Mon02242020

Last updateTue, 10 Dec 2019 10am

பொதுநலவாய மாநாடு தமிழீழ மாநாடா?

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாடு தமிழ்மக்களுக்கு குரல் கொடுக்கும் மாநாடாக அமைய வேண்டும் எனும் பாங்கில் இருந்து, தேசிய-சர்வதேசியத்தின் தமிழ் உணர்வாள சக்திகள் பற்பல பிரச்சாரப் பிரயத்தனங்களைச் செய்கின்றன.

தமிழ்நாட்டில் தியாகு ஆரம்பித்த சாகும்வரை உண்ணாவிரதம், அவரை சாகாமலே காப்பாற்றிற்று. தவிரவும் ஓரிருவரை தீக்குளிக்கவும் வழிவகுத்தது. இப்போ எல்லோருடைய குவிமையக் குரலானது இந்தியப் பிரதமர் வருகை பற்றியதாகியதுடன், அதனூடே மாபெரும் வாதப்பிரதிவாதங்களையும் தோற்றுவித்துள்ளன.

இதில் தமிழ்நாட்டின் தேர்தல் அரசியலாளர்கள் அடுத்த பாராளுமன்றத் தேர்தலை கணக்கில் வைத்து தங்கள் காய்களை நகர்த்துகின்றார்கள். இதில் ஜெயலலிதாவின் சட்டமன்ற தீர்மானம், தி.மு.க.வின் ஈழத்தமிழர் அக்கறை அழுகுரல்கள், பாரதிய ஜனதாவின் தமிழர் அனுதாப மாரடிப்பு நடிப்புகள் எல்லாம் எதன்பாற்பட்டவைகள்?

மாநாட்டிற்கு பிரதிநிதிகள் செல்லலாம், ஆனால் பிரதமர் செல்லக்கூடாது என மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் சிதம்பர-சக்கர அரசியல் சூனியத்தை எதற்குள் உள்ளடக்கிப் பார்ப்பது? எது எப்படி இருந்தபோதிலும், இந்தியப் பிரதமர் கலந்து கொள்வதில் மாற்றங்கள் இருக்காது என்பதற்கான சமிக்கைகளே மேம்பட்டு நிற்கின்றது.

இந்நிகழ்வுகளுக்கு அப்பால் எம்நாட்டின் தமிழர் தரப்பானது திரிசங்கு நிலையில் உள்ளது. சம்பந்தன் இந்தியப் பிரதமர் வரக்கூடாது என்கின்றார். விக்கினேஸ்வரன் இந்தியாவால்தான் வடமாகாணசபைத் தேர்தல்கூட நடைபெற்றது. ஆகவே இந்தியப் பிரதமர் வருவது மட்டுமல்ல, வடமாகாணத்திற்கும் வரவேண்டும் எனவும் உரிமையுடன் கூடிய அழைப்பும் விடுத்துள்ளார். இம் முரண்நகை பற்றிக் கேட்டால் சமபந்தன் சட்டத்தரணியாகி வாதாட, விக்னேஸ்வரன் நீதிபதியாகி தீர்ப்பபையும் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் மேற்சொல்லப்பட்ட சக்திகளின் எதிர்பார்ப்புக்கள், எதிர்வு கூறல்களை முறியடிக்கும் வகையில் பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா கருத்து தெரிவித்துள்ளார்

"இலங்கையில் இடம்பெற்றதாகக் குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கையை கமலேஷ் சர்மா நிராகரித்துள்ளார். இலங்கை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடைமுறைச் சாத்தியமற்றது சர்வதேச விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப்பட மாட்டாது. இலங்கை மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த இலங்கையுடன் பொதுநலவாய நாடுகள் அமைப்புச் செயலகம் இணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்."

பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தின் கீழ் "சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியமாக" ஆளப்பட்ட உறுப்பு நாடுகளின் அமைப்பே பொதுநலவாய அமைப்பு. பொதுநலவாய அமைப்பினுடைய கொள்கை வகுப்பாளர்களில் பிரதானமானவர்கள் பிரிட்டனும், அதன் தலைவியுமான எலிசபெத் மகாராணியுமாவர். இவர்களின் விருப்பு வெறுப்பின் பாற்பட்ட செயற்பாடுகளே இவ்வமைப்பின் நடைமுறைகளைத் தீர்மானிக்கும்.

பொதுநலவாய அமைப்பு தென்னாபிரிக்காவை இனவெறி அரசாக கணித்து கிட்டத்தட்ட 33-வருடங்கள் தன் அமைப்பில் இருந்து விலக்கி வைத்தது. இபோல் பாகிஸ்தானையும், பிஜிநாட்டையும் விலக்கி வைத்தது. இதன் அடிப்படையில் மனித உரிமைகளை மீறி இனப்படுகொலைகளைச் செய்த இலங்கையை இவ் அமைப்பில் இருந்து நீக்கவேண்டும் எனும் கோரிக்கையில் ஏன் இந்நாடுகளும் இவ் அமைப்பும் கரிசனை கொள்ளவில்லை.

இவ் அமைப்பில் உள்ள ஏகப்பெரும்பான்மையான நாடுகள் எல்லாம் ஜனநாயகத்தின் தொட்டில்கள் அல்ல. மனித உரிமை காப்பங்களும் அல்ல. மகிந்த அரசு எதைச் செய்கின்றதோ அதையே இந்நாடுகளும் தம்மக்களுக்கு செய்கின்றது. சிலவேளை (மக்கள் விரோதம்-அடக்கி ஒடுக்கலில்) கூட்டல் - கழித்தல் - பெருக்கல் - பிரித்தல்களில் சமனற்ற சீர் நிலைமைகள் இருக்கலாம். ஒப்பீட்டளவில் மக்கள் விரோதிகளே.

இவர்களிடம் போய் மகிந்தாவிற்கு தண்டனை கொடு என்றால், அது நடக்கிற காரியமா? அதிலும் இந்தியாவை நம்புவது என்பது அந்நாடு அணிசேராமையை, அதற்கு வலுச்சோக்கும் பஞ்சசீலக் கொள்கையை எப்பவோ தொலைத்துவிட்டு, தேசிய இனங்களின் சிறைக் கூடமாகியுள்ளது. மேலாதிக்க அரசாகியுள்ளது. மேற்சொன்னவைகள் எல்லாம் உயிரோட்டமாக இருந்த வரலாற்றுச் சூழல் அன்றிருந்தது. அச்சூழலில்தான் தென்னாபிரிக்காவை இடைநிறுத்தும் வல்லமையும், ஜனநாயகப் பண்பும் இவைகளுக்கு அன்று இருந்தன.

இன்று இவைகள் எல்லாம் வல்லாதிக்கவாதிகளின் வல்லமைக்குள் அமுங்கியுள்ளன. இவைகளின் விருப்பு-வெறுப்பின் பாற்பட்டதே இவவுலகமயமாத சுழற்சியின் நிகழ்சிநிரல். இந்நிகழ்ச்சி நிரலில் மகிந்தாவின் "லக்கி பை சான்சே" அவரின் சமகால அரசியல் நிர்ணயத்தை நிர்ணயிக்கின்றது.