Thu04252024

Last updateSun, 19 Apr 2020 8am

“கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது”

 

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று தமிழக அரசால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

ஞாயிறன்று திருநெல்வேலியில், அரசின் வல்லுநர் குழுவுக்கும், இந்த அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடி வருபவர்களுக்கும் இடையே நடைபெற்ற கூட்டத்தக்கு பிறகே அரச தரப்பினர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளனர்.

 

ஆனால் அரச தரப்பின் வல்லுநர்கள் குழு தெரிவித்துள்ள கருத்துகள் தங்களது கவலைகளை நீக்கவில்லை என்றும் போராட்டம் தொடரும் எனவும் இந்த அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடிவரும் குழுவினர் கூறுகிறார்கள்.

அரச தரப்பினர் அந்த அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்றாலும், அங்கு நிலவியல், நீரியல் மற்றும் கடலியல் பிரச்சினைகள் இருக்கவே செய்கிறது என்று போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தமிழோசையிடம் தெரிவித்தார்.

“இயற்கையாகவே அணு உலையை குளிரூட்டும் தொழில்நுட்பம் கூடங்குளத்தில் உள்ளது”

டாக்டர் இனியன்

தமது தரப்பு வல்லுநர்கள் தங்களது கவலைகளை அந்த நிபுணர் குழுவினரிடம் தெரிவிப்பார்கள் என்றும் உதயகுமார் கூறுகிறார்.

ஆனால் அரச தரப்பினரோ சிறப்பான தொழிநுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த அணுமின் நிலையம் கடுமையான நிலநடுக்கத்தை தாங்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அதனால் மக்கள் அச்சப்பட வேண்டிய தேவை இல்லை என்றும் கூறுகிறார்கள்.

இந்த அணுமின் நிலையத்தின் முழு கட்டமைப்பும் கடல் மட்டத்திலிருந்து 25 அடிக்கும் மேலாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் அணு உலை அதைவிட மேலான இடத்தில் இருப்பதால் பேரலைகள் வந்தால் கூட பாதிப்புகள் வராது என்று அரச தரப்பு வல்லுநர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் இனியன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

உலகிலேயே முதல் முறையாக, இயற்கையாகவே அணு உலையை குளிரூட்டும் சிறப்பான தொழில்நுட்பம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளது என்றும் சுட்டிக்காட்டுகிறார் டாக்டர் இனியன்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் சிலர்

பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த அணுமின் நிலையத்திலுள்ள கருவிகளை பராமரிக்க சென்று வரும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு போராட்டக் குழுவினர் பல இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றும், இது வருந்தத்தக்கது என்றும் அரச குழுவின் ஒரு உறுப்பினரான இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரான டாக்டர் ஸ்ரீநிவாசன் கூறுகிறார்.

இந்த அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்களை நேரடியாக சந்திக்கும் திட்டம் ஏதும் தமது தரப்பினருக்கு இல்லை எனவும் அரச தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை சென்று தங்களுக்கு ஆலோசித்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த முடிவு எடுக்கப்படும் எனவும் டாக்டர் இனியன் கூறியுள்ளார்.