரணிகளையே பின்பு சமயங்கள் தமது விதிகளாக எடுத்து விட்டன என்பதை இது எளிதாக எடுத்துக் காட்டுகிறது.

இந்தியாவின் பெரும் பிரச்சனை என்னவென்று கேட்டால் சிறு குழந்தைகள் கூட பசி என்று சொல்லும். ஆனால் இந்து மதவெறிக் கூட்டத்திற்கு மாட்டிறைச்சி உண்பது தான் இந்தியாவின் எரியும் பிரச்சனையாக மண்டைக்குள் புகைகிறது.

பிராமணர்களும் அவர் தம் அடிவருடிகளும் கோமாதா என்று சொல்லி பசுவைப் புனிதமாக்குகிறார்கள். ஆனால் அந்நாளில் பிராமணர்கள் மாடு உண்டார்கள். மாடு உட்பட தூக்கி போடக்கூடிய எல்லா மிருகங்களையும் நெருப்பிலே தூக்கிப் போட்டு வேள்விகள் செய்தார்கள்.

சமண சமயமும், புத்த மதமுமே அகிம்சை தத்துவத்தை சொன்ன சமயங்கள். சமணர்கள் கொல்லாமையை தீவிரமாக கடைப்பிடித்து தாவர உணவு உண்டார்கள். புத்த சமயம் அகிம்சையை போதித்த போதிலும் அதைக் கட்டாயம் என்று சொல்லவில்லை. கெளதம சித்தார்த்தரே தமக்கு ஒரு கொல்லர் பிச்சையாக கொடுத்த பன்றி இறைச்சியை உண்டதனால் ஏற்பட்ட நோயினால் தான் மரணமடைந்தார் என்று கதைகள் கூறுகின்றன. விலங்குகளை உணவிற்காகக் கூட கொல்லக் கூடாது என்று இன்று அகிம்சை அவதாரம் எடுக்கும் இந்துமதத்தின் தத்துவாசிரியர்களான பிராமணர்கள் யாகம், வேள்வி என்று விலங்குகளை அன்று அநியாயமாக பலி கொடுத்த போது ஆதிப்பகுத்தறிவாளர்களான சார்வாகர்களே பிராமணர்களின் முட்டாள்தனத்தை, உயிர்க்கொலையை கேள்வி கேட்டார்கள்.

"விலங்குகளை ஏன் தேவையில்லாமல் யாகத்தீயில் போட்டு கொல்கிறீர்கள்" என்று சார்வாகர்கள் கேட்ட போது "யாகத்தில் எரிப்பதனால் அவை உடனே சொர்க்கலோகத்திற்கு சென்று விடும் அதனால் நாம் விலங்குகளிற்கு நன்மையே செய்கிறோம்" என்று ஒரு அரும் பெரும் விளக்கத்தை அந்த முட்டாள்கள் கொடுத்தனர். "இறைவனிடம் போக வேண்டும் என்று கைலாசத்திற்கும், வைகுந்தத்திற்கும் போக வழி தேடும் நீங்கள் விலங்குகளை நெருப்பிலே போடுவதை விட்டுவிட்டு நீங்களே தீயில் குதித்தால் நீங்கள் சொல்வது போல உடனே சொர்க்கத்திற்கு போகலாமே" என்று சார்வாகர்கள் அந்த பொய்யர்களை கிண்டலடித்தார்கள்.

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளிற்கு மாட்டு இறைச்சி ஏற்றுமதி செய்து கோடிக்கணக்கில் வர்த்தகம் செய்யும் பெருமுதலாளிகளை இந்த பசுநேசர்கள் ஏன் கண்டு கொள்வதில்லை. இந்த வெறியர்களின் கட்சி தான் ஆட்சியில் இருந்து ஏற்றுமதி செய்ய அனுமதி கொடுக்கிறது. மாட்டிறைச்சி உண்பவர்களையும், அதை விற்கும் ஏழை மக்களையும் சித்திரவதை செய்யும், கொலை செய்யும் இந்த அயோக்கியர்களின் கூட்டம் தான் முதலாளிகளினதும், பாரதிய பயங்கரவாத கட்சியின் மந்திரிகளினதும் கால்களைக் கழுவுகிறது

தன் பசிக்காக மாட்டை உண்பதை பெரும் பாதகமாக பிரச்சாரம் செய்யும் இந்தக் கூட்டத்தின் கால்களில் இருக்கும் காலணிகளை தோலில் செய்யாமல் பருப்பிலும், கத்தரிக்காயிலுமா செய்கிறார்கள்?. மெழுகுவர்த்திகள், வாசனைத் திரவியங்கள், பற்பசைகள், சவர்க்காரம், மருந்துகள், வெண்கட்டிகள் என்பவற்றிற்கு மாட்டுக்கொழுப்பு மூலப்பொருளாக இருக்கிறது. வாகனங்களின் சக்கரங்களிலும், இருக்கைகளிலும் மாடுகளின் தோல்கள் தான் இருக்கின்றன எனவே இந்த அகிம்சாமூர்த்திகள் இனி நடந்தே எங்கும் செல்ல வேண்டும்.

மாட்டிறைச்சி உண்ணும் ஏழைகளை அடித்துக் கொல்லும் இந்த கொலைகாரக்கூட்டம் ஸ்ரேக் (steak) உண்ணும் அமெரிக்க ஜனாதிபதியோ, யோர்க்சயர் புடிங் உடன் ரோஸ்ட் பீவ் (Sunday roast, Yorkshire pudding and roast beef) ஞாயிற்றுக்கிழமையின் விசேட உணவாக உண்ணும் பிரித்தானிய அரச குடும்பமோ வந்தால் காலில் விழுந்து வணங்குகிறது.

கடந்த சில நாட் களிற்கு முன் அமெரிக்காவின் கொலொராடோவில் கருக்கலைப்பு செய்யும் ஒரு மருத்துவமனையில் வைத்து மூன்று பேரை கொலை செய்தான் ஒரு புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மதவெறியன். (Liam Stack, the New York Times, 29.11.2015). ஒரு பெண் தன் உடல்நிலை, உளநிலையை கருத்தில் கொண்டோ அல்லது சமுக, பொருளாதாரக் காரணிகளாலோ தன் கருவைச்சிதைப்பதை பாவம் என்றும் கருவைக் கொல்கிறார்கள் என்றும் சொல்லும் இந்த மதவெறியர்கள், தாம் வாழ்வை மதிப்பவர்கள் (Pro life) என்றும் சொல்லும் இவர்கள் அப்பாவி மனிதர்களை எந்தவித தயக்கமும் இல்லாமல் கொல்கிறார்கள்.

மாட்டை உண்டார்கள் என்பதற்காக மனிதர்களைக் கொல்லும் கூட்டம், கருவைக் கலைக்கிறார்கள் என்பதற்காக கொலை செய்யும் கூட்டம், பெண்களைக் கல்லெறிந்து கொல்லும் கூட்டம், அகிம்சையைச் சொன்னவனின் பேரைச் சொல்லிக் கொண்டு இனப்படுகொலை செய்யும் கூட்டம் என்று மதவெறிக்கூட்டம் என்றைக்கும் கொலைகாரர்களின் கூட்டமாகவே இருக்கிறது. இந்த மண்டை கழண்ட கூட்டத்தின் பித்தலாட்டங்களை மக்கள் முன் ஆதிப் பகுத்தறிவு வாதிகளான சார்வாகர்கள் அம்பலப்படுத்தியது போல இன்றைய பகுத்தறிவுவாதிகளான மார்க்கசியர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது வரலாற்றின் கடமையாக முன்னிற்கிறது.