Tue03192024

Last updateSun, 19 Apr 2020 8am

வேள்வித் தடை மூலம் அரங்கேறும் வெள்ளாளிய மயமாக்கம்

யார் வேள்வியை ஆதரிக்கின்றனரோ அவர்களை ஒடுக்கப்பட்ட சாதியாக அடையாளம் காட்டுவதும், யார் வேள்வியை எதிர்க்கின்றனரோ அவர்கள் தம்மை ஒடுக்கும் சாதியாக காட்டிக்கொள்வதும், நடந்தேறுகின்றது. இந்த பின்னணியில் கருத்தியல் தளத்தில் விவாதங்கள் முன்னெடுக்கப்;படுகின்றது. அதேநேரம் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்த போதும், தம்மை ஒடுக்கும் சாதியாக காட்டிக்கொண்டு வாழ்கின்றவர்கள், வேள்வியை மூர்க்கத்தனமாக எதிர்க்கின்றனர். இந்த பின்னணியில் வெள்ளாளிய சிந்தனையிலான சமூக மயமாக்கம் இன்று நடந்தேறுகின்றது. வேள்வித் தடையை வழங்கிய நீதிமன்ற தீர்ப்பு, தம்மை வெள்ளாளர் மயமாக்கிக் கொள்ளும் வெள்ளாளிய சிந்தனையிலான அரசியல் நிகழ்ச்சிப்போக்குடன் ஒன்றுபட்டு நிற்கின்றது.

இப்படி சமூகத்தை வெள்ளாளிய சிந்தனையிலான சாதி மயமாக்கும் நிகழ்ச்சிநிரலில் அங்கமாகவே, "வேள்வி" என்பது தமிழர் பண்பாடல்ல என்று கூறுகின்ற அளவுக்கு, வெள்ளாளியச் சிந்தனை முறை முன்னிறுத்தப்பட்டு வருகின்றது. வெள்ளாளிய சாதி மயமாக்கமும், இந்து மயமாக்கமும் ஒரு நாணயத்தின் இரு பக்கமாக மாறி சமூகத்தை ஒடுக்குகின்றது.

 

வேள்வித் தடையை முன்வைத்த தீர்ப்பின் பின்னான அரசியல் என்பது

1.சமூகத்தை இந்து மயமாக்குவது

2.சமூகத்தை சாதிய மயமாக்குவதுமாகும்

இதன் மூலம் சமூகத்தை மதரீதியாகவும் - சாதிரீதியாகவும் பிளந்து ஒடுக்குவதேயாகும். இது தான் இலங்கை அரசின் இன்றைய அரசியல் நிகழ்ச்சிப்போக்கும் கூட.

வேள்வி என்பது உழைப்பின் பயனைக் கொண்டாடுதலே

தங்கள் உழைப்பின் பயனை, கூடி உண்டு கொண்டாடுதலே வேள்வியாகும். இயற்கையை வேண்டி வழிபடுதல் முறையானது, உழைப்பின் வளர்ச்சியுடன் இயற்கை என்ற கடவுளை உருவாக்கியது. தங்கள் உழைப்பை கடவுளுக்குப் படைக்கும் வேள்வி முறையை முன்னின்று செய்தவர்கள் பூசாரிகளானார்கள். இங்கு கடவுள், பூசாரி, மதம், சாதி… எல்லாம் உழைப்பிற்கு பின்னால் உருவானவை. உழைப்பைக் கொண்டாடுதலே வேள்வியாகும். உழைத்து வாழும் மனிதர்களின் பாரம்பரிய வாழ்வியல் முறையை, உழைத்து வாழாத சுரண்டும் வர்க்கம் இன்று தடை செய்கின்றது. மக்களை ஒடுக்கும் சுரண்டும் வர்க்க அரச இயந்திரம் மூலம், உழைத்து வாழும் சமூகப் பண்பாட்டுக் கூறுகளை தடுக்க முனைவது என்பது, ஒடுக்கும் சாதிகளினதும் ஒடுக்கும் வர்க்கங்களினதும் அரசியல் நிகழ்ச்சிநிரலாகி இருக்கின்றது.

இந்த வேள்வி சார்ந்த வழிபாட்டு முறைமை, எந்த வகையான உழைப்பில் இருந்து வந்திருக்க முடியும். மிருக வளர்ப்பை தங்கள் உழைப்பாகக் கொண்ட சமூகமே, வேள்விக்கான அடிப்படைகளை வித்திட்டது. நிச்சயமாக இங்கு வேளாண்மை செய்த சமூகமல்ல. நிலமற்ற சமூகம் எதுவோ, பிற உழைப்பு எதையும் கொண்டிராத சமூகம் எதுவோ, அவர்களே மிருக வளர்ப்பை தங்களது உழைப்பிற்கான தேர்வாகக் கொண்டு இருந்தனர்.

இன்று வேள்வி என்பது தமிழர் பண்பாடல்ல என்ற தர்க்கமானது நிலமற்ற, அதேநேரம் மிருக வளர்ப்பை உழைப்பாகக் கொண்ட தமிழரைத், தமிழர் அல்ல என்று கூறுவதேயாகும். இதன் பொருள் ஒடுக்கும் சாதியைச் சேர்ந்தவர்களையே தமிழர்களாக நிறுவுவதும், ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களை தமிழர்களல்ல என்று கூறுகின்ற, வெள்ளாளிய சிந்தனை முறையே இங்கு கட்டமைக்கப்படுகின்றது. இது தான் ஒடுக்கும் தமிழ் தேசியத்தின் அரசியல் சாரமும் கூட.

உழைப்பை வகைப்படுத்திய ஒடுக்கும் சாதியம்

வேள்வி என்பது மிருக வளர்ப்பை தங்கள் உழைப்பாகக் கொண்ட சமூகத்தின் கொண்டாட்டம். இதன் மறுபக்கத்தில் உழைப்பை வகைப்படுத்தி உருவான சாதிய சமூகத்தில், நிலத்தை கொண்டிராத சாதிகளே மிருக வளர்ப்பில் ஈடுபட்டனர். சாதிய சமூகத்தில் இந்த உழைப்பை எந்த சாதிகள் செய்திருப்பார்கள்.

சாதி சமூக வாழ்க்கை முறையால் நிலவுரிமை மறுக்கப்பட்ட சாதிய சமூகப் பிரிவான "கோவியர்கள், பள்ளர்கள், நளவர்கள்.." மிருக வளர்ப்பில் ஈடுபட்டனர். அங்கு அவர்களுக்குள் வேறு பிற உழைப்பில் ஈடுபடாத பெரும் பகுதியினரே, மிருக வளர்ப்பைச் சார்ந்த உற்பத்தியில் ஈடுபட்டு இருக்க முடியும். அவர்கள் தங்கள் உழைப்பை கொண்டாடிய நிகழ்வே வேள்வியாகும்.

வேள்வித் தடையை ஆதரிக்கும் வெள்ளாளியச் சிந்தனை முறை, இந்த சாதிய உள்ளடக்கத்தில் இருந்துதான் தோன்றுகின்றது. ஆதிக்கம் பெற்ற வெள்ளாளியச் சமூகத்தில் பண்பாட்டு கூறாக வேள்வி முறை இருந்திருந்தால், இந்தத் தடை வந்திருக்காது என்பதே உண்மை. உதாரணமாக யூத மதத்தில் மிருகத்தை பலியிட்டு வழிபடும் முறை இருப்பதாலேயே, முஸ்லிம்களின் பலியிட்டு வழிபடும் முறையை அனுமதிக்கின்ற மேற்கத்தைய இன-நிறவாதக் கொள்கை என்பதற்கு, யூத சமூகம் சர்வதேச ரீதியாக கொண்டு இருக்கும் சமூக பொருளாதார ஆதிக்கமே காரணமாக இருக்கின்றது என்றால் மிகையல்ல. இதன் அடிப்படையிலேயே ஆதிக்கம் பெற்ற யாழ் வெள்ளாளியச் சிந்தனை முறையிலான, சாதிய அடிப்படையிலான பெரும் தெய்வ வழிபாட்டு முறைமையை, ஒட்டுமொத்த மக்கள் மேல் திணிக்கும் ஒடுக்குமுறை வடிவமே இன்று வேள்வித் தடையாக தீர்ப்பாகியுள்ளது.

ஒடுக்கும் வெள்ளாளியச் சிந்தனைக்கு வித்திட்ட "வெள்ளாளர்கள்" யார்? 

யாழ் "வெள்ளாளர்கள்" வேளாண்மை செய்ததால் உருவான சாதிய சமூகமல்ல. இந்த வெள்ளாளர்கள் வேளாண்மையைச் செயதவர்கள் அல்ல. யாழ் சமூகத்தில் வேளாண்மையைச் செய்தவர்கள் கோவியரே. கோவியர் என்ற சாதி, சிங்களத்தில் கோவிகம என்று வேளாண்மையைச் செய்த சாதியைக் குறிக்கின்றது. கோவிகம என்ற சிங்கள விவசாயிகளைக் குறிப்பதை அடிப்படையாகக் கொண்டு, தமிழில் கோவியர் அடையாளப்படுத்தப்பட்டனர்.

யாழ் சமூகத்தில் வெள்ளாளர் என்ற சாதி, வரலாறு தெரிந்த காலத்தில் இருந்து வரலாற்றில் இருக்கவில்லை. ஆனால் கோவியர் யாழ் சமூகத்தில் மட்டும் இருக்கின்றது.  காலனிய வாதிகளான ஒல்லாந்தர் 1697 (பார்க்க அட்டவனை – 1) வரி அறவிட எடுத்த சாதிரீதியான தரவுகளில், வேளாளர், கோவியர் பற்றி குறிப்புகளைக் கொண்டு இருந்த போது வெள்ளாளர் என்ற சாதி அக்குறிப்பில் இல்லை. அன்று ஒல்லாந்தரால் வகைப்படுத்தப்பட்ட 58 "சாதிகள்" பல தொழில் சார்ந்தும், மக்களின் தனிவகை சார்ந்தும், பல உட்பிரிவுகள் சார்ந்தும் காணப்படுகின்றது. அன்று சாதியாக வகைப்படுத்திய பல சாதிகள், இன்று கிடையாது. காலனிவாதிகளான ஆங்கிலேயர் 1830 (பார்க்க அட்டவனை – 2) எடுத்த தரவுகள் சாதிய மாற்றத்தை தரக் கூடிய புதிய விபரத்தைத் தருகின்றது. 1697 தரவுடன் ஒப்பிடும் போது, வேளாண்மைக்கு பதில் வெள்ளாளர் பதமும், வெள்ளாளரின் எண்ணிக்கை குறைந்த சமூகப் பிரிவையும் அடையாளம் காட்டுகின்றது. மடைப்பள்ளிகள், கரையார், கோவியர், பள்ளர், நளவர்.. சாதியச் சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்கள், வெள்ளாளரை விட தனித்தனியாக அதிக எண்ணிக் கொண்ட சமூக பிரிவாக இருப்பதை தரவுகள் காட்டுகின்றது. அதேநேரம் வேறு சில சாதிகளின் எண்ணிக்கை வெள்ளாளருக்கு சமமாக இருப்பதையும் காண முடியும்.

அட்டவணை –1(ஒல்லாந்தர் காலமான 1697)

 

- சாதி தொ. - சாதி தொ. - சாதி தொ.
1 வேளாளர் 15170 21 கயிற்றுச்சான்றார்  36 41 சாயவேர்ப்பள்ளர்  53
2 பரதேசிகள் 1949 22 கரையார்  3009 42 தம்பேறுநளவர்  66
3 மடைப்பள்ளியார்  5528 23 முக்கியர்  1159 43 தம்பேறுபள்ளர்  91
4 மலையகத்தர்  1240 24 திமிலர்  576 44 குளிகாரப்பறையர்  7
5 செட்டிகள்  1667 25 கோட்டைவாயில்நளவர்  265 45 பறங்கிஅடிமை  18
6 பிராமணர்  639 26 கோட்டைவாயிற்பள்ளர்  20 46 கொல்லர்  407
7 சோனகர்  492 27 மறவர்  49 47 தவசிகள்  192
8 தனக்காரர்  388 28 பாணர்  7 48 அம்பட்டர்  510
9  குறவர்  187 29  வேட்டைக்காரர்  6 49  கோவியர்  1429

 

10  பரம்பர்  8 30  வலையர்  7 50  தமிழ்வடசிறை  289
11  சிவியார்  660 31  வர்ணகாரா  27 51  நளவர்  2137
12  பள்ளிவிலி  196 32  வண்ணார்  857 52  பள்ளர்  1359
13  செம்படவர்  14 33  தந்தகாரர்  21 53  பறையர்  767
14  கடையர்  351 34  சாயக்காரர்  118 54  துரும்பர்  61
15  பரவர்  34 35  தச்சர்  536 55  எண்ணெய்வணிகர்  2
16  ஓடாவி (சிங்கள)  1 36  சேணியர்  100 56  சாயவேர்ப்பள்ளர்  367
17  சான்றார்  137 37  கைக்கோளர்  379 57  சாயவேர்ப்பறையர்  208
18  கன்னார்  63 38  குயவர்  186 58  அர்ச்கோயில்பறையர்  3
19  தட்டார்  337 39  கடையற்காரர்  16      
20  யானைக்காரச்சான்றார்  70 40  குடிப்பள்ளர்  115      
                 

 

அட்டவனை – 2 (ஆங்கிலேயர் காலமான  1830)

1  வெள்ளாளர்  4030 19  பரவர்  35 37 நட்டுவன்   22
2  பறங்கிகள்
 477 20  தனக்காரர் 1371 38  எண்ணை வாணுவர்
 4
3  பிராமணர்  1935 21  வெள்ளிக்கொல்லன்
 899 39  திமிலர்
 1291
4  செட்டி  1807 22  கருமான் 904 40  பள்ளிவிலி
 376
5  மடப்பள்ளி  12995 23  தச்சர்
 1371 41 செம்படவர்  40
6  முஸ்லிம்  2166 24  அம்பட்டர்
 1024 42  கடையர்  970
7  பரதேசி வெள்ளாளர் (வெவ்வேறு நாட்டினராகிய பலசாதியிலிருந்து வந்தவர்கள்)
1830 25  அட்மை ப்பெர்க்கர் 18 43  நளவர்
 7559
8  மல்லாகம சாதியினர் (சிங்கள மரபினர் )
1501 26  வண்ணார்  2152 44  குயவர்
 329
9  கரையார்
7562 27  முக்குவர்
 2532 45 கப்பல் கட்டும் தட்சர்  33
10  வார்ப்படக்காரர்
 105 28  மலையாளி 210 46  மறவர்  54
11  கொத்தனார்
 47 29  கோவியர்
 6401  47  குழி தோண்டுபவர்  408

 

 

12  Tuners  76 30  கொம்பனி நளம் 739  48  பரம்பர் 362 
13 Welper
 50 31  மள்ளர் (பள்ளர்)  6313 49  சுதந்திர அடிமை
 348
14  கைக்கோளர்  1043 32  பறையர்
1621 50  
 
15  சாண்டார்  2173 33  துரும்பர் (பள்ளர்-மள்ளர் குலத்தவருக்கு துணி வெளுக்கும் வண்ணார்)  197    
 
16  சாயக்காரர்   902 34  நெசவுக்காரர்
 272      
17  செவ்வியர்  1593 35  காவேர செட்டி
 18      
 18  பண்டாரம்  41  36  தவசி  437      

 

இந்த சாதிய வரலாற்றுப் பின்னணியில் இருந்து தெரிவது, பல்வேறு சாதிகளின் கூட்டுத் தான் ஒடுக்கும் வெள்ளாளச் சாதியை வித்திட்டது. அது எப்படி உருவானது? நிலமே அதற்கான அடிப்படையாக இருந்ததே ஒழிய, நிலத்தை உழுதவன் அல்ல. நிலத்தை உழுதவன் கோவியனும், பள்ளனும். இதற்கு ஆசிய நிலவுடமை முறையை மாற்றிய பின்னணியில் இருந்து நோக்க முடியும்.

ஆசிய நிலவுடமைச் சமூகத்தில், நிலம் பொதுவுடமையாக இருந்ததே ஒழிய, தனியுடமையாக இருக்கவில்லை. நிலம் அரசனுக்கு சொந்தமாக பொதுவில் இருந்தது. அதேநேரம் அரசு ஆதரவு பெற்ற கோயில்களும், நிலத்தைச் சொந்தமாக கொண்டு இருந்தன. அரசனுக்கும், கோயிலுக்கும் வரியைச் செலுத்தி, நிலத்தை பயன்படுத்திக் கொள்ளும் சொத்துடமை கொண்ட நிலப்பிரபுத்துவ வர்க்கமே சமூகத்தை கட்டுப்படுத்தியது. இங்கு நிலம் சொந்தமாக இருப்பதில்லை. வரியைக் கட்டி நிலத்தை பெற்றுக் கொண்டவர்களே, சொத்துடமையற்றவர்களைக் கொண்டு உழுதனர். இந்த வகையில் ஆண்டான் - அடிமைமுறையே, ஆசிய நிலவுடமைச் சமூகத்தின் அடித்தளமாக இருந்தது.

ஒவ்வொரு கிராமமும் ஆண்டான் - அடிமை முறையிலான, உள் சுற்று உற்பத்தி முறைமைக்கு கட்டுப்பட்டதாக இருந்தது. அது சாதிய முறை உறவாக, சமூக கட்டுப்பாடு கொண்ட முறையாக கட்டமைக்கப்பட்டு இருந்தது.

உழுதவன் கோவியனாக இருந்ததால் (கோவிகம) கோவியரானர்கள். கோவில் சார்ந்த கோவியர் காரணப் பெயர், வெள்ளாளர் தோன்றிய பிற்பாடு தோன்றியது. வெள்ளாளர் என்ற சாதிப் பிரிவு, நிலம் தனியுடமையான போது நில உரிமை பெற்ற பல்வேறு சாதிகளின் கூட்டே. அதாவது வெள்ளாளச் சாதி என்பது வரலாற்றால் பிற்பட்டது.

குறிப்பாக பிரிட்டிஸ் காலனியவாதிகள் 1850 களில் ஆசிய பொதுவுடமையிலான நிலவுடமை முறையை மாற்றி, ஐரோப்பிய வகை தனியுடமையிலான நிலவுடமை முறையை சட்டரீதியாக கொண்டு வருவதற்கு முன்பே, ஒல்லாந்தர் காலம் முதல் நிலம் பாரம்பரிய உரிமை சார்ந்த முறைமையை நிலைநாட்டி, நிலம் மீதான வரிமுறையை அமுல்படுத்தத் தொடங்கியது. இந்த முறைமையே வெள்ளாளச் சாதிக்கு அடித்தளமாக மாறியது. நிலத்தை சொத்துடமையாகக் கொண்ட புதிய வர்க்கம், தம்மை புதிய சாதியாக அடையாளப்படுத்துவதாலும், தம்மை இணைத்துக் கொள்ளத் தொடங்கினர். அவர்களே வெள்ளாளர்கள். 

காலனிய வாதிகளும், நில வரியை அறவிடும் தரப்பின் அதிகாரம் மற்றும் சமூக ஆதிக்கத்திற்கு ஏற்ப நிலம் தனியுடமையாக்கப்பட்ட சமுதாய நிகழ்ச்சிப் போக்கில், வெள்ளாளர் என்ற ஒடுக்கும் சாதி உருவானது. நிலமற்ற தரப்புகள் பிற சாதிகளாக எஞ்சினர். நிலம் சார்ந்து புதிய ஒடுக்குமுறையும், புதிய சாதிய பிரிவினையும், பரம்பரையும் உருவானது. நிலம் கொண்ட கோவியர்களும் மற்றவர்களும் வெள்ளாளராக, நிலமற்ற கோவியர்கள் கோவியராக எஞ்சினர். விவசாயத்தில் கூலிகளாக, அடிமைகளாகவும் இருந்தவர்கள், இன்றைய கோவியரும் பள்ளருமாகும். இவர்கள் தான் மிருக வளர்ப்பில் ஈடுபட்டனர். நிலமற்றவராக, மிருக வளர்ப்பை உழைப்பாகக் கொண்ட சமூகத்தின் வழிபாட்டு முறைதான் வேள்வி.

புதிய வர்க்கத்தினதும், புதிய சாதியினதும் தேவைக்கு ஏற்ப உருவானவரே ஆறுமுகநாவலர். புதிதாகத் தோன்றி வளர்ந்த வெள்ளாளிய சாதியை அடிப்படையாகக் கொண்ட இந்து மயமாக்கத்தையே ஆறுமுகநாவலர் முன்வைத்தார். நிலத்தை தனியுடமையாக்கிக் கொண்ட புதிய வர்க்கத்தினதும், சாதியினதும் கொள்கையும் கோட்பாடுமே, ஆறுமுகநாவலரின் வெள்ளாளிய சிந்தனையாகும். இதன் மூலம் வெள்ளாளியச் சிந்தனை ஒடுக்கும் சிந்தனையாக வீரியமாக்கப்பட்டது.   

இந்த வரலாற்றுப் பின்னணியில் வேள்வி என்பது மிருக வளர்ப்பின் பலனைக் கொண்டாடிய வரலாற்றுப் போக்கின் நீட்சியாகும். சாதி ரீதியான உழைப்பின் பிரிவினையால், இந்த வழிபாட்டு முறைக்கு எதிர்ப்பு உருவாகியது. ஒடுக்கும் சமூகத்தின் சாதியப் பண்பாட்டு வழிபாட்டு முறை என்பது, ஒடுக்கப்பட்ட பிற சாதி வழிபாட்டு முறைமைகளை ஒடுக்கும் பண்பாட்டுக்கு வித்திட்டது. ஒடுக்கப்பட்டவனின் வழிபாட்டு முறைமையை இழிவானதாகவும், அநாகரீகமானதாகவும், தீட்டுக்குரியதாகவும் காட்டப்பட்டு மறுக்கப்பட்டு வருகின்றது. ஒடுக்கும் தரப்பின் வழிபாட்டு முறை பெருந்தெய்வ வழிபாடாக, ஒடுக்கப்பட்டவனின் வழிபாட்டு முறை சிறு தெய்வ வழிபாடாக மாறியது. இந்த ஒடுக்கும் சமுதாய பின்னணியிலேயே, இன்று வேள்வி மீதான தடை என்பதே உண்மை. இந்தத் தீர்ப்பானது ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு எதிரான ஒடுக்கும் சாதிகளின் வெள்ளாளிய சிந்தைனையுடன் கூடிய  ஒடுக்குமுறையுமாகும்