தமிழினத் "துரோகிகளின்" வேலை
«புதியதோர் உலகம்» எழுதியிருக்கக் கூடாது. கேசவன் அல்லது (நோபர்ட்) டொமினிக் என்ற «புதியதோர் உலகம்» நாவலின் ஆசிரியர், புளட் இயக்கத்தின் தலைமைப் போராளிகளில் ஒருவர். தமிழர்களின் ஆயுதம் தாங்கிய தேசியப் போராட்ட இயக்கங்களில் ஒன்றான, அரசுக்கு எதிராகப் போராடவெனப் புறப்பட்ட புளொட் இயக்கத்தினை இவ்வாறான நாவல் ஒன்றினை எழுதி காட்டிக் கொடுத்திருக்கக் கூடாது. தேவையில்லாத ஒரு வேலை. எனவே அவர் ஒரு துரோகி. புளட்டை அம்பலப்படுத்தியதின் மூலம் அரசைப் பலப்படுத்தியிருக்கக் கூடாது. எனவே அவர் ஒரு அரச ஒத்தோடி. ஆகையால் புளட் இவரைப் போட்டுத்தள்ளியிருக்க வேண்டும். தப்பிவிட்டார். அரச ஒடுக்குமுறையே எல்லாவற்றுக்கும முதற்காரணம. எனவே அதற்காகப் புளட்டையும் பொறுத்துப் போயிருக்க வேண்டும். புளட்டும் கொன்று புதைத்தது தான். அதையெல்லாம் புறந்தள்ளிப் புளட்டினைத் அப்படியே தொடர விட்டிருக்க வேண்டும். அவர் தொடர்ந்து புளட்டோடு இயங்கியிருக்க வேண்டும். புளட் புதைத்த சுழிபுரம் ஆறு இளைஞர்களையெல்லாம் தோண்டி எடுத்து புளட்டின் முகத்தை அம்பலப்படுத்தியதெல்லாம் அரச ஒத்தோடிகளின் வேலை. ஒரத்தநாட்டில் உழன்றியில் ஏற்றி தலைகீழாக தொங்கவிட்டு நடாத்தப்பட்ட சித்திரவதைகள் மற்றும் கொலைகளை எல்லாம் புறந்தள்ளி இருக்க வேண்டும், தமிழ் தேசியம் என்ற குறிக்கோள் குழம்பாது இருப்பதற்காக.