Sun08252019

Last updateSat, 29 Jun 2019 5am

இனவாத மதவாத அழிவுகளுக்கு இடமளியோம்! முன்னிலை சோஷலிஸக் கட்சி

ஆகஸ்ட் 10ம் திகதி மாலை கிராண்டபாஸ் ஸ்வர்ன சைத்திய பாதையில் அமைந்துள்ள முஸ்லிம் வணக்கஸ்தலமொன்றின் மீது சிலர் தாக்குதல் நடத்தியதன் பின்னர் தோன்றியுள்ள இனவாத மற்றும் மதவாத மோதல் நிலைமைகள் சம்பந்தமாக ஒட்டுமொத்த சமூகமும் கவனம் செலுத்த வேண்டுமென எண்ணுகிறோம்.

இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கிடையில் மோதலுக்கான சூழ்நிலை உருவாகியிருக்கிறது. இச்சந்தர்ப்பத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் அந்த சம்பவத்திற்கான காரணங்களை ஆராய்வதைவிட அதன் அரசியல் மூலங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டுமென்பதே எங்களது எதிர்பார்ப்பாகும்.

குறித்த இந்த சம்பவம் எத்தகையதாக இருந்தாலும் இப்படியான சம்பவங்கள் உருவாவதற்கான நிலைமைகள் சில காலமாக ஊட்டி வளர்க்கப்பட்டு வந்துள்ளமை நாடறிந்த இரகசியமாகும். அரசாங்கம் இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்தவர்களைப் போன்றே நவ தாராளமய தந்திரோபாய பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதோடு நவ தாராளமய முதலாளித்துவம் தற்சமயம் சமூகத்தின் அனைத்து பிற்போக்குத்தனங்களையும் உறிஞ்சிக் கொண்டு நவ கன்சர்வேடிவ்வாதத் தோடு கைகோர்த்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

தற்போதைய அரசாங்கமும் கூட இனவாதத்தையும் மதவாதத்தையும் ஆட்சி செய்வதற்கான உபாயமாக பயன்படுத்தி வருவதோடு தொடர்ந்தும் அவற்றை நியாயப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. பல்வேறு மதவாத இனவாத குழுக்களுக்கு கிடைக்கும் அரசாங்கத்தின் அநுக்கிரகமும்  இனவாதத்தையும். மதவாதத்தையும் பராமரிப்பதற்காக அரசாங்கத்தின் பிரபலங்கள் வழங்கும் பங்களிப்பும் தொடர்ந்தும் இரகசியமாக இல்லை.

இந்த நிலைமையின் கீழ் வெடிப் பொருட்களை களஞ்சியப்படுத்தியிருக்கும் களஞ்சியசாலையின் நிலைக்கு இலங்கை சமூகம் தள்ளப்பட்டிருப்பதோடு ஒரு சிறிய சம்பவம் கூட சிறிய தீப்பொறி கூட ஒட்டுமொத்த நாகரிகத்தின் மரபுரிமையை சாம்பலாக்கும் தீயை உண்டாக்கக் கூடிய நிலைமைகள் உருவாகியிருக்கின்றன. எங்களது விரல் தீப்பொறிகளின் பக்கம் மட்டும் நீளவில்லை வெடிப் பொருட்களை குவித்து வைத்த அத்தனை பேரினதும் பக்கமே நீள்கிறது. நாட்டில் மீண்டும் மனிதப் பரிதாபத்தை நிர்மானிக்கும் பொறுப்பை தனது குறுகிய நோக்கங்களுக்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் ஊட்டி வளர்த்த ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

30வருட காலம் சிங்கள தமிழ் சமூகங்களுக்கிடையில் வளர்ந்து வந்த இனவாதம் மற்றும் அதன் வெளிப்பாடுகளினால் உருவான இனவாத யுத்தம் சமூகத்தில் பாரிய அழிவை ஏற்படுத்தியது. அங்கே சகலவிதமான சமூக நீதி தர்மங்களும் மனித நேயமும் அழிந்தது. மீண்டும் அவ்வாறானதொரு அழிவு எமது சமூகத்தில் ஏற்படுவதை தடுக்க வேண்டிய பொறுப்பு எங்கள் அனைவரினதும் கைகளிலேயே தங்கியுள்ளது. எனவே சம்பவங்களை பார்த்து உணர்ச்சி மேலோங்க விஸ்வரூபம் எடுத்து செயற்படுவதற்குப் பதிலாக சமூகத்தின் நன்மையைக் கருதி எம்மீது சுமத்தப்பட்டுள்ள கடமைக்கு

முக்கியத்துவமளிக்குமாறு இலங்கையின் ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களை கேட்டுக் கொள்கிறோம். இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் எதிராக அணிதிரளுமாறும் ஆட்சியாளரின் நிலைத்தலுக்காக தோற்றுவிக்கப்படும் போலி எதிரிகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்து ஒடுக்குமுறையின் உண்மையான மூலங்களுக்கு எதிராக சிங்கள தமிழ் முஸ்லிம் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒன்றிணைந்த செயற்பாட்டை கட்டியெழுப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

அரசியல் சபை

முன்னிலை சோஷலிஸக் கட்சி

2013.08.11