ஒருகளம் கண்டுகொண்டால் மறுகணம் பாசிசம் நடுங்கும்.
- Details
- Category: சிறி
-
19 Oct 2012
- Hits: 3629
என்னையும் நின்னையும்
பகைமூழவைத்து உயிர்
பறித்தவர் சரித்திரம்
இலங்கையில் உறங்கும்.
உழைக்கும் எம்கரங்கள்
இணைந்தே வீறுகொண்டோங்கும்.
இணைந்து நாம் எழுந்தோம்
இனியொரு இனவாத
மதவாதக் கூற்றனுக்
கிங்கென்ன வேலை
எடு வேலை
எய்தவனை வீழ்த்து.
இடியென்னவிருளென்ன
எதுவந்தபோதும்
அடியோடெமைப்
பெயர்ப்பார் இல்லை.
இனிவீரப்பறையது ஓயாது அதிரும்.
வரலாறுண்டெமக்கென்று வாகைசூட
எதுபேதமில்லாமல் பாட்டாளிப்
படையதன் சங்காரரீங்காரம் முழங்கும்.
எம்களம் வந்து சிங்களத் தோழனும்
சிங்களம் வந்து என்வழித் தோழனும்
ஒருகளம் கண்டுகொண்டால்
மறுகணம் பாசிசம் நடுங்கும்.
தனித்தனியாக பிரித்தெமை களனியில் வீசி
வன்னியில் தலைகளை சீவித்
துடைத்தவர் கொடுமைகள் அடங்கும்.
கறைகளும் துயர்களும் களைந்து நாம்
நிமிர்ந்தெழுந்து மானுட விடுதலைப்
படையாய் மண்ணினில் தழைப்போம்.
-19/10/2012