Fri04262024

Last updateSun, 19 Apr 2020 8am

ரிசானா படுகொலை செய்யப்பட்டார்.

சவுதியில் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த மூதூரைச் சேர்ந்த பணிப்பெண்ணான ரிசானா நபீக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

றிசானா நபீக்கிற்கு இன்று மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டதை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தகவல்கள் உறுதி செய்துள்ளன. வழமையாக ரிசானா நபீக்கை சந்திப்பதற்கு செல்லும் இலங்கையை சேர்ந்த மருத்துவர் இன்று அவரை சந்திப்பதற்காக ரியாத்தில் உள்ள சிறைக்கு சென்ற போது, அங்கு இயல்பற்ற சூழ்நிலை ஒன்று தென்பட்டுள்ளது.

திருகோணமலை மூதூரை சேர்ந்த ரிசானா நபீக், 2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் திகதி தமது 17வது வயதில் சவுதி அரேபியாவுக்கு தொழில்வாய்ப்புக்காக சென்றார். குடும்பத்தில் நிலவி வறுமையின் காரணமாக அவர் அங்கு செல்ல நேரிட்டது.

சவுதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாக சென்ற மூதூரை சேர்ந்த றிசானா நபீக், தான் பணியாற்றிய வீட்டு உரிமையாளரின் நான்கு மாதக் குழந்தையை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, 2005ம் ஆண்டு முதல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

சிறிலங்கா அரசு விடுத்த வேண்டுகோளையும் புறக்கணித்து, றிசானாவுக்கு சவுதி அரேபிய அரசாங்கம் இன்று மரணதண்டனையை நிறைவேற்றியுள்ளது.

இந்த மரண தண்டனையை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு கோரி பல மனித உரிமை அமைப்புக்களும் முயற்சி செய்திருந்தன. அவரது குற்றம் உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறி சவுதி அரேபிய நீதிமன்றம் மரணதண்டனை விதித்திருந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர் முன்னர் எழுதிய கடிதத்தில் அவர் தான் கொலைக்குற்றம் புரியவில்லை என்று கூறியிருந்தார். கொலை நடைபெற்ற வேளையிலும் பின்னரும் நடைபெற்ற வாக்கு மூலங்கள் பெற்றபோது பல முரண்பட்ட தகவல்கள் மொழிபெயர்பாளரால் நீதிமன்ற- பொலீஸ் விசாரணைகளில் வழங்கப்பட்டதாக செய்திகள் வந்திருந்தன.

இங்கு அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் தமது இருப்பை நோக்கமாகக் கொண்டு அறிக்கைகளை விடலாம். இந்தக் கொலை ஊடாக கேள்விக்குறியாக இருக்கும் நீதித்துறையின் பாராமுகமான மற்றும் தகமையற்ற மொழிபெயர்ப்பாளர்களின் செயற்பாடுகளினால் ஏற்படும் அவலங்கள்.

மதவாத - பிரபுகுல ஆட்சி முறையின் கீழ் தொழிலாளர்கள் எவ்வாறு முதலாளித்துவ ஜனநாயக மரபிற்கு அமையத்தன்னும் நடத்தப்படாத நிலையை இட்டு அக்கறை கொள்ள வேண்டியிருக்கின்றது.