Fri04262024

Last updateSun, 19 Apr 2020 8am

கோமாளித்தனத்தின் உச்சகட்டத்தில் அரசும், அரச இயந்திரமும்!

 

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும்:    09-01-2011

"காவல்துறையினர் உங்களது நின்மதியான நித்திரைக்காகவே, நித்திரையின்றி அர்ப்பணிப்புடன் சேவை செய்கின்றனர்"? –என்கினறார் காவல்துறை அத்தியட்சகர்

யாழ்பாண குடாநாட்டில் இடம்பெறுகின்ற கொலைகள், தனிப்பட்ட ரீதியில் இடம்பெறுகின்ற கொலைகள் என யாழ் மாவட்டத்தின் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் நெவில் பத்மதேவ தெரிவித்தார்.  யாழ் விரசிங்கம் மண்டபத்தில் பொது அமைப்புக்கள், வர்த்த சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர் சகிதம் இடம்பெற்ற குடாநாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக மகாநாட்டிலேயே நெவில் பத்மதேவ இவ்வாறு தெரிவித்தார்.

 

உள்ளுர் ஊடகங்கள் வேண்டுமென்றே செய்திகளை பெருப்பித்து பிரமாண்டப்படுத்துவதாக தெரிவித்த அவர், ஊடகவிலாளர்கள் இவ்வாறான செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் தம்முடன் உரையாடினால் நன்றாக இருக்கும் எனத்  தெரிவித்தார்.

கொள்ளைகளுடன் தொடப்புடையதாக குற்றம் சாட்டப்பட்ட தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டவில்லை என்பது பற்றி கேட்டபோது, பதில் எதுவுமே கூறாமல் மௌனம் காத்தார்.  யாழ் குடாநாட்டின் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்படுவதாக ஊடகங்களே செய்திகளை பெரிதுபடுத்தி செய்திகளை வெளியிடுவதாக குற்றம் சாட்டிய அவர் காவற்துறையினர் உங்களுக்காக நித்திரையின்றி பணிகளை ஆற்றி வருவதாகவும், உங்களது நிம்மதியான நித்திரைக்காகவே காவற்துறையினர் அர்ப்பணிப்புடன் சேவையை செய்வதாகவும் தெரிவித்தார்.

"சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர்" என்கின்ற நெவில் பத்மதேவ மாத்திரமல்ல, அரசின் சகலதினதும் பெரும்பான்மையோர் கோமாளிகளே!.  சங்கானை கோவில் பூசகரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் சம்பந்தமாக காவல்துறையினர் இருவர் கைது செய்யப்பட்டதும், வடபிரதேச இராணுவப் பொறுப்பாளர் மன்னிப்பு கோரியதும் எதன் பாற்பட்டது?. அது தனிப்பட்டவர்கள் செய்த கொலையும்,  ஊடகங்கங்களால் ஊதிப் பெருப்பிக்கப்பட்ட செய்திகளுமோ?. நெவில் சொல்கின்ற "நின்மதியான நித்திரை என்பது குடாநாட்டு மக்களை" மீளாத் துயில் கொள்ள வைப்பதே"! இதற்காகவே  காவல்துறையினரின்  "நித்திரையின்றி அர்ப்பணிப்பும் தியாகமும்" செய்கின்றனர் என்கின்றார்.  இவ் அரச கொலைஞர்களால் செய்யப்படும் கொலைகள் பற்றி செய்திகள் வெளியிடமுன் தங்களுடன் உரையாடினால் நன்றாக இருக்குமாம்.

இவர்களுடன் உரையாடினால் விமல் வீரவன்ச சொல்வது போல் குடாநாட்டின் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், புனர் வாழ்வு பெற்றுள்ள புலிகளுமே கொலைகள்-கொள்ளைகள் செய்வதாக செய்திகள் வெளிவரும். விமல்வீரவன்ச சொலவதெல்லாம்  "அழுகிய பேரினவாதத்திற்குள்ளிருந்து வரும் துர்நாற்ற வாடையாகவே"  இருகின்றது.

இது போக யாழ். குடாநாட்டில் இடம் பெற்று வருகின்ற படுகொலைகள், ஆட்கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்கள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில்  (வியாழக்கிழமை) பதிலளிப்பதாக அரசாங்கம்  அறிவித்திருந்தது. எனினும், அது தொடர்பில் இதுவரையில் அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  யாழ். மாவட்ட எம்.பி. மாவை. சேனாதிராஜா நேற்று பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.

அதற்கு யாழ். குடாநாட்டில் இடம் பெற்று வருகின்ற சம்பவங்கள் தொடர்பிலான கேள்விகளுக்கு பதிலளிப்பதோ அல்லது பதிலளிக்காது அதனைத் தவிர்ப்பதோ சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு இருக்கின்ற உரிமையாகும் என்று சபாநாயகர் சபையில் அறிவிப்பு விடுத்தார்.

மக்களின் அவலவாழ்வு, கொலை-கொள்ளைகள் பற்றி கேள்வி கேட்டால், அமைச்சரின் உரிமை பற்றி பதில் சொல்லி பிரச்சினைக்குரியதையே திசை திருப்புகின்றார் சபாநாயகர். சர்வதேசத்தில் அபகீர்த்தியை ஏற்படுத்தவே இப்பிரச்சாரம் என்கின்றார் அமைச்சர் கெஹலிய ரமபுக்வெல.  இவர்களின் அரசிற்கு சர்வதேச அரங்கில் "ஏகப்பட்ட புகழ் கீர்த்தி"!.  இந்த லட்சணத்தில் இவர்களுக்கு யாழ் சம்பவங்களால் அபகீர்த்தியாம்.

ஓர் நிகழ்வில் உங்களுக்குள்ளேயே நாய்ச்சண்டை!. தேசிய கீதத்தை தமிழில் பாடலாம் (ஜனாதிபதியாட்டம்) என்கின்றார் பிள்ளையான். அமைச்சர் டக்ளஸ் சிங்களத்தில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார்! என்கின்றார் யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார்.  யாழ் கொலை—கொள்ளை சமபவங்க்ள் பற்றி டக்ளஸ் பாராளுமன்றத்தில் பேசியதில் உண்மையில்லை என்கின்றார் வட பிரதேசத்தின் ராணுவத்தளபதி. உண்மை பற்றி ஆராய உத்தரவிட்டுள்ளேன் என்கின்றார் ஜனாதிபதி. இது பொறுப்புள்ள அரசொன்றினதும், அதன் மக்கள்  சார் செயற்பாட்டாளர்களினதும் செயற்பாட்டு நடவடிக்கைகள் தானோ?

2009 மே 18-ன் பின்னான உரைகளில் "இலங்கையில் இனிமேல் ஓர் துப்பாக்கிக் குண்டு கூட வெடிக்காது" என்றார் மகிந்தமா மனன்ன்.  இன்று வடக்கில் இவரின் படைகள் பிரகடனப்படுத்தாத போர் ஓன்றை செய்கின்றார்கள். இது ஊர் உலகறிந்த உண்மை.

இந்நிலையில் "நாட்டில் சர்வாதிகார ஆட்சி நிலவுவதாக பிரசாரங்களை மேற்கொண்டு வரும் சிலர், நாட்டை சர்வதேசத்தின் மத்தியில் அவதூறுக்கு உட்படுத்த முயற்சிப்பதாகவும்,  இதில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென ஜனாதிபதியும், கெஹலிய ரம்புக்வெலவும் கூறுவது, அரசியல் போமாளித்தனத்தின் உச்சமே!