Mon03182024

Last updateSun, 19 Apr 2020 8am

நீதிமன்றத்தின் உத்தரவை கிழித்தெறிந்து திருகோணமலையில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

இன்று 25ம் திகதி கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமது 64 நாட்களாக தொடரும் போராட்டத்தினை கிழக்கு மாகாணசபையின் முன்னால் நகர்த்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்குமாறு, திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு பிரதியை வேலையற்ற பட்டதாரிகள் கிழித்தெறிந்தனர்.

கிழக்கு மாகாண சபையின் 76 ஆவது அமர்வு இன்று நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மாகாண சபைக்கு முன்னாலுள்ள பிரதான வீதியை வழிமறித்து வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக வேலைவாய்ப்பை வழங்குமாறு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, போராட்டத்தை அமைதியான முறையிலும் எவருக்கும் அசௌரிகத்தை ஏற்படுத்தாத வண்ணமும் முன்னெடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா இடக்கால உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

இந்த இடைக்கால உத்தரவின் பிரதியை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தஇ அகில இலங்கை ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் தென்னே ஞானானந்த தேரர் கிளித்தெறிந்து காலால் மிதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்தில் அதிகளவான கலகம் அடக்கும் பொலிஸாரும் சாதாரண பொலிஸ் உத்தியோகத்தர்களும் குவிக்கப்பட்டனர்

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 4500 க்கும் அதிகமான பட்டதாரிகள் தமக்கான அரச தொழில் வாய்ப்பைக் கோரி, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக மட்டக்களப்புஇ அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த பட்டதாரிகள் இன்றைய தினம் ஒன்றிணைந்து திருகோணமலையிலுள்ள மாகாண சபைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.