Fri04262024

Last updateSun, 19 Apr 2020 8am

இன்று சர்வதேச காணாமல் போனோர் தினம்! சிறப்புச்செய்தி (படங்கள்)

 

alt

காணாமல் போனவர்களுக்கான சர்வதேச தினம், -International Day of The Disappeard- வருடந்தோறும் ஆகஸ்டு 30ம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது.

 

குறித்த ஒரு நபரை விரும்பாத ஒரு அரசியல் தலைமை அல்லது ஒரு இராணுவ தலைமை அவரை அவரது குடும்பத்திலிருந்து அல்லது வீட்டிலிருந்து தூக்கிச்சென்று விட்டாலோ அல்லது கைது செய்து காணாமல் போகசெய்வதாலோ அதன் பின்னர் அவருடன் தொடர்பு கொள்வதற்கு அவர்களது குடும்பத்துக்கு எந்தவிதமான வழியும் இல்லாமல் போய்விடுகிறது. அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது கூட தெரியாமல் போய்விடும். இதையே காணமல் போதல் என்கிற சொல் பதத்தில் அழைக்கிறார்கள்.

சில நாடுகளில் ஜனநாயக முறைமையை அல்லது விடுதலை சுதந்திரத்தை கோருபவர்களை அடக்கவோ, குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அடக்கவோ அல்லது பயங்கரவாதத்தை அடக்கவோ, காணாமல் போதலை ஒரு ஆயுதமாகவும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இப்படியான அனைத்து சம்பவங்களிலும் கட்டாயமாக காணாமல் செய்யப்படுதல் என்பது தடை செய்யபப்ட வேண்டும் என்றே ஐ.நா கூறுகிறது.

alt

அதாவது தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உரித்துடையவர்கள் என்றும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியும் உரிமை அவர்களது குடும்பத்தினருக்கு உள்ளது என்றும் ஐ.நா கூறுகிறது.  எனினும் அப்படி காணாமல் செய்வோரை இரகசிய சிறைகூடங்களில் அடைத்தோ அல்லது இரகசியமாக படுகொலை செய்தோ விடும் நிலை இன்னமும் தொடர்கிறது.  உலகெங்கும் பல இலட்சம் பேர் காணாமல் போயுள்ளார்கள். எத்தனை பேர் என குறிப்பிட்டு நிச்சயமாக சொல்ல எந்த அமைப்பும் முயற்சி எடுக்கவில்லை.

கைதாகி காணாமல் போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பு (FEDEDAM) எனும் அரச சார்பற்ற அமைப்பு, 1981ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது லத்தீன் அமெரிக்காவில், சந்தேக நபர்கள் ரகசியமாக கைது செய்யப்படும் முறைமையை எதிர்த்து முதன்முதலாக கோரிக்கை வைத்தது. கொஸ்டாரிக்காவில் இந்நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னர் சர்வதேச மன்னிப்பு சபை, ஐ.நாவின் மனித உரிமைகள் கண்காணிப்பகம் என்பனவும்,  காணாமல் செய்யப்படுவோருக்கு எதிராக போராட தொடங்கின. இதையடுத்து காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் மக்களிடையேயும் ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டது.

உலக மகா யுத்தங்களின் போதே அதிகளவிலானோர் காணாமல் போயுள்ளனர். குறிப்பாக இரண்டாம் உலக போரின் போது ஹிட்லரின் கொடூர நடவடிக்கையால் 10 இலட்சத்திற்கு மேற்பட்ட யூதர்கள் காணாமல் போயுள்ளனர்.

ரவுல் வாலன்பெர்க் (Raoul Wallenberg) : இரண்டாம் உலக போர் காலத்தில், காணாமல் போனோரை கண்டுபிடிப்பதற்காக தன் வாழ்நாளை அர்பணித்த ஒரு ஹீரோ என்றே இவரை சொல்லலாம். 20ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த மனிதாபிமானி என இன்றளவும் பாராட்டப்படுகிறார். காரணம் இவர் மட்டுமே ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட காணாமல் போனவர்களை அவர்களது குடும்பத்தினருக்கு மீட்டுக்கொடுத்துள்ளாராம். ஆனால் இவரின் முடிவு பரிதாபகரமானது. 1945ம் ஆண்டு ஜனவரி 17ம் ட்யிகதி ரஷ்ய படையினரால் கைது செய்யப்பட்டு காணாமல் போனார்.

காணாமல் போனவர்கள் பலர் தமது சொந்த முயற்சியினால் குடும்பங்களுடன் ஒன்றிணைவதும் நடந்து வருகிறது. ஒரு சிலர் பத்து, இருபது வருடங்களுக்கு பிறகு தற்செயலாக தமது நெருங்கிய உறவுகளுடன் ஒன்று சேரும் நெகிழ்ச்சி தருணங்களை உருவாக்கி கொள்கிறார்கள்.

alt

ஆனால் ஆயுத முனையில் காணமல் போவோரில் பலர், காணாமல் போன குறுகிய காலத்திலேயே கொல்லப்பட்டு விடுகிறார்கள் என்பது பலரும் ஏற்றுக்கொள்ள விரும்பாத உண்மையாக உள்ளது.

உலகில் நடைபெற்ற சில மோசமான காணாமல் போக செய்தல் நிகழ்வுகள்.

1. இலங்கை : இலங்கையில் 1996ம் ஆண்டின் ஐ.நா அறிக்கையின் பிரகாரம் 1980-96 காலப்பகுதியில்  11,513 பேர் காணாமல் போய் உள்ளனர்.இது உலகில் ஈராக்குக்கு அடுத்தபடியான இரண்டாம்நிலை ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2009ம் ஆண்டு முடிவுற்ற சிவில் யுத்தத்தின் பின்னரும், அதற்கு முன்னரும் வி.புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் பல நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

2.ஆர்ஜெண்டீனா :  1976-83 காலப்பகுதியில், 30,000 பேர் கடத்தப்பட்டார்கள். அகதிகளுக்கான முகாம்களில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார்கள். போதைமருந்துக்கு ஊக்கப்படுத்தப்பட்டார்கள். சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு விமானங்களிலிருந்து ரியோ தொ ல பிளட்டா நதிக்குள் வீசப்பட்டார்கள். 1983ம் ஆண்டு  'Never Again' எனும் கமிஷன் ஆரம்பிக்கப்பட்ட போது, ஆயிரக்கணக்கான குற்றச்சாட்டுக்கள் அன்றைய ஜுந்தா இராணுவ ஆட்சியாளர்களின் மீது சுமத்தப்பட்டது. 20 வருடங்களுக்கு பிறகே இதற்குரிய தண்டனை இராணுவ அதிகாரிகள் சிலருக்கு கிடைக்கப்பெற்றது. 

3. போஸ்னியா : 1991-95 காலப்பகுதியில், 10,000 ற்கு மேற்பட்ட போஸ்னியர்கள் காணாமல் போனார்கள். போஸ்னிய - சேர்பிய - யூகோஸ்லாவிய யுத்தத்தில் இப்பேரவலம் நடந்தது.

4. கம்போடியா : 1975-1979 காலப்பகுதியில், கிமெர் ரூஜ் ஆட்சிக்காலத்தில், 1.7 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போனார்கள். அண்மையில் கிமெர் ரூஜ் தலைவர்கள் மூவருக்கு இதற்குரிய தண்டனை வழங்கப்பட்டது.

5. ஈராக் : அமெரிக்கா 2003ம் ஆண்டு படையெடுப்பை தொடக்கி கடந்த வருடம் முடிவடையும் வரை நடத்தி முடித்த யுத்தத்தில் ஈராக்கில் 15,000 பேர் காணாமல் போயுள்ளனர்.

6. கொரியா : 1950-1953 காலப்பகுதியில் நடைபெற்ற கொரிய யுத்தத்தில்,  86,000 தென்கொரியர்கள் வடகொரியாவால் கடத்தப்பட்டனர். 

alt

இவற்றை விட ஆர்மெனியா, பாகிஸ்தான், துருக்கி, பிரேசில், சிலி, சஹாரா, உகண்டா, கொசோவா, ரஷ்யா, செனகல் என மேலும் பல நாடுகளில் காணாமல் போதல் சம்பவங்களில் கணிசமாக நடந்துள்ளன.

ஏதோ ஒரு காரணத்திற்காக தங்களது சொந்த இடங்களிலிருந்து பல வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனவர்கள் உங்களை சுற்றியும் தற்போது நடமாடிக்கொண்டு இருக்கலாம். இன்றைய தினம் அவர்களை நினைத்து பார்க்கும் நாளாகவும் இருக்கட்டும்.