Wed05272020

Last updateSun, 19 Apr 2020 8am

புதிய அரசிடம் சமவுரிமை இயக்கத்தின் கோரிக்கைகள்

சமவுரிமை இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின் அறிக்கை

22.01.2015 இன்று மருதானை டீன்ஸ் வீதியில் அமைந்துள்ள சமூக சமய மையத்தில் சமவுரிமை இயக்கம் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. ஜனாதிபதித் தேர்தலின் பின்பதான நாட்டின் அரசியல் நிலவரம் தொடர்பில், கொள்கை அளவில் தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சமவுரிமை இயக்க அமைப்பின் தேசிய ஏற்பாட்டாளர் ரவீந்திர முதலிகே மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான தர்மலிங்கம் கிருபாகரன், எஸ்.எம்.கிரிசாந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய சமவுரிமை இயக்கத்தின் தேசிய ஏற்பாட்டாளர் ரவீந்திர முதலிகே தெரிவித்ததாவது,

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் காணப்பட்ட ஊழல், குடும்ப ஆதிக்கம், ஜனநாயக உரிமைகள் மறுப்பு, கட்டுமீறிய விலைவாசி அதிகரிப்பு போன்ற இன்னோரன்ன மக்கள் விரோத நடவடிக்கைகளால் விரக்திக்குள்ளாகியிருந்த நிலையில் தான், எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா நல்லாட்சி, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் 100 நாள் வேலைத்திட்டத்தை முன்வைத்ததன் மூலம் நாட்டு மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றார்.

அதேவேளை பிரதான வேட்பாளர்கள் இருவருமே நாட்டின் பிரதான பிரச்சினையான தேசியப்பிரச்சினையில் ஒரே மாதிரியான கொள்கையையே பிரச்சாரம் செய்தனர். தற்போதைய அரசாங்கத்தின் "குசினி" மந்திரிசபையின் தீர்மானத்துக்கு இணங்க ஜனாதிபதி தலைமையில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கூட்டணிக்கட்சி தலைவர்களையும் இந்த கூட்டணியில் வெளிப்படையாக பங்கேற்காத மக்கள் விடுதலை முன்னணியையும் உள்வாங்கியதான தேசிய நிறைவேற்று சபையை உருவாக்கி பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே வெகுஜன அமைப்பு என்ற வகையில் நாம் தற்போதைய அரசியல் சூழலில் தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த விடயத்தில் கவனம் செலுத்தாமல் நாட்டின் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. எனவே இது தொடர்பில் நாட்டு மக்கள் மத்தியில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. இது தொடர்பாக எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதே இந்த ஊடகவியலாளர் சந்திப்பாகும். நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் விடயத்தில் சட்ட நடவடிக்கை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்ற யோசனை தேசிய நிறைவேற்று சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை தண்டனைக்குட்படுத்த வேண்டும் என்பதனையே இந்த யோசனை மறைமுகமாக வலியுறுத்துகிறது. இந்த யோசனையை சமவுரிமை இயக்கம் முழுமையாக நிராகரிக்கிறது.

ஏனெனில் அரசியல் கைதிகள் அரசியல் காரணிகளால் உருவாக்கப்பட்டவர்கள். நாட்டில் யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடத்தை தாண்டிவிட்டது. கைதிகளில் அனேகமானோர் 10, 15 வருடங்களாக சிறைவாசம் அனுபவிப்பவர்களாகும். எனவே மேலும் அவர்களை விசாரணையென்ற போர்வையில் காலத்தை கடத்த முனைவது நல்லாட்சிக்கான அடையாளமல்ல. அடுத்ததாக அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய முன்னுதாரணங்கள் பல உண்டு என்பதை இங்கு நாங்கள் சுட்டிக்காட்டி அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யும்படி அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்.

மகேஸ்வரன், நடரஜா ரவிராஜ், யோசப் பரராஜசிங்கம், ஜெயராஜ் பெர்னான்டோ பிள்ளை மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க ஆகிய சிலரின் படுகொலை சம்பவங்கள் தொடர்பில் மீள் விசாரணை நடாத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ரஜித்த சேனாரத்னா அறிவித்துள்ளார். இது நல்ல விடயம் இதனை நாம் வரவேற்கும் அதேவேளை இந்த விடயத்தில் மறந்துபோன கவனத்தில் எடுக்காத பக்கமும் உண்டு என்பதை நாம் நினைவுபடுத்துகிறோம்.

கடந்த காலங்களில் தமது உரிமைகளுக்காக போராடிய சிங்கள, தமிழ், முஸ்லிம் பொதுமக்கள் பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக சிறைசாலைக்குள் வைத்து கொலை செய்யப்பட்ட நில்ருக்ஷான், நிமலரூபன் போன்றோரின் கொலைகளுக்கு விசாரணை கிடையாதா? கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள றத்துபஸ்வெல பிரதேசத்தில் சுத்தமான குடிநீருக்காக போராடிய மக்கள் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டமை, தமது சேமலாப நிதியை பாதுகாக்க போராடிய கட்டுநாயக்கா தொழிலாளர் சுட்டுக்கொல்லப்பட்டமை, மண்எண்ணை மானியம் கோரி போராடிய நீர்கொழும்பு மீனவர் அன்ரனி கொலை பற்றியெல்லாம் விசாரணை கிடையாதா? இவைகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம்.

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் யுத்தம் நடந்த சமயத்தில் அதிஉயர் பதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்ட பொதுமக்களின் நிலங்களை யுத்தம் முடிந்து 5 வருடங்கள் பூர்த்தியாகிய நிலையிலும் நிலங்களின் சொந்தக்காரர்களுக்கு காணிகள் மீள ஒப்படைக்கப்படவில்லை. தேசிய பாதுகாப்பு என்ற பேரில் அந்த நிலங்களை கையகப்படுத்தி வைத்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. கொழும்பில் இராணுவத் தலைமையகம் அமைந்திருந்த நிலத்தை வெளிநாட்டவருக்கு விற்பதற்காக இராணுவத் தலைமையகம் பிறிதொரு இடத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இது தேசியப் பாதுகாப்புக்கு உகந்த ஒன்றாகுமா? எனவே வடக்கு கிழக்கிலுள்ள பொதுமக்கள் நிலங்களை தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் கையகப்படுத்தி வைத்திருப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததொன்றாகும். எனவே நல்லாட்சி தொடர்பாக வடகிழக்கு உட்பட பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கும் இந்த ஜனாதிபதியின் அரசாங்கம் இந்த நிலங்களை மீளவும் நிலங்களின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென சமவுரிமை இயக்கம் வலியுறுத்துகிறது.

அரசாங்கம் ஜனநாயகம் பற்றி பீற்றிக்கொண்டு அரசமைப்பில் ஒரு சில திருத்தங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கின்றது. வடக்கு கிழக்கில் இராணுவ அதிகாரத்தை இரத்துச் செய்ய வேண்டும். யுத்தம் முடிந்து 5 வருடங்கள் ஆகியும் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்படவில்லை. மேலதிகமாக உள்ள இராணுவத்தினரை அவரவர் தகுதிக்கேற்ப வெவ்வேறு பணிகளில் அமர்த்துவதின் மூலம் இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க முடியும். இராணுவத்தின் பாதுகாப்புச் செலவீனத்தையும் குறைக்க முடியும். எனவே வடக்கு கிழக்கில் மேலதிக இராணுவத்தை வாபஸ் பெற வேண்டும், அல்லது முகாமுக்குள் முடக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். தேசிய பாதுகாப்பு என்பது அதிகார வர்க்கத்தின் பாதுகாப்பையே குறிக்கின்றது. நாட்டு மக்களின் உரிமைப் போராட்டங்களை அடக்கி ஒடுக்குவதற்காகவே தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் மேலதிக இராணுவத்தை தொடர்ச்சியாக வைத்திருப்பதற்கு முயற்சிக்கப்படுகிறது. யுத்தமில்லாத நாட்டுக்கு இவ்வளவு பெரிய இராணுவம் வீணான ஒரு பொருளாதாரச் சுமை என்பதைக் கருத்திற்கொண்டு மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். யுத்தம் முற்றுப்பெற்ற நிலையில் பயங்கரவாத தடைச்சட்டம் தேவையற்றதொன்று. எனவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனடியாக வாபஸ் பெறக் கோருகின்றோம். இவ்வாறு சமவுரிமை இயக்கத்தின் தேசிய ஏற்பாட்டாளர் ரவீந்திர முதலிகே தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய சமவுரிமை இயக்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் தர்மலிங்கம் கிருபாகரன் கூறியதாவது,

அரசியல் கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். ஏனெனில் இவர்களில் அநேகமானோர் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளின்றி சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்கள். 1987 இல் இலங்கை- இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தானதை தொடர்ந்து அமைதி திரும்பிய காரணத்தை முன்வைத்து அரசியல் கைதிகளாக சிறைவாசம் அனுபவித்த நூற்றுக்கணக்கானோர் அன்றைய ஜே.ஆர் ஜெயவாத்தன அரசாங்கத்தினால் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் போது கைதுசெய்யப்பட்ட சிங்கள இளைஞர்கள் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை ஆகினர்.

1989 - 90 களில் கிளர்ச்சியின் போது கிட்டத்தட்ட 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும், பல நூற்றுக்கணக்கானோர் சிறைப்பிடிக்கப்பட்டும் இருந்தனர். இவர்களும் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த நிகழ்வுகளை முன்னுதாரணமாகக் கொண்டு அரசியல் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். அதேபோல் யுத்தத்தின் காரணமாக அகதிகளாக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கி அவர்களை சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கு- கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் பெருமளவில் இந்ந ஜனாதிபதிக்கு வாக்களித்தது இந்த ஜனாதிபதியின் தலைமையிலான நல்லாட்சியின் கீழ் தங்களின் நெருக்கடிகளுக்கும் பிரச்சனைகளுக்கும் நியாயமான தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பினாலே ஆகும். எனவே அரசாங்கம் மக்களின் இப்பிரச்சனைகளுக்கு நியாயமான தீர்வை வழங்கி அந்த மக்களை திருப்திப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.